Published:Updated:

அத்திவரதர், நரசிம்மர், சக்கரத்தாழ்வார்... களைகட்டும் கொலு பொம்மை விற்பனை!

Golu Dolls
Golu Dolls

`கொலுவில் கிருஷ்ணர் இல்லாத கான்செப்டே கிடையாது என்பதால், கிருஷ்ணன் சம்பந்தமான கொலுபொம்மைகள்தான் அதிகமாக விற்பனையாகும். இந்த வருஷம், அத்திவரதர் பொம்மையை அதிகமாகக் கேட்டு வர்றாங்க.’

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நவராத்திரி பண்டிகையையொட்டி கொலு பொம்மை விற்பனை வேகம் பிடித்திருக்கிறது. சென்னை மயிலாப்பூரிலுள்ள வடக்கு மாடவீதியில், கொலு பொம்மைக் கடைகள் அணிவகுத்து நிற்கின்றன. விதவிதமான கண்ணைக் கவரும் பொம்மைகள் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கின்றன. மண், பேப்பர், பீங்கான், டெரகோட்டா வகை பொம்மைகள் எனக் கலைநேர்த்தியுடன் தயாரிக்கப்பட்டுள்ளன. பண்டிகை தொடங்கி இரு நாள்கள் ஆகிவிட்டதால், மக்கள் மத்தியில் எந்தெந்த கொலு பொம்மைகளுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது... கொலு பொம்மைகளில் புது வரவு என்னென்ன என்பதை அறிய, வீதியில் ஓர் உலா வந்தோம்.

Regina - Saleswoman
Regina - Saleswoman

ராமாயணம், மகாபாரதம் தொடர்பான கொலு பொம்மைகள்தான் அதிகம் விற்பனைக்கு வரும். அவை தவிர்த்து திருமணம், வரவேற்பு, வளைகாப்பு, காதுகுத்து, விவசாயம், சாப்பாடு, காய்கறிகள் செட்டுகளும் இடம் பிடிக்கும்.

``கொலுவில், கிருஷ்ணர் இல்லாத கான்செப்டே கிடையாது என்பதால், கிருஷ்ணர் சம்பந்தமான கொலு பொம்மைகள்தான் அதிகமாக விற்பனையாகும். இந்த வருஷம், அத்தி வரதர் பொம்மைகளைத்தான் அதிகமாகக் கேட்டு வர்றாங்க. அத்தி வரதர் பொம்மைகள் காஞ்சிபுரத்துலதான் நிறைய செய்றாங்க. அங்கேயே பெரும்பாலும் விற்பனையாயிடுது. மீதி இருக்கிறதைத்தான் நாங்க வாங்கிட்டு வர்றோம். வந்த வேகத்திலேயே அத்தனையும் வித்துடுது” என்றார் பல்லாவரத்திலிருந்து வந்து கடை போட்டிருக்கும் ரெஜினா.

Golu Dolls
Golu Dolls

அவரைத் தொடர்ந்து, பெருங்களத்தூரைச் சேர்ந்த மதனிடம் பேசினோம். “கொலுபொம்மை விற்பனைக்காக பெருங்களத்தூர்லேருந்து வந்திருக்கிறேன். அஷ்டலட்சுமி, தசாவதாரம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், பழனி மலை, கார்த்திகைப் பெண்கள், குபேரன் செட்டுகள்தான் விற்பனைக்கு வைச்சிருக்கேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்போ கடைக்கு வர்றவங்க, அத்தி வரதர் கொலு பொம்மையைத்தான் அதிகமாகக் கேட்கிறாங்க. நாங்க அதை அதிகம் செய்யலை. பெரிய கொலுபொம்மைகள்ல சரஸ்வதி, விநாயகர், கிருஷ்ணரும் வைச்சிருக்கிறேன். என்கிட்ட வர்ற வாடிக்கையாளர்கள்ல பலர் அஷ்டலட்சுமி, தசாவதாரம், குபேரன் செட் கொலுபொம்மைகளைத்தான் அதிகமாக வாங்கிட்டுப் போறாங்க.

