Published:Updated:

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

Published:Updated:

ஸ்ரீசூரிய ஸ்தோத்திரம்

ஆதித்யாய  அங்குஷ்டாயாம் நம:
அஸுராரயே தர்ஜநீப்யாம் நம:
திவாகராய    மத்யமாப்யாம் நம:
ப்ரபாகாராய அனாமிகாப்யாம் நம:
ஸகஸ்ரகிரணாய கனிஷ்டிகாப்யாம் நம:
மார்த்தாண்டாய கரதல கரப்ருஷ்டாப்யாம் நம:

ஞாயிறு விரதம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மது உடலும் உள்ளமும் தூய்மை பெறும் வகையில், பல்வேறு விரத வழிபாடுகள் குறித்து அறிவுறுத்தியுள்ளனர் நமது முன்னோர்கள். அவற்றில் ஒன்று, ஞாயிற்றுக்கிழமை விரதம். ஞாயிறு என்றாலே சூரியனைக் குறிப்பது. சூரிய பகவானைப் போற்றியே இந்த ஞாயிறு விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமைகளில் (கோயிலில் நவகிரகங்களில் ஒருவராக அருளும்) சூரிய பகவானுக்கு, அவருக்கு உகந்த சிவப்பு மலர்களையும், செஞ்சந்தனமும், சிவப்பு வஸ்திரமும் சார்த்தி, அவருக்குரிய மந்திரங்களைக் கூறி வழிபடவேண்டும்.

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

அன்றைய தினம் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு உணவு உண்ணாமல் இருந்து, மறுநாள் காலை சூரியோதயத்தின்போது உணவு உண்ணுவதே இந்த விரதத்தின் விதிமுறையாகும். இந்த வழிபாட்டின் மூலம் ஆயுள் பெருகும், வியாபாரம் செழிக்கும், வீட்டில் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை. மேலும் தோல், கண்கள் சம்பந்தப்பட்ட பிணிகள் உடையவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால், அந்தப் பிணிகள் நீங்கும். இந்த விரத தினங்களில் சூரிய காயத்ரீ ஜபித்து வழிபடுவது விசேஷம்! கோயிலுக்குச் செல்பவர்கள் காலை 7 மணிக்குள் சென்று சூரியனை பூஜிப்பதால், சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

- மீனா சுவர்ணம், உடுமலைப்பேட்டை

வீடு தேடி வந்த ஸ்ரீசாயிநாதர்

கடந்த இதழ் சக்தி விகடனில் 'ஸ்ரீசாயி பிரசாதம்’ எனும் புதிய தொடரைப் படித்து நெகிழ்ந்தேன். ஸ்ரீசாயியின் நாமாவளிகளின் மகிமைகளையும், அதன் அடிப்படையில் ஸ்ரீசாயி நிகழ்த்திய அருளாடல்களையும் பகிர்ந்துகொள்ளப் போகும் இந்தத் தொடர், சக்தி விகடன் வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்படும் என்பதில் ஐயமில்லை.

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

எனது வாழ்விலும் ஸ்ரீசாயியின் அருளால் பல அற்புத அனுபவங்கள் நிகழ்ந்துள்ளன. சமீபத்தில் நிகழ்ந்த ஒன்றை வாசக நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

சென்ற நவராத்திரியின்போது எங்கள் வீட்டில் கொலு வைத்தோம். அதற்காக, பொம்மைகளைச் சுத்தம் செய்வதும், படி அடுக்குவதுமான வேலைகளில் ஈடுபட்டோம். அப்போது, ஸ்ரீசாயிநாதரின் பொம்மைகள் பற்றிப் பேச்சு எழுந்தது.

சமையலறையில், ஸ்ரீசாயிபாபா சமைப்பது போன்ற கோலத்தில் அருளும் படத்தை ஒட்டி வைத்திருக்கிறோம். மிக விசேஷமான கோலம் அது! அந்த அருட்கோலத்தில் திகழும் சிலை மட்டும் எங்கள் வீட்டில் இல்லை. ''அதுவும் இருந்தால், கொலு ரொம்ப நன்றாக இருக்குமே!'' என்றாள் என் இளைய பெண்.

