Published:Updated:

``அவ்வளவு கூட்டத்தை நான் பார்த்ததேயில்லை...” - சித்திரைத் திருவிழா நினைவுகள் பகிரும் தங்கர்பச்சன்

கள்ளழகர்
கள்ளழகர்

அழகர் திருவிழாவைப் படம் பிடிக்கும்போது அவ்வளவு பெரிய கூட்டம். அழகரின் கூட்டத்துக்கு நடுவே பயணித்தது புதிய அனுபவம். இப்போதுபோல் செல்போன்கள் கிடையாது. கிட்டத்தட்ட பத்து பன்னிரண்டு மைல்கள் கூட்டத்துடன் ஓடிக்கொண்டே காட்சிப் படுத்தினோம்.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கான திருவிழா மட்டுமல்ல, தென்னிந்தியாவில் மிகப்பெரிய அளவில் மக்கள் கூடும் திருவிழா. ஜாதி, மத, இன, மொழிகளைக் கடந்த திருவிழா. சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் அன்பையும் மகிழ்ச்சியையும் மக்கள் பேணக்கூடிய அற்புதமான திருவிழா.

அழகர் கோயிலிலிருந்து கள்ளழகர் பெருமாள் கிளம்பி மதுரையில் வைகை ஆற்றில் இறங்கி மீண்டும் கோயிலுக்குத் திரும்புவது வரையிலான நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள்.

Kallazhagar
Kallazhagar

வட இந்தியாவில் நடைபெறும் கும்பமேளாவுக்கு நிகரான ஒரு திருவிழாவாக இந்த விழா பார்க்கப்படுகிறது. சைவ - வைணவ ஒற்றுமையின் சின்னமாகவும் சித்திரைத் திருவிழா திகழ்கிறது.

அப்படிப்பட்ட திருவிழா வரலாற்றில் முதல் முறையாக இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. கள்ளழகர் விழாவை 20 ஆண்டுகளுக்கு முன்பாக வெளியான ‘கள்ளழகர்’ திரைப்படத்தில் சிறப்பான முறையில் பதிவு செய்திருப்பார்கள். இந்தப் படம் நடிகர் விஜயகாந்த், ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான், இயக்குநர் பாரதி ஆகியோரின் கூட்டு உழைப்பில் உருவானது. அந்த நினைவுகள் குறித்துப் பகிருமாறு படத்தின் ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சானிடம் பேசினோம்:

''கள்ளழகர் திரைப்படத்தைப் போல் வேறு எந்தப் படத்துக்கும் சேர்ந்தாற்போல் நாற்பது நாள்கள் நான் எங்கும் தங்கியதில்லை. மதுரை கள்ளழகர் கோயிலிலும் அங்குள்ள காட்டுப் பகுதிகளும் எனக்கு அத்துப்படி. அழகர் பயணிக்கும் வழியெங்கும் நாங்கள் வேறு சிந்தனையே இல்லாமல் 40 நாள்களும் தவம்போல் அங்கேயே கிடந்தோம். கிடைத்த இடத்தில் கிடைத்ததைச் சாப்பிட்டுக்கொண்டு, விழுந்த இடத்தில் தூக்கம் என இருந்த நாள்கள் அவை.

Thangarpachchan
Thangarpachchan

படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடக்கும்போதெல்லாம் எனக்கு 104 டிகிரி காய்ச்சல் வந்துவிட்டது. மொத்தம் 4 கேமிராக்கள். செல்வமணியிடம் கேமராமேனாகப் பணியாற்றும் பன்னீர்செல்வம் உதவி கேமராமேனாக வந்தார்.

இவைதவிர, கூட்டத்துக்குள் பயணித்து ஷூட் செய்வதற்கு ஒரு ஸ்டடி கேமரா என மொத்தம் ஐந்து கேமராக்கள் அந்தக் காட்சியில் பயன்படுத்தப்பட்டன.

அப்போதுதான் முதன்முறையாக 'அகிரா' என்ற ஒரு கிரேன் தமிழ் சினிமா உலகத்துக்குப் புதிதாக வந்தது. அதை நாங்கள் பயன்படுத்தினோம்.

அது எனக்குப் புதிய களம். விஜயகாந்தோடு நான் பழகிய நாள்கள் மறக்க முடியாதவை. பொதுவாக, நான் பெரிய நடிகர்கள் படங்களில் பணியாற்றியது இல்லை. காரணம், நான் ஒன்று சொல்லுவேன், அவர்கள் ஒன்று சொல்லுவார்கள், கருத்து வேறுபாடுகள் வரும் என்பதால் தொடக்கத்திலேயே தவிர்த்துவிடுவேன்

விஜயகாந்த், வசனகர்த்தாவான இயக்குநர் மகேந்திரன், மணிவண்ணன், படத்தின் இயக்குநர் பாரதி, நான் எல்லோரும் ஒன்றாகவே மதுரையில் தங்கியிருந்தோம்.

