Published:Updated:

நிகழ்த்துகலைபோல் வீரபாகு தூது... சூரசம்ஹாரம்... களைகட்டும் கழுகுமலை கந்த சஷ்டித் திருவிழா!

கந்தசஷ்டி
கந்தசஷ்டி

வழக்கமாகக் கந்தசஷ்டியின் 6-வது நாளில்தான் அனைத்து முருகன் கோயில்களிலும் சூரசம்ஹாரம் நடக்கும். ஆனால், தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான் 5-வது நாளான பஞ்சமி திதியில் தாரகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.

ழுகுமலை, கழுகாசல மூர்த்தி கோயிலில் தாரகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பக்தர்களின் ``வேல் வேல்... வெற்றிவேல்... அரோகரா.." கோஷம் விண்ணை முட்டியது.

கந்தசஷ்டி
கந்தசஷ்டி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி - சங்கரன்கோவில் செல்லும் சாலையில் உள்ளது கழுகுமலை. இங்கு பழைமைவாய்ந்த அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில் உள்ளது. குடைவரைக் கோயிலான இக்கோயிலுக்கு விமானமோ கோபுரமோ கிடையாது. மலைதான் விமானமாகவும் கோபுரமாகவும் உள்ளது. இத்தல கழுகாசல மூர்த்தி, ஒரு முகமும் ஆறு கரங்களும், கத்தி, கேடயம், வஜ்ராயுதம், குறிசாயுதம், வேலாயுதம் என கைகளில் ஆயுதங்கள் ஏந்தியும், மயிலின் மீது அமர்ந்து, இடது காலை மயில் மீது பதித்து, வலதுகாலை தொங்கவிட்டபடி சம்ஹாரத் திருக்கோலத்தில் காட்சிகொடுக்கிறார்.

அக்னிச் சேவல், பிரணவ மயில்... சேயோன் பெருமைகளைப் பேசும் கொடியும் வாகனமும்... கந்தசஷ்டி ஸ்பெஷல்!

பிற முருகன் தலங்களில் அசுரனே எம்பெருமானிடம் சரணாகதி அடைந்ததால் மயில், முருகனுக்கு வலப்புறமாக இருக்கும். இங்கு இந்திரனே மயிலாக மாறி முருகனுக்கு வாகனமாகியதால் மயில் இடப்புறம் காணப்படுவது தனிச்சிறப்பு. இங்கு ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முக்கியத் திருவிழாக்களில் கந்தசஷ்டி சிறப்பானது. வழக்கமாகக் கந்தசஷ்டியின் 6-வது நாளில்தான் அனைத்து முருகன் கோயில்களிலும் சூரசம்ஹாரம் நடக்கும். ஆனால், தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான் 5-வது நாளான பஞ்சமி திதியில் தாரகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.

தீபாராதனை
தீபாராதனை

இந்த ஆண்டு, கந்த சஷ்டி விழா கடந்த அக்டோபர் 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவின் 5-வது நாளான நேற்று (1.11.2019) மதியம் 12 மணியளவில், தாரகாசூரனை முருகப் பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. முருகப் பெருமானுடன் தாராகசூரனாகப் போர்புரிய விரதமிருந்த பக்தர் ஒருவர், மரத்தினாலான யானை முகத்தை தன் முகத்தோடு பிடித்தபடி, 3 முறை முருகப் பெருமானின் சப்பரத்தைச் சுற்றி வந்தார். மூன்றாவது சுற்றின் முடிவில், தாரகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. வதம் செய்யும் விதமாக, அந்தப் பக்தர் பிடித்துள்ள யானை முகமுடி, வேலில் கட்டப்பட்டு தூக்கப்பட்டது.

பின்னர், அப்படியே சாய்ந்த அந்தப் பக்தர் தரையில் படுக்க வைக்கப்பட்டார். தொடர்ந்து, சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்ற பின் தெப்பக்குளத்தில் குளிப்பாட்ட தூக்கிச் செல்லப்பட்ட அந்தப் பக்தர், மீண்டும் முருகப் பெருமானை தரிசித்து விபூதி பெற்றார். இதனால், தாரகாசூரன் முருகப் பெருமானிடம் விமோசனம் பெற்றதாக ஐதிகம். சஷ்டியின் 6-வது நாளான இன்று (2.11.19) மாலை, வழக்கமாக மற்ற முருகன் தலங்களில் நடைபெறுவதுபோல, சூரபதுமன், சிங்கமகாசூரன், தாரகாசூரன், வானுகோபன், தர்மகோபன் ஆகிய 5 அசுர சகோதர்களை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கந்தசஷ்டி
கந்தசஷ்டி

கழுகுமலை கோயில் சூரசம்ஹார நிகழ்ச்சி குறித்து அவ்வூரைச் சேர்ந்த, பல ஆண்டுகளாக சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் சிலரிடம் பேசினோம்.

``மற்ற முருகன் தலங்களில் மரச்சிற்பத்தில் அசுரர்களின் தலையை மட்டும் மாற்றி சம்ஹாரம் நடப்பது வழக்கம். ஆனால், இங்கு 6 அடி உயரத்தில் கூம்புபோல அமைப்பில் கூடாகக் கட்டி அதன் மேல் வண்ணத் தாள்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும். இப்படியாக மொத்தம், 5 சூர பொம்மைகள் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இந்தக் கூட்டுக்குள் சஷ்டிவிரதம் இருக்கும் பக்தர்கள் சென்று நின்றுகொள்வார்கள். அவர்கள் நடந்தும், சுற்றியும் வரும்போது பார்ப்பதற்கு சூரபொம்மைகள் தானாகவே ஆடி வருவதுபோல இருக்கும்.

Vikatan

அசுரர்கள் அசுர நாட்டின் மன்னர்கள் என்பதால், அசுரர்களுக்கும் தனி மரியாதை அளிக்க வேண்டும் என்பதால் தனித்தனி உருவபொம்மைகளாக உருவாக்கி பல ஆண்டுகளாக சம்ஹாரம் நடத்திவந்துள்ளனர். அசுரர்கள் மொத்தம் 5 பேர். சூரபதுமன், சிங்கமகாசூரன், தாரகாசூரன், வானுகோபன், தர்மகோபன் என ஐந்து பேர். இவர்களது தாய்தான் `மாயை'. திருவிழாவின் 6 நாள்களும், தினமும் காலையும் மாலையும் அசுரன் சார்பிலும், முருகப் பெருமான் சார்பிலும் திருக்கோயில் ஓதுவார்கள், கோயில் வளாகத்தில் போருக்கு முன் தூது செல்வார்கள்.

கந்தசஷ்டி
கந்தசஷ்டி

கோயில் மண்டபத்தில் பட்டு, பரிவட்டம் கட்டி, கழுத்தில் மாலை போட்ட இரண்டு ஓதுவா மூர்த்திகள் எதிரெதிர் திசையில் நிற்பார்கள். முதலில் முருகப் பெருமான் சார்பில் வீரபாகுவாக விரதமிருக்கும் ஓதுவார், எதிர்த் திசையை நோக்கி நடந்து செல்வார். இவர் எதிர்திசைக்குச் சென்றதும் அசுரர் சார்பில் தூதுவரான ஓதுவார் எதிர்த்திசையை நோக்கி நடந்துசெல்வார். இப்படி 3 முறை எதிரெதிர் திசையில் நடந்து சென்று பின் அவரவர் திசையில் நின்றுகொண்டு, முதலில் வீரபாகுவான ஓதுவார், `` வாரும் பிள்ளாய்.. சூரபத்மாவே..! நீ எத்தனையோ காலம் தவம் இருந்து சிவபரம் பொருளிடம் கடுமையான வரங்களைப் பெற்றுள்ளாய். உன்னை யாராலும் அழிக்க முடியாது என நினைக்காதே. உன்னை அழிக்கக் கந்தன் உருவெடுத்துள்ளான். நீ அவனைச் சின்ன பாலகன் என நினைக்காதே. உன்னைக் குலத்தோடு வேரறுத்து விடுவான். சிறைப்பிடித்துள்ள தேவர்களை நீ விடுவித்தால், உன் குலத்தோடு நீடு வாழ்வாய்..! அப்படி தவறினால், உமையவள் சக்தி, வேலாக உருவெடுத்து வந்துள்ள கந்தனிடம் அவனது தாய் கொடுத்தனுப்பும் வேலாயுதத்துக்கு உன் வம்சம் மண்ணோடு மண்ணாகிவிடும்’’ என வசனமாக சத்தமாகப் படித்து எதிரிலுள்ள தூதுவனிடம் சொல்வார்.

இந்த வசனத்தை முழுவதும் கேட்டுக்கொண்டு..., அசுரர் சார்பிலான தூதுவர், ``வாரும் பிள்ளாய் வீரபாகுவே..! ஆயிரத்தெட்டு அண்டங்களையும் ஆட்சி செய்தவன் நான். எவராலும் அழிக்கமுடியாத நீங்காத சர்வ வல்லமை படைத்தவன் நான். பால் குடி மறவாத ஒரு பச்சிளம் பாலகனா என்னை வந்து வதம் செய்து, என் குலத்தை அழிக்கப் போகிறான். என் தம்பிமார்களுடன் அசுர குலத்தில் கோலோச்சி நிற்கும் எங்களை யாரும் வீழ்த்த முடியாது’’ எனப் பதில் சொல்வார். 6 நாள்களும் இப்படி எதிரெதிர் திசையில் நடந்துசென்று, வாதம் செய்வார்கள். இந்தத் தூது செல்லும் நிகழ்ச்சி வேறெந்த முருகன் தலத்திலும் காண முடியாத சிறப்பு.

கந்தசஷ்டி
கந்தசஷ்டி

சஷ்டியின் 5-ம் நாளில் நடக்கும் தாரகாசூர வதத்தில், எம்பெருமானுக்குக் கிடைத்தது முதல் வெற்றி. ``முதல் வெற்றி என்பதே முழு வெற்றிதான்" என்பதால்தான் முதல்நாள் பஞ்சமி திதியில் தாரகாசூரனின் வதம் நடக்கிறது. சஷ்டியின் 6-ம் நாள் திருவிழாவன்று மாலை 4 மணிக்கு வழக்கம் போல மற்ற சூரன்களை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். மூங்கில் கூடுகளில் வடிவமைக்கப்பட்டுள்ள அசுர பொம்மைகளைத் தூக்கி ஆடியபடி ஒவ்வொரு சூரனாக முருகனை 3 முறை சுற்றி வர, ஒவ்வொன்றாக வதம் செய்யப்படும்" என்று பரவசத்துடன் விவரித்தார்.

அக்னிச் சேவல், பிரணவ மயில்... சேயோன் பெருமைகளைப் பேசும் கொடியும் வாகனமும்... கந்தசஷ்டி ஸ்பெஷல்!
அடுத்த கட்டுரைக்கு