உடனே என் கணவர் சிறு புன்னகையோடு, ''சாமி, பார்த்துக்கோங்க... குழந்தைங்க ஆசையை நிறைவேத்தறது உங்க பொறுப்பு!'' என்று சாயிநாதரின் படத்தைப் பார்த்துச் சொன்னார். அவர் எப்போதுமே அப்படித்தான்... எதுவாக இருந்தாலும், ஸ்ரீசாயியிடம் நேரில் பேசும் தொனியில் முறையிடுவார். இப்போதும் பொறுப்பை சாயியிடம் ஒப்படைத்துவிட்டு, கொலு வேலைகளில் மும்முரமாகிவிட்டார்.

இரண்டு நாள் கடந்திருக்கும்... பக்கத்துத் தெருவில் இருக்கும் குடும்ப நண்பர் ஒருவர் எங்கள் வீட்டுக்கு வந்தார். அவரது கைகளில் ஒரு பார்சல். அவருடைய அம்மா கொடுத்துவிட்டு வரச் சொன்னதாகச் சொல்லி, அந்த பார்சலை எங்களிடம் கொடுத்துவிட்டுச் சென்றார் அவர். அதைப் பிரித்துப் பார்த்த நாங்கள் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துபோனோம். உள்ளே... சமையல் செய்யும் அருட்கோலத்தில் ஸ்ரீசாயிபாபாவின் பளிங்குச் சிலை. சிலிர்த்துப் போனோம். என் கணவருக்கு நெகிழ்ச்சியில் கண்ணீரே வந்துவிட்டது. எதுவும் பேசத் தோன்றாதவராக அப்படியே ஸ்ரீசாயி படத்துக்கு முன்னால் உட்கார்ந்துவிட்டார். இந்தப் பரவசத்தில் இருந்து அவர் மீள்வதற்கு வெகுநேரம் ஆனது. பிறகு விசாரித்தபோது, அந்த நண்பர் ஷீர்டிக்குச் சென்று வந்ததாகவும், அங்கிருந்து தன் அம்மாவுக்காக இந்தச் சிலையை வாங்கி வந்ததாகவும், 'நம்மகிட்டதான் நிறைய சாயி சிலைகள் இருக்கே. இதை லட்சுமிகிட்ட கொண்டு கொடுத்துட்டு வா! அவதான் கொலு வெச்சிருக்கா. இவரையும் அந்த கொலுவில சேர்த்துப்பா’ என்று சொல்லி அனுப்பியதாகவும் தெரிவித்தார்.

நாங்கள் கேட்டபடி, அதே திருக்கோலத்தில் எங்கள் வீடு தேடி வந்த ஸ்ரீசாயிபாபாவை, அவரின் திருவருளை என்னவென்பது?!

- க.லட்சுமி, சென்னை- 116

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

அன்னதானத்தின் சிறப்பு!

'அன்னத்தால் பிராணனையும், பிராணனால் பலத்தையும், பலத்தால் தவத்தையும், தவத்தால் புத்தியையும், புத்தியால் மனத்தையும், மனத்தால் சாந்தியையும், சாந்தியால் சித்தத்தையும், சித்தத்தால் நினைவையும், நினைவால் ஸ்திதப் பிரக்ஞையையும், ஸ்திதப் பிரக்ஞையால் விஞ்ஞானத்தையும், விஞ்ஞானத்தால் ஆத்மாவையும் பெற முடியும்’ என்கின்றன ஞானநூல்கள். ஆக, மேற்கண்ட அனைத்தையும் அன்னதானம் கொடுப்பதால், தானங்களில் மிக உயர்ந்ததாக இது போற்றப்படுகிறது. நாமும் அன்னதானம் செய்து சிறப்பு பெறுவோமே!

- எஸ்.பாஸ்கரன், சென்னை

தெரிந்துகொள்ள சில நியதிகள்...

தலையில் கட்டிய ஈரத் துண்டுடன் வீட்டிலுள்ளவர்க்குப் பரிமாறுவதும், பூஜை அறையில் விளக்கேற்றுவதும் கூடாது.

* குடும்பப் பெண்கள் தலையை விரித்துப்போடக் கூடாது. குளித்துவிட்டு, தலைமுடி காயவில்லை என்றாலும், நுனியில் முடிச்சுப் போட்டு, பூ வைத்துக்கொள்ளலாம்.

காலை, மாலை விளக்கேற்றும்போது, ஓரிரு தெய்வப் பாடல்களையாவது பாடி, வழிபட்டு விளக்கேற்றுவது சிறப்பு. தெரிந்த சுலோகங்களை, தெய்வ நாமங்களைச் சொல்லியும் வழிபடலாம்.

விபூதிப் பிரசாதம் முதலானவற்றைப் பெறும்போது வலக் கையில்தான் வாங்க வேண்டும். அதேநேரம், சட்டென்று இடக் கைக்கு மாற்றி, பிறகு வலக்கையால் எடுத்துப் பூசுதல் கூடாது.

* திருக்கோயில்களில், சந்நிதிகளில் பெரியவர்களைக் கண்டால், அங்கே அவர்களுக்கு நமஸ்காரம் செய்வது முறையல்ல; அங்கே வணக்கத்துக்கு உரியவன் இறைவன் மட்டுமே!

- எஸ்.நவீனா தானு, திருவள்ளூர்

முருகன் திருக்கல்யாணம்!

முருகன் திருக்கோயில்களில் எல்லாம் அக்டோபர்  24 வெள்ளிக்கிழமை துவங்கி கந்தசஷ்டி திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம், களமாவூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீகற்பகாம்பிகை சமேத ஸ்ரீஅக்னீஸ்வரர் ஸ்வாமி ஸ்ரீஅஷ்டபுஜ மஹா துர்காம்பிகை கோயிலிலும் சஷ்டிப் பெருவிழா சிறப்புடன் நடைபெற்று வருகிறது. அனுதினமும் திருநெறி செந்தமிழால் வேள்விகளும், சிறப்பு திருமஞ்சனத்துடன் திருமுறைகள், திருப்புகழ் பாராயணமும், ஸ்வாமி திருவீதியுலாவுமாக நடைபெற்று வரும் இந்த விழாவின் நிறைவு நாளான அக்டோபர் 30 அன்று அருள்மிகு சுப்ரமணிய ஸ்வாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பக்தர்கள் இதில் கலந்து கொண்டு முருகனைத் தரிசித்து அருள் பெற்றுச் செல்லலாம்.

- கந்தசாமி, கலமாவூர்

'நவகிரக’ அரச மரம்!

சேலம், அம்மாபேட்டையில் அமைந்திருக்கும் அருள்மிகு காளியம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் உள்ள அரசமரம் புராதனமானது. கோயிலின் ஈசான மூலையில் உள்ள இந்த மரம் 9 கிளைகள் கொண்டு வளர்ந்து நிற்பதாலும், இதனுடன் வேப்ப மரமும் இணைந்திருப்பதாலும், மரத்தடியில் புற்று வளர்ந்திருப்பதாலும் மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. இந்த மரத்தை 'நவகிரக அரச மரம்’ எனப் போற்றி வணங்குகிறார்கள், பக்தர்கள்.

- ஐ.எஸ்.ரமணி, சென்னை-56

வாசகர்களே...

ஆன்மிகம் சம்பந்தமான உங்கள் அனுபவங்கள், சந்தேகங்கள், உங்களுக்குத் தெரிந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளும் பகுதி. 'உங்களுடன்... நீங்கள்.’

அனுப்பவேண்டிய முகவரி 'சக்தி சபா’ சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism