Election bannerElection banner
Published:Updated:

ரமா ஏகாதசி நோன்பின் மகிமைகள்... துவாதசி பாரணை நேரம்... கடைப்பிடிப்பது எப்படி?

God
God

ஒருமுறை அவன், தன் மாமனார் வீடான முசுகுந்தனின் அரண்மனைக்கு வந்தபோது, அன்று ரமா ஏகாதசியாய் இருந்தது. தேசத்தில் அனைவரும் உபவாசமிருந்தனர். ஆனால் சோபன், உபவாசத்தால் துன்புற்றான். அந்த நாள் முழுவதும் தண்ணீரும் உணவும் இல்லாமையால் அவன் உடல் சோர்வுற்றது.

இந்த உலக வாழ்வு முன்வினைப் பயன்களால் ஆனது. முன்வினை நல்வினையாக இருந்தால் நன்மைகளும், தீவினைகளாக இருந்தால் துன்பங்களும் வாழ்வில் மிகுதியாகும். இந்த வினைகளின் சுழற்சியிலிருந்து தப்பி, இறைவனின் திருவருளைப் பெற நமக்கு முன்னோர்கள் வகுத்திருக்கும் வழியே, விரதங்கள். குறிப்பிட்ட நாள்களில் தெய்வங்களை வழிபடுவதன்மூலம் அவற்றின் அருளைப் பெற்று, நம் வினைப் பயன்களை மாற்றி, நற்பயன்களைப் பெறமுடியும் என்று அவர்களின் தபோவலிமையின்மூலம் அறிந்து சொல்லியிருக்கிறார்கள். பிரதோஷ தினங்கள் சிவ வழிபாட்டுக்கும், சஷ்டி திதிகள் முருகப் பெருமானை வழிபடவும், பஞ்சமி, அமாவாசை போன்ற திதிகள் அம்மன் வழிபாட்டுக்கும் உகந்தவை. அதேபோன்று, காக்கும் கடவுளான விஷ்ணுவை வழிபட நமக்கு வாய்த்திருக்கும் திதி, ஏகாதசி.

God
God

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறைக் காலங்களில் வரும் ஏகாதசி திதி அன்று, விரதம் இருந்து பெருமாளை வழிபட்டு, துவாதசி அன்று பாரணை செய்து விரதம் முடிப்பது மிகவும் விசேஷமாகும். ஓர் ஆண்டில் மொத்தம் 24 ஏகாதசிகள் வரும். சில ஆண்டுகள் 25 வருவதுண்டு. ஒவ்வோர் ஏகாதசியும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. இவற்றின் மகிமைகளை ஏகாதசி மகாத்மியமும் பிரம்ம வைவர்த்த புராணமும் தெரிவிக்கின்றன. அப்படி ஒரு புண்ணியமான தினம்தான், ரமா ஏகாதசி.

ஐப்பசி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசி, ரமா ஏகாதசி என்று போற்றப்படுகிறது. இந்த ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பகவான் கிருஷ்ணரே அர்ச்சுனனுக்கு எடுத்துரைப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.

விளக்கு ஏற்றுதல்
விளக்கு ஏற்றுதல்

முன்னொரு காலத்தில் முசுகுந்தன் என்னும் மன்னன் ஆட்சிசெய்துவந்தான். பரம பாகவதனான முசுகுந்தன், ஏகாதசி விரதத்தை மிகக் கடுமையாகப் பின்பற்றுபவன். அவன் தேசத்தில் மனிதர்கள் அனைவரும் விரதமிருக்க வேண்டும் என்ற விதியிருந்தது. தேசத்து பக்தர்களும் அந்த விதியைப் பின்பற்றியதோடு அல்லாமல், தாங்கள் வளர்க்கும் உயிரினங்களான ஆடு, மாடு, குதிரை, யானை முதலியவற்றிற்கும் உணவு இடாமல் அவையும் உண்ணா நோன்பிருக்கும்படிச் செய்து புண்ணிய பலன்களைப் பெற்றுவந்தனர். இதனால் அந்த தேசம், தேவலோகத்துக்கு இணையான செல்வத்தோடும் சுகங்களோடும் விளங்கியது.

முசுகுந்தனுக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் பெயர் சந்திரபாகா. அவளை சோபன் என்கிற மன்னனுக்குத் திருமணம் செய்துவைத்தான். சோபன், உடலால் மிகவும் பலவீனமானவனாக இருந்தான். ஒருமுறை அவன், தன் மாமனார் வீடான முசுகுந்தனின் அரண்மனைக்கு வந்தபோது, அன்று ரமா ஏகாதசியாய் இருந்தது. தேசத்தில் அனைவரும் உபவாசமிருந்தனர். ஆனால், சோபன் உபவாசத்தால் துன்புற்றான். அந்த நாள் முழுவதும் தண்ணீரும் உணவும் இல்லாமையால் அவன் உடல் சோர்வுற்றது. உபவாசம் முடியும் வேளையில், சோபன் உடல் நலக்குறைவுற்று இறந்தான். சோபன் ஏகாதசி விரதம் மேற்கொண்டிருந்த புண்ணியத்தால், கிரியைகளுக்குப் பின் ஜலத்தில் கரைக்கப்பட்ட சோபனின் உடல் விடுவிக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றது. அழிவில்லாத அந்த உடலோடு அவன் திவ்யலோகம் அடைந்து, அங்கிருந்த தேவபுரம் என்னும் அரசை ஆண்டுவந்தான்.

அகல் விளக்கு
அகல் விளக்கு

தேவபுரம், செல்வச் செழிப்போடு திகழ்ந்தது. ஆனாலும் அவன் அந்த வாழ்க்கை மீதான நம்பிக்கை இல்லாமல் இருந்தான். அப்போது, முசுகுந்தனின் ராஜ்ஜியத்திலிருந்து சோமகர்மா என்னும் அந்தணர் ஒருவர் பிரயாணம் செய்து, தேவபுரம் வந்தடைந்தார். சோபனைக் கண்டதும், அவன் யார் என்பதை அறிந்து அவனுடைய முன் ஜன்மம் குறித்து எடுத்துரைத்து, ரமா ஏகாதசி விரதத்தின் பலனாலேயே அவனுக்கு அந்த வாழ்வு கிடைத்தது என்று எடுத்துக்கூறினார். இதைக்கேட்டதும் சோபன், ஏகாதசி விரதத்தின் மகிமையை அறிந்து , தன் வாழ்வில் எப்போதும் இந்த விரதத்தைக் கடைபிடித்து வந்தான் என்று கூறப்படுகிறது.

பகவான் விஷ்ணு, மக்களைக் காப்பதற்காகக் காத்திருப்பவர். அவருக்கு உகந்த ஏகாதசி திதி அன்று விரதமிருந்து, அவரைத் துதிக்கும் பக்தர்களின் துயரைப் போக்குபவர். ஏகாதசி திதி அன்று இரவு கண்விழித்து நாம ஜபம் செய்பவர்களை ஒரு கோட்டையைப் போல சுற்றியிருந்து பாதுகாப்பார்.

God
God

எல்லா நாள்களும் உணவு உட்கொள்பவர்கள், மாதத்தில் இருமுறையேனும் விரதம் இருந்து தங்களின் செரிமான உறுப்புகளுக்கு ஓய்வு அளிப்பது நன்மை பயக்கும் என்கிறது, ஆயுர்வேதம். இத்தகைய சிறப்புகளை உடைய ஏகாதசி விரதம், நாளை 24/10/19 அன்று வருகிறது. தசமி திதியாகிய இன்று (23/10/19) இரவு உணவைத் தவிர்த்து, நாளை காலை நீராடி விரதத்தைத் தொடங்க வேண்டும். நாள் முழுவதும் நாராயண நாம ஜபத்தில் ஈடுபட வேண்டும். அதிகபட்சமாக ஏழு முறை துளசித் தீர்த்தம் மட்டுமே அருந்தலாம். ஏகாதசி நாளில் துளசி இலைகளைப் பறிக்கக்கூடாது. எனவே, தேவைப்படும் துளசி இலைகளைத் தசமி அன்றே பறித்து வைத்துக்கொள்ள வேண்டும். 25/10/19 அன்று, துவாதசி பாரணை செய்ய வேண்டும். பாரணை நேரம் : காலை 6.32 - 8.45 மணிக்குள்.

Vikatan
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு