Published:Updated:

திருவண்ணாமலை தீபத் திருவிழா: பக்தர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் என்னென்ன?

கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயில் தீபத் திருவிழாவிற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது அருணாச்சலேசுவரர் திருக்கோயில்தான். எண்ணற்ற ஆன்மிகச் சிறப்புகளை கொண்டது இந்த ஆலயம். சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலம் இது.

எம்பெருமான் ஈசனே மலையாகக் காட்சி தரும் மலை என்றும், 'நினைத்தாலே முக்தி தரும் மலை' என்றும் பக்தர்களால் போற்றப்படும் சிறப்புமிக்கது இத்தலம். இந்த திருத்தலத்தில், கிரிவலம் செய்வது பக்தர்களிடையே சிறப்பாகப் பார்க்கப்படுகிறது. ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் வரும் மகாதீபத் திருவிழா இங்கு வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படும். தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அன்றைய தினம் இந்தக் கோயிலில் ஒன்று திரள்வார்கள். மலைமீது ஏற்றப்படும் திருக்கார்த்திகை மகா தீபத்தைக் கண்டு மெய்சிலிர்க்கும் பக்தர்கள், ஈசனின் அருளால் அன்றைய தினம் முக்திப்பேறு கொண்டதாகவே கருதுவர்.

மகா தீபம்
மகா தீபம்

இத்தகைய சிறப்புகளை உடைய தீபத்திருவிழா இந்த ஆண்டு நவம்பர் 19ம் தேதி நடைபெற இருக்கிறது. கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, தொடர்ந்து சில கட்டுப்பாடுகள் அரசு தரப்பில் விதிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, கடந்த ஆண்டு 5,000 பக்தர்கள் மட்டுமே இணையவழியில் முன்பதிவு செய்து இத்தலத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். இந்த ஆண்டு, அதில் சற்று கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு, அந்த எண்ணிக்கை 10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 3000 உள்ளூர் பக்தர்களும் அனுமதிக்கப்பட உள்ளனர்.

திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் திருக்கோயில் கார்த்திகை தீபத்திருவிழா, 7.11.2021 முதல் 23.11.2021 வரை 17 நாள்கள் சிறப்பாக நடைபெற உள்ளது. ஆனால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் இம்முறையும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

17.11.2021 பிற்பகல் 1 மணி முதல் 20.11.2021 வரையிலான நாள்களைத் தவிர்த்து, மீதமுள்ள நாள்களில் தினந்தோறும் 13,000 பக்தர்கள்வரை கட்டணமின்றி சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதில் 3000 உள்ளூர் பக்தர்களும், 10,000 வெளி மாவட்ட, மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்களும் அடக்கம். வெளியூர் பக்தர்கள் அனைவரும், திருவண்ணாமலை ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்கு, திருக்கோயில் இணையதளமான www.arunachaleswarartemple.tnhrce.in என்று இணையவழி மூலம் வாக்காளர் அட்டை எண், ஆதார் எண், வாகன ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை பயன்படுத்திக் கட்டணமின்றி முன்பதிவு செய்துகொள்ளலாம். ஒருவருக்கு ஒரு நுழைவுச்சீட்டு என்ற முறையில் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

திருவண்ணாமலை... திருக்கார்த்திகை மகா தீப திருவிழா
திருவண்ணாமலை... திருக்கார்த்திகை மகா தீப திருவிழா

இணையதள முன்பதிவு நேற்றைய தினத்தில் (6.11.2021) இருந்து தொடங்கியுள்ளது. உள்ளூர் பக்தர்களுக்கு 4 இடங்களில் நேரடியாக அனுமதிச்சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகம், இந்து சமய அறநிலை துறை இணை ஆணையர் அலுவலகம் ஆகிய இடங்களில் இன்று மற்றும் நாளை (7.11.2021 - 8.11.2011) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் உள்ளூர் பக்தர்கள் நுழைவுச் சீட்டினைப் பெற்றுக் கொள்ளலாம். கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள 3 நாள்களைத் தவிர மீதம் உள்ள அனைத்து நாள்களிலும் இந்த அனுமதிச்சீட்டை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வரும் 10 மற்றும் 16 - ம் தேதிகளில் மட்டும் காலை 6 - 9 மணிவரை சுவாமி தரிசனத்திற்கு அனுமதி இல்லை. மீதமுள்ள நேரங்களில் சுவாமி தரிசனம் செய்து கொள்ளலாம். கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட 3 நாள்களில் பொதுமக்கள் கிரிவலம் செல்வதற்கும், கோயில் வளாகத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்கும், தீபத் திருவிழா அன்று மலை ஏறுவதற்கும் அனுமதி இல்லை. திருக்கோயில் வளாகம் மற்றும் கிரிவலப்பாதையில் அன்னதானம் செய்யவும் அனுமதி இல்லை. சிறப்புப் பேருந்துகள் மற்றும் ரயில்களுக்கு அனுமதி இல்லை.

திருவருள் தருவது தீபம்!

திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள லாட்ஜ்கள், ஹோட்டல்கள், ஆசிரமங்கள், மண்டபங்களில் 3 - 5 நாள்கள் மொத்தமாக முன்பதிவு செய்வதற்கு அனுமதி கிடையாது என்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, "திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் அனைவரும் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளைச் செலுத்தியிருக்க வேண்டும். அல்லது 24 மணி நேரத்திற்கு முன்பாக RTPCR பரிசோதனை செய்துக்கொண்ட சான்றிதழுடன் வரும் பக்தர்களுக்கு மட்டுமே திருவண்ணாமலையில் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும். பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வரும்பொழுது நுழைவுச்சீட்டு மற்றும் ஆதார் அட்டையைக் கட்டாயம் கையில் வைத்திருக்க வேண்டும்" எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ்

10.11.2021 - 23.11.2021 வரை ஈசான்யம், செங்கம் சாலை, காஞ்சி சாலை, திருக்கோயில் சாலை ஆகிய 4 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. "கொரோனா தொற்று வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளித்து இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத்திருவிழாவைக் கொண்டாட வேண்டும்" என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

கார்த்திகை மாதத்தில் தீபமேற்றி வழிபடுவதன் காரணமென்ன? `கார்த்திகை தீபம்' சிறப்புகள்!

இன்று (07.11.2021) அருள்மிகு துர்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது இந்தத் தீபத்திருவிழா. அதனைத் தொடர்ந்து, 10-ம் தேதி கொடியேற்றம், 16-ம் தேதி தேரோட்டம், 19-ம் தேதி பரணி தீப தரிசனம் மற்றும் மகா தீப தரிசனம் நடைபெற உள்ளன. 23-ம் தேதி சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்தில் உலா வருவதோடு நிறைவடைகிறது தீபத் திருவிழா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு