Published:Updated:

அகிலம் போற்றும் அழகர் வைபவம்... சித்திரைத் திருவிழா உற்சவ மகிமைகள்... நிகழ்ச்சி நிரல்! #Video

கள்ளழகர்
News
கள்ளழகர்

இது மதத் திருவிழா அல்ல இந்த மண்ணின் திருவிழா. மலையிலிருந்து அந்த அழகன் புறப்பட்டு மதுரை வரும் திருவிழா. இந்த மண்ணின் மக்களுக்கு அழகர் இறைவன் மட்டும் இல்லை... அவர்கள் இல்லத் தலைவனும்கூட.

லட்சக்கணக்கான மக்கள் கூட்டம். நடுவே குதிரை வாகனத்தில் இறைவன். நாற் திசைகளிலும் நிறைந்து ஒலிக்கும் ‘கோவிந்தா’ கோஷம். சூரியனின் வெப்பக் கதிர்களை விரட்டி ஓடச்செய்யும் நீர் பீய்ச்சல்கள். அதில் அந்த இறைவனும் நனைந்து மகிழ்வான். மகிழ்ச்சியும் மன நிறைவுமாக ஊர்மக்கள் அனைவரும் திரண்டு சுவாமியின்பின்னே நடந்தே பயணிக்கும் அபூர்வத் திருவிழா. மதுரை மண்ணிலிருந்து பிழைப்புக்காக உலகெங்கும் சென்றுவிட்ட மக்கள் இந்தத் திருவிழா நாள்களுக்கு மட்டும் எப்பாடு பட்டேனும் ஓடிவந்துவிடுவார்கள். அதன் காரணம் ஒருமுறையேனும் இந்தத் திருவிழாவில் கலந்துகொண்டுவிட்டவர்களுக்கு மிக எளிமையாய்ப் புரியும். ஆம், இது மதத் திருவிழா அல்ல இந்த மண்ணின் திருவிழா. அழகர் மலையிலிருந்து அந்த மலையின் தலைவன் அழகர் புறப்பட்டு மதுரை வரும் திருவிழா. அழகர் இறைவன் இல்லை... அவர்கள் இல்லத் தலைவன்.

அழகர் கோயில்
அழகர் கோயில்

அழகர்மலை... மதுரை மாநகரிலிருந்து 24 கி.மீ தொலைவில் உள்ளது. திருமாலிருஞ்சோலை, உத்யான சலம், சோலைமலை, மாலிருங்குன்றம், இருங்குன்றம், வனகிரி, விருஷபாத்ரி அல்லது இடபகிரி என்று பல்வேறு திருநாமங்கள் இந்த மலைக்கு. கிழக்கு மேற்காகப் பத்து மைல் நீளமும் 1000 அடி உயரமும் கொண்ட மலையிது என்கிறது தலவரலாறு. இந்தமலையிலிருந்து நாலாபக்கமும் மலைகள் பிரிந்துபோகின்றன. இந்த மலையடிவாரத்தில்தான் அமைந்துள்ளது அழகர் கோயில்.

அழகர், கள்ளழகர். தரிசிப்போரின் இதையத்தைக் கொள்ளைகொள்ளும் கள்ளழகர். இவர் ஆட்சி செய்யும் திருக்கோயில்தான் அழகர்கோயில். இந்தத் தலத்தில் மூலவருக்கு சுந்தரராஜன் என்று பெயர். மகாவிஷ்ணுவை பழம் இலக்கியங்கள் அழகர் என்றே குறிப்பிடுகின்றன. சுந்தர ராஜன் என்றால் அழகுடைய அரசன் என்று பெயர். பல பெருமாள்களை அழகர் என்றே குறிப்பிடும் வழக்கம் உண்டு. மதுரையில் கோயில்கொண்டருளும் பெருமாளுக்குக் கூடல் அழகர் என்ற பெயர் இருப்பதைக் காணலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்தத் தலத்தின் மகிமைகள் குறித்து வராக புராணம், பிரம்ம புராணம், வாமன புராணம், ஆக்நேய புராணம் ஆகியவை குறிப்பிடுகின்றன. இந்தப் புராணங்களில் காணப்படும் செய்திகளைத் தொகுத்துப் பிற்காலத்தில் விருஷபாத்ரி மஹாத்மியம் என்ற தலபுராணம் வியாச முனிவரின் சீடரான சூதன முனிவரால் நைமிசாரணயத்தில் எழுதப்பட்டது என்றால் இத்தலத்தின் பழைமையை யாரால் கணிக்க முடியும்...

இந்த மலை கம்பீரமான காளை போன்று நிற்பது என்பதையே விருஷபாத்ரி என்னும் சொல் குறிப்பிடுகிறது. ரிஷபம் என்றால் காளை என்று பொருள். இங்கு பாயும் நதி சிலம்பாறு. இதனை நூபுர கங்கை என்று குறிப்பிடுவர். பெருமாள் உலகளந்தபோது வான் நோக்கி உயர்ந்த அவரின் திருப்பாதங்களுக்கு பிரம்மன் அபிஷேகம் செய்தானாம். அப்போது அந்த அபிஷேகத் தீர்த்தம் விழுந்த இடத்திலிருந்து நூபுர கங்கை பொங்கியது என்கிறது தலபுராணம். இந்த நூபுர கங்கையில் நீராடினால் இந்தப் பிறவியில் வேண்டும் வரம் கிட்டும் என்றும் மறுபிறவியில் புண்ணிய பலன்கள் உண்டாகும் என்பதும் ஐதிகம்.

அழகர் கோயில்
அழகர் கோயில்

யமதர்மன் தன் சாபம் நீங்க தவம் இருந்த மலை இந்த மலை. யமனின் தவத்துக்கு மகிழ்ந்த பெருமாள் சுந்தர ராஜனாகக் காட்சிகொடுத்தருளினார். பின்பு யமன் கலியுகம்வரைக்கும் இங்கேயே கோயில்கொண்டு சகல ஜனங்களையும் காக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்க இங்கே தங்கி அருள் பாலிக்கிறார் பெருமாள். இங்கு பெருமாள் பஞ்ச ஆயுதங்களுடன் தரிசனம் தருவது மிகவும் சிறப்பு. அதிலும் பெருமாளின் சக்கரம் இங்கு பிரயோகச் சக்கரமாக அதாவது புறப்படத் தயாராக இருக்கும் சக்கரமாகத் திகழ்வது சிறப்பு.

திருமலை திருப்பதிக்கு நிகரானது இந்தத் திருக்கோயில். திருப்பதியைப் போலவே ஏழு மலைகள் சூழ அமைந்திருக்கும் அற்புதத்தலம் இது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கள்ளழகர் பெருமாளின் திருமேனி அபரஞ்சி என்னும் தேவலோகத் தங்கத்தால் ஆனது. அந்தத் தங்கம் மிகவும் உயர்ந்த மதிப்புடையதாகக் கருதப்படுகிறது. இதுபோன்று அபரஞ்சித் தங்கத்தால் ஆன விக்கிரகங்கள் உலகிலேயே இரண்டு இடங்களில்தான் உள்ளன.

இதுபோன்ற அழகர் மலை குறித்த அற்புதத் தகவல்களையும் நூபுர கங்கை தீர்த்த மகிமையையும் அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைக் காணுங்கள்.

இத்தகைய சிறப்புகள் மிக்க இந்த அழகர் கோயில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். கள்ளழகப் பெருமாள் மதுரைக்கு எழுந்தருளி வைகையாற்றில் இறங்குவது வழக்கம். ஆனால், கொரோனா சூழல் காரணமாகக் கடந்த ஆண்டு அங்கு வைபவம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு திருவிழா நடைபெறும் என்று பலரும் ஆவலோடு காத்திருக்கும்போது இந்த ஆண்டும் அழகர் வைபவம் வழக்கம்போல் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக ஆலய வளாகத்துக்குள்ளேயே அனைத்து உற்சவங்களும் நடைபெற்று முடியும் என்றும் இதில் பக்தர்கள் யாருக்கும் அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி நிரல்

நாளை 23.4.21 அன்று உற்சவம் தொடங்குகிறது.

4-ம் நாள் (26.4.21) உற்சவம் எதிர்சேவையாகவும்,

5-ம் நாள் (27.4.21) உற்சவம் ஆண்டாள் மாலை சாற்றுதலாகவும்

7-ம் நாள் (29.4.21) கருட சேவை மற்றும் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் வழங்கும் நிகழ்ச்சியாகவும் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வுகள் அனைத்துமே கோயில் வளாகத்துக்குள்ளாகவே நடைபெறும்.

26.4.21 முதல் 30.4.21வரை கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதியில்லை. மாறாக இந்த நாள்களில் திருக்கோயில் மண்டபத்தில் கள்ளழகர் காலை 10 மணி முதல் 4 மணிவரை பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்கள்.