Published:Updated:

மாண்ட குழந்தை மீண்ட அற்புதத்தை விளக்கும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் குருபூஜை! #Video

ஒரு வீட்டில் மங்கல ஒலி கேட்கிறது. காரணம் விசாரிக்கிறார். அந்த வீட்டில் வாழும் அந்தணரின் 7 வயது மகனுக்கு அன்று உபநயனம் நடைபெறுகிறது என்றார்கள். அந்த வீட்டுக்கு நேர் எதிரே ஓர் அந்தணர் வீடு. அவர்கள் வீட்டில் அனைவரும் அழுதுகொண்டிருக்கிறார்கள்.

இந்த உலகத்தின் இயல்பு பற்றிப் புறநானூற்றுப் பாடல் ஒன்று பின்வருமாறு குறிப்பிடும். 

‘ஓரில் நெய்தல் கறங்க, ஓர்இல்

ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்...’ (பு.194) 

ஒருவீட்டில் மரணம் நிகழ்ந்து சாப்பறை ஒலிக்கிறது. மற்றொரு வீட்டில் மணவிழாவுக்கான கால்கோள் நிகழ்வில் எழுப்பப்படும் முழவின் ஓசை கேட்கிறது என்பது இதன் பொருள். மகிழ்ச்சியும் துக்கமும் கலந்தது இந்த உலகம் என்பதே பெரும்பாலானவர்கள் சொல்லும் தத்துவம். ஆனால், இறைவனை நம்பி முழுமையாகத் தம்மை ஒப்புவித்துக் கொள்பவர்கள் இந்த இரட்டைத் தன்மையிலிருந்து தம்மை விலக்கிக் காத்துக்கொள்கிறார்கள்.

சுந்தர மூர்த்தி சுவாமிகள்
சுந்தர மூர்த்தி சுவாமிகள்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஈசனின் திருவடிவ பிம்பத்திலிருந்து தோன்றியவர். ஈசனைப்பாடிப் பேரானந்தத்தை அடைய இந்தப் பூவுலகில் தோன்றியவர். அவர் அவிநாசி என்னும் திருத்தலத்தை அடைகிறார். விநாசி என்றால் அழிதல் என்றும் அவிநாசி என்றால் அழிவில்லாதது என்றும் பொருள். அழிவில்லாத ஆதியும் அந்தமுமான இறைவன் எழுந்தருளியிருக்கும் தலம் அவிநாசி.

சுவாமிகள் அந்த ஊரின் தெரு ஒன்றின் வழியாகச் செல்கிறார். அப்போது ஒரு வீட்டில் மங்கல ஒலி கேட்கிறது. காரணம் விசாரிக்கிறார். அந்த வீட்டில் வாழும் அந்தணரின் மகனுக்கு 7 வயது. அவனுக்கு அன்று உபநயனம் நடைபெறுகிறது என்றார்கள். அந்த வீட்டுக்கு நேர் எதிரே ஓர் அந்தணர் வீடு. அவர்கள் வீட்டில் அனைவரும் அழுதுகொண்டிருக்கிறார்கள். காரணம் கேட்கிறார். அவர்களின் மகன் மூன்றாண்டுகளுக்கு முன்பு அந்த ஊர் குளத்தில் இருந்த முதலையால் தின்னப்பட்டு உயிர் இழந்துவிட்டான் என்றார்கள்.

சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை நன்றி : மாதாஜி சிவப்ரியா பாடல் : சோலார் சாய்

Posted by Sakthi Vikatan on Monday, July 27, 2020

‘அவன் இருந்தால் அவனுக்கும் தற்போது 7 வயதுதான் இருக்கும். அவனும் உபநயனம் காண்பானே’ என்று நினைத்து அவன் பெற்றோர் அழுது கொண்டிருந்தனர்.  

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த மரணம், அதனால் ஏற்பட்ட துக்கம் இன்னும் மாறவில்லை. பிள்ளையைப் பறிகொடுத்த யாருக்குத்தான் அது மாறும்... இந்த மூன்றாண்டுகளில் அந்தக் குளம் வறண்டே போய்விட்டது. வறண்ட குளத்தில் முதலை எப்படி இருக்கும்? எல்லாம் மாறியிருக்கும் சூழல். ஆனால், மனம் மட்டும் துக்கத்திலேயே நிலைத்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவுளம் கொண்டார். இறைவனின் திருவடியைப் பற்றிக்கொண்டால் தவிர துக்கத்தை அறுக்க வழியில்லை என்பதை இந்த உலகுக்குக் காட்ட விரும்பினார். 

இறைவனின் திருவடி நிழல், வெம்மையைக் குளுமையாக மாற்றும். சாம்பலை உடலாகச் செய்யும். உடலில் ஏறிய விடத்தை இறக்கும். இவற்றை எல்லாம் இந்த உலகம் ஏற்கெனவே கண்டிருக்கிறது. ஆனால், இங்கோ என்றோ நடந்த நிகழ்வால் ஏற்பட்ட துக்கத்தை மாற்ற வேண்டிய சூழ்நிலை.  

சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஈசனை நினைத்துத் துதித்தார்.

சுந்தரர்
சுந்தரர்

`உரைப்பார் உரைஉகந்துள்க வல்லார் தங்கள் உச்சியாய்

அரைக்கா டரவா ஆதியும்அந்தமும் ஆயினாய்

புரைக்காடு சோலைப் புக்கொளியூர்அவி னாசியே

கரைக்கால்முதலையைப் பிள்ளைதரச்சொல்லு காலனையே’ 

என்று பதிகம் பாடுகிறார். இறைவன் இந்த முறை உலக இயல்புகளை எல்லாம் உடைத்துப் பெருங்கருணை புரிகிறார். குளம் நீரால் நிரம்புகிறது. அந்த முதலையும் தோன்றுகிறது. தன் வயிற்றிலிருந்து குழந்தையை வெளியே உமிழ்ந்துவிட்டு மறைகிறது. இப்போது அந்தக் குழந்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உயிர்விட்ட குழந்தை இல்லை. `7 வயதுக்குரிய பாலகனாக அதற்கான வளர்ச்சியோடு வெளிப்பட்டான். பெற்றோர் கண்ணீர் மல்க சுந்தரரின் காலடி பணிந்தனர். அந்தச் சிறுவனுக்கும் அன்று உபநயனம் நடைபெற்றது. ஊரும் உலகும் காண இந்த அற்புதம் அவிநாசியில் நிகழ்ந்தது.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வாழ்வில் பல அற்புதங்கள் நடந்தன. ஈசன் அவரின் தோழனாகிச் செய்த விளையாட்டுகள் அநேகம். ஆனாலும், இந்தத் திருவிளையாடல் மானிடர்களின் வாழ்க்கைக்கு முக்கியமான ஒரு செய்தியைச் சொல்கிறது. ‘இன்னாது அம்ம, இவ் வுலகம்’ என்பதுதான் புறநானூற்றுப் புலவனின் வாக்கு. இந்த உலகம் துன்பங்களால் நிறைந்து ‘இன்னாதது’ என்பது அதன் பொருள். ஆனால், அடுத்த வரியே அவன், ‘இனிய காண்க, இதன் இயல்புணர்ந்தோரே’ என்கிறார். இந்த உலகத்தின் இயல்பை உணர்ந்துகொண்டவர்கள் அதில் இனியனவற்றைக் காண்பார்கள் என்கிறார்.

சிவபெருமான்
சிவபெருமான்
`நாக சதுர்த்தி, கருட பஞ்சமி!’ - ஆடி மாதம் அவசியம் அனுஷ்டிக்க வேண்டிய விரதங்கள்!

இந்த உலகம் அழியக்கூடியது. அதன் இன்பங்களும் அழியக்கூடியனவே. ஆனால், இந்த உண்மையை உணர்ந்து அழிவில்லாத ஆனந்த மயமான இறைவனின் திருவடியைப் பற்றிக்கொண்டவர்கள், இந்த உலகிலேயே தங்கள் துக்கங்களைத் தொலைத்து எப்போதும் இன்பமயமான வாழ்வைப் பெறுவார்கள் என்பதையே சுந்தரமூர்த்தி சுவாமிகள் நிகழ்த்திய இந்த அற்புதம் விளக்குகிறது.

நாளை ஆடி சுவாதி. ஆடி சுவாதி அன்றுதான் சுவாமிகள் கயிலாயம் சென்றார். அந்த நாளையே சுவாமிகளின் குருபூஜை தினமாகக் கொண்டாடுகிறோம். இந்த நாளில் சுந்தர மூர்த்தி சுவாமிகள் அருளிய பதிகங்களைப் பாடி, மனமார சிவபெருமானை வழிபட்டால் சகல துக்கங்களிலிருந்தும் அவர் நம்மை விலக்கிக் காப்பார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு