Published:Updated:

காரைக்கால் மாங்கனித் திருவிழா... பக்தி வைராக்கியமும், பேயுரு வேண்டலும்..!

காரைக்கால்
News
காரைக்கால்

ஆண்டுதோறும் காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கோயில் வளாகத்துக்குள்ளேயே திருவிழா நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்கள். மாங்கனி என்பது ஓர் அடையாளம் மட்டுமே. இறைவனின் அருள்கனியைப் பெற நாம் தூய அன்பும் நல்ல உள்ளமும் கொண்டிருந்தால் மட்டுமே போதுமானது.

சிவாலயம்தோறும் நாயன்மார்கள் அறுபத்துமூவரையும் தரிசனம் செய்திருக்கலாம். அறுபத்து மூவரில் 62 பேர் நின்றகோலத்தில் கைகூப்பியபடி காட்சிகொடுக்க ஒருவர் மட்டும் அமர்ந்த கோலத்தில் காட்சியருள்வார். அவர்தான் புறசமயங்களின் செல்வாக்கால் ஆயிரம் ஆண்டுகாலம் தன்புகழ் மங்கிக்கிடந்த சைவ சமயத்தை மீட்டெடுத்து மறுமலர்ச்சியடையச் செய்தவர். ஊர்தோறும் சென்று சிவபெருமானைப்பாடி ஆயிரக் கணக்கானோரை சைவம் நோக்கித் திருப்பியவர். அவருக்குப் பின் நூறு ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய தேவார மூவரும் பிற நாயன்மார்களும் சமயத் தொண்டு செய்வதற்கும் பண்ணிசையால் இறைவனைப் பாடிப் போற்றுவதற்கும் முன்மாதிரியாக அமைந்தவர். இவை அனைத்துக்கும் மேலாக, `இவள் நம்மைப் பேணும் அம்மை காண்’ என்று பிறப்பும் இறப்பும் இல்லா அந்தப் பெம்மானே போற்றும்படி பக்தியினால் தன்னை உயர்த்திக் கொண்டவர். இத்தனை சிறப்புகளையும் கொண்ட அந்த முதல் நாயன்மார் காரைக்கால் அம்மையார்.

காரைக்கால் மாங்கனித் திருவிழா
காரைக்கால் மாங்கனித் திருவிழா

பக்தி வைராக்கியமும் திருவிளையாடலும்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

காரைக்கால் அம்மையாரின் காலம் சமணமும் பௌத்தமும் செல்வாக்குப் பெற்று நிரம்பியிருந்த ஐந்தாம் நூற்றாண்டு. ஒரு வணிகக் குடும்பத்தில் செல்வந்தர் ஒருவரின் மகளாக அவதரித்தார் அம்மையார். அம்மையாருக்குப் பெற்றோர் இட்ட பெயர் புனிதவதி. அந்தக் காலத்தில் வணிகர்கள் பலரும் சமண சமயம் சார்ந்தவர்களாகவேயிருந்தார்கள். ஆனால், புனிதவதி வளரும் காலத்திலேயே சிவன்மேல் பக்திகொண்டவளாக இருந்தார். அதை அவரே தன் அற்புதத் திருவந்தாதியில், `பிறந்து மொழிபேசிய பின்னெல்லாம் காதல் சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன்’ என்கிறார். அதாவது, அவர் பிறந்து பேசத்தொடங்கிய நாள்முதலே சிவபெருமானின் திருவடி மகிமையையே பேசினேன் என்பது இதன் பொருள். இத்தகைய பண்புள்ள பெண்மகளை பரமதத்தன் என்பவருக்குத் திருமணம் செய்துகொடுத்தார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பக்தி மட்டும் கொண்டவர்களுக்கு இறைவன் அருள் செய்கிறார். ஆனால், பக்தி வைராக்கியம் கொண்டவர்களைத் தன் சேவைக்காகத் தேர்ந்தெடுக்கிறார். புனிதவதி பக்திவைராக்கியம் கொண்டவர். இவரே மீண்டும் சைவத்தைப் புத்துணர்வு கொள்ளச் செய்ய ஏற்றவர் என்பதைத் தீர்மானம் செய்தார் இறைவன். எனவே, ஒரு திருவிளையாடல் மூலம் அவரை ஆட்கொள்ள முடிவு செய்தார்.

பரமதத்தன் ஒரு வணிகன். பொருள்சார் வணிகம் அறிந்த அளவுக்கு அருள்சார் ஆன்மிகம் அறிந்தவன் இல்லை. எடுத்துச் சொன்னாலும் புரிந்துகொள்ள முடிந்தவன் இல்லை. ஆனால், புனிதவதியோ இல்லறத்திலும் தன் பக்தி நெறியில் கொஞ்சமும் குறைத்தாள் இல்லை. ஒரு நாள் பரமதத்தன் இரு மாங்கனிகளைக் கொண்டுவந்து புனிதவதியிடம் கொடுத்துவிட்டு, கடைத் தெருவரை போய்வருகிறேன் என்று சொல்லிப் போனான்.

மாங்கனித் திருவிழா
மாங்கனித் திருவிழா

அப்போது அவள் இல்லம் தேடி இறைவன் சிவனடியார் வேடம் பூண்டு பிட்சை கேட்டு வந்தார். வீடுதேடிவரும் அடியவர்க்கு உணவிடலாம். ஆனால், கணவன் அருகில் இல்லாதபோது மனைவி மட்டும் விருந்தினரை உபசரிப்பது அக்காலத்தில் வழக்கமில்லை. ஆனாலும், வந்த சிவனடியாரை வெறுங்கையோடு அனுப்ப புனிதவதிக்கு மனமில்லை. பரமதத்தன் தந்த இரண்டு மாம்பழங்கள் அவள் கைகளில் இருந்தன. இருவர் இருக்கும் வீட்டில் இரு பழங்கள் என்றால் அதில் ஒன்று தனக்கானது என்று நம்பினாள். தன் பங்கை சிவனடியாருக்கு பிட்சையாக இட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாம்பழமும் திருவிளையாடலும்

சிறிது நேரம் கழித்து வந்த பரமதத்தனுக்கு புனிதவதி பழத்தை சாப்பிடக் கொடுத்தாள். சிவன் கைப்பட்ட பழம் என்பதால் இதுவரை அவன் சுவைத்திராத சுவையில் அந்தப் பழம் இருந்தது. உடனே, மற்றொரு பழத்தையும் கொண்டுவருமாறு கூறினான் பரமதத்தன். புனிதவதி ஒருகணம் திகைத்தார். கணவன் கேட்டு இல்லை என்று சொல்லும் நிலை வந்ததே என்று ஈசனிடம் மனமுருக வேண்டினாள். அப்போது ஈசன் அவள் கரங்களில் ஒரு மாம்பழத்தைத் தோன்றச் செய்தார். அவள் அதை மகிழ்வோடு கொண்டு சென்று தன் கணவனுக்குப் படைத்தாள். அவனும் அதைச் சுவைத்தான். இந்தப் பழம் முன் சுவைத்த பழத்தைவிட மிகவும் சுவையாக இருக்கக் கண்டு அதைப் புனிதவதியிடம் சொல்லி வியந்தான்.

காரைக்கால் அம்மையார்
காரைக்கால் அம்மையார்

புனிதவதியோ ஈசனின் நிகழ்த்திய அற்புதத்தில் அகமகிழ்ந்திருந்ததால் பரமதத்தனையும் சிவநெறியில் நடத்தலாம் என்று தீர்மானித்து நடந்தவற்றைச் சொன்னாள். மனைவியை மதிக்கிறவர்கள்தான் அவர்களை நம்பவும் செய்வார்கள். பரமதத்தனோ அற்புதத்தைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு பக்குவம் கொண்டவனில்லை. புனிதவதியைப் பழித்துப் பேசி, `அப்படியானால் மற்றுமொரு மாம்பழம் பெற்றுவா’ என்றான்.

புனிதவதி மீண்டும் ஈசனை வேண்டிக்கொள்ள மற்றுமொரு பழத்தைத் தந்தருளினார் ஈசன். இந்த அற்புதத்தைக் கண்ணாரக் கண்ட பரமதத்தன் பக்தியில் சிலிர்ப்பதற்கு பதிலாக அச்சத்தில் நடுங்கினான். அவனுக்கு அற்புதத்துக்கும் மாயத்துக்கும் வித்தியாசம் தெரியவில்லை. புனிதவதியை மாயங்கள் செய்யும் ஓர் அணங்கு என்று சொல்லிப் பிரிந்து சென்றான்.

புனிதவதி தன் நிலைமையை எடுத்துச் சொல்லியும் அவன் கேட்பதாக இல்லை. அவளைவிட்டுப் பிரிந்து வேறு ஊர் சென்று மறுமணமும் புரிந்துகொண்டான். புனிதவதி இந்த உலக உயிர்களின் தன்மையைப் புரிந்துகொண்டாள். அவர்கள் எப்படி ஈசனை அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்று எண்ணி வருந்தினாள். கடைத்தேறும் வழியின்றி இந்த மண்ணுலக வாழ்வில் சிக்கி உழலும் அவர்களை மீட்க சிவபக்தியைப் பரப்ப வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார். தன்னை முழுமையுமாக சிவனுக்காக ஒப்புவித்தார்.

ஏன் பேயுரு கேட்டார் அம்மை?

சிவபக்தியைப் பரப்புவதையும் சிவனின் புகழைப் பாடுவதையுமே தன் வாழ்வாகக் கொண்டவர் புனிதவதி. அன்னையின் தோற்றம் குறித்துக் கூறும் சேக்கிழார், `மடநடை மயில் அன்னாரை...’ என்றும், `தளிர் அடிமென் நகை மயிலே’ என்றும் போற்றுகிறார். அன்னையின் தோற்றம் மயிலைப் போன்ற அழகை உடையது என்பது இதன் பொருள்.

புற அழகு தன் பக்திக்கு ஊறுவிளைவிப்பதாகும் என்று எண்ணிய அன்னை தன் இளமையான உடல் நீங்கிப் பேயுரு வேண்டிப் பெற்றார். காரணம், இந்த உலகம் சொல்லப்படுவது எது என்று பாராமல் சொல்வது யார் என்று பார்க்கும் என்பதை அறிந்திருந்தார். மேலும் தன் இளமை மற்றவர்களுக்கு பக்தியில் இடறலை உருவாக்கிவிடக் கூடாது என்றும் எண்ணினார். பேயுருவோடு அவர் சிவதலங்கள் அனைத்துக்கும் சென்று சிவனைப் பாடினார்.

காரைக்கால் அம்மையார்
காரைக்கால் அம்மையார்

தன் அன்பினால் ஈசனைப் பாடிப் போற்றிக் கயிலாயம் அடைந்தார் என்கின்றன புராணங்கள். கயிலாயம் அடைந்த அன்னை, சிவவுருவான கயிலையின்மேல் கால் பதித்துநடக்க மறுத்துத் தன் தலையாலே மலையேறினார். இதைக் கண்டு மனம் கனிந்த ஈசன் உமையம்மையிடம், “இவள் நம்மைப் பேணும் அம்மை” என்றும் “பெருமைசேர் இவ்வடிவம் வேண்டிப்பெற்றனள்” என்றும் போற்றிக் கூறுகிறார். உலகம் அஞ்சும் பேயுருவை ஈசன் ‘பெருமைசேர் இவ்வடிவம்’ போற்றுகிறார்.

பிறவாமை வேண்டும்...

ஈசன் அன்னையிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்டபோது,

‘பிறவாமை வேண்டும் மீண்டும் / பிறப்புண்டேல் உன்னை என்றும் / மறவாமை வேண்டும் இன்னும் / வேண்டும் நான்மகிழ்ந்து பாடி / அறவாநீ ஆடும்போது அடியின்கீழ் இருக்க’

என்கிறது பெரியபுராணம். அம்மையின் வேண்டுகோளைக் கேட்டதற்கிணங்க திருவாலங்காட்டில் நடனத் திருக்காட்சியருளுவதாகச் சொல்லி அங்கு செல்லப் பணித்தார் ஈசன். அங்கே சென்று அன்னையும் திருநடனம் கண்டு முக்தியடைந்தார்.

மாங்கனித் திருவிழா

காரைக்கால் அன்னை வாழ்ந்த தலம் என்பதால் இங்கு அன்னைக்கு மாங்கனி அருளிய திருவிளையாடலை ஆண்டுதோறும் நிகழ்த்துகிறார்கள். நான்கு நாள்கள் நடைபெறும் அந்தத் திருவிழாவில் அம்மையின் திருமணம், பரமதத்தன் மாம்பழம் கொண்டுதரும் காட்சி, சிவனார் பிட்சாடனராக வந்து மாம்பழம் பெறும் காட்சி, அன்னையின் ஐக்கியக் காட்சி ஆகியன நிகழ்த்தப்படும். இதில் மாங்கனி பெறவரும் ஈசனுக்கு பக்தர்கள் மாம்பழங்களைக் காணிக்கையாக்குவதே மாங்கனித் திருவிழா.

அந்த நாளில் மாம்பழங்களை பக்தர்கள் தங்கள் வீடுகளிலிருந்து வீசியெறிவர். அதைப் பிற பக்தர்கள் பிடித்துக்கொள்வர். அவ்வாறு பழங்களைப் பிடித்துக்கொண்டவர்களுக்கு செல்வங்கள் யாவும் சேரும் என்பது ஐதிகம். எனவே, இந்தத் திருவிழா மிகவும் சீரும் சிறப்புமாகக் காரைக்காலில் நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு அத்தகைய கொண்டாட்டங்களுக்கு இடமில்லை. கோயில் வளாகத்துக்குள்ளேயே இந்த மாங்கனித் திருவிழா நடத்தப்படுகிறது.

திருக்கல்யாணம்
திருக்கல்யாணம்

மாங்கனி என்பது ஓர் அடையாளம் மட்டுமே. இறைவனின் அருள்கனியைப் பெறுவதற்கு நாம் தூய அன்பும் நல்ல உள்ளமும் கொண்டிருந்தால் மட்டுமே போதுமானது. நாளை (4.7.2020) கோயில் வளாகத்துக்குள் மாங்கனித் திருவிழா நடைபெறும். அந்த வேளையில் நாம் நம் இல்லங்களிலிருந்தே சிவனை வழிபட்டு அம்மை இயற்றிய அற்புதத் திருவந்தாதி முதலிய நூல்களைப் பாராயணம் செய்யது சிவனருள் பெறுவோம்.