Published:Updated:

யுகாதியை வீட்டுக்குள் கொண்டாட வேண்டுகோள்!

யுகாதி
யுகாதி

சந்திரன் மேஷ ராசியில் அடியெடுத்து வைக்கும் தினத்தையே தங்களின் வருடப் பிறப்பாகக் கொள்கிறார்கள் தெலுங்கு மக்கள். தெலுங்கு மக்கள் மட்டுமன்றி, கன்னட, மகாராஷ்ட்ர, குஜராத்தி மக்களும் இந்தத் தினத்தையே தங்களின் வருடப் பிறப்பாகக் கொள்கிறார்கள்.

யுகாதி என்பதற்கு யுகத்தின் தொடக்கம் என்று பெயர். யுக்மம் என்னும் வட சொல்லிலிருந்து யுகம் என்னும் சொல் பிறக்கிறது. சதுர்யுகத்தில் ஒரு யுகம் முடிந்து மறுயுகம் பிறப்பதைக் குறிக்கும் சொல் யுகாதி (யுகத்தின் ஆதி). பழையவை கழிந்து புதியன புக வேண்டும் என்ற பொருளில் தெலுங்கு மக்கள் தங்களின் வருடப் பிறப்பை யுகாதி என்றே அழைக்கின்றனர்.

யுகாதி
யுகாதி

இந்தியாவில் முக்கியமான இரண்டு நாள்காட்டிகள் உள்ளன. ஒன்று சந்திரனை அடிப்படையாகக் கொண்டது. மற்றொன்று சூரியனை அடிப்படையாகக் கொண்டது. சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே தமிழ் வருடப் பிறப்பு. அதையே நாம் சித்திரை 1-ம் தேதியில் கொண்டாடுகிறோம். சந்திரன் மேஷ ராசியில் அடியெடுத்து வைக்கும் தினத்தைத் தங்களின் வருடப் பிறப்பாகக் கொள்கிறார்கள் தெலுங்கு மக்கள். தெலுங்கு மக்கள் மட்டுமன்றி, கன்னட, மகாராஷ்ட்ர, குஜராத்தி மக்களும் இந்த நாளையே தங்களின் வருடப் பிறப்பாகக் கொள்கிறார்கள்.

பொதுவாக, இந்தக் காலம் குளிர்காலம் முடிந்து இளவெயில்காலமான வசந்த காலத்தின் தொடக்கமாக இருக்கும். பருவநிலை மாற்றத்தைக் கொண்டாடும் விழாவாகவும் யுகாதி அமைகிறது. பொதுவாக யுகாதி அன்று திருப்பதியில் சேவைகள் களைகட்டும். ஏராளமான மக்கள் தரிசனம் செய்யக் குவிவார்கள். திருப்பதியே அலங்காரங்களில் ஜொலிக்கும். தெலுங்கு மக்கள், உலகில் எங்கிருந்தாலும் அன்றைய நாளில் அவர்கள் வீடுகளில் கொண்டாட்டம் களைகட்டும். காலையிலேயே எண்ணெய் வைத்து நீராடி புத்தாடை உடுத்தி வேப்பிலைப் பச்சடி முதல் போளிவரை பல்வேறு பலகாரங்கள் செய்து சுவாமிக்குப் படைத்து பெரியவர்களின் ஆசி பெற்று சிறப்பாகக் கொண்டாடுவார்கள். தவறாது ஆலய வழிபாடு செய்துகொண்டாடுவார்கள்.

யுகாதி
யுகாதி

சாதி மத பேதமின்றிக் கொண்டாடும் யுகாதி

ஆந்திர மாநிலம் கடப்பா என்னும் ஊரில் இருக்கும் தேவுனிகடப்பா லட்சுமி வேங்கடேசப் பெருமாள் கோயிலில் யுகாதிப் பெருவிழா களைகட்டும். காரணம் இந்த நாளில் இந்தப் பகுதியில் இருக்கும் இஸ்லாமியப் பெருமக்கள் இந்த ஆலயத்துக்கு வந்து வழிபடுவார்கள். திருப்பதியிலிருந்து 120 கி. மீ தொலைவில் இருக்கும் இந்தக் கோயிலில் அருள் பாலிக்கும் வேங்கடேசப் பெருமாள், கி.பி 1311- ம் ஆண்டில் இந்தியா மீது படையெடுத்து வந்த மாலிக்காபூரின் மகள் பிபி நான்சரம்மாவைத் திருமணம் செய்துகொண்டதாகத் தலபுராணம் சொல்கிறது. இதனால், இந்தப் பகுதியில் வாழும் இஸ்லாமிய மக்கள் வேங்கடேசப் பெருமாளைத் தங்களின் மருமகனாகவே கருதுகிறார்கள். அதனாலேயே யுகாதிப் பெருநாளில் இந்த ஆலயத்துக்கு வந்து வழிபடுகிறார்கள். யுகாதி வழிபாடு இவர்கள் வந்தபின் இவர்களின் முன்னிலையிலேயே தொடங்கப்பட வேண்டும் என்பது இங்கு ஐதிகமாகக் கருதப்படுகிறது. இதற்காக மக்கள் அன்றைய தினத்தில் காலை 5 மணிக்கே ஆலயம் வந்து வழிபாடுகளில் கலந்துகொள்கிறார்கள்.

இவ்வாறு சாதிமத பேதமின்றிக் கொண்டாடும் தெலுங்குப் புத்தாண்டு நாளை வருகிறது. ஆனால் அந்தக் கொண்டாட்ட மனநிலை உலகம் முழுவதும் தற்போது இல்லை. காரணம், கொரோனா வைரஸ். அனைத்து ஆலயங்களும் தற்போது மூடப்பட்டுள்ளன. அனைவரும் வீட்டிற்குள்ளாகவே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கொண்டாட்டங்கள் எல்லாம் தள்ளி தள்ளிவைக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் அனைவரும் வீட்டிலேயே மிகவும் எளிமையாக இந்தப் புத்தாண்டைத் தங்கள் இல்லத்தில் வரவேற்கத் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.

மலர்
மலர்

தெலுங்கு மக்கள் இந்த நாளில் முதன்முதலில் வேப்பிலைப் பச்சடியையே முதலில் உண்கிறார்கள். வாழ்க்கையென்றால் இன்பம், துன்பம், ஏமாற்றம், தோல்வி, வெறுமை, விரக்தி எல்லாமே சேர்ந்ததுதான் என்பதை உணர்ந்த மக்கள், இந்த யுகாதி நாளில் இனிப்பு, காரம், உப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு என அறுசுவைகளையும் வேப்பம்பூ, வெல்லம், உப்பு, புளி, மிளகாய், மாவடு போன்றவற்றைச் சேர்த்து இந்தப் பச்சடியைச் செய்கிறார்கள்.

நம் வாழ்வில் மோசமான கசப்பான காலத்தில் இருக்கிறோம். அதிலிருந்து மீண்டும் வாழ்வில் இனிப்பைச் சுவைக்கும் காலம் நமக்காகக் காத்திருகிறது என்பதன் அடையாளமான பச்சடியைச் சுவைக்கும்போது உணர்வோம். இந்த நாளில் இறைவனின் கருணையை வேண்டிப் பிரார்த்திப்போம்.

ஸ்ரீவாரு வேங்கடாசலபதி
ஸ்ரீவாரு வேங்கடாசலபதி

கொரோனோ வேகமாகப் பரவிவரும் இந்தச் சூழ்நிலையில் அரசின் வேண்டுகோளுக்கு செவிகொடுத்து நம் வீட்டில் இருந்தபடியே யுகாதியை வரவேற்று வரும் புத்தாண்டு வளமான வாழ்வை நமக்கு வழங்கும் நம்பிக்கையோடு காத்திருப்போம். நம்பிக்கை... அதுதானே எல்லாம்.

அடுத்த கட்டுரைக்கு