Published:Updated:

ஞானமலையில்... ஞான பூரண சக்தி வேல்!

ஞானமலையில்... ஞான பூரண சக்தி வேல்!

பிரீமியம் ஸ்டோரி

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் வழியில், சுமார் 14 கி.மீ தொலைவில் உள்ள கோவிந்தசேரி கிராமத்தில் அமைந்திருக்கிறது ஞானமலை திருக்கோயில். பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்ட இந்தக் கோயில் அருணகிரி நாதரால் திருப்புகழில் போற்றிப் பாடப்பட்ட திருத்தலம்.  வள்ளிமலையில் வள்ளியை மணந்த முருகன் திருத்தணிகைக்கு செல்லும் வழியில் ஞானமலையில் பொழுதுபோக்கி மகிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தலத்தில் முருகப்பெருமான் பிரம்மசாஸ்தா வடிவம் பெற்று ஒரு முகம், நான்கு கைகளுடன் காட்சியளிக்கிறார்.

ஞானமலையில்... ஞான பூரண சக்தி வேல்!

முருகப்பெருமான் பிரம்ம சாஸ்தா திருக்கோலத்துடன் தனித்து அருள்வதை பல கோயில்களில் தரிசிக்க இயலும். ஆனால், இங்கு மட்டும்தான் அந்தத் திருக்கோலத்தில் வள்ளிதேவியுடனும் எழுந்தருளியுள்ளார். மிக ஒதுக்குப்புறமான ஒரு குக்கிராமத்தில் இக்கோயில் அமைந்திருப்பதால், பல ஆண்டுகளாக மக்களால்  பெரிதும் அறியப் படாமல் இருந்தது. 1998ஆம் ஆண்டுக்கு பிறகு கோயில் பற்றி முழுவதுமாகத் தெரிய வந்தது.

ஞானமலையில்... ஞான பூரண சக்தி வேல்!

இதன் சிறப்பை உணர்ந்த முருக பக்தர்கள் ஒன்றிணைந்து ஞானாச்ரமம் என்ற அறக்கட்டளையைத் தொடங்கி, கோயிலின் வளர்ச்சிக்கும் மலை மேல் உள்ள முருகனை தரிசிக்க வரும் மக்களுக்கு உதவும் வகையில் பல வசதிகளை செய்து கொடுத்துள்ளனர். இந்த நிலையில் தற்போது... விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் விழாக்கள் நடத்தும் வகையில், இங்கு மண்டபம் ஒன்று அமைக்க அறக்கட்டளை அன்பர்கள் திட்டமிட்டனர். முருகன் திருவருளால் விரைவிலேயே அன்பர்களின் எண்ணம் நிறைவேறியது. மிக அழகுற எழும்பியது ஞானவேல் மண்டபம். இதன் முகப்பில் உள்ள 25 அடி உயர வேலின் அமைப்பு வேறெங்கும் காணப்படாத ஒன்று. இந்த வேலின் இலைப்பகுதி மட்டும் 6 அடி உயரம் கொண்டது.

கடந்த நவம்பர் 27ம் தேதியன்று இந்த மண்டபம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திறக்கப்பட்டது. அத்துடன், ஞானத்தின் சொரூபமாகிய 'ஞான பூரண சக்தி’ என்ற ஆறடி உயர வேலும் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டது. 29ம் தேதி ஸ்ரீஞானபண்டித ஸ்வாமிக்கு லட்சார்ச்சனை, ஞானாச்ரமம் திருமாளிகையில் குறமகள் தழுவிய குமரன், அருணகிரிநாதர் உற்ஸவ மூர்த்திகளுக்கு விசேஷ அபிஷேக ஆராதனை,  அருணகிரிநாதருக்கு அருட்காட்சி ஆகிய வைபவங்கள் நிகழ்ந்தன. 30ஆம் தேதி  'ஞான பூரண சக்தி’ எனும் ஞான வேலுக்கு விசேஷ அபிஷேகம் நடைபெற... தொடர்ந்து வேல்மாறல் பாராயணம் மற்றும் சிறப்பு வழிபாடுகளுடன் இனிதே நிறைவடைந்தது திருவிழா!    

- ரெ.சு.வெங்கடேஷ்

படங்கள்: ஜெர்ரி ரெனால்டு விமல்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு