Election bannerElection banner
Published:Updated:

1,008 சங்காபிஷேகம், நான்கு கால பூஜை... திருத்தணியில் சிவராத்திரி கோலாகலம்!

1008 சங்காபிஷேகம்
1008 சங்காபிஷேகம்

தணிகை மலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று மூலவருக்கு 1008 சங்காபிஷேகம் மற்றும் நான்கு கால பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை தரிசித்துச் சென்றனர்.

அறுபடை வீடு கொண்ட ஆறுமுருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி, உலக பிரசித்தி பெற்றதாகும். திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் முடித்த முருகப்பெருமான் வள்ளியை மணம்புரிந்து சினம் தணிந்து அமர்ந்த மலை என்பதால் இந்த மலை தணிகை மலை என்று அழைக்கப்படுகிறது. இந்த திருத்தணிகை மலைக்கு தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

தணிகை மலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று மூலவருக்கு 1,008 சங்காபிஷேகம் மற்றும் நான்கு கால பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன. நேற்று மாலை 6 மணிக்கு 3 யாக சாலைகள் அமைக்கப்பட்டு கணபதி ஹோமம் நடந்தது. ஹோமம் முடிந்து மூலவருக்கு முதல் கால அபிஷேக பூஜை நடைபெற்றது.
திருத்தணி முருகன் கோயில்
திருத்தணி முருகன் கோயில்

அதைத் தொடர்ந்து, இரவு 10 மணிக்கு இரண்டாம் கால சிறப்பு அபிஷேக பூஜை மற்றும் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றன. மூன்றாம் கால பூஜை 11 மணிக்கு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மயில் வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் மாடவீதிகளைச் சுற்றி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நான்காம் கால பூஜை இன்று அதிகாலை 4 மணிக்கு நடைபெற்றது. அதில் முருகப்பெருமானுக்கு அபிஷேக தீபாராதனைகள் நடைபெற்றன. சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முழுவதும் திருக்கோயில் திறந்திருந்தது. சிவராத்திரி விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தணிகை மலை ஆண்டவனை தரிசித்துச் சென்றனர்.

அதே போல், திருத்தணி கோயில் மற்றும் அதன் ஆளுகைக்கு உட்பட்ட 14 உப கோயில்களில் கடந்த 2 வாரத்தில் மட்டும் பக்தர்கள் 86 லட்சத்து 5 ஆயிரத்து 315 ரூபாயைக் காணிக்கையாகச் செலுத்தியிருக்கின்றனர். மேலும், முருகப்பெருமானுக்கு நேர்த்திக் கடனாக 700 கிராம் தங்கம், 3,550 கிராம் வெள்ளி ஆகியவற்றைப் பக்தர்கள் செலுத்தி உள்ளனர்.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஊழியர்கள்
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஊழியர்கள்

நேற்று, ஆலய தக்கார் ஜெய்சங்கர் முன்னிலையில் திருக்கோயில் ஊழியர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். காணிக்கைத் தொகையைக் கோயிலின் வங்கிக் கணக்கிலும், தங்கம் மற்றும் வெள்ளி காணிக்கைகள் கோயிலின் பாதுகாப்பு பெட்டகத்திலும் பத்திரமாக வைத்துள்ளனர்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு