Published:Updated:

வரங்கள் அருளும் வரலட்சுமி நோன்பு... ஒரு வழிகாட்டல்!

வரலட்சுமி நோன்பு
வரலட்சுமி நோன்பு

அஷ்ட லட்சுமிகளும் ஒரே ரூபம்கொண்டு இல்லத்தில் எழுந்தருளும் 'வரலட்சுமி நோன்பு' மிகவும் முக்கியமானது. ஆடிமாதத்தின் இறுதியில் அல்லது ஆவணி மாதத்தின் தொடக்கத்தில், பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையன்று வரலட்சுமி விரதம் மேற்கொள்ளப்படும்.

ஆடிமாதம் வந்தாலே, வீடுகளில் கடைப்பிடிக்கவேண்டிய விரதங்களும் பண்டிகைகளும் தொடங்கிவிடும். ஆடிமாதத்தில் அம்மன் வழிபாடு, ஆடி கடைசி வாரத்தில் அல்லது ஆவணி முதல் வாரத்தில் வரும் வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜயந்தி, விநாயகர் சதுர்த்தி என்று விழாக்கள் வரிசைகட்டும். ஒவ்வொரு விரதமும் தனித்துவம் வாய்ந்தது.

வரலட்சுமி
வரலட்சுமி

குறிப்பாக, ஆடி மாதத்தில் செய்யப்படும் அம்மன் வழிபாடு, நம் இல்லங்களில் அம்மனின் அருள் பரிபூரணமாக விளங்கச் செய்யும் வழிபாடு. அஷ்ட லட்சுமிகளும் ஒரே ரூபம்கொண்டு இல்லத்தில் எழுந்தருளும் 'வரலட்சுமி நோன்பு' மிகவும் முக்கியமானது. ஆடி மாதத்தின் இறுதியில் அல்லது ஆவணி மாதத்தின் தொடக்கத்தில், பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையன்று வரலட்சுமி விரதம் மேற்கொள்ளப்படும்.

ஒரு முறை சிவபெருமானும் பார்வதி தேவியும் கயிலாயத்தில் சொக்கட்டான் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, இருவரும் சம நிலையிலேயே விளையாடி முடிக்க, யார் வெற்றிபெற்றார் என்பதைக் கணிக்க முடியவில்லை. உடனே, அங்கு பணிப்பெண்ணாக இருந்த, 'சித்ரநேமி' என்கிற பெண்ணிடம் விளையாட்டுக்கான தீர்ப்பைச் சொல்லுமாறு கேட்டனர். விளையாட்டை உற்றுக் கவனித்த சித்ரநேமி, 'ஈசனே வென்றார்' என்று தீர்ப்பளித்தாள்.

வரலட்சுமி நோன்பைத் தவறாமல் கடைப்பிடித்து வர செல்வ வளம் நிலைத்திருக்கும். வீட்டில் மகிழ்ச்சி குடிகொள்ளும். பெண்கள், தீர்க்க சுமங்கலிகளாக வாழ்வார்கள்.
சாஸ்திரங்கள்

இதனால் கோபம்கொண்ட அன்னை பார்வதி, 'பூலோகத்தில் பிறப்பாயாக' என்று சபித்தாள். 'அன்னையின் கோபத்திலும் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும்' என்பதை அறிந்த சித்ரநேமி, அதை வணங்கி ஏற்றாள். தேவியின் திருவுள்ளம் என்ன என்பதை அனைவரும் அறிந்துகொள்ள விரும்பி, சிவபெருமான் அம்பாளிடம், `சித்ரநேமி பொய் சொல்லவில்லை. ஆனாலும் நீ சபித்தாய். காரணம் எதுவாயினும் அவள் கடைத்தேற வழி என்ன?' என்று கேட்டார்.

இதைக் கேட்டதும் அம்பாள், `சித்ரநேமியின் மூலம் பூவுலகிற்கு நன்மையை வாரிவழங்கும் ஒரு உன்னத விரதத்தை உணர்த்த இருக்கிறேன். சித்ரநேமி கன்னிகையாகப் பிறந்து, நோயுற்றுத் தவிக்கும் நாளில், தேவலோகக் கன்னியர்கள் தடாகம் ஒன்றில் தோன்றி வரலட்சுமி பூஜையை மேற்கொள்வதைக் காண்பாள். அதன் மகிமையை உணர்ந்து அவளும் கடைப்பிடிப்பாள். உடனே தன் நோயிலிருந்து விலகி மீண்டும் தெய்வத்தன்மையை அடைவாள்' என்று பதில் சொன்னாள்.

வரலட்சுமி
வரலட்சுமி

அதேபோன்று, சித்ரநேமி கன்னிகையாகி, நோயினால் உடல் மெலிந்து, ஒரு தீர்த்தத்தின் கரையில் அமர்ந்திருந்தாள். அன்று, ஆடி மாத வளர்பிறை வெள்ளிக்கிழமை. தேவ கன்னியர்கள் சிலர் தோன்றி தடாகத்தில் நீராடி, அருகில் இருந்த மண்டபத்தில் தங்கத்தினால் ஒரு அம்பாள் திருவுருவம் செய்து வழிபட ஆரம்பித்தனர். சித்ரநேமி, அவர்கள் பூஜைசெய்யும் முறைகளை உற்றுக் கவனித்தாள். பூஜை முடிந்ததும், அந்த தேவ கன்னியரை அணுகி, விரதம் பற்றிக் கேட்டறிந்தாள்.

`இது, வரலட்சுமி விரதம். குறிப்பாக பெண்கள் இந்த நோன்பைக் கடைப்பிடிக்க, நீடித்த அழகும் சுமங்கலி பாக்கியமும் வாய்க்கப் பெறுவார்கள். அவர்களின் இல்லத்தில் அஷ்டலட்சுமிகளின் அனுக்கிரகங்கள் நிறைந்திருக்கும்' என்று கூறினர். இதைக் கேட்ட சித்ரநேமி, விரதம் அனுஷ்டித்தாள். அதன் பலனாக, அவளுக்கு நோய் நீங்கி ஆரோக்கியம் உண்டானது. தன் பழைய எழில் உருவினைப் பெற்றாள்.

வரலட்சுமி
வரலட்சுமி

பூலோகத்தில் வாழ்ந்த காலமெல்லாம் மிகுந்த செல்வத்தோடும் புகழோடும் வாழ்ந்து, அனைவருக்கும் வரலட்சுமி நோன்பின் விரதத்தை எடுத்துச்சொல்லி, பலரும் பயனடைய வழிசெய்தாள். இதுபோன்று, வரலட்சுமி விரதத்தின் சிறப்புகளை விளக்கும் நிகழ்வுகள் அநேகம் உண்டு.

பூஜைசெய்ய, முதலில் கலசத்தை அலங்கரித்து, அதில் அம்மன் முகத்தை வைக்க வேண்டும் (வரைந்தும் கொள்ளலாம்). பின்பு, கலசத்தை தூயநீர் அல்லது அரிசியைக்கொண்டு நிரப்பி, அதன் மேல் தேங்காய், மாவிலையைக்கொண்டு மூட வேண்டும். இதை வியாழக்கிழமை மாலையே தயார் செய்துவிட வேண்டும்.

மகாலட்சுமி
மகாலட்சுமி

மறுநாள் பண்டிகை என்றால், முன்தினமே வீட்டுக்கு வந்துவிடும் நெருங்கிய உறவினர்போல அன்னை வெள்ளிக்கிழமை விரதத்துக்கு வியாழக்கிழமையே எழுந்தருள்வாள். வியாழன் அன்று மாலை, அம்மனை அழைக்க வேண்டும். வீட்டின் வாசலில் கோலமிட்டு தீபம் ஏற்றி, அங்கு கலசத்தை வைத்து, அதற்கு பூஜை செய்து தூபதீபம் காட்டி, நைவேத்தியம் செய்ய வேண்டும். அம்பாளுக்கு, 'புலகம்' என்னும் துவரம்பருப்புப் பொங்கல் செய்வது விசேஷம். நைவேத்தியம் முடிந்தபின், அம்மனை வரவேற்கும் பாடல்கள் பாடி வீட்டுக்குள் அழைத்துச்செல்வர்.

மறுநாள் காலை, பிரதான பூஜைகள் தொடங்கும். பூஜைக்குத் தேவையான பூ, பழம், கோடி வஸ்திரம் (பஞ்சினால் செய்யப்படும் மாலை) ஆகியவற்றோடு, தோரணச் சரடையும் தயார் செய்துகொள்ள வேண்டும். தோரணச் சரடை அம்மன் மேல் சாற்றி வைக்க வேண்டும். முதலில், பிள்ளையார் பூஜை முடிந்தவுடன், வரலட்சுமி விரதத்துக்கான அஷ்டோத்திரங்களை வாசித்துப் பூஜை செய்ய வேண்டும். கொழுக்கட்டை, பச்சரிசி இட்லி, பாயசம் போன்ற நைவேத்தியங்களைச் செய்து அம்பாளுக்கு படைக்க வேண்டும்.

மகாலட்சுமி
மகாலட்சுமி

வரலட்சுமி விரதத்துக்குரிய பாடல்கள் பல உள்ளன. அவற்றைப் பாடி, அம்மனுக்கு ஆரத்தி எடுத்ததும் பூஜை முடிவுறும். பின்பு, தோரணக் கயிற்றை கையில் கட்டிக்கொள்ள வேண்டும்.

ஐஸ்வர்யங்கள் அருளும் அரூப மகாலட்சுமி... காஞ்சிபுர திவ்ய தேசம்!

வரலட்சுமி விரதம் மேற்கொள்ளும் வழக்கம் இல்லாதவர்கள், அக்கம் பக்கத்தில் செய்யும் நோன்பில் சென்று கலந்துகொள்வதன் மூலமும் அம்பாளின் அருளைப் பெற முடியும். மறுநாள், அம்பிகையை அரிசிப்பானைக்குள் வைத்து யதாஸ்தானம் செய்வது சில வீடுகளில் உண்டு.

வரலட்சுமி
வரலட்சுமி

வரலட்சுமி நோன்பைத் தவறாமல் கடைப்பிடித்து வர, செல்வ வளம் நிலைத்திருக்கும். வீட்டில் மகிழ்ச்சி குடிகொள்ளும். பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக வாழ்வார்கள் என்கின்றன சாஸ்திரங்கள். நாளை (9.8.19) வரலட்சுமி நோன்பு, இன்றே அம்மனை நம் இல்லங்களுக்கு அழைக்கத் தயாராகுங்கள்.

அடுத்த கட்டுரைக்கு