Published:Updated:

“நலியும் விவசாயம்தான் இந்த வருட கொலு பொம்மை தீம்!” மயிலாடுதுறை விசேஷம்

கொலு
கொலு

செய்த முதலீட்டுக்குச் செப்டம்பரில் மட்டுமே லாபம் பார்க்க முடியும் என்று இருந்த தொழில், இப்போது கிருஷ்ண ஜயந்தி, கிறிஸ்துமஸ், விநாயகர் சதுர்த்தி என அனைத்துப் பண்டிகை நாள்களிலும் களைகட்டத் தொடங்கி இருக்கிறது.

நவராத்திரி தொடங்கி கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. நவராத்திரிக் கொண்டாட்டத்தில் முக்கியப் பங்கு வகிப்பவை கொலுக்கள். வீடுகளிலும் கோயில்களிலும் வண்ணமயமான பொம்மைகள் கொண்டு எழிலுற அமைக்கப்படும் கொலு ஒவ்வோர் ஆண்டும் பல புதிய பொம்மைகள் வரவால் அழகுபெறும். இந்த பொம்மைகளைப் பாரம்பர்யமாகச் செய்துவரும் குடும்பம் ஒன்று மயிலாடுதுறையில் இருப்பதை அறிந்து அவர்களைச் சந்தித்தோம். எடுத்த எடுப்பிலேயே பெருமைபொங்கப் பேசினார் அந்தக் குடும்பத்து இளைஞர் ஆனந்த குமார்.

Golu Dolls
Golu Dolls

"100 வருடங்களுக்கு முன் என் தாத்தாவின் அப்பா காலத்தில் தொடங்கப்பட்ட தொழில் இது. ஜனாதிபதி ஜெயில் சிங், முதல்வர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோரின் கைகளால் எங்கள் குடும்பத்தினர் விருதுகள் வாங்கி இருக்காங்க. இப்போ நாங்க நாலாவது தலைமுறையா இந்தத் தொழிலை செஞ்சிக்கிட்டுவர்றோம்” என்று பெருமை பொங்கப் பேசுகிறார். இவர்தான் மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையிலிருக்கும் மாயூரம் ஸ்ரீ முருகேசன் கலைக்கூடத்தின் உரிமையாளர்.

கொலுபொம்மைகளைச் செய்வதில் கடந்த 100 ஆண்டுகளாகத் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுவரும் குடும்பம்தான் ஆனந்தகுமாரின் குடும்பம். இவர்களின் கைவண்ணத்தில் மிளிரும் பொம்மைகள் நம் கண்ணையும் கருத்தையும் கவர்பவை. இவர்களின் கலைக்கூடத்தில், களிமண் விநாயகர், கிருஷ்ணன் சிலைகள், வரலாற்றுச் சிறுகதைகளை சித்திரிக்கும் செட் பொம்மைகள், காகிதக் கூழ் டான்சிங் டால், கேரள கதகளி மற்றும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், கொலுவுக்கான தெப்பக்குளம், பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கான மாதிரி உருவங்கள் 150-க்கும் மேற்பட்ட செட் பொம்மைகளோடு காணப்படுகிறது இவர்களின் விலைப்பட்டியல்.

Golu dolls
Golu dolls

காமராஜர், நேரு, காந்தி, அம்பேத்கர் என்று கம்பீரமாய் நிற்கும் தேசியத் தலைவர்களில் தொடங்கி குல்லா வியாபாரி குரங்கு கதை, பாட்டி வடை சுட்ட கதை எனத் தத்ரூபமாக வடிக்கப்பட்ட பொம்மைகள் 20 ரூபாயில் தொடங்கி 20,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.

"எம்.காம் தேர்ச்சி பெற்று பரம்பரைத் தொழில் வேண்டாம் என்று பெங்களூருக்கு வேலைக்குச் சென்றேன். அப்பாவின் திடீர் மரணம் என்னை இந்தத் தொழிலுக்கு இழுத்து வந்துவிட்டது” எனச் சொல்லும் ஆனந்த குமார் தொழிலில் பல புதுமைகளையும் ஏற்படுத்தியுள்ளார்.