Madhan - Golu Dolls Salesman
Madhan - Golu Dolls Salesman

ஆறு இன்ச் உள்ள கொலு பொம்மையை 800 ரூபாய்க்கும், 12 இன்ச் உள்ளதை 1,400-க்கும் விற்கிறோம். மண் பொம்மைகளை விலை குறைவாகவும், பேப்பர் மோல்டு விலை அதிகமாகவும் இருக்கும். மண் பொம்மை கிருஷ்ணர் 400 ரூபாய்க்கும், பேப்பர் மோல்டில் செய்யப்பட்ட கிருஷ்ணர் 1,600 ரூபாய்க்கும் விற்கிறோம். பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் கொலு பொம்மைகள் செய்யத் தடை விதிக்கப்பட்டிருப்பதால அந்த வகையானது என்கிட்ட இல்லை.

பெரும்பாலும் மண் பொம்மைகளைத்தான் மக்கள் வாங்குறாங்க. வெளியூருக்கு பொம்மையை எடுத்துக்கிட்டுப் போறவங்க, பேப்பர் மோல்டில் செய்யப்பட்ட கொலு பொம்மைகளையே வாங்குவாங்க. இந்தப் பொம்மைகளோடு கற்பூரம், மிளகு வைச்சுப் பாதுகாக்கணும். வைக்கோல்ல வைக்கக்கூடாது. மண் பொம்மையைப் பாதுகாக்கச் சிறந்த வழி அதன்மேல பேப்பரைச் சுற்றி, ஒரு பொம்மை மேல இன்னொரு பொம்மை உரசாமல் வைக்கணும்” என்றார்.

Murugamma - Golu Dolls Sales woman
Murugamma - Golu Dolls Sales woman

“எட்டு வயசுல இருந்து இந்தத் தொழில்ல இருக்கேன்ராமர் பட்டாபிஷேகம், தசாவதாரம், கஜேந்திர மோட்சம், குபேரன், பெருமாள் ஊர்வலம், யானை ஊர்வலம், துளசி மாடம், திருமண செட் விற்பனைக்கு வைச்சிருக்கேன். 50 ரூபாய்லேருந்து 500 ரூபாய் வரைக்குமான பொம்மைங்க என்கிட்ட இருக்கு. தசாவதாரம், ராமர் பட்டாபிஷேகம் கொலு பொம்மைகளை விரும்பி வாங்கிட்டுப் போறாங்க” என்கிறார், புரசைவாக்கத்தைச் சேர்ந்த கொலு பொம்மை விற்பனையாளர் முருகம்மா.

மயிலாப்பூரைச் சேர்ந்த வாடிக்கையாளர் மைதிலி ராமானுஜம், தன் தோழி கோமதி கணேஷுடன் வந்திருந்தார். அவர்கள் அத்திவரதர் கொலுபொம்மையைத் தேடிக்கொண்டிருந்தனர்.

Mythili Ramanujam, Gomathi Ganesh
Mythili Ramanujam, Gomathi Ganesh

“இந்த வருஷம் சக்கரத்தாழ்வார், பிரம்மோற்சவம், திருமண செட், பள்ளியில பாடம் எடுக்கிற செட், தாயக்கட்டம், ராமானுஜர் குருகுலமெல்லாம் வந்திருக்கு. இந்த வருஷத்தோட ஸ்பெஷல் அத்திவரதர்தான். நிறைய பொம்மைங்க வந்திருந்தாலும் அத்திவரதர் பொம்மைக்குதான் வரவேற்பு இருக்கு. வந்தவுடனே எல்லாம் தீர்ந்துபோயிடுது. நாங்க சக்கரத்தாழ்வார் வாங்கலாம்னு வந்திருக்கோம்” என்றார் மைதிலி ராமானுஜம்.

நவராத்திரி... 9 நாள்கள் விரதம் இருக்க இயலாதோர் என்ன செய்யலாம்?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு