மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இதோ... எந்தன் தெய்வம்! - 44

ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம்!வி.ராம்ஜி

ம்பிகை அருளாட்சி செய்யும் தலங்கள் பல உண்டு. அவற்றில் மிக முக்கியமான தலங்களை 'சக்தி பீடம்’ என்றே போற்றுகிறார்கள் பக்தர்கள். மொத்தம் உள்ள 51 சக்திபீடங்களில் காஞ்சி காமாட்சி அம்மன் திருத்தலமும் ஒன்று. காஞ்சியில் உள்ள எந்தச் சிவாலயத்திலும் உமையவளுக்குத் தனிச் சந்நிதி இல்லை. எல்லா கோயில்களுக்குமாகச் சேர்த்து, இங்கே காமாட்சி அன்னையாகக் கோலோச்சுகிறாள் அம்பிகை.

ஒரு கோயிலில் விழா, உற்ஸவம் என்றால், அந்தந்தக் கோயிலின் உற்ஸவ மூர்த்திகள், அந்தக் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு பிராகாரங் களையும் வலம் வருவார்கள், இல்லையா? ஆனால், காஞ்சியம்பதி என்று போற்றப்படும் காஞ்சி மாநகரில், எந்த ஆலயத்தில் விசேஷம், வீதியுலா என்றாலும், அந்தக் கோயிலின் உற்ஸவ மூர்த்திகள், காமாட்சி அம்பாள் கோயிலைச் சுற்றி வலம் வந்தபடி தரிசனம் தருவது, இன்றைக்கும் நடைமுறையில் இருக்கிறது.

'உங்கள் வீட்டில் மதுரையா, சிதம்பரமா?’ என்று கேட்பதுண்டு. மதுரை என்றால் அந்த இல்லத்தில் பெண் ஆட்சி செலுத்துகிறாள், அதாவது இல்லத்தரசியின் ராஜ்ஜியம்தான் என்றும், சிதம்பரம் என்றால் ஆணின் அரசாங்கம் நடக்கிறது என்றும் பொருள். அப்படிப் பார்த்தால், காஞ்சியம்பதியில் எப்போதுமே 'மதுரை’ ஆட்சிதான்! அதாவது, அம்பிகையின் ராஜாங்கம்தான்! அதனால்தான் அனைத்துக் கோயிலின் உற்ஸவ மூர்த்திகள், இங்கே காமாட்சி அன்னையைச் சுற்றி வந்து தரிசனம் தருகிறார்கள்.

ஆனால், காமாட்சி அம்பாள் கோயிலில் விழாக்கள், விசேஷங்கள் என்றால், முதல் மரியாதை யாருக்குத் தெரியுமா? ஸ்ரீஆதிசங்கரருக்குத்தான்!

இதோ... எந்தன் தெய்வம்! - 44

மாசி மாதத்தில் பத்து நாள் பிரம்மோத்ஸவம் சிறப்புற நடைபெறும். புரட்டாசி மாதம் வந்து விட்டால், நவராத்திரி விழா அமர்க்களப்படும். ஐப்பசி மாதம் பெளர்ணமியின்போது, இங்கே உள்ள அன்னபூரணிக்கு அன்னாபிஷேக வைபவம் விமரிசையாக நடைபெறும். தை மாதத்தில் தங்கரதத்தில் ஸ்ரீகாமாட்சி அம்பாள் தகதகவென மின்னியபடி வீதியுலா வந்து, அருட்காட்சி தருவாள்.

இப்படி, காஞ்சி காமாட்சி அம்பாள் கோயிலில், எந்த விழா நடந்தாலும், எப்போது உற்ஸவ வைபவம் நிகழ்ந்தாலும், முதல் மரியாதை ஆதிசங்கரருக்கே வழங்கப்படும். அவருக்கு இங்கே தனிச்சந்நிதி உள்ளது.

கிருத யுகத்தில், துர்வாச முனிவர் 2000 ஸ்லோகங்கள் கொண்டு காமாட்சி அம்பாளை வணங்கிப் பிரதிஷ்டை செய்ததாகச் சொல்கிறது புராணம். திரேதா யுகத்தில் 1500 ஸ்லோகங்களால் பரசுராமன் பாடித் துதித்திருக்கிறார்.

துவாபர யுகத்தில், 1000 ஸ்லோகங்களால் தெளம்யாச்சார்யரும், கலியுகத்தில் 500 ஸ்லோகங்களால் மூகரும் பாடிய பெருமைக்குச் சொந்தக்காரி ஸ்ரீகாமாட்சி. அப்பேர்ப்பட்ட தலத்தில், காமாட்சி அம்பாள் சந்நிதியில், அவளுக்கு அருகில் ஸ்ரீசக்கரத்தைப் பிரதிஷ்டை செய்தார் ஸ்ரீஆதிசங்கரர்.

அசுரர்களை அழித்த அம்பிகை, அதே உக்கிரத்துடன், ரெளத்திரத்துடன் இருந்தாளாம். ஒருகட்டத்தில், ரெளத்திரக் காமாட்சியாகவே எல்லோராலும் அறியப்பட்டாள். அவளின் உக்கிரத்தைத் தணிப்பதற்காக ஸ்ரீஆதிசங்கரர் இங்கே ஸ்ரீசக்கரத்தைப் பிரதிஷ்டை செய்தார். அது முதல், ரெளத்திரம் காணாதுபோய், கனிந்து, குளிர்ந்து, பார்வையில் கருணையும் உதட்டில் புன்னகையுமாக பேரன்புடன் இன்றளவும் காட்சி தந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கிறாள் காமாட்சி அம்பாள்.

வருடந்தோறும் சித்திரை மாதத்தில், ஸ்ரீசங்கர ஜயந்தி விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி பத்து நாட்களும் ஸ்ரீசெளந்தர்ய லஹரி ஸ்லோகம் அம்பாள் சந்நிதியில் சொல்லப்படுவதைக் கேட்பதும், அப்போது அன்னையின் திருமுகத்தைப் பார்ப்பதும் நம்மைச் சிலிர்க்கச் செய்யும்.

காஞ்சி நகருக்குள் வந்து அன்னையை வணங்க அவளின் சந்நிதிக்கு எவர் வந்தாலும், அவர்கள் எத்தனை வயதுக்காரராக இருந்தாலும், அவளுக்கு முன்னே எல்லோரும் குழந்தைகள்தான். தன்னை நாடி வரும் அனைவரையும் தன் குழந்தையாகவே பாவித்துக் கருணை காட்டுகிற தாயுள்ளத்தோடு, சாந்த சொரூபினியாகத் திகழ்கிறாள், ஸ்ரீகாமாட்சி தேவி.

தனக்குத் தேவையானதை அப்பாவிடம் கேட்பதற்கு பயந்துகொண்டு, அம்மாவிடம் தன் விருப்பத்தை உரிமையோடு வெளிப்படுத்துகிற பிள்ளைகள் இருக்கிற உலகம் இது. அப்படி, உலகுக்கே தந்தையாகத் திகழும் சிவனாரிடம் நாம் வைக்கவேண்டிய கோரிக்கைகளை, நம்முடைய தேவைகளை, நம் அன்னையாக விளங்கும் ஸ்ரீகாமாட்சி தேவியிடம் சொல்லிவிட்டால் போதும்... நம் விருப்பங்கள் அனைத்தையும் உடனே நிறைவேற்றித் தருவாள் அவள்.

'என் மகளுக்குக் கல்யாணம் நடக்கணும். இதைத் தவிர, வேற எதையும் எதிர்பார்க்கலை’ என்று கண்ணீரைக் காணிக்கையாக்கி பிரார்த்தனை செய்தால், வெகு விரைவிலேயே அந்தப் பெண்ணுக்குச் சீரும் சிறப்புமாக திருமணம் நடந்தேறும்.

'கல்யாணமாகிப் பல வருஷங்களாச்சு. ஒரு குழந்தை பாக்கியம் இல்லியே...’ என்று கண்ணீர் விட்டு, வேதனையை அவளிடம் இறக்கிவைத்தால் போதும்... சீக்கிரமே வீட்டில் தொட்டில் சத்தம் கேட்கச் செய்வாள் காமாட்சி அன்னை.

'எவ்வளவு சம்பாதிச்சு என்ன... இன்னும் சொந்தமா ஒரு வீடு வாசல்னு அமையலை’ என்று அலுப்பும் சலிப்புமாக மருகுபவர்கள், அவள் சந்நிதிக்கு வந்து மனமுருகப் பிரார்த்தனை செய்தால், சொந்த வீடு வாங்கும் யோகத்தை அருள்வாள் அன்னை. அதுமட்டுமா? இழந்ததை யும் மீட்டுத் தந்து அருள்பாலிக்கும் ஒப்பற்ற தேவி அவள்.

இதோ... எந்தன் தெய்வம்! - 44

'பாக்கறதுக்கு மகாலட்சுமி மாதிரி இருக்கா’ என்று அழகும் தெய்வாம்சமும் உள்ள பெண் களைச் சொல்வோம்தானே! 'அப்படியென்றால் அழகில் சிறந்தவள் நானே’ என கர்வம் கொண்டாளாம் மகாலட்சுமி. 'இந்த கர்வம் இவளுக்கும் இந்த லோகத்துக்கும் நல்லதல்ல. உலகில், கர்வமே ஒருவருக்கு சத்ரு என்பதை எல்லோருக்கும் உணர்த்த வேண்டும்’ எனத் திருவுளம் கொண்டார் மகாவிஷ்ணு.

மனைவி என்றும் பாராமல் மகாலட்சுமியைச் சபித்தார். அவ்வளவுதான். அவளின் அழகு மட்டுமின்றி, உருவமே இல்லாது போயிற்று. மகாலட்சுமி, அரூபலட்சுமியானாள். 'கர்வமே சத்ரு என்பதை உணர்ந்தேன்; தெளிந்தேன். சாபத்துக்கு விமோசனம் தந்தருளுங்கள் ஸ்வாமி’ எனக் கதறினாள்.

பிறகு, மகாவிஷ்ணுவின் ஆணைப்படி, இங்கே காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்பாள் சந்நிதிக்கு வந்து, இங்குள்ள காயத்ரீ மண்டபத்தில் அமர்ந்து, உமையவளை நோக்கி கடும் தவம் மேற்கொண்டாள். அவளின் தவத்தில் மகிழ்ந்த காமாட்சி அம்பாள், கருணையே உருவெனக் கொண்டு, பிலாகாஸம் எனும் பகுதியில் இருந்து வெளிப்பட்டு, மகாலட்சுமிக்கு எதிரில் வந்து நின்று, காட்சி தந்தருளினாள். உருவமே இல்லாமல் இருந்தவளின் முன்னே உலகத்துக்கே அன்னையானவள் நின்றதும், மகாலட்சுமியின் சாபம் மொத்தமும் காணாமல் போனது.

'என் குழந்தைகள், அரூபலட்சுமியாக இருக்கிற உன் மீது குங்குமத்தை வைத்துவிட்டு, எடுத்துச் செல்வார்கள்.  இழந்த செளந்தர்யத்தை மீண்டும் பெறுவாய். என் குழந்தைகளும் இழந்ததையெல்லாம் பெறுவார்கள். சகல செளபாக்கியங்களுடன் வாழ்வார்கள்’ என அருளினாள் காமாட்சி அம்பாள்.

இதோ... இன்றைக்கும் காஞ்சி காமாட்சி அம்பாள் சந்நிதியில் தரப்படுகிற குங்குமப் பிரசாதத்தை, காயத்ரி மண்டபத்தில் உள்ள ஸ்ரீஅரூபலட்சுமியின் மேல் வைத்துவிட்டு, அவளையும் வணங்கி, பிரசாதத்தை எடுத்துச் செல்கின்றனர் பக்தர்கள்.  

ஸ்ரீமகாலட்சுமி சாப விமோசனம் கிடைக்கப் பெற்ற அற்புதமான காஞ்சிபுரத்துக்கு வந்து, அவளுக்கு விமோசனம் தந்த ஸ்ரீகாமாட்சி அம்பாளை மனமுருக வேண்டிக் கொள்ளுங்கள். இழந்தது அனைத்தையும் பெறுவீர்கள்.

- வேண்டுவோம்

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்