Published:Updated:

வந்தியத்தேவன் பயணித்த வழியில் நாமும் வரலாற்றுப் பயணம் மேற்கொள்வோம்!

பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பயணம்
பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பயணம்

யாத்திரையில் காணப்போகும் குறிப்பிட்ட சில இடங்களின் சரித்திரச் சிறப்புகள், அமரர் கல்கியின் மொழியிலேயே உங்களுக்காக...

அமரர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ புதினம் எத்தனை முறை வாசித்தாலும் திகட்டாதது. பிற்காலச் சோழர் மரபின் மகத்தான வரலாற்றினை அருண்மொழியாகிய ராஜராஜ சோழனை மையப்படுத்தி, வந்தியத்தேவனை நாயகனாக்கி பெருங் கதையாக அளித்த பாணி அலாதியானது.

சரித்திரச் சம்பவங்களோடு வீராணம், கடம்பூர் மாளிகை, திருப்புறம் பயம், பழையாறை, தஞ்சை... என அந்தச் சம்பவங்கள் நிகழ்ந்த இடங்கள் குறித்து புதினம் தரும் தகவல்களோ நம்மை வியப்பில் ஆழ்த்தும். மேலும், வரலாற்று மாந்தர்களோடு கற்பனை மாந்தர்களையும் இணைத்து, நம்மையும் அவர்கள் வாழ்ந்த காலத்துக்கே அழைத்துச் செல்லும் கதையின் போக்கும் நடையும், அந்த நூற்றாண்டின் அனுபவங்களுக்காக நம்மை ஏங்கவைக்கும்.

அப்படியான உன்னத அனுபவங்களை வாசகர்களுக்கு அளிக்கும் முயற்சிதான், விகடனின் `பொன்னியின் செல்வன் - வந்தியத்தேவன் வழியில் வரலாற்றுப் பயணம்’.

மூன்று பகல், இரண்டு இரவுகள், சகல வசதிகளோடுகூடிய தங்கும் விடுதிகள், அறுசுவை உணவு வசதி ஆகியவற்றோடு, சோழர் தம் புகழ்பாடும் இடங்கள், கல்வெட்டுகள், அவை குறித்த விளக்கங்களை எடுத்துச் சொல்லும், சரித்திர ஆர்வலர்களின் வழிகாட்டல்கள், நம் பண்டைய மரபின் மாண்பைச் சொல்லும் சிறப்பு நிகழ்வுகள் ஆகிய அம்சங்களோடு திகழும் சரித்திர யாத்திரை இது.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஆடிப்பெருக்கை முன்னிட்டு மிகப் பிரமாண்டமாக நடந்தேறியது, முதல் யாத்திரை. அடுத்து பொன்னியின் செல்வனாம் ராஜராஜ சோழனின் நட்சத்திர நாளான ஐப்பசி சதயத்தை (நவ.7) முன்னிட்டு, வரும் நவம்பர் மாதம் 6-ம் தேதி தொடங்கவுள்ளது இரண்டாம் யாத்திரை (நவம்பர் 6, 7, 8 - மூன்று நாள்கள்).

யாத்திரையில் காணப்போகும் குறிப்பிட்ட சில இடங்களின் சரித்திரச் சிறப்புகள், அமரர் கல்கியின் மொழியிலேயே உங்களுக்காக...

வீராணம் ஏரியல்ல... கடல்!

தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையில் உள்ள திருமுனைப்பாடி நாட்டின் தென்பகுதியில், தில்லைச் சிற்றம்பலத் துக்கு மேற்கே இரண்டு காத தூரத்தில், அலைகடல் போன்ற ஓர் ஏரி விரிந்து பரந்து கிடக்கிறது. அதற்கு வீரநாராயண ஏரி என்று பெயர். அது, தெற்கு வடக்கில் ஒன்றரைக் காத நீளமும், கிழக்கு மேற்கில் அரைக் காத அகலமும் கொண்டது. காலப்போக்கில் அதன் பெயர் சிதைந்து, இந்நாளில் ‘வீராணத்து ஏரி’ என்ற பெயரால் வழங்கிவருகிறது.

Ponniyin selvan trip
Ponniyin selvan trip

ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில், அலை கடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரைமீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்துகொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீரச் சரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர் குலத்தைச் சேர்ந்தவன். வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர்.

நெடுந்தூரம் பிரயாணம் செய்து அலுத்துக் களைத்திருந்த அவனுடைய குதிரை, மெள்ள மெள்ள நடந்து சென்றுகொண்டிருந்தது. அதைப் பற்றி அந்த இளம் வீரன் கவலைப்படவில்லை. அகண்ட வீர நாராயண ஏரியின் தோற்றம் அவன் உள்ளத்தை அவ்வளவாக வசீகரித்திருந்தது.

வரலாற்றுப் பயணம்
வரலாற்றுப் பயணம்

ஆகா! இது எவ்வளவு பிரமாண்டமான ஏரி... எத்தனை நீளம்... எத்தனை அகலம்? தொண்டை நாட்டில் பல்லவப் பேரரசர்களின் காலத்தில் அமைத்த ஏரிகளெல்லாம் இந்த ஏரிக்கு முன்னால் சிறிய குளம் குட்டைகள் என்றே சொல்லத் தோன்றும் அல்லவா?

வட காவேரியில் வீணாகச் சென்று கடலில் விழும் தண்ணீரைப் பயன்படுத்துவதற்காக, மதுரை கொண்ட பராந்தகரின் புதல்வர் இளவரசர் இராஜாதித்தர், இந்தக் கடல்போன்ற ஏரியை அமைக்க வேண்டுமென்று எண்ணினாரே... எண்ணியதைச் செயலிலும் நிறைவேற்றினாரே, அவர் எப்பேர்ப்பட்ட அறிவாளியாய் இருந்திருக்க வேண்டும்? வீர பௌருஷத்திலேதான் அவருக்கு இணை வேறு யார்? தக்கோலத்தில் நடந்த போரில், தாமே முன்னணியில் யானைமீது ஏறிச்சென்று போராடினார் அல்லவா? போராடிப் பகைவர்களின் வேலை மார்பிலே தாங்கிக்கொண்டு உயிர்நீத்தார் அல்லவா? அதனால், ‘யானை மேல் துஞ்சிய தேவர்’ எனப் பெயர்பெற்று வீர சொர்க்கம் அடைந்தார் அல்லவா?

வரலாற்றுப் பயணம்
வரலாற்றுப் பயணம்

இந்தச் சோழ குலத்து மன்னர்களே அதிசயமானவர்கள்தான்! அவர்கள் வீரத்தில் எப்படியோ, அப்படியே அறத்திலும் மிக்கவர்கள். அறத்தில் எப்படியோ அப்படியே, தெய்வபக்தியில் சிறந்தவர்கள். அத்தகைய சோழ குல மன்னர்களுடன் நட்புரிமை கொள்ளும் பேறு தனக்குக் கிடைத்திருப்பது பற்றி நினைக்க நினைக்க வந்தியத் தேவனுடைய தோள்கள் பூரித்தன. மேற்குத் திசையிலிருந்து விர்ரென்று அடித்த காற்றினால், வீர நாராயண ஏரித் தண்ணீர் அலைமோதிக்கொண்டு கரையைத் தாக்கியதுபோல், அவனுடைய உள்ளமும் பெருமிதத்தால் பொங்கித் ததும்பிற்று.

(பொன்னியின் செல்வன் நூலிலிருந்து...)

வந்தியத்தேவனுக்கு மட்டுமா, இன்றைக்கும் வீராணம் தொடங்கி சோழ மண்டலத்தை ஊடறுத்துப் பயணிக்கும் எவருக்கும் அதே பூரிப்பும் பெருமிதமும் எழாமல் போகாது! அந்தச் சிலிர்ப்பான அனுபவம் உங்களுக்கும் வேண்டுமா?

வாருங்கள், நாமும் வந்தியத்தேவனின் வழியில் பயணிப்போம்!

திருப்புமுனை தந்த திருப்புறம்பயம்

குடந்தை நகருக்கு அரைக்காதம் வடமேற்கில், மண்ணியாற்றுக்கு வடகரையில், திருப்புறம்பயம் என்னும் கிராமத்துக்கருகில் ஒரு பள்ளிப்படைக் கோயில் இருந்தது. இது, அந்தப் பிரதேசத்தில் நடந்த ஒரு மாபெரும் போரில் உயிர் நீத்த கங்க மன்னன் பிரிதிவீபதியின் ஞாபகமாக எடுத்தது. தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், திருப்புறம் பயம் சண்டை முக்கியம் வாய்ந்தது.

வரலாற்றுப் பயணம்
வரலாற்றுப் பயணம்

தெற்கே பாண்டியர்களும் வடக்கே பல்லவர்களும் வலிமை மிக்கவர்களாகிச் சோழர்களை நெருக்கி வந்தார்கள். கடைசியாக, சோழ குலத்தார் பாண்டியர்களின் தொல்லையைப் பொறுக்க முடியாமல், அவர்களுடைய நெடுங்காலத் தலைநகரமான உறையூரை விட்டு நகர வேண்டி வந்தது. அப்படி நகர்ந்தவர்கள், குடந்தைக்கு அருகில் இருந்த பழையாறை என்னும் நகருக்கு வந்து சேர்ந்தார்கள். பழையாறைச் சோழ மன்னர்களில் விஜயாலய சோழர் என்பவர் இணையில்லா வீரப்புகழ்பெற்றவர். இவர், பற்பல யுத்த களங்களில் முன்னணியில் நின்று போர் செய்து, உடம்பில் தொண்ணூற்றாறு காயங்களை அடைந்தவர்.

விஜயாலய சோழர் முதுமைப் பிராயத்தை அடைந்து, ஆதித்த சோழனுக்குப் பட்டங்கட்டிவிட்டு ஓய்ந்திருந்தார். அச்சமயத்தில் பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் பகைமை முற்றி அடிக்கடி சண்டை நடந்துகொண்டிருந்தது. மண்ணியாற்றின் வடகரையில், திருப்புறம்பயம் கிராமத்துக்கு அருகில், பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இறுதியான பலப்பரீட்சை நடந்தது. இரு தரப்பிலும் படைபலம் ஏறக்குறைய சமமாக இருந்தது.

திருப்புறம்பயம்
திருப்புறம்பயம்

பல்லவ அபராஜிதவர்மனுக்குத் துணையாக, கங்க நாட்டு பிரிதிவீபதி வந்திருந்தான். ஆதித்த சோழனும் அபராஜிதவர்மனுடைய கட்சியில் சேர்ந்திருந்தான். பாண்டிய சைன்யத்துடனும் பல்லவ சைன்யத்துடனும் ஒப்பிட்டால், சோழ சைன்யம் மிகச் சிறியதாகவே இருந்தது. எனினும், இம்முறை பாண்டியன் வெற்றிபெற்றால், சோழ வம்சம் அடியோடு நாசமாக நேரும் என்று ஆதித்தன் அறிந்திருந்தான். ஆகையால், பெரிய சமுத்திரத்தில் கலக்கும் காவேரி நதியைப்போல் பல்லவரின் மகா சைன்யத்தில் தன்னுடைய சிறு படையையும் சேர்ந்திருந்தான்.

மூன்று நாள் இவ்விதம் கோர யுத்தம் நடந்த பிறகு, பல்லவர் சைன்யத்தில் ஒரு பகுதிதான் மிஞ்சியிருந்தது. மிஞ்சியவர்களும் மிகக் களைத்திருந்தார்கள். அபராஜிதன், பிரதிவீபதி, ஆதித்தன் ஆகிய மூன்று மன்னர்களுடன் படைத்தலைவர்களும் கலந்து ஆலோசித்தார்கள். இனி எதிர்த்து நிற்க முடியாது என்றும், பின்வாங்கி, கொள்ளிடத்துக்கு வடகரைக்குச் சென்றுவிடுவதே உசிதம் என்றும் முடிவுசெய்தார்கள்.

வந்தியத்தேவனுடன் ஓர் வரலாற்றுப் பயணம்

Posted by Sakthi Vikatan on Tuesday, October 22, 2019

இப்படிப்பட்ட நிலைமையில், போர்க்களத்தில் ஓர் அதிசயம் நடந்தது. முதுமையினால் தளர்ந்தவனும், உடம்பில் தொண்ணூற்று வடுக்கள் உள்ளவனும், கால்களில் பட்ட கொடிய காயத்தினால் எழுந்து நிற்கும் சக்தியை இழந்தவனுமான விஜயாலய சோழன், எப்படியோ யுத்த அரங்கத்துக்கு வந்து விட்டான். பல்லவ சைன்யம் பின்வாங்கி, கொள்ளிடத்துக்கு வடக்கே போய்விட்டால், சோழ நாடு மறுபடியும் நெடுங்காலம் தலையெடுக்க முடியாது என்பதை உணர்ந்திருந்த அந்தக் கிழச் சிங்கத்தின் கர்ஜனை, பல்லவர் கட்சியில் எஞ்சியிருந்த வீரர்களுக்குப் புத்துயிர் அளித்தது.

இருவருடைய தோள்களில் அமர்ந்த விஜயாலயன், அந்தப் போர் முனைக்குப் போனான். இரண்டு கைகளிலும் இரண்டு நீண்ட வாள்களை வைத்துக்கொண்டு, திருமாலின் சக்ராயுதத்தைப் போல் சுழற்றிக் கொண்டு, எதிரிகளிடையே புகுந்தான். அவனைத் தடுக்க யாராலும் முடியவில்லை. அவன் புகுந்துசென்ற வழியெல்லாம் இருபுறமும் பகைவர்களின் உடல்கள் குவிந்து கொண்டேயிருந்தன. அவ்வளவுதான்; தேவி ஜயலக்ஷ்மியின் கருணாகடாட்சம் இந்தப் பக்கம் திரும்பிவிட்டது.

பள்ளிப்படை
பள்ளிப்படை

பல்லவர் படைத் தலைவர்கள் பின்வாங்கி, கொள்ளிடத்துக்கு வடகரை போகும் யோசனையைக் கைவிட்டார்கள். மூன்று வேந்தர்களும் தமக்குரிய மூலபல வீரர்கள் புடைசூழ, போர்முனையில் புகுந்தார்கள். சிறிது நேரத்துக்கெல்லாம் பாண்டிய வீரர்கள் பின்வாங்கத் தொடங்கினார்கள். கங்க மன்னன் பிரதிவீபதி, அன்றைய போரில் செயற்கரும் செயல்கள் பல புரிந்த பிறகு, தன் புகழுடம்பை அப்போர்க்களத்தில் நிலைநாட்டிவிட்டு வீர சொர்க்கம் சென்றான். அத்தகைய வீரனுடைய ஞாபகார்த்தமாக அப்போர்களத்தில் வீரக் கல் நாட்டினார்கள். பிறகு, பள்ளிப்படைக் கோயிலும் எடுத்தார்கள்.

(பொன்னியின் செல்வன் நூலிலிருந்து...)

நண்பர்களே! வீரம் செறிந்த இந்தத் தலத்தின் வழியாகவும் நிகழவுள்ளது, பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பயணம்.

வந்தியத்தேவனும் அவனைச் சிறைப்படுத்தத் துடிக்கும் கந்தமாறனும், காதலிக்கத் துடிக்கும் நந்தினியும் அங்கே காத்திருக்கிறார்கள்!

பழையாறை எனும் பெருநகரம்!

அரிசிலாற்றுக்குத் தென் கரையில் நின்று அந்நகரைப் பார்ப்போம். அடடா! வெறும் நகரமா இது? தமிழ்த்தாயின் அழகிய நெற்றியில் தொங்கும் ஆபரணத்தைப் போல அல்லவா விளங்குகிறது! பச்சை மரகதங்களும் சிவந்த ரத்தினங்களும், நீலக்கற்களும் பதித்த நெற்றிச் சுட்டியைப் போல அல்லவா திகழ்கிறது!

வரலாற்றுப் பயணம்
வரலாற்றுப் பயணம்

நதிகளும் ஓடைகளும் தடாகங்களும் கழனிகளும் புதுநீர் நிறைந்து ததும்புகின்றன. அவற்றில் பல வர்ண மலர்கள் பூத்துத் திகழ்கின்றன. தென்னை மரங்களும் புன்னை மரங்களும் குளிர்ச்சியான பசுமையைப் பரப்புகின்றன. இவ்வளவுக்கும் இடையிடையே விண்முட்டும் மணி மாடமாளிகைகளின் பொற்கலசங்களும், கோயில் கோபுரங்களின் உச்சியில் உள்ள தங்க ஸ்தூபிகளும் ஒளிவீசுகின்றன.

அப்பப்பா! பழையாறை என்னும் இந்த ஒரு பெரும் நகரத்துக்குள்ளே எத்தனை சிறிய ஊர்கள்? நந்திபுர விண்ணகரம், திருச்சத்திமுற்றம், பட்டீச்சுரம், அரிச்சந்திரபுரம் முதலிய ஊர்களும், அந்த ஊர்களின் ஆலயங்களும் இந்தப் பழையாறை என்னும் சோழர் தலைநகரில் அடங்கியுள்ளன. பழையாறையின் நாலு திசைகளிலும் வடதளி, கீழ்த்தளி, மேற்றளி, தென்தளி என்னும் நாலு சிவனார் கோயில்கள் இருக்கின்றன.

போர் வீரர்கள் குடியிருக்கும் ஆரியப் படை வீடு, புதுப்படை வீடு, மணப்படை வீடு, பம்பைப்படை வீடு ஆகிய நாலு வீரபுரிகள் காணப்படுகின்றன. இவ்வளவுக்கும் நடுநாயகமாகச் சோழ மாளிகை என்றால், ஒரே மாளிகையா? விஜயாலய சோழருக்கு முன்னால் இது ஒரு தனி மாளிகையாக இருந்தது. பிறகு, ஒவ்வொரு அரசகுமாரனுக்கும் ஒவ்வொரு இளவரசிக்குமாகப் பழைய சோழ மாளிகையையொட்டி புதிய புதிய மாளிகைகள் எழுந்து நிற்கும் காட்சியைக் காண்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும். வர்ணிப்பதற்கோ பதினாயிரம் கவிஞர்களின் கற்பனாசக்தி போதாது.

இன்றைக்கு ஏதோ திருவிழா போலக் காண்கிறது. வீதிகளில் அழகிய ஆடை ஆபரணங்கள் அணிந்து ஆடவரும் பெண்டிரும் சிறுவர் சிறுமிகளும் உலாவி வருகின்றனர். தெருமுனைகளில் ஆங்காங்கு ஜனங்கள் கும்பல் கூடி நிற்கின்றனர். நந்திபுர விண்ணகரத்துப் பெருமாள் கோயிலைச் சுற்றி இந்தத் திருவிழாக் கொண்டாட்டங்கள் அதிகமாக நடைபெறுகின்றன. இது என்ன?

வந்தியத்தேவன்
வந்தியத்தேவன்

“கண்டேன் கண்டேன் கண்டேன் கண்ணுக்கினியன கண்டேன்!” என்று பாடுவது யார்? தெரிந்த குரலாயிருக்கிறதே! இதோ நமது பழைய சிநேகிதர் ஆழ்வார்க்கடியார் நம்பி சாக்ஷாத்காரமாக நிற்கிறார்!

(பொன்னியின் செல்வன் நூலிலிருந்து...)

சோழர் குலத்தின் புகழ்பாடிய பழையாறை எனும் பெருநகரம் இப்போது எப்படியிருக்கிறது, `கண்ணுக்கினியன கண்டேன்’ என்று கதை மாந்தன் ஆழ்வார்க்கடியார் சேவித்த திருமாலின் விண்ணகரமும், சோழர்கள் போற்றிய சிவத்தளிகளும் எவ்விதமுள்ளன...

ஒவ்வொன்றையும் தரிசித்து மகிழ புறப்படுவோம் வாருங்கள்!

கோடியக்கரையும் குழகர்கோயிலும்!

அந்தி நேரம் அமைதிபெற்று விளங்கியது. கோடியக்கரையின் ஓரத்தில் கடல் அலை அடங்கி ஓய்ந்திருந்தது. கட்டுமரங்களும், படகுகளும் கரையை நெருங்கிக்கொண்டிருந்தன. கடலில் இரை தேடச் சென்ற பறவைகள் திரும்பி வந்துகொண்டிருந்தன. கரையில் சிறிது தூரம் வெண்மணல் பரந்திருந்தது.

கோடியக்கரை
கோடியக்கரை

அதற்கு அப்பால் வெகுதூரத்துக்கு வெகுதூரம் காடு படர்ந்திருந்தது. காட்டு மரங்களின் கிளை ஆடவில்லை; இலைகள் அசையவில்லை. நாலா பக்கமும் நிசப்தம் நிலவியது. செங்கதிர்த் தேவன் கடலும் வானும் கலக்கும் இடத்தை நோக்கி விரைந்து இறங்கிக்கொண்டிருந்தான். மேகத்திரள்கள் சில சூரியனுடைய செங்கதிர்களை மறைக்கப் பார்த்து, தாங்களும் ஒளிபெற்றுத் திகழ்ந்தன.

கரை ஓரத்தில், கடலில் ஒரு சிறிய படகு மிதந்தது. கடலின் மெல்லிய அலைப் பூங்கரங்கள் அந்தப் படகைக் குழந்தையின் மணித் தொட்டிலை ஆட்டுவதுபோல மெள்ள மெள்ள அசைத்தன. வானில் மிதந்துவந்த அப்பாடலைச் சற்று செவிகொடுத்துக் கேட்கலாம்.

“அலைகடலும் ஓய்ந்திருக்க

அகக் கடல்தான் பொங்குவதேன்?

நிலமகளும் துயிலுகையில்

நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?

காட்டினில் வாழ் பறவைகளும்

கூடுகளைத் தேடினவே!

வேட்டுவரும் வில்லியரும்

வீடு நோக்கி ஏகுவரே

வானகமும் நானிலமும்

மோனமதில் ஆழ்ந்திருக்க

மான்விழியாள் பெண்ணொருத்தி

மனத்தில் புயல் அடிப்பதுமேன்?

வாரிதியும் அடங்கி நிற்கும்

மாருதமும் தவழ்ந்து வரும்

காரிகையாள் உளந்தனிலே

காற்றுச் சுழன் றடிப்பதுமேன்?”

குட்டை மரங்கள் அடர்ந்த காட்டின் நடுவில் கோபுரம் ஒன்று தலை தூக்கி நின்றது. அதனடியில், கோடிக்கரைக் குழகர் கோயில் கொண்டிருந்தார். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் சுந்தரமூர்த்தி நாயனார் இந்தக் கோடிக்கரைக்கு வந்தார். காட்டின் மத்தியில் தன்னந்தனியே கோயில்கொண்டிருந்த குழகரைத் தரிசித்தார். சுந்தரமூர்த்தி நாயனார் இங்கு வந்திருந்தபோது கலங்கரை விளக்கம் இல்லை. முதற் பராந்தகரின் காலத்திலேதான் அது கட்டப்பட்டது.

