Published:Updated:

ஆடிப் பெருக்கு குறித்த அற்புதத் தகவல்கள்: மணிமேகலை சொல்லும் பொன்னி நதியின் கதை தெரியுமா?

ஆடிப் பெருக்கு

ஆடிப் பெருக்கு: ஆற்றங்கரையில் தூய்மையான ஓர் இடத்தில் பசுஞ்சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்திருப்பார்கள். அவர் முன்னால், முளைப்பாலிகைத் தட்டுகள் வரிசையாக வைக்கப்படும்.

ஆடிப் பெருக்கு குறித்த அற்புதத் தகவல்கள்: மணிமேகலை சொல்லும் பொன்னி நதியின் கதை தெரியுமா?

ஆடிப் பெருக்கு: ஆற்றங்கரையில் தூய்மையான ஓர் இடத்தில் பசுஞ்சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்திருப்பார்கள். அவர் முன்னால், முளைப்பாலிகைத் தட்டுகள் வரிசையாக வைக்கப்படும்.

Published:Updated:
ஆடிப் பெருக்கு
பிள்ளையார் காகமாய் வந்து அகத்தியரின் கமண்டலத்தைக் கவிழ்க்க, காவிரி நதி உருவானது எனும் கதையை அறிவோம். அதேபோல், மணிமேகலை காப்பியம் சொல்லும் பொன்னி நதியின் கதை என்ன... ஆடிப்பெருக்கில் காவிரியை ஏன் கொண்டாடுகிறோம், அன்று நிகழும் அபூர்வ வழிபாடுகளின் தாத்பர்யங்கள் என்ன... விரிவாக விளக்குகிறது இந்தக் கட்டுரை!

ஆடி மாதத்தில் கொண்டாட்டங்கள் ஏன்?

ஆடிப் பெருக்கு விழா
ஆடிப் பெருக்கு விழா
படங்கள்: ம.அரவிந்த்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாக வகுத்திருக்கிறார்கள் நம் முன்னோர். ஆடி முதல் மார்கழி முடிய தட்சிணாயனம். இது மழைக் காலத்தின் தொடக்கம். தை முதல் ஆனி முடிய உத்தராயனம். இது கோடைக் காலத்தின் தொடக்கம்.

மழைக்காலத்தின் தொடக்கமான இந்த ஆடி மாதத்தில்தான் பூமாதேவி அவதரித்தாள் என்கின்றன புராணங்கள். அதேபோல் இந்த தட்சிணாயனக் காலம் தேவர்களுக்கு மாலைப் பொழுது.

அந்தி சாய்ந்தவுடன், கன்று தாயைத் தேடும். தாய்ப் பறவையைக் குஞ்சுகள் தேடும். அனைத்து ஜீவராசிகளும் அன்னையைத் தேடும். அப்படியே, தேவர்களின் மாலை நேரமான இந்த ஆடி மாதத்தில் அன்னையின் அருளை வேண்டி அம்மன் மாதமாக ஆடி மாதத்தைப் போற்றிக் கொண்டாடுகிறது மனித குலம். அதேபோல் ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிப் பதினெட்டு என்று மற்ற விழாக்களாலும் ஏற்றம் பெறுகிறது இந்த மாதம்.

ஆடிப் பெருக்கு
ஆடிப் பெருக்கு

அது ஏன் பதினெட்டு?

பதினெட்டு என்ற எண் ‘ஜய’த்தை அதாவது வெற்றியைக் குறிக்கும். மகாபாரதத்தில் 18 பர்வங்கள், பகவத்கீதையில் 18 அத்தியாயங்கள், சபரிமலையில் 18 படிகள் முதலானவை எல்லாம் இந்த அடிப்படையிலேயே அமைந்தன. இந்த முறையிலேயே, நீர் பெருக் கெடுத்து ஓடும் நதிக்கரைகளில் பதினெட்டுப் படிகளை அமைத்த நம் முன்னோர்கள், உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கும் காவிரி முதலான நதிகளுக்கு நீர்நிலைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாடினார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆடி - 18 வழிபாடுகள் ஏன், எதற்கு, எப்படி?

ஆடிப் பதினெட்டு விழாவில் பெண்களே அதிக அளவில் பங்கு கொள்வார்கள். விழாவுக்குப் பத்து நாட்கள் முன்னதாகவே, நவதானியங்களை விதைத்து முளைப்பாலிகை (முளைப்பாரி என்றும் சொல்வர்) வளர்க்கத் தொடங்குவார்கள். ஆடிப் பதினெட்டு தினத்தன்று பெண்கள் இந்த முளைப்பாலிகையைக் கையில் ஏந்தி, பிற்பகல் வேளையில் அணிவகுத்தபடி ஆற்றங்கரைக்குச் செல்வார்கள்.

வழியில் ஆங்காங்கே முக்கியமான இடங்களில் எல்லாம் முளைப்பாலிகையைத் தங்கள் தலையிலிருந்து இறக்கி வைத்து, பெண் கள் வட்டமாக நின்று கும்மியடித்து வழிபடுவார்கள். இப்படியே ஆற்றங்கரையைச் சென்றடைவார்கள்.

ஆடிப் பெருக்கு விழா
ஆடிப் பெருக்கு விழா

ஆற்றங்கரையில் தூய்மையான ஓர் இடத்தில் பசுஞ்சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்திருப்பார்கள். அவர் முன்னால், முளைப்பாலிகைத் தட்டுகள் வரிசையாக வைக்கப்படும். அதன் பிறகு, தண்ணீரில் ஊறவைத்த பச்சரிசி-வெல்லம் கலந்து பிள்ளையாருக்குப் படைத்து வணங்குவார்கள்.

அப்போது பழுத்த சுமங்கலி ஒருவர், அங்கு வந்திருக்கும் பெண்கள் எல்லோருக்கும் மஞ்சள் தடவிய நூல் கயிற்றைக் கொடுப்பார். அதைச் சிலர், கழுத்திலும் சிலர், கையிலும் கட்டிக் கொள்வார்கள். இதன் பிறகு பெண்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி நின்று கோலாட்டம், கும்மி என்று ஆடுவார்கள். தொடர்ந்து ஆற்றில் இறங்கி, தாங்கள் கொண்டுவந்த முளைபாளிகையை நீரில் விடுவார்கள்.

அப்போது, வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தாலான பனை ஓலை களைச் சிறிய வட்டமாகச் சுற்றிச் செய்யப்பட்ட காதோலையையும், சிறிய கறுப்பு மணிகளாலான கருகமணியையும் ஆற்றில் விடுவார்கள். ‘பொங்கிப் பெருக்கெடுத்து ஓடிவரும் காவிரி அன்னையின் வரவால் பயிர், பச்சைகளெல்லாம் முளைவிட்டுத் தழைக்கப் போகின்றன. இப்போது அவள் மசக்கையாக இருக்கிறாள்!’ என்ற ஐதீகத்தில்தான் இவ்வாறெல்லாம் செய்யப்படுகின்றன என்பது நம்பிக்கை.

பெண்கள் இப்படியென்றால், சிறுவர்கள் சப்பர வடிவில் சிறு ரதம் செய்து உற்சாகத்துடன் இழுத்து வந்து, அதில் சிறு அகல் விளக்கு ஏற்றி ஆற்றில் விடுவார்கள். சிலர், மங்கலப் பொருட்களுடன் புதுத் துண்டு அல்லது வேட்டியை வைத்துக் கொஞ்சம் சில்லறைக் காசுகளையும் சப்பரத்தில் வைப்பார்கள். அலங்கரிக்கப்பட்ட சப்பரம், ஆற்றின் போக்குக்கு ஏற்ப வளைந்தும் சுழன்றும் நெளிந்தும் ஆடி ஆடி வருவதைக் காணக் கண்கோடி வேண்டும்.

திருச்சி காவிரி ஆற்றில் ஆடிப் பெருக்கு விழா
திருச்சி காவிரி ஆற்றில் ஆடிப் பெருக்கு விழா
நிறைவாக... பிள்ளையாருக்குப் படைத்த வெல்லம் கலந்த பச்சரியை எல்லோருக்கும் விநியோகிப்பார்கள். மட்டுமன்றி, கையோடு தாங்கள் கொண்டு சென்ற தேங்காய் சாதம், புளியஞ்சாதம், தயிர்சாதம் முதலான பல வகையான சித்ரான்னங்களையும் படைத்து, எல்லோரும் சேர்ந்து ஆற்றங்கரையிலே அமர்ந்து சாப்பிட்டுவிட்டுத் திரும்புவார்கள்.