Golu Dolls
Golu Dolls
அத்திவரதர், நரசிம்மர், சக்கரத்தாழ்வார்... களைகட்டும் கொலு பொம்மை விற்பனை!

இங்கு கொலு பொம்மைகள் அனைத்தும் எந்திரங்களின் உதவியின்றி, கைகளால் மட்டுமே தயார் செய்யப்படுகின்றன. கற்பனைத் திறனும், வாடிக்கையாளர்கள் விரும்பிக் கேட்பதை மனதில் உள்வாங்கிக் கொண்டு அப்படியே சிலை வடிக்கும் திறமையும்தான் இவர்கள் வடிக்கும் பொம்மைகளுக்கு உயிர் கொடுக்கிறது.

வருடம் முழுதும் பொம்மைகள் தயாரித்தாலும் செப்டம்பர் மாதத்தில் நவராத்திரிக்கு மட்டுமே விற்பனை. செய்த முதலீட்டுக்குச் செப்டம்பரில் மட்டுமே லாபம் பார்க்க முடியும் என்று இருந்த தொழில், இப்போது கிருஷ்ண ஜயந்தி, கிறிஸ்துமஸ், விநாயகர் சதுர்த்தி என அனைத்துப் பண்டிகை நாள்களிலும் களைகட்டத் தொடங்கியிருக்கிறது.

AnandaKumar - Golu Dolls maker
AnandaKumar - Golu Dolls maker

தமிழ்நாடு மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் குவிவதால் ஒரு நாளைக்கு 3,000 வரை சம்பாதிக்க முடியும் என்று இருந்தாலும், இவருக்குப் பின் யாரும் இந்தக் கலையைக் கற்றுக்கொண்டு பொம்மைகள் தயாரிப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்பதால் மன வருத்தம் அடைந்தார் ஆனந்தகுமார். ‘பிற்காலத்தில் இக்கைவண்ணக் கலை வேலைப்பாடு காணாமல் போய்விடுமோ’ என்கிற கவலை வந்து விட, பொம்மைகள் தயாரிப்பது குறித்த இலவசப் பயிற்சி வகுப்புகளை நடத்தி கற்க வருபவர்களுக்கு ஊக்கத்தொகையும் அளித்துவருகிறார் ஆனந்தகுமார்.

நான்கு தலைமுறையாகக் கொலு பொம்மைகள் தயாரிக்கப்படும் இந்தக் கலைக்கூடத்தில் இந்த ஆண்டு நவராத்திரி ஸ்பெஷல் தீம், 'நலிந்து வரும் நம் பாரம்பர்ய விவசாயம்'. விதை தெளித்தல், நாற்று நடுதல், கிணற்றிலிருந்து தண்ணீர் ஏற்றம் இறைத்தல், களையெடுத்தல், நெற்கட்டு சுமந்து செல்லுதல், நெல் அடித்தல், அந்த நெல்லை மூட்டையில் பிடித்தல் என 33 வகையான மண் பொம்மைகள் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு உள்ளன. இவற்றை வாடிக்கையாளர்களும் விருப்பத்தோடு வாங்கிச் செல்கிறார்கள்.

Golu Dolls
Golu Dolls
`நூற்றாண்டைக் கடந்த பொம்மைகள்; 60 ஆண்டுகளாகக் கொலு!' - நெகிழும் மூத்த தம்பதி

என்னதான் கம்ப்யூட்டரில் டிசைன் செய்து வகைவகையான பொம்மைகள் சந்தையை ஆக்கிரமிப்பு செய்தாலும், பாரம்பர்ய மண் பொம்மைகளின் மகத்துவமே தனிதான்.

அடுத்த கட்டுரைக்கு