Published:Updated:

ஐயப்ப விரதம் குறித்த அடிப்படையான 5 கேள்விகள்... குருசாமியின் பதில்கள்!

குருசாமி
குருசாமி

மகிமை நிறைந்த சபரிமலை விரதம் குறித்த வாசகர்களின் கேள்விகளுக்கு குருசாமி அரவிந்த் ஸுப்ரமண்யம் பதிலளிக்கிறார்.

அறிந்தும் அறியாமலும் வாக்கியத்தில் வரும்  'ஆனந்த சித்தன்' என்றால் அது யாரைக் குறிக்கிறது?

மகர ஜோதி , திருநெல்வேலி

ஐயப்பன்
ஐயப்பன்

'அறிந்தும் அறியாமலும்...' என்று நாம் பொதுவாக சரண கோஷம் சொல்லி, பூஜைகள் முடித்தபின்பு 'சமஸ்தாபராதம்' சொல்வது வழக்கம். சமஸ்தாபராதம் என்பது, நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்திருக்கக்கூடிய தவறுகளுக்கெல்லாம் இறைவனிடம் மன்னிப்பு கேட்பது. இதில் வரும் 'சித்தம்' என்றால் அறிவு என்று பொருள். ஆனந்த சித்தன் என்றால், இறைவன் எப்போதும் அறிவுமயமாக, ஆனந்தமயமாக இருப்பவன். சித்தத்தை வென்றவர்கள் சித்தர்கள். சித்தர்களுக்கெல்லாம் தலைவனாக இருக்கக்கூடியவனாகவும் ஐயப்பனைச் சொல்வதனாலும், அவன் என்றைக்கும் ஆனந்தமான மனத்தோடு இருப்பதனாலும் அவனை ஆனந்த சித்தன் என்று சொல்கிறோம். ஆனந்த சித்தம் என்பதற்கு அர்த்தம் அதுதான். மனம் ஆனந்தத்தில் லயித்திருக்கும்போது பிழைகள் கண்ணுக்குத் தெரியாது. நாம் செய்த தவறுகளையெல்லாம்,  ஐயப்பன் மனம் நிறைவாக இருப்பதால் நம்மை மன்னித்து அருள்வார் என்பதால் அவரை இங்கு ஆனந்த சித்தன் என்று குறிப்பிட்டு வணங்குகிறோம்.

கடவுளின் அதிகமான அனுக்கிரகத்தைப் பெற்றுத்தருவது சின்ன பாதையா... பெரிய பாதையா?

பிரகாஷ், சேலம்.

இதற்கு நேரடியான பதிலை யாராலும் சொல்லமுடியாது. பழைய காலத்திலிருந்து இருக்கும் பாதை பெரிய பாதைதான். ஏன் என்றால் பகவான் மனிதனாக பூமியில் பிறந்தபோது, அவர் இருமுடி கட்டி எடுத்துக்கொண்டு இந்தப் பெரிய பாதையில் நடந்துதான் சபரிமலை சென்றார் என்பது ஐதிகம். பகவான் நடந்த பாதை என்பதால்தான் நாம் பெரிய பாதையில் நடக்கிறோம். சின்னப் பாதை எனப்படும் பம்பை பாதை உருவானதே 1965-க்குப் பிறகுதான். அதுவரைக்கும் பெரிய பாதை வழியாகப் போய், பெரியபாதை வழியாகத் திரும்பிவருவதுதான் வழக்கம். பெரிய பாதை வழியாகப் போய் புல்மேடுவழியாகப் போக வேண்டும். அதுதான் வழி. அந்தக் காலத்துப் பழமலைக்காரர்கள் எல்லாம் பெரிய பாதை வழியாகப் போய் ஜோதி தரிசனம் செய்வதுதான் சபரிமலை யாத்திரை என்று கணக்கு வைத்திருந்தனர். சின்னப் பாதை வந்தபின்பு, பக்தர்கள் மாத பூஜைகளுக்கும் இந்த சௌகரியங்களை அனுசரித்துச் சென்றுவருகிறார்கள். 

சபரிமலை
சபரிமலை

பெரியபாதையின் பயன்பாடே நவம்பர் கடைசியிலிருந்து மகரஜோதி வரை மட்டுமே. மற்ற மாதங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். எனவே, மாத பூஜைகளுக்கு பெரிய பாதையில் செல்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று. இதில் எது நல்ல வழி என்றால், பழைய சம்பிரதாயங்களை அனுசரிப்பேன் என்று விரும்புகிறவர்கள், பெரிய பாதையில் செல்வதுதான் சரி. மாத பூஜைக்குச் செல்பவர்களுக்கு சின்னப் பாதை ஒன்றுதான் வழி. எனவே, அவரவர் உடல்நிலை, சௌகரியங்களை அனுசரித்து எப்படிச் செல்லவேண்டுமோ அப்படிச் செல்லலாம். இதில், அதிகமான அருளைப் பெற்றுத்தரும் யாத்திரை எது என்பதை ஐயப்பன்தான் முடிவு செய்யமுடியும். அவனே நம் எல்லோரின் உடலையும் உள்ளத்தையும் அறிந்தவன். எந்தப் பாதையில் போனாலும் அவனை முழுமையாக நம்பி வழிபடுவோம்.

குருசாமியைக் கேளுங்கள்...! வீட்டில் குழந்தை பிறந்து எத்தனை நாள்கள் கழித்து சபரிமலைக்கு மாலை போடலாம்?

நான் சபரிமலைக்கு 18 - ம் முறையாக இந்த வருடம் செல்கிறேன். அப்போது கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகள் என்ன?

விஜயகுமார், சேலம்

சபரிமலை யாத்திரை என்பது மிகவும் புனிதமான யாத்திரை. அந்த யாத்திரையைப் பதினெட்டு ஆண்டுகள் மேற்கொள்வதென்பது மிகவும் புனிதமானது. பதினெட்டுப் படி தாண்டி வீற்றிருக்கும் ஐயப்பனை பதினெட்டு ஆண்டுகளாகச் சென்று வழிபடுவது என்பது ஒரு சுழற்சியை நிறைவு செய்வதுபோன்றது. சபரிமலை செல்லும்போது, தீயகுணங்கள் நம்மைவிட்டு நீங்க வேண்டும், நல்ல குணங்கள் வளரவேண்டும். மனத்தை வெல்ல வேண்டும். 18 - ம் வருடம் ஒரு புதிய மனிதனாகப் பிறக்க வேண்டும். இதுதான் தாத்பர்யம். இந்த மாறுதல் நமக்குள் ஏற்பட்டது என்பதன் அடையாளமாகப் பதினெட்டாம் வருஷம், ஒரு தென்னங்கன்றை பூஜையில் வைத்து எடுத்துச்சென்று அங்கு நட்டுவைத்து வருவது வழக்கம்.

சபரிமலை
சபரிமலை

இதை நிறைய ஐயப்பமார்கள் கடைபிடிக்கின்றனர். இன்னும் சிலபேர் பதினெட்டாவது வருடம் என்பதால், பதினெட்டு குருமார்களையோ அல்லது மூன்று குருமார்களையோ மூத்த குருசாமிகளையோ அழைத்து பாதபூஜை செய்து, வீட்டுக்குள் அழைத்து ஐயப்பன் பூஜை செய்து சாப்பாடு போடுவதும் உண்டு. மலைக்குச் செல்ல செலவு செய்ய முடியாத ஐயப்பன்மார்களை செலவுசெய்து மலைக்கு அழைத்துச் செல்வது மிகவும் புண்ணிய பலனைப் பெற்றுத்தரும்.

குருசாமியைக் கேளுங்கள்... கடன் வாங்கியாவது கட்டாயமாகக் கன்னிபூஜை செய்ய வேண்டுமா?

ஸ்வாமி சரணம்... மாலை அணிந்தவர்கள் குளிப்பதற்கும் துணி துவைக்கவும் சோப் பயன்படுத்தக் கூடாதா?

கார்த்திகேயன், ராமநாதபுரம்

ஐயப்பன்
ஐயப்பன்

சபரிமலை விரதம் குறித்த கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கும்போது, ஏற்கெனவே சொல்லியிருந்த பதில் இதற்கும் பொருந்தும். விரத காலத்தில் நம்மை அலங்கரித்துக்கொள்ளும் நோக்கில் செய்யப்படும் எதுவும் தவிர்க்கப்படவேண்டியதுதான். அதேநேரம், சுத்தம் சுகாதாரம் பேணும்பொருட்டு சோப்பு பயன்படுத்துவதில் தவறேதும் இல்லை. அது நமக்கும் நல்லது, அடுத்தவர்களுக்கும் நல்லது. வேண்டுமானால் பிறர் பயன்படுத்தும் சோப்பைப் பயன்படுத்தாமல் தனியாக சோப்பு வாங்கி வைத்துப் பயன்படுத்துவது நல்லது. மேலும், அலங்காரச் சிந்தனை தோன்றாமல் சுகாதார எண்ணத்தோடு மட்டும் சோப்பைப் பயன்படுத்தினால் தவறில்லை.

