Published:Updated:

தர்ப்பணம், திவசம்... முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த மஹாளய அமாவாசையில் எது சிறந்தது?

திருப்பூவணம்
திருப்பூவணம்

பித்ருக்கள் இந்த உலகத்துக்கு வரும் மஹாளய அமாவாசை தினத்தில் அவர்களைத் திருப்திப்படுத்தும்விதமாகப் புண்ணியச் சடங்குகளைச் செய்தால் அவர்கள் மனம் மகிழ்ந்து நமக்கும், நம்முடைய சந்திதியினருக்கும் பல்வேறு நன்மைகள் புரிவர் என்கிறது கருட புராணம். இந்த நாளில் செய்ய வேண்டியது என்னென்ன?

``ஒரு மனிதன் தன்னுடைய முன்னோர்கள், இறந்துபோன தாய் தந்தைக்கு பித்ரு தர்மங்களைச் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை’’ என சிவனும், விஷ்ணுவும் தெரிவித்ததாக புராணங்கள் கூறும்.

பித்ரு வழிபாடே நம்முடைய தலைமுறைகளை வாழ்விக்கும் சிறந்த வழிபாடு என்று ஆன்மிகப் பெரியோர்கள் கூறுவர். பித்ருக்களின் பெருமை சொல்லும் மஹாளயபட்ச கால விரதம் கடந்த செப்டம்பர் 2 அன்று தொடங்கியது. இது வரும் செப்டம்பர் 17 அன்று மஹாளய அமாவாசையோடு முடிவடைய இருக்கிறது. பித்ருக்கள் பூமிக்கு வந்து தங்கள் சந்ததியர் அளிக்கும் தான, தர்மங்கள், தர்ப்பணம், திவசம் ஆகியவற்றைப் பெற்றுச் செல்லும் புண்ணிய காலமே மஹாளய பட்ச காலம் எனப்படும். இதில் மஹாளய பட்ச அமாவாசை தினம் வெகு சிறப்பானது, இந்த நாளில் நம் பித்ருக்களுக்குச் செய்யும் சிறு தானம்கூட அவர்களை திருப்திப்படுத்தி அவர்களைப் புண்ணிய லோகத்துக்கு அழைத்துச் சென்றுவிடும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

மஹாளய அமாவாசை
மஹாளய அமாவாசை
பித்ருக்களுக்கு மகாளய அமாவாசை நாளில் தர்ப்பணம் கொடுப்பது நல்லதா அல்லது திவசம் கொடுப்பது நல்லதா என்று கேள்வி சிலரின் மனத்தில் எழலாம். இது குறித்து திருநள்ளாறு கோடீஸ்வர சிவாச்சார்யரைத் தொடர்பு கொண்டு நம் சந்தேகத்தை முன்வைத்தோம். அவர் கூறிய விவரங்கள் இங்கே...

"மகாளயபட்ச 15 நாள்களும் பித்ருகளுக்கு தாகமும் பசியும் அதிகமாகவே இருக்கும். அதனால்தான் இந்த 15 நாள்களும் அவசியம் தர்ப்பணம் செய்ய வலியுறுத்துகிறது நம் சாஸ்திரங்கள். திவசம் என்றால் வேறு, தர்ப்பணம் என்றால் வேறு. தர்ப்பணம் என்பது ஒவ்வொரு நாளும் நம் முன்னோர்களுக்காக நாம் செய்ய வேண்டிய புண்ணிய காரியம். சூரியன், வருணன், அக்னி என எல்லா தேவர்களுக்கும் நீர்நிலைகளில் நின்று நீரை அர்க்கியமாக அள்ளி விட்டு ஒவ்வொரு தேவர்களுக்கும் வணக்கம் செய்வதே தர்ப்பணம். தர்ப்பணம் என்றால் 'திருப்தி செய்வது' என்று அர்த்தம். நீரால் ஆன இந்த உலகில் இருந்துகொண்டு நீரை அவர்களுக்கு அளித்து அருளைப் பெறுவது.

ஆனால், அமாவாசை மற்றும் இறந்தவர்களின் திதி அன்று மட்டும் எள்ளும், நீரும் கலந்து இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்யவேண்டும். இந்த இரு நாள்களில் மட்டுமே இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்யவேண்டும். அதிலும் இதை ரத்த சம்பந்தம் கொண்டவர்கள் மட்டுமே செய்யவேண்டும் என்பது விதி. தர்ப்பணம் கொடுத்தபின்னர் சிறிய அளவிலேனும் தானம் செய்யவேண்டும் என்பதும் விதி. பசுக்களுக்கு அகத்திக் கீரை கொடுத்தோ, காக்கைக்கு உணவிட்டோ கூட தானம் செய்யலாம்.

செல்வம் அருளும் லட்சுமி தீர்த்தம்... நோய் நீக்கும் நவபாஷாண கருடர்... சிங்கவரம் ரங்கநாதர் கோயில்!

ஆனால் திவசம் என்பது நம் குடும்பத்தைச் சேர்ந்தவர் எந்த மாதம் எந்த திதியில் இறந்தார்களோ, அந்த மாதம் அந்தத் திதியில் (பஞ்சமி என்றால் அந்த மாத பஞ்சமி) மட்டுமே செய்யக்கூடியது திவசம். மேலும் அந்தணர் ஒருவரை நம் வீட்டுக்கு அழைத்து செய்யப்படும் ஒரு விரிவான சடங்கு திவசம். ஹோமம் வளர்த்து, பிண்டம் வைத்து செய்யப்படும் விரிவான சடங்கே திவசம். பசுக்கள், காகங்கள், சடங்கு செய்யும் அந்தணர் ஆகியோருக்கு தானம் செய்து பித்ருக்களுக்கு ஷாந்தி அளிப்பதே திவசம் எனப்படுகிறது. வசதியில்லாதவர்கள் அந்த திதியில் நீர்நிலைகளுக்குச் சென்று எள்ளும் நீரும் தெளித்து தர்ப்பணம் கொடுக்கலாம். தர்ப்பணத்தை விட திவசம் கொடுப்பது விசேஷம்தான் என்றாலும் அது அவரவர் வசதியைப் பொறுத்தது எனலாம். மஹாளய அமாவாசையில் நம் ஏழேழ் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கும் பொதுவாக தர்ப்பணம் செய்யலாம். அதுவே அவர்களுக்கு மோட்சமளித்து நமக்கும் பல நல்ல பலன்களை அளிக்கும்" என்றார்.

பித்ரு தோஷம்
பித்ரு தோஷம்

இந்தப் புண்ணிய நாளில் வேதாரண்யம், திருப்பூவணம், திருநீர் மலை, நாகை மாவட்டம் பூந்தோட்டத்திற்கு அருகில் உள்ள முக்தீஸ்வரர் கோயில் (இது தில தர்ப்பணபுரி என்று அழைக்கப்படுகிறது) போன்ற புண்ணிய இடங்களில் மஹாளய பட்ச தர்ப்பணம் செய்யலாம். பொதுவாக, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கோடியக்கரை, திருப்புல்லாணி போன்ற புண்ணிய பூமியில் மக்கள் கூடி தர்ப்பணம் செய்து வழிபாடு செய்வது வழக்கம். ஆனால் தற்போது அனைத்து இடங்களிலும் கொரோனா பரவல் அச்சம் காரணமாகப் பொதுமக்கள் கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே அவரவர் தங்கள் வீட்டிலோ அல்லது வீட்டுக்கு அருகிலேயோ உரிய சடங்குகளைச் செய்து வழிபடுவது நலம். பித்ருக்கள் இந்த உலகத்துக்கு வரும் மஹாளய அமாவாசை தினத்தில் அவர்களை திருப்திப்படுத்தும்விதமாகப் புண்ணிய சடங்குகளைச் செய்தால் அவர்கள் மனம் மகிழ்ந்து நமக்கும், நம்முடைய சந்திதியினருக்கும் பல்வேறு நன்மைகள் புரிவர் என்கிறது கருட புராணம். எனவே இந்த மஹாளய அமாவாசை நாளில் பித்ருக்களின் வாழ்த்தைப் பெற்று நலமும் வளமும் பெறுவோம்.

அடுத்த கட்டுரைக்கு