Vijayakanth
Vijayakanth

எங்களுக்குள் இணக்கமான நட்பு ஏற்பட்டது. உலக சினிமா முதல் உள்ளூர் சினிமாவரை பேசுவோம். இருக்கும் சூரிய ஒளியில் மேக் அப் இல்லாமல் விஜயகாந்தின் நடிப்பைக் காட்சிப்படுத்தினேன்.

. 'லைட் இல்லாமல் மேக் அப் இல்லாமல் எந்த அளவு சரியாக வரும் என்று விஜயகாந்த்கூட ஓரளவு பயந்தார். ஆனால், இருக்கும் சூரிய வெளிச்சத்தில் காட்சிப்படுத்துவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. வித்தியாசமான விஜயகாந்தை இந்தப் படத்தில் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

அழகர் திருவிழாவைப் படம் பிடிக்கும்போது அவ்வளவு பெரிய கூட்டம். அழகரின் கூட்டத்துக்கு நடுவே பயணித்தது புதிய அனுபவம். இப்போதுபோல் செல்போன்கள் கிடையாது. கிட்டத்தட்ட பத்துப் பன்னிரண்டு மைல்கள் கூட்டத்துடன் ஓடிக்கொண்டே காட்சிப் படுத்தினோம்.

வழக்கமான திருவிழாக் கூட்டம்தான் என்று நினைச்சுக்கிட்டுப் போனேன். அவ்வளவு பெரிய கூட்டத்தை எதிர்பார்க்கவே இல்லை. அதற்கு முன்பு எங்கேயும் பார்த்ததும் இல்லை. கூட்டம் என்றால் அப்படி ஒரு கூட்டம், மலைப்பா இருந்துச்சு. அப்புறம் ஏதோ ஒரு தைரியம். ‘பார்த்துக்கலாம்’னு துணிந்து செய்த படம்தான் கள்ளழகர்.

Thangarpachchan
Thangarpachchan

இந்தப் படத்தில் விஜயகாந்தின் நடிப்பு ரொம்ப இயல்பாகவும் தத்ரூபமாகவும் இருக்கும். கடைசி நான்கு நாள்கள் பகல் இரவு என இரு வேளையும் ஷூட்டிங். எனக்குத் தூக்கமே இல்லை. ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குத் தகவலைப் பரிமாறிக்கொள்வதற்குள் அழகர் நகர்ந்து வேறு ஒரு இடத்துக்குப் போய் விடுவார்.

எப்போதுமே நான் கேமராமேனாகப் பணியாற்றும் படங்களில் கேமராமேன் பன்னீர்செல்வத்தை இரண்டாவது யூனிட் கேமராமேனாக வைத்துக் கொள்வேன். ஒரு தடவைதான் ஷூட் பண்ண முடியும். விட்டுட்டால் அடுத்த திருவிழாவில்தான். எட்டடி என்றால் எட்டு அடியில் ஃபோகஸ், பதினாறு என்றால் பதினாறு அடியில் ஃபோகஸ் மாற்ற வேண்டும். கூடவே ஓட வேண்டும் கூட்டத்தையும் சமாளிக்க வேண்டும். பெரிய போராட்டமாக இருந்தது.

அழகர்கோயிலிலிருந்து தல்லாகுளம் வரைக்கும் நடந்தும் ஓடியும் போனோம். வாகனத்தில் எல்லாம் போகவே முடியாது. எப்படி இருக்குமென யோசிச்சுப் பாருங்க.

Bharathy
Bharathy

விஜயகாந்த் படத்தின் ஹீரோ. ஆனால், ஒரு ஃபீல்டு அசிஸ்டன்ட் மாதிரி கூட்டத்தை விலக்குவார். ‘இந்தப் பாரு தம்பி... அந்தப் பக்கம் போயிடு’னு சொல்வார். இரண்டு தடவை சொல்லிக் கேட்கவில்லையென்றால் கோபப்பட்டு சத்தம் போட்டுடுவார். அந்த அளவுக்கு அவர் இறங்கித் தன் சொந்தப் படம் மாதிரி நினைச்சு அதில் வேலை பார்த்தார். ஒரு தவம் மாதிரிதான் அந்தப் படத்தில் நடித்தார்” என்றார் தங்கர்பச்சன்.

திருவிழாவில் படப்பிடிப்பு நடத்திய அனுபவம் குறித்து படத்தின் இயக்குநர் பாரதியிடம் கேட்டோம்.

“‘இது, கள்ளழகர் பற்றிய வரலாற்றுக் கதை அல்ல. தேச ஒற்றுமைக்கும் மத நல்லிணக்கத்துக்குமான கதை' என்று படத்தின் தொடக்கத்திலேயே குறிப்பிட்டிருப்பேன். கள்ளழகர் திரைப்படத்தை தயாரித்தவர் ஒரு கிறிஸ்தவர், பங்கஜ் புரொடக்ஷன்ஸ் ஹென்றி. திரைக்கதை வசனம் எழுதியவர் இயக்குநர் மகேந்திரன் ஒரு கிறிஸ்தவர். படத்தில் இஸ்லாமியக் கதாநாயகனாக நடித்தவர் விஜயகாந்த். ஓர் இந்துத் திருவிழாவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். இந்தத் திரைப்படம் மத நல்லிணக்கத்துக்கு நல்லதோர் ஆவணப் பதிவாகவே இருக்கிறது.

Bharathy
Bharathy

கள்ளழகர் கதையை விஜயகாந்த் சாருக்கு எனச் செதுக்கினேன். கதையைக் கேட்ட உடனே விஜயகாந்த் சாருக்குப் பிடித்துவிட்டது. இதில் இன்னொரு தகவல் என்னவென்றால், கள்ளழகர், விஜயகாந்த் சாருக்குக் குலதெய்வம். அதனால், அந்தப் படத்தை தன் சொந்தப் படமாக நினைத்து நடித்தார்.

ஆண்டாள், என்னும் மதுரைப் பகுதி கிராமத்துப் பெண். பக்தமீராவைப்போல் கள்ளழகர்தான் தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென மனதில் நினைத்து, அவரைத் தன் வீட்டுச் சுவரில் ஓவியமாக வரைந்து வைத்திருப்பாள். யானைப் பாகனாக வரும் விஜயகாந்தைப் பார்த்ததும், அவரே கள்ளழகர் என்று மகிழ்வாள்.

நாங்கள் முதல் வருடமே அந்தத் திருவிழாவில் கலந்துகொண்டு, ஒத்திகை பார்த்திருந்தோம். ஷூட் செய்வதற்கு முன் எந்த இடத்தில் கேமரா வைக்க வேண்டும், எப்படி வைக்க வேண்டும் என்பதையெல்லாம் திட்டமிட்டிருந்தோம்.

வைகை நதிக்கரையோரமாக ஓர் இஸ்லாமியர் வீடு இருக்கும். அந்த வீட்டில்தான் அந்த கிரேனை நிறுத்திப் படப்பிடிப்பை நடத்தினோம். அழகர்கோயிலில் வேட்டுப் போட்டுப் பெருமாள் புறப்பட்டதிலிருந்து வண்டியூர் போய்விட்டு மீண்டும் கோயில் திரும்புற வரைக்கும் எடுத்தோம்.

Kallazhagar Festival
Kallazhagar Festival

மூன்று மாதங்களுக்கு முன்புகூட கள்ளழகர் கோயிலுக்கு நான் போயிருந்தேன். அங்கிருந்த கோயில் பட்டர்கள் எல்லாம் நல்ல வரவேற்பு கொடுத்தாங்க. 'என்னப்பா வந்துட்டியா? எப்படி இருக்கே’னு அன்புடன் ரொம்ப விசாரிச்சாங்க. சந்தோஷமாக இருந்தது. பாசம் வைக்கிறதுல மதுரைக்காரங்களை அடிச்சுக்கவே முடியாதும்பாங்க' அது உண்மைதான்.

'வாராரு வாராரு அழகர் வாராரு' பாடல் மதுரை மண்ணின் ஒவ்வொரு சுவரிலும் எதிரொலிக்கிற மாதிரியே இருந்துச்சு. கவிப்பேரரசர் வைரமுத்து எழுதிய பாடல். மதுரைக்காரங்க தமிழ் சினிமாவுக்கு அவ்வளவு செய்திருக்காங்க.

இசையமைப்பாளர் தேவாவும் கூடவே எஸ்.ஏ. ராஜ்குமாரும் சேர்ந்து பாடிய அந்தப் பாடல், கள்ளழகர் திருவிழாவின் சிக்னேச்சர் சாங்காக என்றைக்கும் ஒலித்துக்கொண்டேயிருக்கும்'' என்றார் இயக்குநர் பாரதி பெருமிதத்துடன்...

அடுத்த கட்டுரைக்கு