Published:Updated:

அத்திவரதர், 380 டன் பிரமாண்ட கோதண்டராமர் சிலை, ஆறுகிரக சேர்க்கை... 2019-ன் முக்கிய ஆன்மிக நிகழ்வுகள்

அத்திவாரதர்
அத்திவாரதர்

2019-ம் ஆண்டு நடைபெற்ற சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

இந்தியா என்றதும் உலக நாடுகள் அனைத்துக்கும் முதலில் தோன்றுவது, இது ஓர் ஆன்மிக பூமி என்பதுதான். பல ஆயிரம் ஆண்டுக்கால ஞானமும் பக்தியும் உடைய நம் நாட்டில் ஆண்டுதோறும் பல்வேறு ஆன்மிக நிகழ்வுகள் நடந்துவருவது என்பது நம் பண்பாட்டோடு கலந்தது. இவை தவிர்த்து ஒவ்வோர் ஆண்டுக்கும் பிரத்யேகமான ஆன்மிக நிகழ்வுகளும் உண்டு. அப்படி 2019-ம் ஆண்டு நடைபெற்ற சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

Vikatan

பிரயாக் ராஜ் அர்த்த கும்பமேளா

இந்த ஆண்டு தொடக்கமே மாபெரும் ஆன்மிக சங்கமமான அர்த்த கும்ப மேளாவோடு தொடங்கியது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது கும்பமேளா; ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது அர்த்த கும்பமேளா. அதிலும் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதோ அது குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்...

* உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில் 2019-ம் ஆண்டு நடைபெற்ற அர்த்த கும்ப மேளாவில் சுமார் 20 கோடி பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினார்கள். மகர சங்கராந்தி எனப்படும் பொங்கல் பண்டிகை தினத்தில் மட்டும் 2 கோடி பேர் புனித நீராடினார்கள்.

* 250 கி.மீ சாலைகள் கொண்ட தற்காலிக நகரம், 25 தற்காலிகப் பாலங்கள், 4,200 தங்கும் விடுதிகள், 1,22,000 கழிப்பிடங்கள் என்று பிரமாண்ட ஏற்பாடுகளோடு இந்த நிகழ்வு நடந்து முடிந்தது.

வைகைப் பெருவிழா

நதியோடு தொடர்புடைய மற்றொரு நிகழ்வு, வைகைப் பெருவிழா. ரொம்ப பிரமாண்டமெல்லாம் இல்லை என்றாலும் இது முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. ஜுலை 24 முதல் ஆகஸ்ட் 6 வரை மதுரையில் இந்த வைகைப் பெருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான துறவிகள், ஆன்மிகப் பெரியவர்கள், பக்தர்கள் கலந்துகொண்டு வைகைக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர். நீரின்றி அமையாது உலகு என்பதால் நீரைப் போற்றும் எந்தக் கொண்டாட்டத்தையும் நாம் வரவேற்போம்.

கும்பாபிஷேகம்
கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகங்கள்

இந்த ஆண்டில் சில முக்கியமான கோயில்களில் கும்பாபிஷேகங்கள் நடைபெற்றன. குறிப்பாக, திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர்கோயில் கும்பாபிஷேகம், புதுவை விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம், கன்னியாகுமரியில் திருமலை திருப்பதி கோயில் கும்பாபிஷேகம், சிதம்பரம் சிவகாம சுந்தரி கோயில் கும்பாபிஷேகம் இவையெல்லாம் முக்கியமான கும்பாபிஷேகங்கள். இவை தவிர, சில கோயில்களில் அதிக வருடங்கள் கழித்து கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகளைத் தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக, வைத்தீஸ்வரகோவில் வைத்தியநாத சுவாமி கோயிலுக்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலிலும் பாலாலயம் செய்து திருப்பணிகளைத் தொடங்கியிருக்கிறார்கள்.

பிரமாண்ட சிலைகள்

இந்த ஆண்டு பிரமாண்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆண்டு. சேலம் அருகே மிகப்பெரிய முருகன் சிலை, ராஜஸ்தானில் உயரமான சிவன் சிலை எனப் பல்வேறு சிலைப் பிரதிஷ்டைகள் இந்த ஆண்டு நடந்து முடிந்தன.

நவம்பர் 10-ம் தேதி தமிழகக் கேரள எல்லையையொட்டியுள்ள உதயம் குளம் அருகே அமைந்திருக்கும் செங்கல் சிவபார்வதி கோயிலில் 111.2 அடி உயரம் கொண்ட சிவலிங்கம் அமைக்கப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

கோதண்டராமர்
கோதண்டராமர்
அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பொருள்கள்... பார்வையிடும் பக்தர்கள்! #VikatanInAyodhya #PhotoAlbum

பிரமாண்ட சிலை என்றதும் நம் நினைவுக்கு முதலில் வருவது, பெங்களூரு கொண்டு செல்லப்பட்ட கோதண்ட ராமர் சிலைதான். பெங்களூரு ஈஜிபுரா பகுதியில் இருக்கும் கோயிலில் பிரதிஷ்டை செய்ய பிரமாண்ட கோதண்ட ராமர் சிலையைச் செய்து கொண்டு செல்ல முடிவெடுத்து அதற்கான பாறையைத் தேடினர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே இருக்கும் கொரக்கோட்டை என்னும் கிராமத்தில் உள்ள பிரமாண்ட பாறையை அதற்காகத் தேர்ந்தெடுத்தனர். 20 சிற்பக் கலைஞர்கள் இணைந்து 380 டன் எடையில் இந்தச் சிலையை உருவாக்கினார்கள். சிலையின் மொத்த உயரம் 64 அடி. இதை பெங்களூரு எடுத்துச் செல்ல 240 டயர்கள் பொருத்தப்பட்ட பிரமாண்ட கார்கோ லாரியை ஏற்பாடு செய்தனர். ஆனால், அந்தப் பணி எளிதாக இல்லை. குறுகலான சாலையில் வழியில் இருந்த வீடுகள், கடைகள் எல்லாவற்றையும் இடிக்க வேண்டியாயிற்று. அதற்கான நஷ்ட ஈட்டையும் கோயில் நிர்வாகம் கொடுத்தது. இப்படி ஏராளமான தடைகளை மீறி 7 மாதங்கள் பயணம் 12,000 லிட்டர் டீசல், 2 கோடி லாரி வாடகை என இப்படிச் செலவுகளும் பிரமாண்டமாகவே இருந்தன.

குருப்பெயர்ச்சி, கிரகணம்

பக்தி ஒருபக்கம் இருக்க ஜோதிட நிகழ்வுகளை உற்றுக் கவனிக்கும் மக்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆண்டு கிரகங்களான குரு, ராகு - கேது, சனி ஆகிய கிரகங்களில் இந்த ஆண்டு குருப் பெயர்ச்சி மட்டுமே நிகழ்ந்தது. வாக்கியப் பஞ்சாங்கப்படி அக்டோபர் 28-ம் தேதி சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து பெயர்ந்து தனுசு ராசிக்குக் குடியேறியுள்ளார். அடுத்த ஓர் ஆண்டுக்கு அவர் அங்குதான் இருப்பார்.

மற்றுமொரு முக்கியமான ஒரு நிகழ்வு, தனுசு ராசியில் நிகழ்ந்த ஆறுகிரக சேர்க்கை. பெரிய மழை வரும் என்றும் வெள்ளம் புயல் ஏற்படும் என்றும் வாட்ஸ் அப்பில் வதந்தி பரவியது. அவையெல்லாம் வதந்திகளாகவே முடிந்தது பெரிய ஆறுதல்.

26-ம் தேதி நிகழ்ந்த சூரிய கிரகணம் மிகவும் ஆர்வமுடம் எல்லோராலும் கவனிக்கப்பட்டது. பல கோயில்களில் நடை சாத்தப்பட்டன. இதுபோன்ற சூரிய கிரகணம் இனி அடுத்து 30 ஆண்டுகள் கழித்துதான் நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்திவரதர்
அத்திவரதர்
கலெக்‌ஷனில் 'கரப்ஷன்'? - அத்திவரதர் நிர்வாகத்தை அலறவிட்ட 28 கேள்விகள்!

அத்திவரதர்

இந்த ஆண்டின் ஹைலைட், அத்திவரதர் தரிசனம்தான். ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 17 வரை நடைபெற்ற இந்த அத்திவரதரை தரிசிக்க உலகம் முழுவதுமிருந்தும் 3.5 கோடி மக்கள் வந்து கலந்துகொண்டனர் என்று சமீபத்தில் வெளியான சுற்றுலாத் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இந்த நிகழ்வு மிகவும் அமைதியாக நடந்து முடிந்தது. அத்திவரதரை நிரந்தரமாகக் கோயிலில் தரிசனத்துக்கு வைக்க வேண்டும் என்று சொன்ன சில ஆன்மிகப் பெரியவர்களின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டு மீண்டும் சாஸ்திரப்படி அனந்த சரஸ் குளத்துக்குள்ளேயே வைக்கப்பட்டார் அவர். இனி 2059-ல்தான் அத்திவரதரை தரிசனம் செய்ய முடியும்.

அடுத்த கட்டுரைக்கு