மனைவி இரண்டு மாத கர்ப்பமாக இருக்கிறார். நான் மாலை அணிந்த பின்தான் கர்ப்பம் உறுதிசெய்யப்பட்ட தகவல் கிடைத்தது. இப்போது என்ன செய்வது, நான் சபரிமலை செல்லலாமா?

ஆனந்தபாபு, சென்னை

சபரிமலை ஐயப்பன்
சபரிமலை ஐயப்பன்

இது ஒரு முக்கியமான கேள்வி. இதற்கான பொதுவான விடையை முதலில் பார்த்துக்கொள்ளலாம். மனைவி கருவுற்றிருக்கும் காலத்தில் மலைக்குப் போகலாம் என்று சிலர் சொல்கிறார்கள். போகக்கூடாது என்றும் சிலர் சொல்கிறார்கள். சாஸ்திரம் சொல்லுகிற விஷயம் என்னவென்றால், மனைவி கருவுற்றிருக்கும் காலத்தில் இதுபோன்ற யாத்திரைகள், மலையாத்திரைகள், விரதங்கள் ஆகியனவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான். நடைமுறையில் சிலபேர், கர்ப்பம் ஐந்துமாதம் ஆகிவிட்டால் அதன்பின் சபரிமலை யாத்திரைக்குப் போவதில்லை என்று நியதி வைத்திருக்கிறார்கள். கடுமையான விரதங்களைக் கடைபிடிப்பவர்கள், கர்ப்பம் உறுதியானதிலிருந்து சபரிமலை யாத்திரை செல்வதைத் தவிர்க்கிறார்கள். 

நம் வாழ்வில் குழந்தை உருவாகியிருக்கிறது என்பது கொண்டாட்டம் தரக்கூடிய விஷயம். குடும்பமாக குதூகலிக்க வேண்டிய விஷயம். குழந்தை பூமியில் பிறக்கும் வரை அது, இறைவனின் வடிவமாகவே பார்க்கப்படுகிறது. குழந்தைகளுக்கு ஆறு அல்லது ஏழு மாதம் முடிந்து சாப்பாடு கொடுத்த பின், அதாவது உடம்பில் உப்பு சேர்ந்தபின்தான் கோயில்களுக்குள் அனுமதிக்கும் வழக்கம் இன்னும் கேரளத்தில் உள்ளது. ஏனென்றால், அந்தக் குழந்தை இறைவனின் வடிவம். எனவே, நாம் முதலில் அதைத்தான் கொண்டாட வேண்டும். விரதம் என்பது கொண்டாட்டங்களைத் தவிர்ப்பது. மனைவி கருவுற்றிருக்கும்போது, கருவிலிருக்கும் அந்தக் குழந்தைதான் நமக்கு ஐயப்பன். எனவே, மனைவியை கவனித்துக் கொள்ளவேண்டிய கடமை கணவனுடையது என்பதால், மலைக்குச் செல்வதைத் தடை செய்திருக்கிறார்கள்.

ஆனால், குறிப்பிட்ட இந்த வாசகருடைய கேள்வி, இவர் மாலை அணிந்த பின்புதான் கருவுற்றிருப்பது உறுதியாகியிருக்கிறது. இந்த நிலையில், இவர் விரதத்தைக் கலைப்பது சரியல்ல. கட்டாயம் இவர் சபரிமலை சென்று ஐயனை தரிசித்து வரத்தான் வேண்டும். எப்படியும் 3.5 மாதங்களாகிறபோது இவர் விரதம் முடித்துத்திரும்பிவிடலாம். எனவே, இவர் கட்டாயம் மலைக்குச் சென்று வரலாம். ஐயனுடைய அருளால் குழந்தை நல்லபடியாகப் பிறந்து தாயும் சேயும் தீர்க்க ஆயுளுடன் வாழ அந்த ஐயப்பனை வேண்டிக்கொள்கிறேன். 

இதுபோன்ற சந்தேகங்கள் உங்களுக்கும் இருந்தால், கீழே உள்ள படிவத்தில் கேளுங்கள். ஆன்மிகப் பெரியவர்களிடம் கேட்டு உங்களுக்கான பதிலை பெற்றுத்தருகிறோம்.

பின் செல்ல