
ஞானமும் யோகமும் தரும் காயத்ரி மண்டபம்! வி.ராம்ஜி
பால பருவம் என்பது மிகவும் உசத்தி யானது. எந்த விகல்பமும் இல்லாமல், நல்லது மட்டுமே செய்து, நல்லவற்றை மட்டுமே ஏற்று, நல்ல நல்ல காரியங்களை மட்டுமே சிலாகித்து அரவணைக்கக் கூடியது. அதனால்தான், குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று எனப் பாடிக் கொண்டாடுகிறோம். தெய்வத்தை குழந்தையைப் போல கொஞ்சிச் சீராட்டுவதற்கும், குழந்தையை தெய்வத்துக்கு நிகராகப் போற்றி வணங்கு வதற்குமான வழிமுறைகளையும் நெறிமுறைகளையும் சொல்லியிருக்கிறார்கள் முன்னோர்கள்.
கருணையே வடிவான தாயாகத் திகழும் காஞ்சி காமாட்சி அம்பாள், நகரேஷு காஞ்சி எனும் புண்ணிய பூமியில் முதன்முதலில் சிறுமியாகத்தான் வந்தாள்.
பண்டாசுரன் எனும் அரக்கனின் அட்டூழியத்தால் தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள் என சகலரும் கிடுகிடுத்துப் போனார்கள். ஆண், பெண், மிருகம் என எதை எதையெல்லாமோ சொல்லி, இவர்களாலோ இவற்றாலோ தனக்கு மரணம் சம்பவிக்கக் கூடாது என்று சிவனாரிடம் வரம் வாங்கி, அந்த வரம் கிடைத்த திமிரால், தன்னைத் தட்டிக் கேட்க எவருமில்லை என்கிற துணிவால், அராஜகத்தில் ஈடுபட்டான் பண்டாசுரன். ஆனால், ஒரு சிறுமியால் தனக்கு மரணம் நிகழக்கூடாது என்று அவன் வரம் கேட்டிருக்கவில்லை.
அசுரனை அழிக்கும் பொருட்டு, ஒரு சிறுமியாக அவதரித்து வந்தாள் பராசக்தி. கடும் உக்கிரத்துடன் போரிட்டு, அவனை அழித்தொழித்தாள். பின்னர், ஆகாச ரூபமாக, ஆகாயத்தில் கலந்து நின்றாள்.
'பண்டாசுரனை அழித்தது யார்? எவராலும் வெல்ல முடியாத பராக்கிரமசாலியை பஸ்பமாக்கியவர் யார்? அரக்கனைக் கொன்று போடும் வலிவு எவருக்கு இருக்கிறது? நம் துயரங் களையெல்லாம் துடைத்தெறிந்த மகா சக்தி எது?’ என்று இந்திராதி தேவர்கள் குழம்பினார்கள்.

அப்போது ஆகாயத்தில் இருந்து, '24 அட்சரங்களையும் 24 தூண்களாகவும், நான்கு வேதங்களையும் நான்கு சுவர்களாகவும் கொண்டு ஒரு மண்டபம் எழுப்புக!’ என்று அசரீரி ஒலிக்க... காஞ்சியம்பதி எனும் புனித க்ஷேத்திரத்தில், மயன் எனும் தேவ தச்சனைக் கொண்டு, மண்டபம் எழுப்பப்பட்டது.
'அந்த மண்டபத்தில் சுமங்கலிப் பெண் மற்றும் கன்றுடன் பசு, கண்ணாடி, தீபம் ஆகியவை இருக்கட்டும். அப்போது நான் யார் எனக் காட்டுகிறேன்’ என ஏற்கெனவே அசரீரி அருளியிருந்தபடி, அங்கே சுமங்கலிப் பெண் நிற்க, கண்ணாடி ஒன்றும் வைக்கப்பட, கன்றுடன் கூடிய பசுவையும் அழைத்து வர, அங்கே தீபம் ஏற்றப்பட்டது. தேவர்களும் முனிவர்களும் கூடி நின்றார்கள்.
அந்த தீபத்தின் ஒளியில் ஆயிரம் கோடி சூரியப்பிரகாசத்துடன் பராசக்தியாக விஸ்வரூப மெடுத்து திருக்காட்சி கொடுத்தாள் உமையவள். மண்டபம் அமைந்திருந்த இடம் பிலாகாஸம் இருக்கும் பகுதி. பிலாகாஸம் என்றால், கிணறு போல, குகை போல இருக்கும் பகுதி. அந்த பிலாகாஸத்தில் இருந்துதான், சிறுமி வடிவில் வெளிப்பட்டு, அசுரனை அழித்தாளாம் அன்னை.
அந்த பிலாகாஸம், இன்றைக்கும் காஞ்சிபுரம் காமாட்சி அம்பாள் ஆலயத்தில் இருக்கிறது. காமாட்சி அம்பாள் குடிகொண்டிருக்கும் கருவறையில் மூலவராக காமாட்சி அம்பாள் இருக்க, அவளுக்கு வலது பக்கத்தில் பஞ்சாக்னிக்கு நடுவில் தபஸ் காமாட்சியாக, தவக்கோலத்தில் மற்றொரு அம்பாள் இருக்க, அவளுக்கு அருகில் பிலாகாஸம் இருக்கிறது.
ஐப்பசி மாதம் பூர நட்சத்திர நன்னாளை, காமாட்சி அம்பாளின் அவதார தினமாகக் கொண்டாடுகின்றனர். அன்றைய நாளில், காலையில் அம்பாளுக்கு ஒன்பது விதமான இனிப்புகளைக் கொண்டு நைவேத்தியம் செய்யப்படுகிறது. மதியத்தில் ஒன்பது வகையான சித்ரான்னங்களைக் கொண்டு நைவேத்தியம் செய்யப்படுகிறது. மாலையில், பிலாகாஸ அபிஷேகம் நடத்தப்படுகிறது. அதாவது, சுமார் ஆயிரம் லிட்டர் பாலைக் கொண்டு அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. குடம் குடமாக அபிஷேகிக்கப்படும் பால் அத்தனையும், அவள் அவதரித்த பிலாகாஸத்துக்குள் சென்றுவிடும் என்று சொல்லிச் சிலாகிக்கின்றனர் பக்தர்கள்.
அந்த நாளில் சுவாஸினி, கன்யா, வடுக பூஜைகள் நடைபெறும். ஸ்ரீவித்யா ஹோமம் நடைபெறும். அன்றிரவு, காமாட்சி அன்னைக்கு புஷ்பாஞ்சலி விமரிசையாக நடைபெறும். அப்போது கிட்டத்தட்ட ஒரு லாரி பூக்களால், அம்பிகைக்கு புஷ்பாஞ்சலி நடைபெறுமாம்.
மயன் எனும் தேவதச்சன் கட்டிய அந்த மண்டபம் இன்றைக்கும் இருக்கிறது. காமாட்சி அம்பாள் அமர்ந்து ஆட்சி செய்யும் கருவறையும், அவளைத் தரிசிப்பதற்காக மக்கள் நிற்கும் இடமுமாக அமைந்திருக்கிறது அது. 'மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என்று பகவான் கிருஷ்ணர் அருளியதுபோல, அனைத்து மந்திரங் களைவிடவும் ஆயிரம் மடங்கு பலன்களைக் கொண்டதாகத் திகழ்கிறது காயத்ரி மந்திரம். எனவே, நான்கு வேதங்களை நான்கு சுவர்களாகக் கொண்டும், 24 அட்சரங்களை 24 தூண்களாகக் கொண்டும் திகழும் மயன் உருவாக்கிய மண்டபம் 'காயத்ரி மண்டபம்’ என்றே போற்றப்படுகிறது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்பாள் கோயிலுக்கு வந்து, காமாட்சி அம்பாளைத் தரிசித்து, காயத்ரி மண்டபத்தில் சிறிது நேரம் அமர்ந்து, நமக்கு என்ன மந்திரம் தெரியுமோ, அந்த மந்திரத்தை கண்கள் மூடி, மனம் ஒன்றிச் சொல்ல... அதற்கான பலன்கள் பன்மடங்கு கிடைக்கும் என்கிறது ஸ்தல புராணம். அதாவது, எந்த மந்திரத்தை இங்கே அமர்ந்து ஒரு முறை சொன்னாலும், அந்த மந்திரத்தை ஒரு கோடி முறை சொன்னதற்கு ஈடாகும். அதாவது, ஒரு கோடி முறை அந்த மந்திரத்தைச் சொன்னால் எவ்வளவு பலன் கிடைக்குமோ, அந்தப் பலன்கள் கிடைக்கும்.
