Published:Updated:

மனக்கோயில் கட்டிய பூசலார் நாயனார் குருபூஜை... உள்ளத்தில் ஈசனைவைத்து வழிபட உகந்த தினம்!

மனத்தின் வேகம் எவராலும் கணிக்க முடியாதது. எந்தச் செயலையும் ஒரு கணத்தில் மனக்கண்முன் நிறுத்தும் வலிமைபொருந்தியது. அத்தகைய மனத்தை மெள்ள நிறுத்தி, ஒவ்வொரு செயலாகக் காணவைப்பது அரிய செயல். அத்தகைய செயலைப் பூசலார் செய்யத் துணிந்தார்.

சிவபெருமான்
சிவபெருமான்

அந்த ஊரில் லிங்கத் திருமேனியாக எழுந்தருளியிருந்த ஈசனுக்குக் கூரையில்லை. வெயிலும் மழையும் அவன் மேல் விழுந்து தெரித்தன. அதைக் கண்டும் காணாமல் இருந்த அடியவர்கள் பலர். ஆனால், ஒருவரால் அவ்வாறு செல்ல முடியவில்லை. அகிலம் படைத்த அந்த ஆலவாயனுக்கு ஓர் ஆலயம் எழுப்ப விரும்பினார். கையில் செல்வம் இல்லாததால், செல்வத்தை தேடித்திரிந்தார். திருப்பணிக்காகக் கைகளை ஏந்திய அந்த அடியவருக்கு, அள்ளிக் கொடுக்க அல்ல கிள்ளிக் கொடுக்கக்கூட ஒருவரும் இல்லை. மனமும் உடலும் சோர்ந்து நின்றபோது, ஈசன் அவரது மனத்தில் தன் திருமேனி தோன்ற நின்றார். 'புறத்தே கோயில் எழுப்பத்தானே பொருள் தேவை. இனி அகத்தே அவனை நிறுத்திக் கோயில் செய்குவோம்' என்று முடிவு செய்தார்.

பூசலார் நாயனார் குருபூஜை
பூசலார் நாயனார் குருபூஜை

அந்த அடியவர், பூசலார் என்னும் நாயன்மார். திருநின்றவூர் திருத்தலத்தில் வாழ்ந்துவந்த பூசலார் இளம் வயதுமுதல் இறைவன் மேல் பெரும்பக்திகொண்டவராக இருந்தார். அன்றாடம் அவர் சென்று வணங்கும் லிங்கத் திருமேனிக்குத் திருக்கோயில் கட்ட அவர் விரும்பினார். அது இயலாமல் போகவே, மனத்தில் கோயில்கட்ட முடிவுசெய்தார் மறையவர் குலத்தில் தோன்றிய அந்த மகான். மனத்தின் வேகம் எவராலும் கணிக்க முடியாதது. எந்தச் செயலையும் ஒரு கணத்தில் மனக்கண்முன் நிறுத்தும் வலிமைபொருந்தியது. அத்தகைய மனத்தை மெள்ள நிறுத்தி, ஒவ்வொரு செயலாகக் காணவைப்பது அரிய செயல். அத்தகைய செயலைப் பூசலார் செய்யத் துணிந்தார்.

நாளும் ஒரு பணி. ஒருநாள் இடத்தை சுத்தம் செய்வார். ஒருநாள் கட்டுவதற்கான பொருள்களைக் கொண்டுவந்து சேர்ப்பார். மெள்ள மெள்ள ஒவ்வொரு கல்லாக அடுக்கிக் கோயிலை எழுப்புவார். நிஜத்தில் ஒரு கோயில் எழுப்பும்பணி நடைபெறுவதுபோலவே அன்றாடம் அவர் மனத்தில் பணிகள் நிகழும். ஒவ்வொரு நாளும் சிவபூஜை முடிந்ததும் மீண்டும் திருக்கோயில் பணிகளில் மனத்தைச் செலுத்திவிடுவார். ஒருநாள் கோயில் திருப்பணிகள் மனதுக்குள்ளேயே முடிந்துவிட்டன. இனி கும்பாபிஷேகம் செய்து இறைவனைக் குடிகொள்ளச் செய்துவிட்டால் போதும். அதற்கு ஒரு நல்ல நாள் குறித்தார். அந்த நாளுக்காகக் காத்திருந்தார்.

கோயில்
கோயில்

இதே காலத்தில், காஞ்சிபுரத்தை ஆண்டு வந்த பல்லவ மன்னன் ஒருவன் ஈசனுக்குக் கோயில் எழுப்பினான். மிகவும் பிரமாண்டமாக எழும்பிய அந்தக் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் செய்ய நாள் குறித்தான். அன்றைய இரவு அவன் உறங்கும்போது அவன் கனவில் இறைவன் தோன்றினார். 'திருநின்றவூரில் வாழும் என் பக்தனான பூசலார் கட்டிய திருக்கோயிலில், நீ குறித்த அதே நாளில் கும்பாபிஷேகம். அன்று நான் அங்கே குடிகொள்ளப் போகிறேன். எனவே, நீ கும்பாபிஷேகம் செய்ய வேறு ஒரு நாள் குறித்துக்கொள்' என்று சொல்லி மறைந்தார்.

மன்னனுக்கோ ஆச்சர்யம். 'தான் எழுப்பியிருக்கும் கோயிலைவிட அந்த பூசலார் எழுப்பிய கோயில் எத்தனை உயர்ந்ததாக இருந்தால் ஈசன் அங்கு குடிகொள்ள முடிவுசெய்வார். உடனே அந்த ஆலயத்தைக் காண வேண்டும்' என்று விரும்பி, மறுநாள் சூரிய உதயமானதும் திருநின்றவூருக்குக் கிளம்பினான்.

சிவலிங்கம்
சிவலிங்கம்

மன்னன் தன் பரிவாரங்களோடு அந்த ஊரை அடைந்தான். அங்கு கோயில்கள் எதுவும் புதிதாகக் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் செய்யத் தயாராக இல்லை என்பதை விசாரித்து அறிந்தான். ஈசன் உச்சரிந்த ,'பூசலார்' என்னும் திருப்பெயர் நினைவுக்கு வந்தது. பூசலார் இருப்பிடம் விசாரித்து, அங்கு சென்று தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டான். கனவில் அந்த கனகசபேசன் சொன்னவற்றைச் சொல்லி, விளக்கம் கேட்டு நின்றான்.

பூசலாருக்கோ சொற்கள் எழவில்லை. மாறாகக் கண்ணீர் பெருகியது. பிள்ளை விளையாட்டுபோல தான் கட்டிய மனக் கோயிலைப் பெரிதென மதித்து, அந்த பிறைசூடன் குடிகொள்ள விரும்பியதை எண்ணிப் பூரித்தார். பின்பு மன்னனிடம், "மன்னா, நான் கோயில் எழுப்பியது உண்மைதான். அதில் கும்பாபிஷேகம் செய்ய முடிவுசெய்ததும் உண்மைதான். ஆனால், அது புறத்தே எழுப்பிய கோயில் இல்லை. என் அகத்தே என் இறைவனுக்கு எழுப்பிய அந்தரங்கமான கோயில். அதில் என் இறைவன் வந்து வாசம் செய்ய முடிவுசெய்தார் என்று கேட்கும்போதே எனக்கு சிலிர்க்கிறது" என்று சொல்லி பணிந்து நின்றார்.

சிவபெருமான்
சிவபெருமான்

பூசலாரின் சொல் கேட்டு வியந்த மன்னன், இறைவனின் மகத்துவத்தை அறிந்துகொண்டான். அவன் விரும்புவது பக்தர்களின் மனக் கோயிலையே என்று தெரிந்துகொண்டான். பூசலாரின் பக்தியை மெச்சி அவரைப் பணிந்துகொண்டான். அவர் உத்தரவைப் பெற்று தன் ஊர் திரும்பிச் சென்றான். பூசலார் தன் மனக் கோயிலில் கும்பாபிஷேகம் செய்தார். தான் வாழும் காலம் வரை ஆகம விதி வழுவாமல் பூசை செய்தார். அதன் பலனாக, ஒரு ஐப்பசி மாத அனுஷ நட்சத்திர தினத்தில் அந்த ஆடலரசனின் திருவடியை அடைந்தார். அத்தகைய அடியவரின் குருபூஜை தினம் நாளை (30.10.19) வருகிறது. இந்த நாளில், நம் மனத்தில் இறைவன் குடியேற வேண்டுதல் செய்வோம். 'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்' என்னும் திருமூலர் வாக்கை நம்பிப் போற்றுவோம். இந்த நாளில் அடியவரைத் தொழுது போற்றுவதன் மூலம், நம் துன்பங்கள் எல்லாம் தீரும் என்பது ஐதிகம்.

Vikatan