அந்த இளமங்கையின் உள்ளத்தில் அப்படி என்ன சோகம் குடி கொண்டிருக்குமோ, தெரியாது! பூங்குழலி கானத்தை நிறுத்தினாள். படகின் துடுப்பை நாலு தடவை வலித்தாள். படகு கரை அருகில் வந்து சேர்ந்தது. பூங்குழலி படகிலிருந்து துள்ளிக் குதித்துக் கரையில் இறங்கினாள்.

வந்தியத்தேவன்
வந்தியத்தேவன்

பூங்குழலி கடற்கரை ஓரத்தில் படகின்மீது சாய்ந்த வண்ணம் நாற்புறமும் பார்த்தாள். கலங்கரை விளக்கத்தைப் பார்த்து அந்தப் பக்கம் போகலாமா என்று யோசித்தாள். பிறகு குழகர் கோயிலின் கோபுர கலசத்தை நோக்கினாள்.

அச்சமயம் கோயிலில் சேமங்கலம் அடிக்கும் ஓசை கேட்கவே, பூங்குழலி ஒரு தீர்மானத்துக்கு வந்தாள். அதற்குள் வீட்டுக்குப் போய் என்ன செய்வது? கோயிலுக்குப் போகலாம்! பட்டரைத் தேவாரம் பாடச் சொல்லி கேட்கலாம். பிறகு, பிரசாதமும் வாங்கிக் கொண்டு வரலாம். இப்படி முடிவு செய்துகொண்டு பூங்குழலி கோயில் இருந்த திசையை நோக்கி நடந்தாள். பூங்குழலி, ஆலயத்துக்குள் போனாள். பட்டர் அவளைப் பார்த்து முகம்மலர்ந்தார். தேங்காய் மூடியும், பிரசாதமும் கொண்டுவந்து பட்டர் கொடுத்தார்.

“அம்மா கொஞ்சம் காத்திருக்கிறாயா? நானும் இதோ சந்நிதியைப் பூட்டிக்கொண்டு வீட்டுக்கு வருகிறேன்!” என்றார்.

“இருக்கிறேன், ஐயா! எனக்கு அவசரம் ஒன்றுமில்லை. மெதுவாகக் கோயில் கைங்கரியங்களை முடித்துக்கொண்டு புறப்படுங்கள்!” என்று பூங்குழலி கூறிவிட்டு, கோயில் பிரகாரத்துக்கு வந்தாள். அவள், பிரகாரத்தின் மதில் சுவரின் மேல் தாவி ஏறி, காலை நீட்டிப் படுத்து, தேங்காய் மூடியைப் பல்லினால் சுரண்டிச் சாப்பிடத் தொடங்கிய வேளையில்... குதிரையின் காலடிச் சத்தத்தைக் கேட்டாள். சத்தம் அருகில் நெருங்கி வரவும், ஒரு குதிரை அல்ல; இரண்டு குதிரைகள் வருவதுபோலத் தோன்றியது.

வரலாற்றுப் பயணம்
வரலாற்றுப் பயணம்

வந்தது யாராக இருக்கும் உங்களால் கணிக்க முடிகிறதா?

உங்கள் கணிப்பு சரியே. வந்தது சாட்சாத் வல்லவரையன் வந்தியத்தேவனும் வைத்தியர் மகனும்தான்.

(பொன்னியின் செல்வன் நூலிலிருந்து...)

பூங்குழலி உலாவிய அந்தக் கடற்கரையும், அதே குழகர் கோயிலும் நமக்காகக் காத்திருக்கின்றன. நாமும் புறப்படுவோமா...

அலையோசையை மிஞ்சும் பூங்குழலியின் அந்த கானத்தை நாமும் செவிமடுக்கலாம் வாருங்கள்...

அடுத்த கட்டுரைக்கு