Published:Updated:

`ருத்திர பசுபதிக்கும் அடியேன்’ என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் போற்றிய நாயன்மார் குருபூஜை!

திருமறையோதுவதையே தன் வாழ்வின் பயனாகக் கருதி வாழ்ந்த ருத்திர பசுபதி நாயனாரின் குருபூஜை தினம் இன்று. இந்த நாளில் சிவாலயத்துக்குச் சென்று ஈசனை ருத்திரம் சொல்லி வழிபடுவது பல்வேறு நற்பயன்களை வழங்கும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாயனர்மார்கள் சிவ பக்தி நெறியையே தம் வாழ்வின் வழியாகக் கொண்டவர்கள். உலக விஷயங்களில் கவனம் கொள்ளாதவர்கள். புறசமயங்களால் புகழ் மங்கியிருந்த சைவ சமயம் மீண்டும் தழைக்கக் காரணமான நாயன்மார்கள் ஒவ்வொருவரின் வாழ்வும் புகழ்பெற்றது. அப்படித் தனித்துவமான தம் இறைப்பணியால் அடியார்கள் மனதில் இடம்பிடித்து நாயன்மாராகப் போற்றப்படுபவர் ருத்திர பசுபதி நாயனார்.

சிவபெருமான்
சிவபெருமான்

இவரது இயற்பெயர் பசுபதி என்பதாகும். ருத்திர பாராயணத்திலேயே தன் வாழ்க்கை முழுமையையும் செலவிட்ட காரணத்தால் இவருக்கு ருத்திர பசுபதி நாயனார் என்ற பெயர் ஏற்பட்டது.

சோழநாட்டைச் சேர்ந்த திருத்தலையூர் என்னும் ஊரில் பிறந்தவர் பசுபதி. இவர் சிறுவயது முதலே சிவன் மேல் பற்றுக்கொண்டவராக விளங்கினார். உரிய வயதில் உபநயனம் பூண்டு வேதம் பயின்ற பசுபதியின் மனதில் ருத்திர ஜபம் நீங்காது நிலைத்துவிட்டது. வேதத்தின் மையமாகத் திகழ்வது ருத்திர ஜபம். நித்திய வேத பாராயணத்தில் தவிர்க்க இயலாத ஜபமாக ருத்திரம் சொல்லப்பட்டுள்ளது. ருத்திர ஜபம் ஈஸ்வரனுக்குக் கண்களாகவும் பஞ்சாட்சரம் கண்மணியாகவும் விளங்குவது என்கிறது சாஸ்திரம்.

Siva Lingam
Siva Lingam

சூர சம்ஹிதை என்னும் நூல், ருத்திர ஜபத்தின் மகிமையை விரிவாகப் பேசுகிறது. ஒரு மரத்தில் உள்ள இலைகள், கிளைகள், பூக்கள், கனிகள் என்று அனைத்தும் செழிக்க வேண்டும் என்றால் அதன் ஒவ்வொரு பாகத்துக்கும் நீர் விட வேண்டிய அவசியமில்லை. மாறாக, ஒட்டுமொத்த விருட்சமும் செழிக்க வேண்டுமென்றால் வேரில் நீர் விட்டாலே போதுமானது. அதேபோல அனைத்து தேவதைகளும் ஈஸ்வரனில் சங்கமித்திருப்பதால் ஈஸ்வரனை ஆராதனை செய்து ப்ரீதி செய்தாலே அனைத்து தேவர்களையும் ப்ரீதி செய்த பலன் கிட்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஈஸ்வரன் எதில் மகிழ்ச்சி அடைகிறார் என்றால், ருத்திர ஜபத்தின் மூலம் அவர் மகிழ்ச்சி அடைகிறார் என்கிறது சூர சம்ஹிதை. அதே போல ஸ்காந்த புராணம் மோட்சத்தை அடையும் வழிகளில் ஒன்றாக ருத்திர ஜபத்தையே முன்வைக்கிறது. ருத்திர ஜபம், இந்த உலகில் சகலமும் பரப்பிரம்மம் என்று எடுத்துரைப்பது. உலகில் வாழும் சிறு புழு பூச்சிகளிலிருந்து மனிதர்கள் வரையிலும் அனைத்தினுள்ளும் இருப்பவர் அந்தப் பரமேஸ்வரனே என்று விளக்குவது.

சிவபெருமான்
சிவபெருமான்

ருத்திர ஜபத்தின் பெருமையைப் போற்றும் சேக்கிழார், `அரு மறைப் பயன் ஆகிய உருத்திரம்' என்று போற்றுகிறார். இவ்வாறு இந்த ருத்திர ஜபத்தின் பெருமையை உணர்ந்த பசுபதியார் தினமும் அதிகாலையில் குளித்து திருநீறிட்டு, கழுத்தளவு நீரில் நின்றவாறு ருத்திர ஜபம் செய்யத்தொடங்குவார்.

நீரில் இறங்கி நின்று ஜபம் செய்யும் பசுபதி நாயனாரை சேக்கிழார் பெருமான் குறிப்பிடும்போது, 'நீரிடை நெருப்பு எழுந்தனைய' என்று குறிப்பிடுகிறார். இதன் பொருள் நீரினில் இறங்கி ஜபம் செய்யும் அடியவரைக் காண்பதற்கு நெருப்புச் சுடரே நீரில் தோன்றியது போன்று விளங்குகிறது என்று போற்றுகிறார்.

Ruthra jabam
Ruthra jabam

அதன்பின் சிவன் சந்நிதி சென்று அங்கு அமர்ந்து நாள் முழுவதும் ருத்திர ஜபமே செய்துகொண்டிருப்பார். அங்கு வழங்கப்படும் பிரசாதம் உண்டு, குளத்து நீரையே அருந்தி வேறு நினைவு இன்றி சிவ சிந்தையோடு ருத்திர பாராயணம் செய்துகொண்டிருப்பார். இவரது சிவ பக்தியையும் ருத்திர பாராயணம் செய்யும் சிரத்தையையும் கண்ட மக்கள் இவரை 'ருத்திர பசுபதி' என்று போற்றினர்.

சைவ மறுமலர்ச்சிக்குப் பாடுபட்ட அப்பய்ய தீட்சிதரின் ஜயந்திவிழா!

பொதுவாக வேத பாராயணம் செய்வோர் மனனம் செய்த பாடங்களை உதடுகள் துடிக்க ஒப்புவிப்பவர்போல அல்லாமல் உள்ளத்தின் ஆழத்திலிருந்து அவர் ஜபம் செய்தார். இதைக் குறிப்பிடும் சேக்கிழார் பெருமான், ``தூய அன்பொடு தொடர்பினில் இடையறாச் சுருதி நேய நெஞ்சினராகி அத்தொழில் தலை நின்றார்” என்று போற்றுகிறார். அதாவது ஜபிக்கும்போது உண்மையான அன்போடும், இடைவிடாது அந்த மந்திரத்தைச் சொல்லும் விருப்பமோடும் ஜபம் செய்யும் தொழிலை உடையவராக விளங்கினார் என்பதாகும். இவ்வாறு தன் வாழ்நாள் முழுமையும் ருத்திர ஜபத்தைச் செய்து, ஒரு புரட்டாசி அசுபதி நட்சத்திரநாளில் இறைவனின் திருவடியை அடைந்தார் பசுபதி நாயனார்.

Lord Siva
Lord Siva

சுந்திர மூர்த்தி நாயனார் 'ருத்திர பசுபதிக்கும் அடியேன்' என்று போற்றும் பேறுபெற்றார். இவர் வாழ்ந்த திருதலையூர் இறைவனுக்குப் பசுபதிநாதர் என்று பெயர். திருத்தலையூர் என்னும் பெயரில் கொல்லுமாங்குடியிலிருந்து காரைக்கால் செல்லும் வழியில் ஓர் ஊரும், முசிறி வட்டத்தில் ஓர் ஊரும் உள்ளது. இரண்டு தலங்களிலும் ருத்திர பசுபதிநாயனாரின் மூர்த்தங்கள் உள்ளன. இரண்டு தலங்களிலும் பசுபதி நாயனாரின் குருபூஜை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். திருமறையோதுவதையே தன் வாழ்வின் பயனாகக் கருதி வாழ்ந்த ருத்திர பசுபதி நாயனாரின் குருபூஜை தினம் இன்று. இந்த நாளில் சிவாலயத்துக்குச் சென்று ஈசனை ருத்திரம் சொல்லி வழிபடுவது பல்வேறு நற்பயன்களை வழங்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு