Published:Updated:

ஆடி அமாவாசைக்கு நீர் நிலைகளுக்குச் செல்ல முடியாத நிலை... வீட்டிலேயே செய்ய ஓர் ஆன்மிக வழிகாட்டல்!

ஆடி அமாவாசை தீர்த்தமாடல்
ஆடி அமாவாசை தீர்த்தமாடல் ( உ.பாண்டி )

ஒரு மனிதன் தன் இஷ்ட தெய்வமாக எந்தத் தெய்வத்தையும் தேர்ந்து கொள்ளலாம். ஆனால், குலதெய்வம் என்பது அவனுக்கு அமைவது. அவன் தேர்ந்தெடுக்க முடியாது. அவன் குலத்தில் பல தலைமுறைகளுக்கு முன்பாகத் தெய்வமான மூத்த பித்ருவாக அந்தக் குலதெய்வம் திகழும்.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு 

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை 

என்கிறது திருக்குறள். 

மனித வாழ்வின் பொருள் என்ன என்று யாரேனும் கேட்டால் இந்தத் திருக்குறளைச் சொல்லலாம். ஒரு மனிதன் தன் வாழ்வில் ஐந்து பேரைக் காக்க வேண்டும். தென்புலத்தார், தெய்வம், விருந்தினன், உறவினர்கள் மற்றும் தன் குடும்பம் ஆகிய  ஐவரையும் காக்க வேண்டிய கடமை ஒரு மனிதனைச் சேர்கிறது. இந்த ஐவரில் முதலாவதாகத் திருவள்ளுவர் குறிப்பிடுவது தென்புலத்தார் எனப்படும் பித்ருக்களையே.

சதுரகிரி
சதுரகிரி

ஒரு மனிதன் தன் இஷ்ட தெய்வமாக எந்தத் தெய்வத்தையும் தேர்ந்து கொள்ளலாம். ஆனால், குலதெய்வம் என்பது அவனுக்கு அமைவது. அவன் தேர்ந்தெடுக்க முடியாது. அவன் குலத்தில் பல தலைமுறைகளுக்கு முன்பாகத் தெய்வமான மூத்த பித்ருவாக அந்தக் குலதெய்வம் திகழும். குலதெய்வத்தை மட்டும் வணங்கினால் போதாது. இறைவனடி சேர்ந்த தன் முன்னோர்களையும் வணங்க வேண்டும். மாதம் முழுவதும் தெய்வத்தை வணங்கினாலும் முன்னோர்களை வணங்க ஒரு நாளாவது வேண்டும் என்றுதான் நம் முன்னோர்கள் அமாவாசை நாளை அதற்காக ஒதுக்கினர்.

மாதாமாதம் வரும் அமாவாசையில் பித்ருக்களை நினைத்துத் தர்ப்பணம் கொடுப்பது படையல் இட்டு வணங்குவது மிகவும் சிறப்பானது. அவ்வாறு செய்ய இயலாதவர்கள் தவறாமல் ஆடி, புரட்டாசி, தை, மாசி ஆகிய அமாவாசைகளில் பித்ருவழிபாடு செய்வது அவசியம். இந்த நான்கு நாள்களிலும் செய்யும் பித்ரு வழிபாடு ஆண்டு முழுவதும் வழிபட்ட பலனைக் கொடுக்கும். அதிலும் குறிப்பாக ஆடி அமாவாசை மிகவும் சிறப்புடையது.

ஆடி அமாவாசையின் சிறப்புகள்

ஆடி மாதம் என்பது சூரிய பகவான், தட்சிணாயனம் எனப்படும் தன் தென் திசைப் பயணத்தைத் தொடங்கும் மாதம். இந்த மாதம் முழுவதுமே புண்ணிய மாதமாகக் கருதப்படும். இந்த மாதத்தில் திருமணம் போன்ற லௌகீக வாழ்க்கை தொடர்பான சடங்குகளைச் செய்வதில்லை. மாறாக, உலகத்துக்குப் பயன்தரும் விவசாயம், தெய்வ வழிபாடு, நோன்புகள், விரதங்கள், திருவிழாக்கள் ஆகியனவற்றை செய்யும் வழக்கம் நம் மரபில் உள்ளது.

ஆடிமாதத்தின் தொடக்கத்தில்தான் முன்னோர்கள், பித்ருலோகத்தில் இருந்து பூலோகம் வரப் புறப்படுகிறார்கள் என்கின்றன புராணங்கள். எனவே, ஆடி அமாவாசையில் செய்யும் பித்ரு வழிபாடு அவர்களின் பயணத்துக்கு வெளிச்சமும் தெம்பும் அளிப்பது. முன்னோர்கள் அவற்றைப் பெற்று மகிழ்ந்து நமக்கு மனமார ஆசி வழங்குவார்கள் என்பது நம்பிக்கை.

அருள்மழை பொழியும் ஆடி மாதம்... கடைப்பிடிக்க வேண்டிய விழாக்கள், விசேஷங்கள்!

ஆடி அமாவாசை... முன்னோர் வழிபாடு... வீட்டிலேயே செய்யலாமா? - எளிய வழிகாட்டல்

இந்த நாளில் நதி, குளம் அல்லது சமுத்திரம் போன்ற நீர் நிலைகளில் மூழ்கி நீராடிப் பித்ருக்களுக்குரிய தர்ப்பணம் செய்து பின் வீட்டுக்கு வந்து படையல் போட்டு வணங்குவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக யாரும் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சமூகப் பரவலைத் தடுக்க பொது இடத்தில் ஒன்றுகூடுவது கட்டாயமாகத் தடுக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசையையொட்டி மக்கள் கூடும் சதுரகிரி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், சேது சமுத்திரக் கரை போன்ற புகழ்பெற்ற இடங்களிலெல்லாம் மக்கள் வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். இதனால், வழக்கமாகச் செய்யும் சடங்குகளை அதே போன்று செய்ய முடியவில்லையே என்று பலரும் கவலைப்படுகின்றனர். ஆனால், அவ்வாறு கவலைப்பட வேண்டியதில்லை என்கிறார்கள் ஆன்றோர்கள்.

மேலும், நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருக்கிறதால் பல உயர்ந்த குணங்களைப் பெற்றவர்களாக மாறியிருப்பவர்கள். அவர்களின் குணங்கள் பற்றிச் சொல்லும் சாஸ்திரம் அவர்களை, கோபம் இல்லாதவர்கள், சண்டை போடாதவர்கள், உள்ளும் புறமும் பரிசுத்தமானவர்கள், மஹானுபாவர்கள், பிரம்ம விசாரம் செய்பவர்கள் என்கிறது தர்ம சாஸ்திரம். அப்படிப்பட்டவர்கள் சூழ்நிலைக் கைதிகளாக இருக்கும் நம் நிலையை நன்கு உணர்வார்கள். 

ஓராண்டில் பல புண்ணிய காலங்கள் வருகின்றன. வருடப்பிறப்பு, மாதப்பிறப்பு ஆகியன புண்ணிய காலங்களாகும். இந்தப் புண்ய காலங்களில் நீர் நிலைகளில் நீராடுவது சிறப்பு வாய்ந்தது என்கின்றன சாஸ்திரங்கள். அந்த நாளில் நீர் நிலைகள் அனைத்தும் புண்ணிய தீர்த்தங்களாக மாறுகின்றன. எனவேதான் நாம் அத்தகைய புண்ணிய தீர்த்தங்களை நாடிப்போகிறோம். தற்காலத்தில் அது இயலாதபோது அதுகுறித்துக் கவலைப் படாமல் வீட்டிலேயே பித்ரு பூஜை செய்யலாம்.

கங்கை
கங்கை

எந்தத் தீர்த்தமும் கங்கையாகும் இதைச் சொன்னால்...

எப்போதும் பூஜை மற்றும் சடங்குகளுக்குப் புண்ணிய நதிகளின் தீர்த்தமே விசேஷம். ஆனால், எப்போதும் எல்லா இடத்திலும் அவை வாய்ப்பதில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நமக்குக் கிடைக்கும் தண்ணீரையே புண்ணிய நதியாகப் பாவித்து புண்ணிய நதிகளை அதில் ஆவாஹனம் செய்து பயன்படுத்தலாம் என்கிறது பூஜா விதானம்.

எல்லா பூஜைகளுக்கு முன்பும் தீர்த்தப் பாத்திரத்தை அலங்கரித்து அட்சதை இட்டு அதை ஒரு கையால் மூடி பின்வரும் மந்திரத்தைச் சொல்வார்கள்.

`கங்கே ச யமுனா சைவ கோதாவரி சரஸ்வதி 

நர்மதா சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதம் குரும்’ 

இதே மந்திரத்தை நாம் குளிக்கும் முன்பாக, நாம் பயன்படுத்த இருக்கும் நீரைத் தொட்டுச் சொல்ல அந்தத் தீர்த்தமும் புண்ணிய தீர்த்தமாகும் என்பது நம்பிக்கை. மந்திரங்கள் சொல்ல முடியாதவர்கள், கண்களை மூடி, கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதா, சிந்து, காவேரி ஆகிய ஏழு நதிகளின் பெயர்களையும் உச்சரித்து, 'புண்ணிய நதி தேவதைகளே இந்த நதியில் உங்கள் புனிதம் நிறையட்டும்' என்று வேண்டிக்கொண்டு நீராடுங்கள்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம்
முன்னோர்களுக்கு தர்ப்பணம்

தானம் பிரதானம்

இதுபோன்ற முன்னோர் வழிபாட்டில் முக்கியமானது தானம் அளிப்பது. வீட்டிலேயே சடங்குகளைச் செய்துவிட்டாலும் தானம் அளிப்பதில்தான் முழுப்பலனும் கிடைக்கிறது. அமாவாசை போன்ற நாள்களில் செய்யும் தானம் பலமடங்கு நன்மைகளைப் பெற்றுத்தரும். எனவே, இந்த நாளில் வழிபாடு முடிந்ததும் வழக்கமாக தானம் செய்யும் பொருளையும் பணத்தையும் தனியாக எடுத்து வைத்து தேவையிருப்பவர்களுக்குத் தந்து உதவுங்கள். இதன்மூலம் முன்னோர்களின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும்.

அடுத்த கட்டுரைக்கு