மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இதோ... எந்தன் தெய்வம்! - 43

காமாட்சி அன்னையும் அன்னபூரணி அம்பாளும்..! வி.ராம்ஜி

'ஊருக்கு ராஜா என்றாலும், தாய்க்குப் பிள்ளைதான்’ என்ற சொல்வழக்கை நாம் எல்லோருமே ஏதேனும் ஒரு தருணத்தில் கேட்டிருப்போம்; சொல்லியிருப்போம். ராஜபரிபாலனம் செய்யும் மகாராஜாவாக இருக்கலாம்; அவரின் கண்ணசைவுக்கு நூறு பேர் ஓடிவரலாம். ஒரு சின்ன கைத்தட்டலில் ஆயிரம் பேர் கைகட்டி வந்து நிற்கலாம். அவரின் ஒரு வார்த்தைக்கு லட்சம் பேர் கட்டுப்பட்டு மரியாதை செலுத்தலாம். ஆனாலும், அவர் தாய்க்குப் பிள்ளையாய், அவளுக்குக் கட்டுப்பட்டே ஆகவேண்டும்.

உலக மக்களாகிய நமக்கெல்லாம் கருணையும் வாஞ்சையுமாக இருந்து, அன்பையும் அருளையும் அள்ளித் தரக்கூடிய அன்னை ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்பாள்தான். அவள் குடிகொண்டிருக்கிற கோயிலில் மட்டுமல்ல, அவள் வாழ்ந்து வரும் காஞ்சிபுரத்தில் மட்டுமல்ல, பரந்து விரிந்து கிடக்கிற இந்த தேசம் முழுவதும் பரவிக் கிடக்கிறது, அவளின் அருளாட்சி.

உலகிலேயே உத்தமமான புருஷன் என ஸ்ரீராமபிரானைப் போற்றுகிறார்கள் ஞானிகளும், யோகிகளும். அப்பேர்ப்பட்ட மகாபுருஷனை, அவதார நாயகனைப் பெற்றெடுத்த தசரத மகாராஜா வந்து வணங்கி, தவமிருந்து அருள் பெற்ற தலம், காஞ்சிபுரம்.

காசாகவும் பணமாகவும், பொன்னாகவும் பொருளாகவும், கட்டடங்களாகவும் விளைநிலங்களாகவும் செல்வம் எத்தனை எத்தனைதான் இருந்தால் என்ன... அள்ளியெடுத்துக் கொஞ்சி விளையாட ஒரு குழந்தை இல்லாத வீடு நரகம்தான். சேர்த்து வைத்த காசெல்லாம் செல்லாக்காசுகள்தான்! ஆட்சி செய்ய அயோத்தியும், அவர் சொல்லை வேதவாக்காக எடுத்துக்கொள்ள மந்திரி பெருமக்களும், வணங்கித் தொழுவதற்கு தேசத்து மக்களும் இருந்தாலும், கொஞ்சி மகிழவும் வளர்ந்து தேசத்தை ஆளவும் ஒரு வாரிசு இல்லையே என்கிற மனக் குறை தசரதச் சக்கரவர்த்திக்கு. புத்திர பாக்கியம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, தீர்த்த யாத்திரை மேற்கொண்டார் அவர். ஒவ்வொரு ஊராகச் சென்றார். அங்கே உள்ள சக்தி வாய்ந்த ஆலயங்களில் உள்ள இறைவனைத் தரிசித்து வேண்டினார்.

இதோ... எந்தன் தெய்வம்! - 43

இப்படி ஒவ்வொரு ஊராக, ஒவ்வொரு தலமாக, ஒவ்வொரு கோயிலாகத் தரிசனம் செய்தபடியே, காஞ்சியம்பதி என்று போற்றப்படும் காஞ்சி மாநகருக்கு வந்தார் தசரதர். பஞ்ச சக்திகளாக, ஐந்து காமாட்சிகளாக, மாபெரும் சக்தியுடன் அமர்ந்து, அகிலத்தையே ஆளும் காமாட்சி அன்னையின் காலடியில் விழுந்து கண்ணீர் மல்க, நமஸ்கரித்து வேண்டினார். அப்போது, 'காமாட்சி தேவியின் சந்நிதிக்கு அருகில் உள்ள ஸ்தம்பம் சாதாரணமானது அல்ல. இது, சந்தான ஸ்தம்பம். இங்கே மனம் ஒருமித்துப் பிரார்த்தித்துக் கொண்டால், சந்தான பாக்கியம் கிடைக்கப் பெறுவாய். உன் அயோத்தியை ஆள்வதற்கும், உலக மக்களுக்கு உதாரண புருஷனாகவும் உத்தமபுருஷனாகவும் விளங்குவதற்கும் உனக்கொரு மகன் பிறப்பான்’ என அசரீரி கேட்டது.

நெகிழ்ந்து நெக்குருகிப் போன தசரத மகாராஜா, அந்த சந்தான ஸ்தம்பத்துக்கு அருகில் வந்தார். தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டார். ஸ்தம்பத்தை வலம் வந்தார். 'தாயே, பராசக்தி! எனக்கொரு பிள்ளையைக் கொடும்மா!’ என காமாட்சி அம்மையிடம் கண்ணீர் மல்க வேண்டினார்.

பிள்ளையின் கண்ணீரைக் கண்டு, எந்தத் தாய்தான் பொறுத்துக் கொள்வாள்? கருணையுடன் தசரதருக்கு அருளினாள் அன்னை. பிள்ளை வரம் தந்து ஆசீர்வதித்தாள்.

மகாவிஷ்ணு ராம அவதாரமெடுத்து, தசரதச் சக்கரவர்த்திக்கு மகனாக இந்தப் பூவுலகுக்கு வருவதற்குக் காரணமாக இருந்த அந்த சந்தான ஸ்தம்பம், இன்றைக்கும் காஞ்சி காமாட்சி அம்பாள் சந்நிதிக்கு அருகில் இருக்கிறது. 'கல்யாணமாகி பல வருடங்களாகியும் இன்னும் குழந்தை வரம் கிடைக்கலியே’ என ஏங்கித் தவிப்பவர்கள், இங்கு வந்து காமாட்சி அம்பாளைத் தரிசித்து, சந்தான ஸ்தம்பத்தை வலம் வந்து, இரண்டு நிமிடம் அங்கே நின்று மனதார வேண்டிக்கொண்டால், அந்த ராமபிரானைப் போலவே உத்தமமான, சத்தியவானாகத் திகழும் குழந்தை உங்களுக்குப் பிறக்கும்.

அதேபோல், காஞ்சி காமாட்சி அம்பாள் ஆலயத்தில், காயத்ரி மண்டபத்துக்கு அருகில், கருவறையில் உள்ள அம்பாளுக்கு வலது பக்கமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர். குடும்பத்தில் எப்போதும் குழப்பம், ஒருவருக் கொருவர் புரிந்துகொள்ளாத நிலை, எதையும் எப்போதும் எடுத்தெறிந்து பேசுகிற குணம் என கருத்து வேற்றுமையுடன் திகழும் தம்பதி, 'எனக்கு நல்ல புத்தியைக் கொடு. விட்டுக் கொடுக்கிற குணத்தையும் பொறுமையையும் தந்து, எங்களை நல்லபடியாக வாழ வை, தாயே!’ என்று காமாட்சி அம்பாள் சந்நிதியில் வேண்டிக்கொண்டு, அர்த்தநாரீஸ்வரருக்கு எதிரே வந்து நின்று, 'எங்க குடும்பம் ஒற்றுமையாவும் நிம்மதியாவும் இருக்கணும்’ என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் மனமும் புத்தியும் தெளிவாகி, செம்மைப்படுத்தப்பட்டு, சிவசக்தி போல் இணைந்து வாழ்வீர்கள். கருத்து வேற்றுமை நீங்கி, கருத்தொருமித்து இல்லறம் நடத்துவீர்கள்.

'உப்புத் தின்னவன் தண்ணி குடிச்சே ஆகணும்’ என்று சொல்வோம் இல்லையா? அதேபோல், தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அதற்குப் பிராயச்சித்தம் தேடியே ஆகவேண்டும். இதில் கடவுள் மனிதர் என்கிற பாரபட்சமெல்லாம் இல்லை. நம் தவறுகளை மன்னித்து, பாவங்களையெல்லாம் போக்குகிற காமாட்சி அம்பாளும் தன் தவறுக்காக ஒரு பிராயச்சித்தம் தேடிக் கொண்டாள்.

இதோ... எந்தன் தெய்வம்! - 43

பூவுலகில் மனிதர்களையும், இந்திர லோகத்தில் இந்திராதி தேவர்களையும், ஞானிகளையும் முனிவர்களையும் காக்கும் பொருட்டு, பண்டாசுரன், பண்டகாசுரன் முதலான அரக்கர்களையும் அசுரக் கூட்டத்தை யும் அழித்தொழித்தாள் காமாட்சி அம்பாள். பிறரின் நலனுக்காகவே இந்த வதம் என்றாலும், அதுவும் கொலை அல்லவா! அசுரர்களைக் கொன்றாலும் பாவம், பாவம்தானே!

தவறு செய்வது இயல்பு. அதிலிருந்து விடுபட்டு வாழ்தலே சிறப்பு. எனவே, இதை நமக்கு உணர்த்துவதற்காக, அசுரர்களைக் கொன்று தேவர்களையும் மக்களையும் காத்தருளினாள் தேவி. அதேநேரம், அசுரக் கூட்டத்தை ஒழித்த தோஷத்தில் இருந்து மீளவும் நினைத்தாள்.

இந்த உலகில் எல்லா பாவங் களுக்கும் பரிகாரங்கள் உள்ளன. எல்லா சாபங்களில் இருந்தும் நிவர்த்தி பெறுவதற்கு வழிகள் இருக்கின்றன. சாமான்யரான நமக்கே ஆயிரம் வழிகள் இருக்கிறபோது, நமக்கெல்லாம் வழிகாட்டி அருள்கிற அன்னைக்கு மட்டும் வழியில்லாமலா போய்விடும்! அந்த வழிகூட, நமக்குச் சுட்டிக்காட்டு வதற்காக அன்னை வகுத்த வழியே!

அசுரர்களை அழித்த பாவம் தீருவதற்காக, ஆயுதம் ஏந்திய கைகளின் கறைகள் நீங்க வேண்டும் என்பதற்காக, கைகளில் வைத்திருந்த ஆயுதங்களையெல்லாம் கீழே போட்டாள் அன்னை. ஒரு கையில் பாத்திரத்தை ஏந்தினாள். இன்னொரு கரத்தில் கரண்டியை எடுத்துக்கொண்டாள். ஆம்... கையில் அன்னப்பாத்திரமும் அன்னக் கரண்டியும் கொண்டு, அன்னபூரணியாக திருக்கோலம் பூண்டாள்; 32 வகையான அறங்களைச் செய்தாள் என்கிறது புராணம்.

இங்கே, காஞ்சி காமாட்சி அம்பாள் ஆலயத்தில், முதல் பிராகாரத்தில், காயத்ரி மண்டபத்துக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது ஸ்ரீஅன்னபூரணி சந்நிதி. தென்கிழக்கு திசை நோக்கி அருள்கிறாள் அம்பிகை.

இங்கு, தர்மத்துவாரம் (நேராக), பிக்ஷைத் துவாரம் (அம்பாளின் வலது பக்கம்) என இரண்டு வாசல்கள் உள்ளன. தர்ம துவாரத்தின் வழியே அன்னபூரணியை வணங்கி விட்டு, பிக்ஷைத் துவாரத்தின் வழியே அவளைத் தரிசித்து, 'பகவதி பிக்ஷாம் தேஹி’ என்று சொல்லியபடி பிரார்த்திக்க வேண்டும் என்பது ஐதீகம்.

அப்படி வணங்கினால், நம் வாழ்வாதாரம் சிறப்புற அமையும். நம் அன்னத்துக்கு, அதாவது உணவுக்கு ஒருபோதும் குறைவிருக்காது. குறிப்பாக, அன்னதானம் செய்வதை நம் வாழ்வின் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்தால், இந்தப் பிறவி மட்டுமின்றி, ஏழேழ் பிறவிக்கும் நாமும் நம் சந்ததியும் சகல ஐஸ்வரியங்களுடன் வாழ்வோம் என்பது உறுதி.

காஞ்சிக்கு வாருங்கள். கருணைத் தெய்வம் காமாட்சியையும் அன்னம் பாலிக்கும் அன்னபூரணியையும் மனதார வழிபடுங்கள்!

- வேண்டுவோம்

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்