Published:Updated:

தேடி வந்து அருள்செய்வார்!

ஶ்ரீசாயிபாபா
News
ஶ்ரீசாயிபாபா

ஸ்ரீசாயி சிறப்புக் கட்டுரைப் போட்டி - வாசகர் அனுபவம்

தேடி வந்து அருள்செய்வார்!

ஸ்ரீசாயி சிறப்புக் கட்டுரைப் போட்டி - வாசகர் அனுபவம்

Published:Updated:
ஶ்ரீசாயிபாபா
News
ஶ்ரீசாயிபாபா

என் கணவர் பாபாவின் பக்தர். ஆரம்பத்தில் அவருக்குத் தன் பக்தியில் சந்தேகம் வந்துவிட்டது. அவருக்குள் ‘ பாபாவின் பக்தனாகப் போலியாக நடிக்கிறோமா அல்லது உண்மையிலேயே உள்ளத்தில் இருந்து பாபாவை விரும்புகிறோமா’ என்கிற சந்தேகம் அதிகரித்தது.

தேடி வந்து அருள்செய்வார்!

உடனே ஒரு வேகத்தில் அவர், “பாபா நான் உங்களின் உண்மையான பக்தன் என்று நீங்கள் நம்பினால் நாளை மாலைக்குள் நீங்கள் என் கைக்கு வரவேண்டும்” என்று வேண்டிக்கொண்டாராம்.

அந்த இரவு அவருக்கு மிகவும் நெருடலான இரவாக இருந்தது. தெய்வத்தை நாம் சோதிக்கலாமா என்று எண்ணி வருந்தியிருக்கிறார். மறுநாளும் அவருக்கு மிகுந்த அவஸ்தையாக இருந்திருக்கிறது. கணவரின் நண்பர் ஒருவர் தொடர்ந்து இவரோடு பேச முயல இவரோ மன அமைதி இன்மையால் அதைத் தவிர்த்துக்கொண்டே இருந்தார்.

அந்த நண்பருக்கு இவரின் நடவடிக்கை புதிதாக இருக்கவே, தேடிக் கொண்டு வீட்டுக்கே வந்துவிட்டார். நேராக என் கணவரின் அறைக்குச் சென்று அவரை விசாரித்துவிட்டு அவர் கைகளில் ஒரு பையைக் கொடுத்தார்.

அதைத் திறந்து பார்த்தால் சாயிபாபாவின் விக்ரகம். கணவர் மெய் சிலிர்த்துப் போய்விட்டார். அப்போது அவரின் நண்பர், “இதைக் கொடுக்கத்தான் நான் அழைத்துக்கொண்டே இருந்தேன். காலையில் கடைவீதிக்குப் போனபோது இந்தச் சிலையைப் பார்த்தேன். உன் நினைவு வந்தது. வாங்கிக்கொண்டு வந்துவிட்டேன்” என்றார்.

சாயி வாழும் தெய்வம். அவர் பக்தர்களைத் தேடி வந்து அருள்செய்வார் என்பதற்கு இதுதானே உதாரணம்.

- தேவிபாலன், திண்டுக்கல்

நிச்சயம் நல்ல வழி பிறக்கும்!

நானும் கணவரும் அரசு ஊழியர்கள். என் கணவர் ராமநாதபுரத்திலும் நான் மதுரையிலும் பணியாற்றி வந்தோம். இருவருக்குமே பணி மாற்றம் கிடைக்கவில்லை. வார இறுதி நாள்களில் மட்டும் அவர் வந்துபோனார். எனக்கு ஒரு மகள். அவளைப் பக்கத்திலேயே ஒரு பள்ளியில் சேர்த்திருந்தேன். தனியாக அவளையும் பார்த்துக்கொண்டு வேலைக்கும் சென்றுவர சிரமமாக இருந்தது.

இந்த நிலை பல ஆண்டுகளாக நீடித்தது. பணம் கொடுத்தால் இடமாறுதல் கிடைக்கும் என்று சிலர் சொன்னார்கள். ஆனால் அதற்கு எங்கள் சூழல் இடம் தரவில்லை. என் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பெண்மணி, நான் படும் கஷ்டங்களைப் பார்த்துவிட்டு ஷீர்டி சாயி குறித்துச் சொல்லி ஆலயத்துக்கும் அழைத்துச்சென்றார்.

“மூன்று வியாழக்கிழமை நம்பிக்கையோடு ஆரத்தியில் கலந்து கொண்டு பிரார்த்தியுங்கள். நிச்சயம் நல்ல வழி பிறக்கும்” என்றார்.

மூன்று வாரம் முடிந்தது. என்ன ஆச்சர்யம்... அடுத்த வாரம் நாங்கள் எதிர்பாராமலேயே கணவருக்கு இடமாறுதல் வந்தது. மதுரைக்கே வந்துவிட்டார். பக்தர்களின் தேவையை ஓடிவந்து தீர்த்துவைப்பவர் சாயி என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்து, நாங்கள் அவரை வாழ்வில் சிக்கெனப் பற்றிக்கொண்டோம்.

- மு. சரஸ்வதி, மதுரை

என்னை முழுமையாக நம்பு!

சாயியை நம்புகிறவர்களின் மனம் கவலைகொள்கிறபோது, அதை சாயி அறிவார். ஒடிவந்து நம் மனக் கவலையைத் தீர்ப்பார். ஒரு நாள் மனம் மிகவும் கனமாக இருந்தது. சாயியின் கோயிலுக்குச் சென்று அமர்ந்து சாயிநாதனை நினைத்துக் கண்ணீரோடு துதித்துக்கொண்டிருந்தேன். மற்றவர்களும் அமைதியாக தியானம் செய்துகொண்டிருந்தனர்.

நான் என் கஷ்டங்களை எல்லாம் சொல்லி அழுதேன். திடீரென்று என் மனம் லேசானதுபோல் இருந்தது. என்னால் அந்தப் பரவசத்தைத் தாங்க முடியவில்லை. உற்சாகம் அடைந்தேன். தியானம் முடிந்து கண் திறந்தபோது, கைகளில் ஒரு சட்டைப் பாக்கெட்டில் வைத்துக்கொள்வதைப்போல ஒரு சாயி படம் இருந்தது. என் கையில் மட்டுமல்ல எல்லோரின் கைகளிலும் யாரோ ஒரு அன்பர் வைத்துச் சென்றிருக்கிறார். யார் அவர் என்று யாருக்கும் தெரியவில்லை.

நான் அந்தப் படத்தின் பின் உள்ள வாசகங்களை சத்தமாக வாசித்தேன். “என்னை முழுமையாக நம்பு. இனிவரும் நாள் எல்லாம் திருநாளே” என்று இருந்தது. எல்லோரும் திரும்பி என்னையே பார்த்தார்கள். அதுவரைக்கும் நான் மனவருத்தத்தில் இருப்பதாக நான் யாரிடமும் சொல்லவில்லை.

ஆனால் சாயி அதை அறிந்திருக்கிறார். யாரோ ஒரு பக்தரின் மூலம் என் கையில் இந்த வாசகத்தைச் சேர்த்திருக்கிறார். அன்றுமுதல் இன்றுவரை கவலை என்னைத் தீண்டுவதில்லை. அப்படியே தீண்டினாலும் அதை சாயி பாதத்திலேயே சமர்ப்பித்துவிடுவேன். சாயியை வணங்குபர்களுக்கு நாளெல்லாம் திருநாள்தானே!

- சாய். அ. தமிழ், வைத்தீஸ்வரன்கோவில்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism