Published:Updated:

“அடுத்த வருஷம் சித்திரைத் திருவிழாவுக்காகக் காத்துக்கிட்டிருக்கேன்!”

விசிறித் தாத்தா
பிரீமியம் ஸ்டோரி
விசிறித் தாத்தா

விசிறித் தாத்தா நடராஜன்.

“அடுத்த வருஷம் சித்திரைத் திருவிழாவுக்காகக் காத்துக்கிட்டிருக்கேன்!”

விசிறித் தாத்தா நடராஜன்.

Published:Updated:
விசிறித் தாத்தா
பிரீமியம் ஸ்டோரி
விசிறித் தாத்தா
மதுரை மீனாட்சியம்மன் கோயில், சித்திரைத் திருவிழாவுக்குச் சென்றவர்கள் இவரைக் காணாமல் வந்திருக்க முடியாது. குழந்தைகள் இவர் அருகில் சென்று பேசுவார்கள். பெரியவர்கள் இவரிடம் நலம் விசாரிப்பார்கள். புதிதாக வந்தவர்கள் ஆச்சர்யமாகப் பார்ப்பார்கள். எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துக்கொண்டு, கையில் லாகவமாகப் பிடித்திருக்கும் மயில்தோகை விசிறியால் கோயிலுக்கு வரும் மக்களுக்கு வியர்த்து விடாமல் கவனமாக விசிறிக் கொண்டிருப் பவர்தான் ``விசிறித் தாத்தா’’ என்று அன்பாக அழைக்கப்படும் பெரியவர் நடராஜன்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொரோனா ஊரடங்கால் தூங்காநகரமாம் மதுரையே தூங்கிவழிகிறது. டீக்கடை, வடைக்கடை, இட்லிக்கடை வாசனைக்குப் பதிலாக கடும்வெயிலில் உருகும் சாலையின் தார் வாடைதான் வீசிக்கொண்டிருக்கிறது. மீனாட்சியம்மன் கோயிலில் தினசரி நிகழ்வுகள் இல்லாத நிலையில், இந்தாண்டு கொண்டாடவிருந்த சித்திரைத் திருவிழாவும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. திருவிழாவைச் சார்ந்து நடக்கும் பல தொழில்கள் முடங்கிவிட்டன. அதில் ஒருவராக முடங்கிக் கிடக்கிறார் விசிறித் தாத்தா நடராஜன்.

விசிறித் தாத்தா நடராஜன்
விசிறித் தாத்தா நடராஜன்

‘சித்திரைத் திருவிழா ரத்து செய்யப்பட்ட நிலையில் வீட்டில் முடங்கிக் கிடக்கும் விசிறித் தாத்தாவுக்கு உதவுங்கள்...’ என்று பரவிய வாட்ஸப் தகவலால் மக்கள் ஆடிப்போனார்கள். அதன் பின் அவருக்கு உதவிகள் கிடைத்து வருகின்றன. யானைக்கல் அருகிலுள்ள வீட்டில் அவரைச் சந்தித்தேன்..

விகடன் என்று சொன்னதும் அவர் முகத்தில் மகிழ்ச்சி. எனக்கும் புகைப்படக் காரருக்கும் விபூதி கொடுத்து அன்பைப் பகிர்ந்தார்.

‘`எனக்குப் பூர்வீகமே மதுரைதான். இப்ப எனக்கு 95 வயசாகுது. இந்தப்பக்கம் வைகை ஆறு, அந்தப்பக்கம் மீனாட்சியம்மன் கோயில், நடுவுல என் வீடு. அப்பல்லாம் சுதந்திரப் போராட்டத்துல கலந்துகொள்ள பல தலைவர்கள் மதுரைக்கு வருவாங்க. விவரம் தெரியாத அந்த வயசுல நானும் கலந்துகிட்டு வந்தே மாதரம் கோஷம் போடுவேன். தலைவர்கள் அப்படியே மீனாட்சியம்மன் கோயிலுக்கும் வருவாங்க. அதைப் பார்க்கக் கோயிலுக்குப் போன நான், அப்புறம் தினமும் சாமியப் பார்க்கக் கோயிலுக்குப் போக ஆரம்பிச்சேன். அதுவே நாளடைவுல சாமி மேல ரொம்ப பக்தியா ஆயிடுச்சு. இங்க மட்டுமல்லாம, அழகர்கோயில், திருப்பரங்குன்றம், பழநி, ஸ்ரீவில்லிபுத்தூர், சமயபுரம், ராமேசுவரம், சபரிமலைன்னு போக ஆரம்பிச்சேன்’’ என்றவரிடம், ‘`எப்போ விசிறி வீச ஆரம்பிச்சீங்க?’’ என்றேன்.

‘`இப்படியே கோயிலுக்குப் போயிட்டு இருந்த நான் மயிலிறகுகளை வாங்கி, பெரிய விசிறி செஞ்சு, சாமி வெளியே வரும்போது விசிற ஆரம்பிச்சேன். அதைப்பார்த்து நல்ல விஷயம்னு எல்லோரும் பாராட்டுனாங்க. பட்டா பிஷேகம், திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்கும் நேரத்துல அடைஞ்சு கிடக்குற மக்களுக்கு புழுக்கமா இருக்கும். இப்பதான் ஃபேன், ஏசி மெஷின்லாம் வைக்கிறாங்க. அப்ப அந்த வசதி கிடையாது. மக்களே வீசிக்குவாங்க. அதனால, நான் மக்கள் அதிகமாக இருக்குற இடத்துல நின்னு வீசுவேன். எல்லோருக்கும் காத்து வர்ற மாதிரி நான் வீசுவேன். அதைப்பார்த்து எல்லோரும் ஆச்சர்யப்படுவாங்க. சந்தோசப்படுவாங்க. அது அப்படியே 60 வருடமா தொடர்ந்து இந்த வயசுலயும் வீசிட்டு வரேன்.’’

‘`இதனால் உங்களுக்கு வருமானம் ஏதும் வருதா?’’

‘`நான் யார் கிட்டேயும் எந்த உதவியும் கேட்க மாட்டேன். ஆரம்பத்துல ஏதேதோ வேலை செய்து குடும்பத்தை நடத்தினேன். பிள்ளைங்களைக் கட்டிக்கொடுத்த பின்பு எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறைவனிடம் போய்விட்டார். பேரப்பிள்ளைகள் என்னை வந்து பார்த்துக்கொள் கிறார்கள். நான் வெளியூர் கோயிலுக்குச் செல்ல சிலர் உதவுவார்கள். அவ்வளவுதான், எனக்கு வேறு எந்தத் தேவையுமில்லை. விசிறியிலுள்ள மயில் தோகை உதிர்ந்துபோகும்போது, அதை மாற்ற உதவி தேவைப்படும்.’’

‘`ஏன் விசிறி வீசணும்னு நினைச்சிருக்கீங்க?’’

‘`இது கடவுளுக்குச் செய்யும் சேவை, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இதைச் செய்து வருகிறேன், இதில்தான் எனக்கு நிம்மதி.’’

‘`சித்திரைத் திருவிழா தடை செய்யப்பட்டது பற்றி என்ன நினைக்கிறீங்க?’’

‘`மனசுக்கு வருத்தமாத்தான் இருக்கு, ஆனா, கூட்டம் கூடினா நோய் வரும்னு அரசாங்கம் சொல்றாங்க. அரசாங்கம் சொல்றதைக் கேப்போம். அடுத்த வருஷம் கண்டிப்பா சித்திரைத்திருவிழா சிறப்பா நடக்கும். அப்ப நான் மக்களுக்கு விசிறி வீசுவேன். இப்ப என்ன கவலைன்னா, தினமும் கோயிலுக்குப் போயிட்டு வருவேன், இப்ப போக முடியலை. என் வாழ்நாளில் இப்படியொரு ஊரடங்கை நான் பார்த்ததில்லை.’’

‘`இப்ப வீட்டிலேயே இருக்கீங்க, உங்களை யாராவது விசாரிச்சாங்களா?’’

‘`அதை ஏன் கேக்குறீங்க... யாரோ என்னைப்பத்தி போன்ல போட்டாங்களாம். உடனே என்னோட நம்பர்ல வந்து பல பேர் நலம் விசாரிச்சாங்க. அவங்க யாருன்னே எனக்குத் தெரியாது. ஆனா, என்னை விசாரிச்சது சந்தோசமா இருந்தது. நிறைய பேர் தேடி வந்து உதவி செஞ்சாங்க... நான் ஒன்னும் பெருசாப் பண்ணிடல... கடவுளுக்கும் மக்களுக்கும் விசிறி வீசுறதுல ஒரு சந்தோசம், அதைத்தான் செஞ்சேன்... அவ்வளவுதான்’’ என்றார்.

தனிமையையும் வெறுமையையும் போக்கும் வகையில் கோயிலும் விழாக்களும் மகிழ்ச்சியைக் கொடுத்துக்கொண்டிருந்த நிலையில் இந்தக் கொரோனா விசிறித் தாத்தாவையும் தனிமைப்படுத்தியுள்ளது. ‘அடுத்த ஆண்டு சித்திரைத் திருவிழாவில் விசிறி வீசலாம்’ என்ற நம்பிக்கைதான் விசிறி தாத்தாவைச் சோர்வடையாமல் வைத்துள்ளது.