Published:Updated:

தோஷங்கள் தீர்க்கும் புரட்டாசி சுக்ரவாரப் பிரதோஷம் இன்று!

வளர்பிறை பிரதோஷத்தின்போது தேவர்களும் தேய்பிறை பிரதோஷத்தின்போது மனிதர்களும் கட்டாயம் சிவனை வழிபட வேண்டும் என்பது ஐதிகம்.

lord siva
lord siva

பொதுவாக பிரதோஷ காலம் சிவ வழிபாட்டுக்கு உரியது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் வரும் திரயோதசி திதி வரும் மாலையே பிரதோஷ தினமாகக் கருதப்படுகிறது. வளர்பிறை பிரதோஷத்தின்போது தேவர்களும் தேய்பிறை பிரதோஷத்தின்போது மனிதர்களும் கட்டாயம் சிவனை வழிபட வேண்டும் என்பது ஐதிகம்.

பிரதோஷம்
பிரதோஷம்

பிரதோஷ வேளையில் தேவர்களும் மூவர்களும் சிவ சந்நிதியில் இருப்பார்கள். பிரதோஷ காலத்தில்தான் இறைவன் ஆனந்தக் கூத்தாடி தேவர்களைக் காத்தார். துன்பங்கள் சூழும் வேளையில் இறைவனின் திருவடியே காப்பு என்பதே இதன் தாத்பர்யம். எனவே, இந்த நாளில் பிரதோஷ வேளையில் சிவதரிசனம் செய்ய வேண்டியது அவசியம்.

எப்போதும் சிவ தியானத்திலேயே நிலைத்திருப்பவர் நந்திதேவர். ஆனால், பிரதோஷ வேளையில் மட்டும் தியானம் கலைந்து சிவ பக்தர்களை வரவேற்கக் காத்திருப்பார் என்று சொல்கின்றன சாஸ்திரங்கள். அதனால்தான் பிரதோஷ வேளையில் சிவனோடு சேர்ந்து நந்திக்கும் விசேஷ வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. மேலும், நந்திபகவானிடம் வைக்கும் வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றும்படி அவர் சிவபெருமானிடம் வேண்டுதல் செய்வார்.

Lord Siva
Lord Siva

பிரதோஷ தினத்தில் விரதமிருந்து மாலை சிவதரிசனம் செய்ய வேண்டும். சிவனுக்கு சங்குப்பூ, வில்வ இலை கொண்டு பூஜை செய்வது விசேஷம். பிரதோஷ நேரத்தில் மட்டும் சிவபெருமானை வலம் வரும் விதத்தை 'சோமசூக்தப் பிரதட்சணம்' என்று கூறுவர் என்பர். 'சோமசூக்தம்' என்றால் அபிஷேக நீர்விழும் கோமுகி தீர்த்தத் தொட்டியைக் குறிக்கும். இந்தத் தொட்டியை மையமாக வைத்து வலம் இடமான இடவலமாக மேற்கொள்ளப்பெறும் பிரதட்சண முறையே 'சோமசூக்த பிரதட்சணம்' அல்லது 'பிரதோஷப் பிரதட்சணம்' எனப்படுகிறது.

பிரதோஷ வேளையில் சிவலிங்கத் திருமேனிக்கு பால், இளநீர், தேன், தயிர், விபூதி, சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, செவ்வந்தி, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து தூப, தீப வழிபாடுகள் நடைபெறும். அதற்கு முன்பு நந்தியெம்பெருமானுக்கும் அபிஷேகம் நடைபெறும். அருகம்புல், மலர்கள் சாத்திய பிறகு வில்வத்தால் நந்திதேவருக்கு அர்ச்சனை செய்வார்கள். நந்தி பகவானுக்கு தீபம் காட்டி, அதன் பின்னர், மூலவருக்கு நடைபெறும் தீபாராதனையை நந்தியெம்பெருமானின் இரு கொம்புகளுக்கிடையே கண்டு தரிசிப்பது விசேஷம். இவ்வாறு தரிசனம் செய்ய, பாவங்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சுபிட்சம் உண்டாகும் என்பது ஐதிகம்.

Vikatan
பிரதோஷ காலம் : மாலை 4.30 முதல் 6.00 மணி வரை