பஞ்ச ப்ரேதாசனாசீனா
பஞ்சபிரம்ம சொரூபினி
- என அம்பாளைப் புகழ்கிறது லலிதா சகஸ்ர நாமம். பரப்பிரம்மத்தின் மொத்த உருவமாகத் திகழ்கிறாள் காஞ்சி காமாட்சி அம்பாள். சக்தி வாய்ந்த அம்பாளின் சந்நிதிக்கு வந்து, சாந்நித்தியம் கொண்ட காயத்ரி மண்டபத்தில் சிறிது நேரம் அமர்ந்து, உங்கள் துக்கங்களையெல்லாம் இறக்கி வைக்கும் வகையில், உங்களுக்குத் தெரிந்த மந்திரத்தை, ஸ்லோகத்தை அட்சரம் பிசகாமல் சொல்லுங்கள். ஞானத்தையும் யோகத்தையும் அள்ளித் தருவாள் அன்னை.

''புருஷன் அல்லது மாயையின் சக்தியும் காமாட்சிதான். அவனுடன் அபேதமாக, அபின்னமாக இருக்கப்பட்ட வஸ்து அவள். இருவரும் ஒன்றே! அத்வைதமாக இருக்கிறார்கள். வேதங்களின் பரம தாத்பரியம் அத்வைதம். அந்த அத்வைதத்தின் ரூபமாகவே காஞ்சிபுரத்தில் பிரகாசிக்கிறாள் காமாட்சி. 'ஐதம்பர்யம் சகாஸ்தி நிகமானாம்’ என்கிறார் மூகர்' எனப் போற்றுகிறார் காஞ்சி மகான்.
''மாதா ஸ்வரூபம் என்று அருகில் போகிறோம். பார்த்தால், பிதாவுக்கு உண்டான நெற்றிக்கண், சந்திரகலை எல்லாமும் இங்கே இருக்கின்றன. சிறந்த பதிவிரதையாக இருந்து, ஈஸ்வரனின் பாதி சரீரத்தை இவள் பெற்றதாகச் சொன்னாலும், இப்போது பார்க்கும்போது, சிவ ஸ்வரூபத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் திருடி, முழுதும் தானே ஆகிவிட்டாள் இவள்’ என்கிறது செளந்தர்ய லஹரி'' என்று அம்பாளின் பேரழகை விவரிக்கிற காஞ்சி மகான், காமாட்சி அம்பாள் சந்நிதியில் மெய்யுருகிய நிலையில் பலமுறை இருந்திருக்கிறார். காமாட்சி அம்பாளைத் தரிசனம் செய்துவிட்டு, அப்படியே காயத்ரி மண்டபத்தில் அமர்ந்து, ஜபத்தில் மூழ்கிவிடுவாராம் காஞ்சி மகாபெரியவா.
காயத்ரிதேவி கோலோச்சும் மண்டபத்தில், அரூபலட்சுமி, வாராஹி, சந்தான ஸ்தம்பம், சந்தான கணபதி, செளந்தர்ய கணபதி, அர்த்தநாரீஸ்வரர், கள்ளர்பெருமாள் (பெருமாளுக்கு இங்கு சந்நிதி உண்டு. 108 திவ்விய தேசங்களில் காமாட்சி அம்பாள் ஆலயமும் ஒன்று) என அருள்பாலிக்கும் மண்டபத்தில் அரூபலட்சுமிக்கு எதிராக அமர்ந்துகொண்டு, பல மணி நேரம் ஜபத்தில் மூழ்கிவிடுவார் மகாபெரியவா.
''மகா பெரியவாளைப் போன்ற மகான்கள் உட்கார்ந்து தபஸ் செய்ததால்தான் இந்த காயத்ரி மண்டபம் இன்னும் இன்னும் சக்தியுடன், நல்ல அதிர்வுடன் இருக்கிறது. காமாட்சி அம்பாள் எந்த அளவுக்குச் சக்தி வாய்ந்தவளோ, அதே அளவு சக்தி, காயத்ரி மண்டபத்திலும் வியாபித்திருக்கிறது. உட்கார்ந்து, ஒருமித்து உணர்ந்தவர்கள் பாக்கியவான்கள்' என்று பெருமிதம் பொங்கச் சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள். காயத்ரி மண்டபத்தின் சக்தியை நாமே அங்கு உட்கார்ந்து, உணர்ந்து பார்த்தால்தான் உண்மை புரியும்.
- வேண்டுவோம்
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்