திருத்தலங்கள்
ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

தைத் திங்கள் தரிசனம்!

பொங்கல்
பிரீமியம் ஸ்டோரி
News
பொங்கல்

மஞ்சள்குளி உற்சவம்!

`வம்சம் செழிக்க செவ்வாய் பொங்கல்!'

சிவகங்கையிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலை விலுள்ளது நாட்டரசன் கோட்டை. பார்வை பறிபோன சோழ தேசத்து விவசாயி ஒருவருக்குக் கண் பார்வை அளித்த அம்பிகை, இங்கே கண்ணுடை நாயகியாய் கோலோச்சுகிறாள்.

கண்ணுடைய நாயகி, கண்ணாத்தாள், ஆயிரம் கண்ணுடையாள் என்றெல்லாம் திருநாமங்கள் கொண்டு அம்பிகை அருளும் இவ்வூரின் செவ்வாய்ப் பொங்கல் திருவிழா பிரசித்திபெற்றது.

தைத் திங்கள் தரிசனம்!

வருடந்தோறும் தை மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமை அன்று நிகழ்கிறது இந்தத் திருவிழா. முன்னதாக நாட்டரசன் கோட்டையைப் பூர்வீகமாகக் கொண்ட நகரத்தார்களின் பெயர்கள் அனைத் தையும் ஒரு துண்டுச் சீட்டில் எழுதி, அம்பாளின் சந்நிதிக்கு முன் வைத்து வணங்கிவிட்டு, குலுக்கல் முறையில் ஒவ்வொரு சீட்டாக எடுப்பார்கள்.

முதலில் யார் பெயர் வருகிறதோ, அவரது குடும்பம் ‘முதல் பானைக்காரர்கள்’ என அழைக்கப் படுகிறது. அவர்களின் பானையில் அடுப்பு மூட்டிய பிறகே, மற்ற அனைவரின் அடுப்புகளிலும் தீ மூட்டப்படும்! முதல் சீட்டு எடுத்த பின், இரண்டாவது, மூன்றாவது, நான்காவது என வரிசையாகச் சீட்டுகள் எடுத்து, பெயர்களை அறிவிப்பார்கள். அந்தந்த எண்ணில், அந்தக் குடும்பங்கள் அடுப்பு வைத்துப் படையலிடுவார்கள்.

தைத் திங்கள் தரிசனம்!

சீட்டுக் குலுக்கி எண்கள் கொடுத்ததும், முன்னதாக வந்து தங்களுக் கான இடத்தைச் சுத்தம் செய்து, சாணத்தால் மெழுகிக் கோலமிட்டு, தங்களது அடுப்பையும் வைத்துவிடுவார்கள். ஒரு குடும்பத்தில் மகன் இருந்து, அவருக்குக் கல்யாண மாகிவிட்டால், அந்த வீட்டுக்கு இரண்டு பானைகள் வைக்க இடம் வழங்கப்படுமாம்.

‘நான் நல்லாருக்கேன்; என் பையனும் அவனோட வாரிசும் செழிச்சு வளரணும்’ எனப் பிரார்த்திப்பதற்காக, வாழையடி வாழையாகச் சந்ததி சிறக்க வேண்டும் என்பதற்காகவே, இரண்டு பானைகள் வைத்து அம்மனை வணங்குவார்களாம்.

தைத் திங்கள் தரிசனம்!

செவ்வாய் பொங்கல் விழா முடிந்ததும், கோயில் அர்ச்சகர்கள், ஒவ்வொரு பானைக்கு அருகிலும் வந்து, தேங்காய்- பழம் கொண்டு அம்பாளுக்கு அர்ச்சனை செய்து, ‘இந்தக் குடும்பம் நல்லா இருக் கணும்; வாழையடி வாழையா வம்சம் செழிக்கணும்’ எனப் பிரார்த்தித்து அர்ச்சனை செய்வார்கள்.

அன்றிரவு அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள கருப்பர் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருவர். பிறகு, கருப்பருக்குக் கிடாவெட்டு நடைபெறும். நள்ளிரவு வரை நீளுமாம், இந்த வைபவம்!

பொங்கல் அன்று மட்டுமே பகல் தரிசனம்!

`பெரியது எது... இல்லறமா, துறவறமா’ என்பது குறித்து கருத்தில் முரண்பட்ட முனிவர்கள் இருவருக்கு, `இரண்டும் அறங்களுமே இணையானவையே’ என்று பொதுவாக பதில் உரைத்து, பொதுஆவுடையார் என்றும் மத்தியபுரீஸ்வரர் என்றும் திருப்பெயர் கொண்ட ஈசன் அருளும் தலம், பரக்கலக்கோட்டை.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ளது பரக்கலக் கோட்டை. முனிவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இங்கே வெள்ளால மரமாகவே காட்சி தந்து அருள் கிறார் ஸ்ரீபொதுஆவுடையார்!

தைத் திங்கள் தரிசனம்!

முனிவர் பெருமக்களுக்கு கார்த்திகை மாத சோம வாரத்தில் (திங்கள் கிழமை) திருக்காட்சி தந்து உபதேசித்ததால், ஒவ்வொரு திங்கள்கிழமையும் இங்கே சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இன்னொரு விஷயம்... சிதம்பரத்தில் அர்த்தஜாம பூஜை முடிந்தபிறகு ஈசன் இங்கு வந்து அருள்பாலித்ததால், ஒவ்வொரு திங்கள்கிழமையும் இரவு 10.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நள்ளிரவு 12 மணிக்கு பூஜைகள் நடைபெறும்.

ஆம், திங்கள்கிழமை மட்டும் இரவு திறந்து நள்ளிரவில் நடை சார்த்தப் படும். பகலில் நடை திறக்கப்படுவதிலை. கார்த்திகை மாத திங்கள் கிழமை களில் விமரிசையாக பூஜைகள் நடந்தேறும்.

திங்கள் கிழமைகளில் இவரை தரிசித்து வேண்டிக்கொண்டால், விவசாயம் செழிக்கும், அமோக விளைச்சல் கிடைக்கும், தொழிலில் பன்மடங்கு லாபம் கிடைக்கும், நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திங்கள்தோறும் இரவில் திறக்கப்படும் இந்த ஆலயம், வருடத்தில் ஒரேயொரு நாள் மட்டும் பகலில் திறக்கப்படுகிறது; ஸ்வாமிக்கு அலங்கார மும் சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது; அந்த நாள்... தைப் பொங்கல் திருநாள்!

மஞ்சள்குளி உற்சவம்!

நாகை மாவட்டம், சீர்காழியிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது திருநகரி. ஆரம்பத்தில், திருவாலி திருநகரி என ஒரே ஊராகப் போற்றப்பட்ட இந்தத் தலம், திருவாலி மற்றும் திருநகரி என இரண்டு ஊர்களாக வளர்ந்திருக்கிறது.

புராண- புராதனப் பெருமைகள் கொண்ட இந்தத் தலத்தில், தை அமாவாசை தினத்தன்று நிகழும் புண்ணிய வைபவமே மஞ்சள்குளி உற்சவம். ஆலிநாடனான திருமங்கையாழ்வார் வருடந்தோறும் ரங்கத் தில் நடைபெறும் மஞ்சள் குளி உற்சவத்தைக் காணச் செல்வாராம்.

தைத் திங்கள் தரிசனம்!

அவர் காலத்துக்குப் பிறகு திருநகரியை ஆட்சி செய்த சோழ மன்னன், காவிரியின் கிளை நதியை உருவாக்கினான். அருகில், மஞ்சள்குளி மண்டபத்தையும் அமைத்தான். திருமங்கையாழ்வார், மஞ்சள்குளி உற்சவத்தைக் காணும் திருவிழாவை விமரிசையாக இங்கேயே நடத்தி மகிழ்ந்தான். இன்றும் தொடர்கிறது இந்த உத்ஸவம்.

தைத் திங்கள் தரிசனம்!

தை அமாவாசை நாளன்று, அதிகாலையிலேயே புறப்பட்டு விடுவார், திருமங்கையாழ்வார். வயல்வெளிகளின் வழியே பயணித்து சுற்றியுள்ள 11 திவ்விய தேசங்களுக்கும் சென்று, அங்கேயுள்ள பெருமாளின் அழகுத் திருமேனியை கண்ணாரத் தரிசித்து, அன்றிரவு அந்திசாயும் வேளையில், ஊருக்குத் திரும்பும் வைபவம் நடைபெறும்.

தைத் திங்கள் தரிசனம்!

இந்தத் திருவிழாவின்போது, எந்த வயலில் திருமங்கையாழ்வாரின் உத்ஸவத் திருமேனி இறங்கிச் செல்கிறதோ, அந்த வயலில் அமோக விளைச்சல் உறுதி என்று சிலிர்ப்பு மேலிடச் சொல்கின்றனர் விவசாயிகள். இந்த விழா, ‘தாமுகந்த உத்ஸவம்’ எனப்படுகிறது! இந்த முறை... 11.2.21 அன்று துவங்கி, 13.2.11 வரை திருநகரி திருநாங்கூர் கருடசேவை உற்சவ வைபவங்கள் விமரிசையாக நடைபெற உள்ளது.

தியாக பிரம்மம் ஆராதனை!

அன்பு மயமான பக்தி இருந்தால் இந்த கலியுகத்திலும் நேருக்கு நேராக தெய்வத்தை தரிசனம் செய்ய முடியும் என்பதை நிரூபித்து நமக்கு வழிகாட்டியவர் சங்கீத மும்மூர்த்திகளில் பிரபலமான சத்குரு தியாகராஜ ஸ்வாமிகள். இவரது காலம் 1767-1847.

தியாகராஜ ஸ்வாமி களுக்காக தெய்வம் நடத்திக் காட்டிய திருவிளை யாடல்கள் ஏராளம். அவற்றில் ஒன்று:

ஸ்ரீரங்கத்தில் சித்திரை விழா! தியாகராஜ ஸ்வாமிகள் அப்போது தெற்கு வீதியில் தங்கியிருந்தார். அங்கு தங்கக் குதிரை வாகனத்தில் பவனி வரும் பெருமாளின் அழகை, `ராஜு வெடலெ’ என்ற கீர்த்தனையில் வர்ணித்துப் பாடினார். கூட்டம் காரணமாக தியாகராஜ ஸ்வாமிகளால் அருகில் சென்று ஸ்வாமியை தரிசிக்க முடியவில்லை. ஆனால், ஸ்வாமியின் பவனி இவரைக் கடந்து, மேற்கு வீதியில் திரும்பியவுடன், திடீரென்று நின்றுவிட்டது.

வாகனத்தைச் சுமந்து வந்தவர்கள் என்ன முயற்சி செய்தும் பலனில்லை. அப்போது அர்ச்சகர் ஒருவர் மேல் ஆவேசம் வந்தது. ‘‘தெற்கு வீதியில் பக்தன் ஒருவன் என்னை தரிசிக்கும் ஆவலோடு காத்திருக்கிறான். அவனை அழைத்து வாருங்கள்’’ என்று உத்தரவு வந்தது. அதன்படியே தியாகராஜ ஸ்வாமிகளை அழைத்து வந்தார்கள்.

அவர் அரங்கனின் அருகில் நின்று ஆனந்தமாக தரிசித்தார். மனமுருகி தேவகாந்தாரி ராகத்தில் ஒரு கீர்த்தனையை அவர் பாடி முடித்தபிறகே, ஸ்வாமியின் பவனி தொடர்ந்தது.

தியாகராஜ ஸ்வாமிகள் தை மாதம் தேய்பிறை பஞ்சமி அன்று (6.1.1847) தன் வழிபாட்டு தெய்வமான ராமரின் திருவடிகளை அடைந்தார். இதை முன்னிட்டு இப்போதும் வருடா வருடம் திருவையாறு தியாகராஜ ஸ்வாமிகள் பிருந்தா வனத்தில் ஆராதனை நடைபெற்று வருகிறது.

இந்த வருடம் 2.2.21 செவ்வாய் அன்று தியாகபிரம்மம் ஆராதனை. அதில் கலந்து கொள்வதையும் அங்கு போய் ஒரு பாடலாவது பாடுவதையும் சங்கீத வித்வான்கள் பெரும் பேறாகக் கருதுகிறார்கள்.

அழகிய மயிலே அபிராமி!

நாகை மாவட்டம் திருக்கடவூரில் அமிர்தகடேஸ்வரருடன் உடனுறையும் ஸ்ரீஅபிராமி தாயானவள் ‘என்றும் 16’ என மார்க்கண்டேயனுக்கு சிரஞ்ஜீவி வரம் அருளியவள்.

வேண்டுவோருக்கு வேண்டுவன யாவும் அருள்வதோடு, தன்னை வழிபடுவோரின் பிணி தீர்த்து, ஆயுளை நீட்டிக்க வல்லவள். அதனாலயே இத்தலத்தில் ஆண்டு முழுவதும் நாள்தவறாமல் ஆயுஷ்ஹோம பூஜைகளும், திருமணங்களும் நடந்தவண்ணம் இருக்கின்றன!

தைத் திங்கள் தரிசனம்!

தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு முதலாம் சரபோஜி மன்னர் ஆண்டு வந்த காலம். அப்போது, திருக்கடையூரில் வாழ்ந்து வந்தவர் அபிராமிப் பட்டர். அவருடைய இயற்பெயர் சுப்ரமண்ய பட்டர் என்பதாகும். அவர் எப்போதும் அம்பிகையின் தியானத்திலேயே திளைத்திருப் பவர். பெண்கள் அனைவரையும் அன்னை அபிராமியாகவே பாவித்து, மதிப்பவர்.

சுப்ரமண்ய பட்டரைப் பிடிக்காத சிலர், எப்படியா வது அவரை கோயிலில் இருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்று நினைத்தனர். ஒரு தை அமாவாசை அன்று கோயிலுக்கு வந்தார் மன்னர் சரபோஜி. அவரிடம், சுப்ரமண்ய பட்டர் பித்துப்பிடித்தவர் என்றும் அவரை கோயிலுக் குள் வரவிடாமல் தடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

அவர்கள் சொல்வது சரியா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள, நினைத்த மன்னர், சுப்ரமண்ய பட்டரிடம், ‘இன்று என்ன திதி?’ என்று கேட்டார். அப்போது அபிராமியின் சந்நிதியில், திதிநித்யா தேவி உபாசனையில் ஆழ்ந்து ஈடுபட்டிருந்த சுப்ரமண்ய பட்டருக்கு அம்பிகையின் திருமுகம் முழுநிலவாகக் காட்சி தந்துகொண்டிருந்தது. அதிலேயே லயித்துப்போனவராக, ‘இன்று பெளர்ணமி திதி’ என்று சொல்லிவிட்டார்.

ஆக, அவர் பித்துப் பிடித்தவர்தான் என்ற முடிவுக்கு வந்த மன்னர், தியானம் முடிந்து சுயநினைவுக்கு மீண்ட பட்டரிடம், அவர் சொன்னது போல் அன்றைக்கு முழுநிலவு வரா விட்டால், அவருக்கு மரணத் தண்டனை வழங்கப்படும் என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டார். அதைக் கேட்டு வருந்திய பட்டர், தம்மை அப்படி சொல்லச் செய்தது அபிராமிதானே, அவளே அதற்கு ஒரு முடிவைத் தரட்டும் என்று தீர்மானித்தார். ஓர் இடத்தில் அக்னி வளர்த்து, அபிராமி அந்தாதி பாடல்களைப் பாடத் தொடங்கினார்.

தைத் திங்கள் தரிசனம்!

79-வது பாடலான, ‘விழிக்கே அருளுண்டு..’ என்ற பாடலைப் பாடி முடிக்கவும், அபிராமி அன்னை தன் தாடங்கத்தை எடுத்து வானில் வீசினாள். அது முழு நிலவாய்ப் பிரகாசித்தது. அமாவாசை அன்று முழு நிலவு வெளிப்பட்ட அதிசயத்தைக் கண்ட மன்னர் சரபோஜி, சுப்ரமண்ய பட்டரிடம் வந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டதுடன், அவருக்கு `அபிராமிப் பட்டர்’ என்ற திருப்பெயரையும் சூட்டி, நிறைய வெகுமதிகளும் வழங்கினார்.

இன்றைக்கும் இந்த அற்புதத்தைப் போற்றும் விதமாக ஆலயத்தில் சிறப்பு ஆராதனை வழிபாடுகள் நடைபெறுகின்றன; இந்த வருடம் 11.2.2021 தை மாதம் 29-ம் நாள் வியாழக் கிழமை அன்று தை அமாவசை திருநாள்.

நாமும் அனுதினமும் அன்னை அபிராமியைப் போற்றி வழிபடுவோம். நம் வாழ்விலும் பூரணச் சந்திரனாய் தண்ணொளி பொலிந்து, இருள் நீக்கி அருள் தருவாள்!

வாழைப்பழ திருவிழா!

மதுரை- உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள செல்லம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊர் கோவிலாங்குளம். இங்கு அமைந்திருக்கும் ஸ்ரீபட்டசாமி தொண்டியாபிள்ளைசாமி கோயிலில், தைப் பொங்கலை முன்னிட்டு வாழைப்பழத் திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது.

தைத் திங்கள் தரிசனம்!

மாட்டுப்பொங்கல் அன்று சுவாமிக்கு வாழைப்பழம் சமர்ப்பிப்பது வழக்கம். சுவாமிக்குப் படைப்பதற்காக, சுமார் 36 கி.மீ. தொலைவில் உள்ள சோழவந்தான் எனும் ஊரில் வாழைப்பழம் வாங்கி, அதை தலைச்சுமையாக எடுத்து வந்து கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். வீட்டுக்கு ஒருவர், கோயிலுக்கு வாழைப்பழம் எடுத்து வரவேண்டும் என்பது நியதி.

இவ்வாறு, பக்தர்கள் கொண்டு வரும் பழங்களைச் சந்நிதியில் பரப்பி வைக்கிறார்கள். பூஜைகள் முடிந்ததும் அந்த வாழைப் பழங்கள், பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தரப்படுகின்றன.

- கோவி ராஜேந்திரன், மதுரை-4