மணிமேகலை காப்பியம் சொல்லும் காவிரியின் கதை என்ன?

பதினெட்டாம் பெருக்கு அன்று மாங்கல்யம் பெருக்கிக் கட்டுவது முக்கியமான வைபவம். பெண்கள் தாலி பெருக்கி போடுவார்கள். இதன்மூலம் கணவரின் ஆயுள் அதிகமாகும் என்ற நம்பிக்கை, புது மணப்பெண்கள் ஆடிப்பெருக்கன்று புதிய மஞ்சள் கயிறை மாற்றிக்கொள்வார்கள். கன்னிப் பெண்கள் வழிபட்டால் சிறந்த கணவர் அமைவர் என்பது நம்பிக்கை.

நீர்நிலைகள் நதிதீரத்துக்குச் செல்ல இயலாதவர்கள், வீட்டிலேயே காவிரியம்மனுக்கு படையலிட்டு வழிபடும் வழக்கம் சில பகுதிகளில் உண்டு. அன்றைய தினம் காவிரியின் கதையைப் படிப்பதும் கேட்பதும் புண்ணியம் என்பார்கள் பெரியோர்கள்.

திருச்சி காவிரி ஆற்றில் ஆடிப் பெருக்கு விழா
திருச்சி காவிரி ஆற்றில் ஆடிப் பெருக்கு விழா

கவேரர் மகரிஷியின் தவத்தின் பலனாக அவருக்குக் கிடைத்த மகள் லோபமுத்திரை. பெண் உருவம் நதி, உருவம் இரண்டும் கொண்டவள் என்பது அவளின் சிறப்பு. சிவனருளால் அவள் அகத்தியரின் மனைவியானாள். அவளின் நதி அம்சம், அகத்தியர் கமண்டலத்தில் தேங்கியது. பின்னாளில் தேவர்களின் வேண்டுதலை ஏற்று விநாயகர் அகத்தியக் கமண்டலத்தைக் கவிழ்க்க, காவிரியாள் பொன்னி நதியாகப் பாய்ந்தாள் என்கிறது புராணம்.

இதையே மணிமேகலைக் காப்பியம் வேறுவிதமாகச் சொல்கிறது.

செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும்

கஞ்சவேட்கையிற் காந்தமன் வேண்ட

அமர முனிவன் அகத்தியன் தனாது

கரகம் கவிழ்த்த காவிரிப்பாவை

- என்று குறிப்பிடுகிறது மணிமேகலை.

ஒருகாலத்தில் சோழத்தை காந்தமன் என்ற மன்னன் ஆண்டான். அந்நாளில் சோழ மண்டலம் வான் மழையையே நம்பியிருந்ததாம். வானம் பார்த்து வாழும் நிலை சோழத்துக்குக் கூடாது என்று கருதிய காந்தமன், தன் நாடு எப்போதும் செழித்திருக்கும்படி ஜீவநதி ஒன்று வேண்டும் என்று அகத்தியரிடம் வேண்டினான். அகத்தியரும் மகிழ்வோடு தன் கரகத்தில் (கமண்டலம்) இருந்த நீரைக் கவிழ்த்து, கவிழ்ந்து வழிந்த நீரை `விரிந்துசெல்க’ என்று பணித்தார்; காவிரி நதியாள் தோன்றினாள் என்பது கதை.

ஆடிப் பெருக்கு
ஆடிப் பெருக்கு

காவிரிக்கு சீர் தரும் ரங்கநாதர்

ஆடியில் காவிரித்தாய் கருவுற்றிருப்பதாக ஐதீகம். எனவேதான் தனது தங்கையான காவிரியை காண ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சீர்வரிசை யுடன் வருவார். புடவை, திருமாங்கல்யம், வெற்றிலை, பாக்கு, பழங்கள் போன்றவற்றை எடுத்து வந்து காவிரிக்குக் கொடுப்பார். திருவரங்கம் அம்மா மண்டபத்தில் இந்த வைபவம் சீரும் சிறப்புமாக நடைபெறும்.

அற்புதமான இந்தத் திருநாளில் நாமும் பொன்னி நதியாம் காவிரியைப் போற்றி வழிபட்டு வரம் பெறுவோம்.