Published:Updated:

ஈரோட்டில் நடந்த விநோத ‘சாணியடி திருவிழா’... எதற்காக தெரியுமா?!

சாணியடி திருவிழா
சாணியடி திருவிழா

சாணியை உடலில் பூசுவதன் மூலம் உடலிலுள்ள நோய்கள் மற்றும் பீடைகள் ஒழியுமென கும்டாபுரம் கிராம மக்கள் நம்புகின்றனர்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே கும்டாபுரத்தில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த பீரேஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் தீபாவளி முடிந்த மூன்றாவது நாளில் நடைபெறும் சாணியடி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. பல தலைமுறைகளாக நடந்து வரும் இந்தத் திருவிழாவிற்கு அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். அந்தவகையில் இந்த ஆண்டுக்கான ‘சாணியடி திருவிழா’ இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

பீரேஸ்வரர்
பீரேஸ்வரர்

திருவிழாவிற்கு முதல்நாளான நேற்றே கோயிலின் பின்பக்கம் ஊர்மக்கள் சாணத்தை குவித்து வைத்திருந்தனர். இன்று காலை பீரேஸ்வரை கோயிலுக்கு அருகேயுள்ள குளத்தில் நீராடச் செய்து, கழுதை மூலமாக கோயிலுக்கு அழைத்து வந்து பூஜைகள் செய்தனர். அதன்பிறகு கோயிலுக்கு பின்புறம் குவித்து வைத்திருந்த சாணத்தை உருண்டையாக்கி ஒருவர் மீது ஒருவர் வீசியெறிந்து வழிபாடு நடத்தினர். இந்த நிகழ்வின் போது ஆண்கள் சட்டை அணிவதில்லை. சாணியடி நிகழ்வு நடந்தபிறகு, பக்தர்கள் கோயிலுக்கு அருகிலுள்ள குளத்தில் குளித்துவிட்டு, பீரேஸ்வரரை வணங்கினர்.

சாணியடி திருவிழா
சாணியடி திருவிழா

இந்த வழிபாட்டினால் ஊர்மக்கள், கால்நடைகள் நலம்பெறுவதுடன், விவசாயமும் செழிப்பாக இருக்குமென்கின்றனர். சாணியை உடலில் பூசுவதன் மூலம் உடலிலுள்ள நோய்கள் மற்றும் பீடைகள் ஒழியுமெனவும் கும்டாபுரம் கிராம மக்கள் நம்புகின்றனர். கர்நாடகாவிலிருந்து ஏராளமான பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்தத் திருவிழாவில் கலந்துகொள்வார்கள். கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு உள்ளூர் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் மட்டுமே இந்த சாணியடித் திருவிழாவில் கலந்துகொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு