Published:Updated:

ஐயப்பமாலை அணிந்து சபரி யாத்திரை செல்ல இருக்கிறீர்களா? இந்த 10 விஷயங்களைக் கடைப்பிடிங்க!

சபரிமலை

அனைத்தையும் விட முக்கியமான விஷயம் பக்தி. கபடம் இல்லாத பக்திக்குதான் ஐயப்பன் அருள்வான். ஐயப்ப விரதம் இருந்து வழிபட்டு அவனைச் சரணடைந்தால் வாழ்வில் சகல தருணங்களிலும் அவன் நம்மோடு இருந்து அருள் செய்வான்.

ஐயப்பமாலை அணிந்து சபரி யாத்திரை செல்ல இருக்கிறீர்களா? இந்த 10 விஷயங்களைக் கடைப்பிடிங்க!

அனைத்தையும் விட முக்கியமான விஷயம் பக்தி. கபடம் இல்லாத பக்திக்குதான் ஐயப்பன் அருள்வான். ஐயப்ப விரதம் இருந்து வழிபட்டு அவனைச் சரணடைந்தால் வாழ்வில் சகல தருணங்களிலும் அவன் நம்மோடு இருந்து அருள் செய்வான்.

Published:Updated:
சபரிமலை

சபரிமலை ஐயப்ப பக்தர்களின் நெஞ்சம் வாழும் இடம். ஆண்டுக்கு ஒருமுறையேனும் ஒருமண்டலம் விரதம் இருந்து சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய கோடிக்கணக்கான பக்தர்கள் காத்திருக்கிறார்கள். பலரும் கார்த்திகை முதல் நாளில் மாலை அணிந்து விரதம் இருந்து சபரி ஐயனைச் சென்று தரிசனம் செய்வது வழக்கம். அப்படி மாலை இட்டு விரதம் இருக்கும் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நியதிகள் என்னென்ன என்பனவற்றை இப்போது காண்போம்.

1. சபரிமலைக்கு மாலை அணிய விரும்புபவர்கள் ஒரு மண்டலம் (48 நாள்கள்) விரதம் கடைப்பிடிக்கவேண்டும். ஒரு மண்டலம் என்றால் 41 நாள்கள் என்ற கணக்கும் உண்டு. தற்போது பல சாமிமார்கள் ஒரு மண்டல விரதத்தைக் கடைப்பிடிப்பத்தில்லை. மாலை அணிந்த மறுநாளே சபரியாத்திரை புறப்பட்டுவிடுகிறார்கள். அவர்களின் பக்தியில் குறையில்லை. ஆனால் ஐயப்ப விரதத்தின் மகிமையை முழுமையாய் உணராமல் செய்யும் காரியம். ஒரு மண்டலகாலம் விரதம் இருந்தால் ஐயன் நம் உள்ளத்தில் குடியேறி அடுத்துவரும் ஆண்டு முழுவதும் நம்மைக் காப்பாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சபரிமலை
சபரிமலை

2.எந்த மாலை அணிவது என்பது குறித்துப்பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. முத்திரை மாலையான 108 மணிகள் கொண்ட துளசிமணி மாலையை வாங்கி அணிவதே சிறப்பாகும். ஒவ்வோர் ஆண்டும் புதிய மாலை அணிய வேண்டும் என்பதில்லை. ஒருமுறை விரதம் இருக்கும்போது அணிந்த மாலையையே மீண்டும் அணிவது விசேஷம். பழைய மாலையோ புதியமாலையோ அணிவதற்கு முன்பாக பசும்பாலில் அமிழ்த்தி வைக்க வேண்டும். இதன்மூலம் மாலையில் தோஷம் ஏதேனும் இருந்தால் விலகும் என்பது நம்பிக்கை.

3. மாலை அணிவதென்றால் ஏதேனும் ஒரு கோயிலில் வைத்து, சபரி யாத்திரைக்கு அழைத்துச் செல்லும் குரு சாமி யாரோ அவர் திருக்கரங்களால் அணிந்து கொள்வதே சிறப்பாகும். குருசாமி ஊரில் இல்லை என்னும்பட்சத்தில் எந்தக் கோயிலில் மாலைபோடுகிறோமோ அந்தக் கோயிலின் அர்ச்சகரையே குருவாக ஏற்று அணிந்துகொள்ளலாம். வீட்டில் பூஜை செய்து தாயின் கரங்களால் மாலை அணிந்துகொள்வது மிகவும் விசேஷம்.

4. மாலை அணிந்தவர்கள் பிரம்மசர்ய விரதம் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். காலையும் மாலையும் குளித்து சரணம் சொல்லி ஐயனை வணங்க வேண்டும். மது, மாமிசம், புகைப்பழக்கங்களை எக்காரணம் கொண்டு நினைத்துக்கூடப் பார்க்கக் கூடாது.

5. பல சாமிமார்கள் வீட்டில் ஐயப்பபூஜை நடத்துவார்கள். அந்த பூஜைகளுக்குச் சென்று கலந்து கொண்டு நம்மால் ஆன சேவையை செய்ய வேண்டும். பக்தர்களுக்கு அன்னதானம் இடும்போது அந்த ஐயப்பனே சாமிகளின் தோற்றத்தில் வந்து அந்தப் பிரசாதத்தை ஏற்பான் என்பது நம்பிக்கை. எனவே அன்னதானம் நடைபெறும் இடங்களில் உணவு சமைக்க உதவுவது, பரிமாறுவது போன்ற பணிகளில் ஈடுபட்டால் அந்த ஐயப்பனுக்கே உணவு சமர்ப்பித்த பாக்கியம் கிட்டும்.

6. இறப்பு, வளைகாப்பு, சீமந்தம் போன்ற நிகழ்வுகளில் மாலை அணிந்தவர்களும், மாலை அணிந்தவர்களின் வீட்டில் உள்ள மற்றவர்களும் கலந்துகொள்ளக் கூடாது. கலந்துகொள்ளும் அவசியம் ஏற்படும்போது, குருசாமியின் அறிவுரை கேட்டு அதன்பின் மாலையைக் கழற்றியபிறகே பங்கெடுக்க வேண்டும்.

7 நாள் முழுவதும் ஐயப்பனின் நாமத்தை உச்சரித்துக்கொண்டே இருக்க வேண்டும். மாலை அணிந்த சக பக்தர்களை சாமி என்றே அழைக்க வேண்டும். அந்தக் காலத்தில் மாலை அணிந்தவர்கள் வீட்டுப் பெண்களோடு பேசும்போது 'மாளிகைபுறத்து சாமி' என்றே அழைப்பார்கள். இன்று அந்த வழக்கம் குறைந்து வருகிறது.

8. உறங்குவதற்கு மெத்தைகளைப் பயன்படுத்துவது கூடாது. ஏதேனும் எளிமையான தரை விரிப்புகளை விரித்துப் படுக்கலாம். பகலில் உறங்கும் வழக்கம் கூடவேகூடாது.

9. சிலர் கடன் வாங்கி வீட்டில் ஆடம்பரமாக பூஜை செய்வார்கள். அதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். எளிமையான பக்தியே ஐயப்பனுக்குப் பிரியம் என்பதால் ஏதேனும் பழங்களை ஐயப்பனுக்கு பக்தியோடு சமர்ப்பித்து அதை ஐயப்ப சாமிகளுக்கு விநியோகம் செய்தால்கூட ஐயப்பன் மகிழ்வான்.

கடுக்கரை ஐயப்பன்
கடுக்கரை ஐயப்பன்

10. ஒரு மண்டலம் முடித்து, சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள், தங்களின் குருசாமியின் தலைமையில் ஏதேனும் ஆலயத்திலோ அல்லது வீட்டிலோ இருந்து, ஐயப்பனை வணங்கி இருமுடிகட்டிக்கொண்டு மலைக்குக் கிளம்பலாம். அதேபோன்று வீட்டுக்குத் திரும்பிவந்துதான் மாலையைக் கழற்ற வேண்டும். வழியிலேயே கழற்றிவிட்டு நம் மனம்போல் நடந்துகொள்ளக் கூடாது.

இவை அனைத்தையும் விட முக்கியமான விஷயம் பக்தி. கபடம் இல்லாத பக்திக்குதான் ஐயப்பன் அருள்வான். ஐயப்ப விரதம் இருந்து வழிபட்டு அவனைச் சரணடைந்தால் வாழ்வில் சகல தருணங்களிலும் அவன் நம்மோடு இருந்து அருள் செய்வான்.

சாமியே சரணம் ஐயப்பா!