Published:Updated:

தங்கத்தில் தட்டு, டம்ளர், 2 கரண்டி! - மும்பை லால்பாக் விநாயகருக்குக் காணிக்கையளித்த பக்தர்

எம்.குமரேசன்

மும்பையின் பணக்கார விநாயகர், லால்பாக் ராஜா ஆவார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 11 நாள்கள் பக்தர்களுக்கு காட்சி தருவார்.

லால்பாக் விநாயகர்
லால்பாக் விநாயகர்

விநாயகர் சதுர்த்தி பண்டிகை மும்பையில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். பிரமாண்ட விநாயகர் சிலைகள் நகரின் பல பகுதிகளில் வைக்கப்பட்டிருக்கும். அதில், லால்பாக் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் விநாயகர் பிரசித்தி பெற்றவர். இந்த விநாயகருக்கு `லால்பாக் ராஜா' என்பது செல்லப் பெயர். இந்த விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பிரமாண்டமான லால்பாக் ராஜா பக்தர்களுக்கு காட்சி தந்து வருகிறார். லட்சக்கணக்கான மக்கள் அவரை தரிசித்து வருகின்றனர். லால்பாக் ராஜாவை தரிசிக்க வரும் பக்தர்கள் லட்சக்கணக்கில் அவருக்கு காணிக்கை செலுத்துவது உண்டு. இந்த ஆண்டு அவரை தரிசிக்க வந்த அடையாளம் தெரியாத பக்தர் ஒருவர், தங்கத்தில் செய்யப்பட்ட தட்டு, டம்ளர், இரு கரண்டிகளைக் காணிக்கையாக வழங்கியுள்ளார். இதன் மொத்த எடை 1.2 கிலோ. மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும்.

representative image
representative image

லால்பாக் ராஜா கணபதி மண்டலின் தலைவர் பாலாசாகேப் காம்ப்ளே இதுகுறித்து கூறுகையில், ``85 ஆண்டுக்காலமாக லால்பாக் ராஜா விநாயகரை வைத்து வருகிறோம். ஒவ்வோர் ஆண்டும் அவருக்கு தங்கம், வெள்ளி நகைகளை பக்தர்கள் வழங்குவார்கள். ஆனால், தங்கத்தில் செய்யப்பட்ட இந்தத் தட்டுகளைக் காணிக்கையாக அளித்தவர் அடையாளம் தெரியவில்லை'' என்றார்.

கடந்த ஆண்டு லால்பாக் ராஜாவுக்கு ரூ.12 கோடி காணிக்கையாகக் கிடைத்தது. அதிகபட்சமாக ரூ.42 லட்சம் மதிப்புள்ள தங்கத்தில் வைரம் பதிக்கப்பட்டு செய்யப்பட்ட கணபதி சிலை மற்றும் ரூ.35 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்கக்கட்டியும் காணிக்கையாகக் கிடைத்திருந்தது. ஒவ்வோர் ஆண்டும் லால்பாக் ராஜாவுக்கு காணிக்கையாகக் கிடைக்கும் தங்கம், வைர, வெள்ளி நகைகள் ஏலத்தில் விடப்படும். கடந்த ஆண்டு நகைகளை ஏலம்விட்டபோது ரூ.1.58 கோடி லால்பாக் ராஜா கணபதி மண்டலுக்குக் கிடைத்தது.

லால்பாக் ராஜா விநாயகர்
லால்பாக் ராஜா விநாயகர்

மும்பையின் பணக்கார விநாயகர் லால்பாக் ராஜா ஆவார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு லால்பாக் ராஜா 11 நாள்கள் பக்தர்களுக்கு காட்சி தருவார். தினமும் 1 லட்சம் பேர் அவரை தரிசிப்பார்கள்.1934- ம் ஆண்டுமுதல் லால்பாக் ராஜா வைக்கப்பட்டு வருகிறார். இந்தியாவிலேயே 20 மணி நேரத்துக்கு மேல் நடைபெறும் நீண்ட ஊர்வலம் இந்த ராஜாவின் சிறப்பு. காலை 10 மணிக்கு ஊர்வலமாகப் புறப்படும் லால்பாக் ராஜா, அடுத்த நாள் அதிகாலைதான் மும்பை சவுபாத்தி கடற்கரையில் கரைக்கப்படுவார்.