Published:Updated:

`நந்தகோபாலன் மருமகளே!' - நப்பின்னையை நோன்புக்கு அழைக்கும் கோதை! : திருப்பாவை - 18

பெருமாள்
பெருமாள்

பலராமனையும் அவன் தம்பி கிருஷ்ணனையும் துயில் எழுப்பப் பலவாறாகப் புகழ்ந்து பாடினாள். ஆனாலும், என்ன பயன்? கிருஷ்ணன் சற்றும் அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை.

மகிமை மிகு மார்கழியில் மாதவனின் அருள்வேண்டி பாவை நோன்பு கடைப்பிடிக்க விரும்பிய கோதை, தான் மட்டுமல்லாமல் தன் தோழியரும் மாதவனின் அருள் பெற வேண்டும் என்று விரும்பினாள். ஒருவழியாகத் தன் தோழியர்களைத் துயிலெழுப்பி அழைத்துக்கொண்டு நந்தகோபனின் மாளிகையை அடைந்தாள். வாயிற்காவலனிடம் அனுமதி பெற்று உள்ளே சென்ற கோதை, நந்தகோபர் மற்றும் யசோதை ஆகியோரின் அனுமதியுடன் கிருஷ்ணனும் பலராமனும் சயனித்திருக்கும் அறையின் வாசலுக்கு வந்தாள்.

ஆண்டாள்
ஆண்டாள்

பலராமனையும் அவன் தம்பி கிருஷ்ணனையும் துயில் எழுப்பப் பலவாறாகப் புகழ்ந்து பாடினாள். ஆனாலும், என்ன பயன்? கிருஷ்ணன் சற்றும் அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை. அப்போதுதான் கோதைக்கு கிருஷ்ணனின் மனைவி நப்பின்னையின் நினைப்பு வந்தது.

அவள் அனுமதி இல்லாமல் கண்ணனால் எதுவும் செய்ய முடியாதபடி தன் மாசற்ற அன்பால் அவனைக் கட்டிப் போட்டிருந்தாள் நப்பின்னை. அவள் சாதாரணப் பெண்ணல்ல. பெரிய வீட்டு மருமகள் ஆயிற்றே. எனவே, அவளுடைய பெருமைகளைப் பலவாறாகப் புகழ்ந்து பாடினாள்.

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்,

நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்!

கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்,

வந்தெங்கும் கோழி யழைத்தனகாண், மாதவிப்

பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்,

பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட,

செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப,

வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

ஆண்டாள்
ஆண்டாள்

'மதநீர் பெருக்கும் பெரிய பெரிய யானைகளைப் பெற்றவனும் பகைவரைக் கண்டு ஓடாமல் தீரத்துடன் எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெறுபவனுமாகிய நந்தகோபனின் மருமகளே, நப்பின்னையே' என்று கோதை அழைக்கிறாள். இந்த நப்பின்னை என்பவள் பகவான் மகாவிஷ்ணுவின் மூன்று மனைவியரில் ஒருத்தி. நீளாதேவி என்பது அவள் திருப்பெயர். மகாவிஷ்ணு தம்முடைய ராமாவதாரத்தில் மகாலட்சுமி பிராட்டியை மட்டுமே பூவுலகில் சீதையாக அவதரிக்கச் செய்தார். பூமிதேவியையும் நீளாதேவியையும் அவதரிக்கச் செய்யவில்லை. அதற்குப் பரிகாரம் செய்வதுபோல் தம்முடைய கிருஷ்ணாவதாரத்தில் மூவரையுமே பூவுலகில் ருக்மிணி, சத்யபாமா, நப்பின்னை என்ற பெயர்களுடன் அவதரிக்கச் செய்தார். மூவரிலும் நப்பின்னையே கண்ணனுக்கு நெருங்கிய உறவு கொண்டிருந்தவள்.

யசோதையின் சகோதரனான கும்பன் என்பவனின் மகள்தான் நப்பின்னை. எனவே, திருமணத்துக்கு முன்பாகவே கண்ணனுக்கு உறவு முறையானவள் என்பதால் நப்பின்னையை பற்றுக்கோலாக உறுதியாகப் பற்றிக்கொண்டாள் கோதை. மேலும், ஆண்டாள் தன்னை கோகுலத்து ஆயர்குலப் பெண்ணாகப் பாவித்துக்கொண்டே பாவை நோன்பிருக்கத் தொடங்கினாள். நப்பின்னையும் ஆயர்குலத்தில் பிறந்தவள்தானே. அந்த இனப்பற்றும்கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

கிருஷ்ணனின் அறையில் நப்பின்னை உறங்கிக்கொண்டிருப்பது, அந்த அறையில் இருந்து தவழ்ந்து வந்த மலர்களின் நறுமணத்தின் மூலம் உணர்ந்துகொண்ட கோதை, 'வாசமிகு மலர்களைக் கூந்தலில் சூடியிருப்பவளே, கண்ணனுடன் பந்து விளையாடும் மெல்லிய விரல்களை உடைய வளே, பொழுது விடிந்துவிட்டதற்கு அறிகுறியாகத் தோன்றும் சூரியனை கோழிகள் கூவி வரவேற்கின்றன. மாதவிப் பந்தல் மேல் கூடியிருக்கும் குயில்கள் இன்குரலால் கூவிக் கும்மாளமிடுகின்றன. இவை எதுவுமே உன் காதுகளில் விழவில்லையா? நாங்கள் உன் அன்புக்கு உரிய கணவன் கிருஷ்ணனின் புகழைப் போற்றிப் பாடவே வந்திருக்கிறோம். செந்தாமரையினும் மென்மையான கைகளை உடைய நப்பின்னையே, எழுந்து வந்து உன் கைவளைகள் இசைபாடும் வண்ணம் கதவுகளைத் திறந்து எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவாயாக' என்று அழைத்தாள் கோதை.

பெருமாள்
பெருமாள்

இந்த நப்பின்னையை கிருஷ்ணன் மணந்துகொண்டதே ஒரு போராட்டம்தான். அடக்குவதற்கு மிகவும் கஷ்டமான ஏழு எருதுகளை கும்பன் வளர்த்து வந்தான். அந்த ஏழு எருதுகளை அடக்குபவனுக்கே தன் மகள் நப்பின்னையைத் திருமணம் செய்து கொடுப்பதாக ஏற்கெனவே அறிவித்திருந்தான். தன் முறைப்பெண்ணாகிய நப்பின்னையை மணம் செய்துகொள்ள விரும்பிய கிருஷ்ணன், தன் விருப்பத்தை யசோதையிடம் சொல்லி, மிகவும் பிரயாசைப்பட்டு அவளுடைய அனுமதியைப் பெற்று, ஏழு எருதுகளையும் அடக்கி நப்பின்னையைத் திருமணம் செய்துகொண்டான். தன்னிடம் பெருங்காதல் கொண்டு போராடித் தன்னைத் திருமணம் செய்துகொண்ட தன் நாயகன் கிருஷ்ணனைப் பிரிய நப்பின்னை அத்தனை சுலபத்தில் சம்மதிப்பாளா என்ன..?

`உலகளந்த உம்பர் கோமானே..!' கோவிந்தனை எழுப்பும் கோதை - திருப்பாவை - 17
அடுத்த கட்டுரைக்கு