Published:Updated:

ஐப்பசி மாதத்தில் காவிரியில் புனித நீராடுவது எதற்காக?

காவிரி நீராடுபவர்கள், காவிரி நதிக்குப் பூஜை செய்து வழிபடுவதுடன், அருகில் அரசமரம் இருந்தால் அதற்கு நீர் வார்த்து, அதை வலம்வந்து வணங்குவது புண்ணிய பலன் தரும்.

ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்று போற்றுவர். இந்த மாதத்தில் இரவு நேரமும், பகல் நேரமும் சமமாக இருப்பதால், இதற்கு ‘துலா (தராசு) மாதம் என்று பெயர். ‘ஐப்பசி முதல் தேதியன்று (இன்று 18.10.2021) காவிரியில் நீராடுவது புண்ணியம்’ என்கின்றன ஞான நூல்கள். துலா மாதத்தில் இதர நதிகளும், புண்ணிய தீர்த்தங்களும் காவிரியில் சேருகின்றன. ஆதலால் அப்போது காவிரியில் நீராடுபவர்கள்  பஞ்ச மகா பாவங்களிலிருந்தும் விடுபடுகின்றனர். அப்படி நீராடுபவர்கள்  அசுவமேதயாகம் செய்த பலனை அடைவதாக ஐதிகம்.

காவிரியில் புனித நீராடல்
காவிரியில் புனித நீராடல்

"ஐப்பசி முதல் நாளன்று  திருப்பராய்த்துறையிலும், ஐப்பசி கடைசிநாள் மயிலாடுதுறையிலும் நீராடுவது விசேஷமாகக் கருதப்படுகிறது. ஐப்பசியில் பிரம்ம முகூர்த்தத்தில் காவிரி நதியில் நீராடினால், மகாவிஷ்ணுவின் அருள் கிட்டும். துலா மாதத்தில் சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குமுன் காவிரியில் மும்மூர்த்திகளும், முப்பது முக்கோடி தேவர்களும், 68 ஆயிரம் ரிஷிகளும், முனிவர்களும், சித்தர்களும் நீராடுவதாக சாஸ்திரம் குறிப்பிடுகிறது.

துலா மாதத்தில் காவிரியில் நீராடுவது புனிதமானது என்று சாஸ்திரம் சொல்லும் அதே வேளையில் இயலாத நிலையில் ‘கடைமுகம்’ என்று சொல்லப்படும் ஐப்பசி 30-ம் தேதி நீராடினாலும் அதே  பலனைப் பெறலாம். அன்றும் நீராட முடியாதவர்கள், ‘முடவன் முழுக்கு’ என்று சொல்லப்படும் கார்த்திகை முதல் தேதி நீராடினாலும் புனிதம் பெறலாம்" என்று ஞான நூல்கள் கூறுகின்றன.

‘இந்த மாதத்தில் காவிரியில் நீராடுவது காசியில் ஓடும் கங்கை நதியில் நீராடுவதற்கு சமம்’ என்று புராணங்கள் கூறுகின்றன. ஏனெனில் ஐப்பசி மாதமானது கங்கை, யமுனை, சரஸ்வதி முதலான பாரதத்தில் ஓடும் நதி தேவதைகள் அனைத்தும் காவிரியில் நீராடி, தங்களிடம் மானிடர்கள் கரைத்துச் சென்ற பாவக்கறைகளைப் போக்கிக் கொள்கின்றன" என்று காவிரி மகாத்மியம் என்னும் நூல் கூறுகிறது. அதன்படியே ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத அமாவாசையன்று கங்காதேவி காவிரியில் நீராடி மக்கள் தன்னிடம் கரைத்த பாவங்களைப் போக்கிக் கொள்கிறாள் என்று புராண இதிகாசங்களில் போற்றப்படுகின்றது.

காவிரியில் புனித நீராடல்
காவிரியில் புனித நீராடல்

மக்களுக்கு புத்தியும், முக்தியும் அளிக்கும் இம்மாதத்தில் காவிரியில் நீராடுபவர்கள் தங்களின், தங்கள் குடும்பத்தினரின், முன்னோர்களின் பாவங்களையும் போக்கிக் கொள்வதுடன் வளமான வாழ்வும் காண்கிறார்கள். மயிலாடுதுறை துலாக் கட்ட  காவிரியில் நீராடல் அழகு, ஆயுள், ஆரோக்கியம், செல்வம், கல்வி, மாங்கல்ய பாக்கியம், குழந்தைப்பேறு, வலிமை ஆகியவற்றை தரும். எனவே, காவிரியை நினைத்தாலும், சிறப்பைக் கேட்டாலும், பாவங்கள் விலகும்.

ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடி நீர்க்கடன் செலுத்துவோரின் முன்னோர்கள் சொர்க்கத்தை அடைகிறார்கள். காவிரித் தேவியை வணங்கி துதிப்பவர்கள் சொர்க்க லோகம் செல்லும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள். தன்னில் நீராடுபவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வளமான வாழ்வு தருபவள்" என்கிறது காவிரிப்  புராணம்.

காவிரி நீராடுபவர்கள், காவிரி நதிக்குப் பூஜை செய்து வழிபடுவதுடன், அருகில் அரசமரம் இருந்தால் அதற்கு நீர் வார்த்து, அதை வலம்வந்து வணங்குவது புண்ணிய பலன் தரும்.

காவிரிக் கரையில் கோமாதா பூஜை செய்தால் மேன்மேலும் புனிதம் கிட்டும். நீராடும்முன் தகுந்த புரோஹிதர்களைக் கொண்டு சங்கல்பம் செய்துக்கொள்வது சிறந்தது. துலா மாதத்தில் காவேரியில் நீராடி, முன்னோர்களுக்கு பிதுர்பூஜை செய்து அன்னதானம், ஆடை தானம் அளித்தால் பித்ருக்கள் மகிழ்ந்து வாழ்த்துவார்கள்.

ஐப்பசி மாதத்தில் நீராடுவது போற்றப்படுவதுபோல், ஐப்பசி பௌர்ணமியன்று  அன்னாபிஷேகமும் சிவாலயங்களில் சிறப்பிக்கப்படுகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு