Published:Updated:

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

ஸ்ரீஐஸ்வரிய லட்சுமிக்கு  தாமரை அர்ச்சனை!

பழங்காலத்தில் மன்னர்கள் விலைமதிப்பில்லா ஆபரணங்கள், பொக்கிஷங்கள் மற்றும் கருவூலங்களை பாதுகாக்க அரண்கள், தகுந்த பாதுகாவலர்கள் என வைத்திருந்தாலும், ஸ்ரீசொர்ண பைரவரின் அருட்கடாட்சமும் அவசியம் என்பதை உணர்ந்து அவரை வழிபட்டு வந்தார்கள். செல்வங்கள்  நிலையாகவும், களவு போகாமலும்,  வளம் பெருகிட வும் இந்த சொர்ணபைரவர் அருள்புரிகிறார்.
 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

அந்த வகையில் பொதுமக்களும் ஸ்ரீசொர்ண பைரவரின் பேரருளைப் பெற்று மகிழும் வண்ணம், கடந்த நவம்பர் 23-ம் நாள், சென்னை மயிலாப்பூரில் சிவசுந்தரிகலைக்கூடம் அமைப்பின் சார்பில்,  சொர்ணபைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதில், பக்தர்கள் தங்கள் கையால் 108 பஞ்சலோக கிண்ணங்களில் தேன் எடுத்து, சொர்ண பைரவருக்கு அபிஷேகித்து வழிபட்டது குறிப்பிடத்தக்கது.

பொன் - பொருளை காப்பது சொர்ண பைரவர் என்றால், அந்த செல்வகடாட்சத்தை அருள்வது மகாலட்சுமி அல்லவா? அந்த தேவியின் திருவருளைப் பெறும் வகையில், வரும் டிசம்பர் -12, வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு வழிபாடு செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

துர்வாசரின் சாபத்தால் செல்வ வளங்களை இழந்த தேவர்கள், அவற்றை மீண்டும் பெறும் பொருட்டு பாற்கடலைக் கடைந்த கதை, நாமறிந்ததே! அப்போது, அமிர்தம் மட்டுமின்றி பல்வேறு செல்வ பொக்கிஷங்களும் வெளிவந்தன. மகாலட்சுமி யும் தோன்றி அருள்பாலித்தாள். அதனால் அவளை பாற்கடல் தந்த பாவை எனப் போற்றுவர். இங்ஙனம் திருமகள் பாற்கடலில்
தோன்றியது கார்த்திகை மாதம் வளர்பிறை பஞ்சமி தினம். இதை ஸ்ரீபஞ்சமி எனச் சிறப்பிப்பார்கள். இந்த தினத்தில் திருமகளை ஐஸ்வரிய லட்சுமியாக பாவித்து வழிபடுவ தால், சகல செல்வங்களும் கிடைக்கும். இயலாதவர்கள் கார்த்திகை வெள்ளிக் கிழமைகளில் வழிபடலாம்.

இதன் அடிப்படையில் பக்தர்களுக்காக சென்னை- மயிலாப்பூர், கிழக்கு மாடவீதியில் உள்ள வாணியர் மண்டபத்தில், சிவசுந்தரி கலைக்கூடம் சார்பில் ஐஸ்வரிய மகா லட்சுமிக்கு 1008 தாமரைப் பூக்களால் அர்ச்சனை நடைபெற உள்ளது. இதற்காக பிரத்யேகமாக (படத்தில் நீங்கள் தரிசிக்கும்) ஐஸ்வர்ய லட்சுமி சிலை ஒன்றும் உருவாக்கப் பட்டுள்ளது. பூஜை தினமான டிசம்பர்-12 அன்று காலை 9 மணிக்கு ஹோமத்துடன் தொடங்குகிறது இந்த பூஜை. நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை, பக்தர்களே தாமரைப் பூக்களால் அர்ச்சனை செய்து திருமகளின் அருள் பெறலாம்.

- ரெ.சு.வெங்கடேஷ்
 படங்கள்: ஜெர்ரி ரெனால்டு விமல்,  ம.வருண் பிரசாத்

லிங்க வடிவில் தெய்வங்கள்!

லிங்கத் திருமேனி சிவனுக்கே உரியது என்பார்கள். ஆனால் வடநாட்டில் உள்ள சில திருத்தலங்களில், நவகிரகங்களும் ரிஷிகளும்கூட லிங்கத் திருமேனியராகக் காட்சி தருகின்றனர்.

வியாச காசியில் வியாசர், சுகர், வியாசேஸ்வரர் ஆகியோர்  லிங்கத் திருமேனிகளாக காட்சி தருகின்றனர். உஜ்ஜயினி ஸ்ரீமகா காளேஸ்வரர் ஆலயத்தில் நவகிரகங்களும், சப்த ரிஷிகளும் லிங்கத் திருமேனியராக அருள்கின்றனர். இங்கே சந்நிதி கொண்டிருக்கும் அருந்ததியும் லிங்க ரூபமாகக் காட்சி தருகிறாள். அமர்நாத் பெருங்குகையில் உள்ள அம்பாளும் லிங்க வடிவிலேயே அருள்பாலிக்கிறாள்.

- முத்து.இரத்தினம், சத்தியமங்கலம்

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

நட்சத்திர பிருந்தாவனம்!

சேலம், ஈஸ்வரன் கோயில் அருகில் அமைந்துள்ளது, வாசவி சுபிட்ஷா ஹால்.  ‘வாசவி மகிளா சமாஜம்’ எனும் அமைப்பால் நிர்வகிக்கப்படும் இந்த மண்டபத்துக்கு அருகில், அஸ்வினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களுக்குமான 27 மரங்கள் உள்ளன.  சுமார் 270 அடி சுற்றளவு கொண்ட இடத்தில், அந்தந்த நட்சத்திரக்காரர்கள், அந்தந்த நட்சத்திரத்துக்கு உரிய மரங்களை வழிபடும் வகையில், பிருந்தாவனம் போல் அமைத்துப் பராமரித்து வருகின்றனர். நடைபாதையில் அக்குபஞ்சர் சிகிச்சை முறையிலான கற்களையும் பதித்துள்ளனர். இங்கு வலம் வரும்போது, இயற்கையான சூழலும் மூலிகைக் காற்றும் உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்வு கிடைக்கும்!

- இரா.கணேசன், சேலம்

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

சப்த ராம திருத்தலங்கள்

தமிழகத்தில் ஸ்ரீராமபிரான் மூலவராக எழுந்தருளியிருக்கும் திருத்தலங்கள் ஆறு. அவை: திருச் சீராமவிண்ணகரம், திருப்புல்லாணி, திருப்புள்ளம்பூதங்குடி, திருவெள்ளியங்குடி, திருப்புட்குழி, திருநவ்வளூர். இவை தவிர, வடக்கே திரு அயோத்தி நகரும் சேர்ந்து ‘சப்த ராம திருத்தலங்கள்’ எனச் சிறப்பிக்கப்படுகின்றன.

 - சரோஜா ஸ்ரீநிவாஸன், மும்பை

மூன்றாம் பிறை தரிசனம்!

‘மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும்’ என்பார்கள். அமாவாசை கழித்து வரும் மூன்றாம் நாள் சந்திரனைத் தரிசிப்பதே, மூன்றாம் பிறை தரிசனம் ஆகும். அப்படித் தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படும் என்பது நம்பிக்கை. அன்று நெய் தீபம் ஏற்றி வழிபடுவதால், கூடுதல் பலன் கிடைக்கும். அதேபோல், மூன்றாம் பிறை திங்கட்கிழமையுடன் பொருந்தி வருவது, மிக விசேஷம்.

- வி.ராமலக்ஷ்மி, திருநெல்வேலி

சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடுகள்...

சென்னை- ஆதம்பாக்கத்தில் அமைந்துள்ளது ஸ்ரீதேவி நாகமுத்து மாரியம்மன் ஆலயம். இங்கே, சர்வ மங்கள ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு தனிச் சந்நிதி உள்ளது. சுமார் ஆறடி உயரத்துடன் விஸ்வரூப கருணையும் சாந்தமுமாக அருள்பாலிக்கிறார், இந்த சனிபகவான். இந்த கோயிலில் சனிப்பெயர்ச்சியையொட்டி, வரும் 15.12.14 மற்றும் 16.12.14 ஆகிய தேதிகளில், சனிப்பெயர்ச்சி மஹா யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் விமரிசையாக நடைபெற உள்ளன. பக்தர்கள் இந்த வைபவங்களில் கலந்துகொண்டு ஸ்ரீசனிபகவானின் அருள்பெற்றுச் செல்லலாம்.

- ஸ்ரீதேவி நாகமுத்து மாரியம்மன் பக்த ஜன சங்கம், சென்னை-88.

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

திருவாரூரில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கொள்ளிக்காடு. இங்கே ஸ்வாமியின் திருநாமம் - ஸ்ரீஅக்னீஸ் வரர். இங்கே ஆயுதங்களுக்கு பதிலாக, கையில் கலப்பை ஏந்தியபடி அருட்காட்சி தருகிறார் ஸ்ரீசனீஸ்வரர். இவரை வணங்கினால் தொழில் வளர்ச்சி, பொன் - ஆபரணங்கள் சேர்க்கை, சந்தான பாக்கியம், வீடு - மனை யோகம் என சகல செளபாக்கியங்களும் பெருகும். எனவே இவரை பொங்கு சனீஸ்வரர் என்கின்றனர் பக்தர்கள்!

வரும் 16.12.14 அன்று நடைபெற உள்ள சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு,  இந்தக் கோயிலில் சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடைபெற உள்ளன. மேலும் டிசம்பர் 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில், லட்சார்ச்சனையும் பரிகார ஹோம பூஜையும் விமரிசையாக நடைபெற இருக்கின்றன; பக்தர்கள் கலந்து கொண்டு அருள்பெறலாம்.

- தை.ஜெயபால், திருக்கொள்ளிக்காடு

சென்னையில்... வைக்கத்து அஷ்டமி விழா!

கார்த்திகை மாதம், கிருஷ்ணபட்ச அஷ்டமியன்று கேரள மாநிலம், வைக்கம் தலத்தில் உள்ள ஸ்ரீமகாதேவ ஸ்வாமிக்கு விசேஷ அபிஷேகம் நடைபெறும். இந்தத் திருநாளை ‘வைக்கத்து அஷ்டமி விழா’ எனப் போற்றுவர். இந்த நாளில், பூஜையில் தரப்படுகிற பிரசாதத்தை, நம்முடன் சிவ-பார்வதியும் சேர்ந்து சாப்பிடுவதாக ஐதீகம். எனவே, இந்த பிரசாதத்தைச் சாப்பிட்டால், தீராத நோயும் தீரும். சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது நம்பிக்கை.

சென்னையில், சிருங்கேரி ஸ்ரீபாரதிதீர்த்த மகா சுவாமிகளின் ஆசீர்வாதத்துடன் ‘சென்னை ம்ருகசீருஷம் கமிட்டி’யின் சார்பாக, வருடந்தோறும் வைக்கத்து அஷ்டமி விழா சிறப்புற நடைபெறுகிறது! இந்த வருடம், வரும் டிசம்பர்-14 ஞாயிற்றுக்கிழமை அன்று, சென்னை- நங்கநல்லூரில் உள்ள ஸ்ரீஐயப்பன் கோயிலில், ஸ்ரீமகாதேவ அஷ்டமி பூஜையும் ஏகாதச ருத்ர ஜபம் மற்றும் அபிஷேக அர்ச்சனையும் நடைபெறுகிறது. தொடர்ந்து தீபாராதனையும், அன்னதானமும் நடைபெறும். இதில், பக்தர்கள் கலந்துகொண்டு இறையருள் பெறலாம்.

- கிருஷ்ணமணி, சென்னை-24

வாசகர்களே...

ஆன்மிகம் சம்பந்தமான உங்கள் அனுபவங்கள், சந்தேகங்கள், உங்களுக்குத் தெரிந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளும் பகுதி. ‘உங்களுடன்... நீங்கள்.’ அனுப்பவேண்டிய முகவரி ‘சக்தி சபா’சக்தி விகடன்,  757, அண்ணா சாலை, சென்னை-600 002.