Published:Updated:

பகைவர்களுக்கு நெருப்பாக விளங்கும் விமலனைத் துயில் எழுப்பும் ஆண்டாள்... திருப்பாவை - 20

பெருமாள்
பெருமாள்

மணிக்கதவம் தாள் திறந்து பரந்தாமன் துயில்கொண்டிருக்கும் பள்ளியறை வாசலில் வந்து நிற்கிறாள் கோதை. திருப்பாவை - 20.

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே துயில்எழாய்

செப்பம் உடையாய் திறல்உடையாய் செற்றார்க்கு

வெப்பம் கொடுக்கும் விமலா துயில்எழாய்

செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்

நப்பின்னை நங்காய் திருவே துயில்எழாய்

உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை

இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.

பெருமாள்
பெருமாள்

தோழிகள் அனைவரையும் துயில் எழுப்பி நீராடி மாதவனின் கோயில் வாசலுக்கு வந்து, வாயில்காப்போனிடம் விண்ணப்பித்து, மணிக்கதவம் தாள் திறந்து பரந்தாமன் துயில்கொண்டிருக்கும் பள்ளியறை வாசலில் வந்து நிற்கிறாள் கோதை. உள்ளே கோவிந்தன் நப்பின்னையோடு துயில்கொண்டிருக்கிறான். தாயாரிடம் கோவிந்தனைத் துயில் எழுப்புமாறு விண்ணப்பம் செய்தாள் ஆண்டாள். விண்ணப்பிக்கும்போது தாயிடம் மகவுக்கு இருக்கும் வாத்சல்ய உரிமையில், 'கண்ணனின் தரிசனம் எங்களுக்கு வாய்க்க விடாமல் அவனோடு தனித்திருப்பது தகுமா' என்னும் தொனியில் கேட்டாள் ஆண்டாள்.

நப்பின்னைப் பிராட்டி கோகுலவாசனின் தோள் சேர்ந்த நங்கை. அவளைக் குறைகூற இயலுமா... மாதவனை எண்ணினாலே மனத்தில் இருக்கும் மாசுகள் எல்லாம் மறைந்துவிடும். அப்படியிருக்க நாராயணனோடே சேர்ந்திருக்கும் நல்லாள் எண்ணத்தில் பிழையிருக்க வாய்ப்பு ஏது. அடம்பிடித்து சிறு சேட்டைகள் செய்யும் குழந்தை அடுத்த நொடி ஓடிவந்து அன்னையை முத்தமிட்டு ஆராதிப்பதுபோல ஆண்டாளும் நப்பின்னையை ஆராதித்துப் போற்றத் தீர்மானித்தாள்.

தாயார் மனமிரங்கினால் அந்தத் தயாளனும் மனமிரங்குவான். எனவே, கோதை அந்தக் கோகுலனைப் போற்றித் துதிக்கத் தொடங்கினாள். ஹரியின் கல்யாண குணங்களை சிந்தித்தாள்.

ஆண்டாள்
ஆண்டாள்

துன்பம் இல்லாத வாழ்க்கை என்று ஒன்று மூவுலகிலும் இல்லை. அப்படித் துன்பம் நேரும்போது நாம் இறைவனை நாடிச் சென்று துதிக்கிறோம். இறைவன் ஓடிவந்து நம்மைக் காப்பார். ஆனால், சதா சர்வ காலமும் அந்த மாதவனையே துதித்துக் கொண்டிருப்பவர்களுக்குத் துன்பம் என்றால் அது தோன்றுவதற்கு ஒரு நொடி முன்பாகவே அங்கு அந்த நந்தகோபாலன் எழுந்தருளி அவர்கள் குறை தீர்ப்பான். முப்பத்து முக்கோடி தேவர்களும் எப்போதும் ஹரி நாம ஜபம் செய்வதால் அவர்களுக்குத் துன்பம் நேர்வதற்கு முன்பாகவே அங்கு எழுந்தருளி அவர்களைக் காத்து ரட்சிக்கிறான் கண்ணன். எப்படித் தெரியுமா அவர்களுக்குக் கவலை என்று ஒன்று தோன்றும் முன்பாகவே அதைத் தீர்க்கிறான். அதனால்தான் ஆண்டாள் கண்ணனைக் 'கப்பம் தவிர்க்கும் கலி 'என்றாள்.

தாயாரின் கருணை நாடி விண்ணப்பம் செய்கிறாள் கோதை... திருப்பாவை 19!

கவலையைத் தீர்ப்பவன் அல்ல அவன். கவலை தோன்றுவதையே தவிர்ப்பவன். கலி என்றால் இறுதி. பக்தர்களின் கவலைகளை அவை தோன்றுவதற்கு முன்பாகவே முடித்துவிடுபவன் அந்தக் கண்ணன். செம்மையான நற்குணங்களை உடையவனும் பெரும் வலிமை உடையவனும் பகைவர்களுக்கு வெப்பமாக விளங்கும் தன்மை கொண்டவனுமான விமலனே நீ துயில் எழுவாய் என்று கண்ணனைப் போற்றிய கோதை, கண்ணன் துயில் எழ அவனை அனுமதிக்க வேண்டியவள் அந்த நப்பின்னைப் பிராட்டி அல்லவா, அவளின் கருணையும் அவளுக்குத் தேவையாயிற்றே. நப்பின்னையைப் பாடலானாள் கோதை.

ஆண்டாள்
ஆண்டாள்

"நப்பின்னைப் பிராட்டியே, நீயே திருமகள் என்பதை நாங்கள் அறிவோம். உன் அழகு அந்த மாதவனின் மனதைக் கொள்ளைக் கொண்டிருக்கிறது. உன் பேரெழில் பொருந்திய அந்தத் தோற்றத்தை நான் துதிக்கிறேன். நீ பெரும் கருணை கொண்டு நோன்பை மேற்கொள்ள எங்களுக்கு உதவுவாய். எங்களுக்கு உதவுவதற்காக நீ துயில் எழுவாய். துயில் எழுந்து அந்த தாமோதரனைத் துயில் எழுப்பி எங்களுக்கு தரிசனம் தரச் செய்வாய். அவனுக்கு நாங்கள் சுப்ரபாத சேவைகள் செய்ய உன் திருக்கரத்தால் மங்களகரமான ஆலவட்டத்தையும் கண்ணாடியையும் தந்து உதவுவாய். அதனால் நாங்கள் பயன் அடைந்து இறைவனின் கருணை மழையில் எங்களை நீராட தயை செய்வாய்" என்று ஆண்டாள் நப்பின்னைப் பிராட்டியை வேண்டிக்கொண்டாள்.

அடுத்த கட்டுரைக்கு