Published:Updated:

பிணிகள் போக்கும் பவானி செல்லியாண்டி அம்மன் கோயில் சேற்றுத் திருவிழா!

பவானி சேற்றுத்திருவிழா
பவானி சேற்றுத்திருவிழா

"திருவிழா தொடங்குவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பாக மஞ்சள் மற்றும் குங்குமம் கலந்த நீரில், வேப்பிலை ஊறவைத்த நீரை அம்மனின் கருவறைக்குள் சென்று ஊற்றி அம்மனை பொதுமக்கள் குளிர்விப்பார்கள்."

திருவிழா என்றதுமே நம் முகத்தில் மகிழ்ச்சியும் மலர்ச்சியும் ஏற்படுவது இயல்பே. அதிலும், உள்ளூர்த் திருவிழா என்றால், சொல்லவே தேவையில்லை. உற்றார் உறவினர்களின் நேசம், புதிதாய் உடுத்தும் வேட்டி சேலைகளின் வாசம்; நண்பர்களுடன் கூடிக் களித்தல், வழிநெடுக போடப்பட்டிருக்கும் திடீர் கடைகள், விற்பனைக்குக் காத்திருக்கும் வீட்டு உபயோகப் பொருள்கள், விளையாட்டுப் பொருள்கள், விதவிதமான உணவுகள் எனக் கடைகள் நிறைந்திருக்கும்.

புது வேட்டி சட்டையுடன் முறைப்பையன்கள் தங்களின் முறைப்பெண்களைத் தேடிட, மாமன் மச்சினன் கேலி கிண்டலுடன் அந்த நாளே குதூகலமாகப் போகும். தை மாதம் அறுவடை முடிந்து, மாசி மாதம் பிறந்துவிட்டாலே குலதெய்வங்களுக்கும் அம்மன்களுக்கும் உரிய திருவிழாக்களால் ஊரே கொண்டாட்ட சந்தனத்தைப் பூசிக்கொள்ளும்.

பொதுவாக இவ்வகையான ஊர்த் திருவிழாக்கள் உறவுகளைப் பலப்படுத்தவும், ஒற்றுமை, சமத்துவத்தை வலியுறுத்தவும் மற்றும் மக்களின் நலத்தையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டவை.

பவானி சேற்றுத்திருவிழா
பவானி சேற்றுத்திருவிழா

ஈரோடு மாவட்டம் பவானி நகரத்தில் அமையப்பெற்ற அருள்மிகு ஸ்ரீசெல்லியாண்டி அம்மன் திருக்கோயிலில் மாசி மாதம் முதல் செவ்வாய் அன்று பூச்சாட்டுதலும் அடுத்த செவ்வாயிலிருந்து கம்பம் நட்டு அதற்கு மஞ்சள் மற்றும் குங்குமம் கலந்த வேப்பிலை நீரை ஊற்றும் நிகழ்ச்சியும் நடைபெறும். இதைத் தொடர்ந்து அடுத்து வரும் புதன்கிழமை திருவிழா தொடங்கும். திருவிழா தொடங்குவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பாக மஞ்சள் மற்றும் குங்குமம் கலந்த நீரில், வேப்பிலை ஊறவைத்த நீரை அம்மனின் கருவறைக்குள் சென்று ஊற்றி அம்மனை பொதுமக்கள் குளிர்விப்பார்கள். பொதுமக்கள் இரவு தொடங்கி, விடியற்காலை வரை நீரூற்றுவார்கள்.

புதன்கிழமை திருவிழாவானது `அம்மை அழைத்தல்' என்ற நிகழ்ச்சியுடன் தொடங்கும். செல்லியாண்டி அம்மன் திருக்கோயிலில், குதிரையின் வாக்கு கிடைத்தபின் வெள்ளை வேட்டி மற்றும் பூக்கூடையுடன் அருகில் உள்ள எல்லை அம்மன் கோயிலுக்கு பூசாரி புறப்படுவார்.

அங்கே பூக்களைக் கொட்டி, எல்லை அம்மன் உட்பட அருகில் உள்ள அனைத்து அம்மன்களையும், கோயிலில் பொங்கல் வைப்பதாகவும் அதற்கு வருகை தருமாறும் வேண்டி அழைப்பார். பின், அங்கிருந்து செல்லியாண்டியம்மன் கோயிலுக்குத் திரும்பும்போதுதான் வழி வழியாக நடந்து வருகின்ற இந்த `சேற்றுத் திருவிழா' தொடங்கும்.

தேர்வு எழுதும் பிள்ளைகளுக்காகப் பெற்றோர் செய்ய வேண்டிய வழிபாடுகள் என்ன?

மாசித் திருவிழாவின் ஒருபகுதியாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் குளுகுளுவென இதமாக `சேற்றுக்குளியல்' போட்டு மண்ணையும் மனிதர்களையும், அவரின் மனங்களையும் குளிர்விக்கும் விதமாக இந்தச் சேற்றுத் திருவிழா அமைகிறது.

சேற்றுத் திருவிழாவின் வரலாறு மற்றும் பின்னணி

"சுமார் நான்கு தலைமுறைகளுக்கு முன் பவானியில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டதாகவும் அது, தெய்வக்குற்றம் ஏற்பட்டு அம்மனின் கோபத்துக்கு ஆளானதால்தான் எனவும் நம்பப்பட்டது. எனவே, அம்மனைக் குளிர்வித்து திருவிழா எடுப்பதே தெய்வக்குற்றத்துக்குப் பரிகாரமாகவும், பஞ்சத்தைப் போக்கும் வழியாகவும் அமையும் என்று முடிவெடுத்து திருவிழா எடுக்கப்பட்டது. அதன்பின் பசுமை அடைந்து செழிப்புற்றது பவானி. காலப்போக்கில், பல வேண்டுதல்கள் அம்மனால் நிறைவேற்றி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பவானி சேற்றுத்திருவிழா
பவானி சேற்றுத்திருவிழா
ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் 425 வது அவதார மஹோத்சவம்... மந்திராலயத்தில் கோலாகலம்

இவ்வாறு அம்மனால் வேண்டிய வேண்டுதல்கள் நிறைவேற்றப்பட்ட பலர் அதற்குக் காணிக்கையாக உடல் முழுவதும் சேறு பூசி திருவிழா எடுக்கிறார்கள்" என்கிறார்கள் பூசாரிகளான பாலசுப்பிரமணியம் மற்றும் ஜெகதீஷ்.

ஒரு சிலரோ, "சருமத்தில் ஏற்படும் மரு மற்றும் தேமல் போன்ற பிணிகள் நிவர்த்தியாகி உடல்நலம் பெற அம்மனை வேண்டி உப்பையும் மிளகையும் கலந்து இறைக்கிறார்கள். இதில் நாணயங்கள், காய்கனிகள் போன்றவையும் வேண்டுதலின் அடிப்படையில் இறைக்கப்படுகின்றன.

`திருநணா' என்று பழங்காலத்தில் அழைக்கப்பட்ட `பவானி' ஊரானது, `காவிரி' மற்றும் `பவானி' என்ற இரு ஆறுகளும் ஒன்றிணையும் இடத்தில் அமைந்துள்ளது, மேலும், நிலத்துக்கு அடியில் அமுதநதி என்று மூன்றாவதாக ஒரு நீரோட்டம் இருந்தாக நம்பப்படுகிறது.

பவானி சேற்றுத்திருவிழா
பவானி சேற்றுத்திருவிழா

அங்கிருந்து எடுக்கப்பட்ட மண்ணைக் குழைத்து உருவாக்கப்பட்ட சேற்றை உடல் முழுவதும் பூசிக் கொண்டால் அந்த மண்ணில் உள்ள நுண்சத்துகள் நம் உடலுக்கும் கிடைக்கும் என்பதும் சேற்றுத் திருவிழா ஆரம்பிக்கப்பட்டதற்கு ஒரு முக்கியக் காரணமாக அமைகிறது" என்கிறார்கள். பெண்கள் உட்பட, சிறு வயதினர் முதல் வயதானவர்கள்வரை எந்தப் பாகுபாடுமின்றி சமத்துவத்தின் அடிப்படையில் சேற்றைப் பூசி மகிழ்ச்சியுடன் திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு