சிறப்பு கட்டுரை
வாசகர் பக்கம்
Published:Updated:

மகிமைமிகு புராணங்கள்!

மகிமைமிகு புராணங்கள்!

மது பண்பாடு, பக்தி, நம் முன்னோரின் சிந்தனைச் செல்வங்கள் ஆகியவற்றுக்கு சாட்சியாக திகழும் ஞானப்பொக்கிஷங்கள் நமது புராணங்கள். இவற்றை உணர்ந்து படிப்பது மிகுந்த புண்ணியமாகும். இந்த கருத்தை வலியுறுத்தும் திருஞானசம்பந்தரின் மதுரை பதிகம் ஒன்று, புராணத்தை ‘சூதன் ஒலி மாலை’ என்கிறது.

புராணங்களை தொகுத்தது வியாசர்தான் என்றாலும், அவற்றை மக்கள் மனம் கொள்ளுமாறு எடுத்துரைத்தது, சூதமாமுனிவர். ஆக, புராணங்கள் சூதமுனிவரின் வாய்மொழியாக ஒலிவடிவில் வெளிப்பட்டதால் ‘சூதன் ஒலி மாலை’ என்கிறார் திருஞான சம்பந்தர். இனி, அந்த பதிகத்தைக் காண்போம்.

வேத முதல்வன் முதலாக விளங்கி, வையம்
ஏதப் படாமமை உலகத்தவர் ஏத்தல் செய்யப்
பூத முதல்வன் முதலே முதலாகப் பொலிந்த
சூதன் ஒலிமாலை என்றே கலிக்கோவை என்ற சொல்லே!

மகிமைமிகு புராணங்கள்!

‘வேதங்கள் முழுமுதற் கடவுளாக சிவனாரைப் போற்றுகின்றன. உலகத்தவர் துன்பப்படாமல் இருக்கும் பொருட்டு, வேத முதல்வனான அவனது பெருமைகளை அறிந்து போற்றி, மேன்மை அடையும் விதம், பூத நாயகனான சிவபெருமானின் பெருமைகளை விளக்கிச் சூதன் திருவாய் மலர்ந்தான். அவன் வாய் மலர்ந்த ஒலிமாலை மகிழ்வு தரும் கோவையாகப் புராணங்கள் விளங்குகின்றன. அவற்றை உணர்ந்து படித்து மேன்மை பெற வேண்டும்’ என்பதே இப்பாடலின் கருத்து.

இந்த பாடலின் பொருள் விளக்கமாக சேக்கிழார் என்ன பாடுகிறார் தெரியுமா?

வேத முதல்வன் என்னும் மெய்த் திருப்பாட்டினில் நேர்
ஆதி உலகத்தோர் இடர் நீங்கிட ஏத்த ஆடும்
பாதம் முதலாம் பதினெண் புராணங்கள் என்றே
ஒதுகு என்றுரை செய்தனர் யாவும் ஓதாது உணர்ந்தார்

- என்று அருளியிருக்கிறார் சேக்கிழார்.

இப்பாடலின் கருத்து: ‘ஞானத்தை ஓதாது உணர்ந்த திருஞான சம்பந்தர்... ஆதி உலக மக்கள் எல்லோரும் துன்பம் நீங்கி இன்பத்துடன் இருக்க வேண்டுமெனில், சிவபெருமானால் உரைக்கப்பட்டு, வியாசரால் தொகுக்கப்பட்டு, சூதமுனிவரால் விவரிக்கப்பட்ட பதினெட்டு புராணங்களையும் ஓதியுணர்ந்து சிவனருள் பெற்று வாழ்க என்று அருளியுள்ளார்’ என்பதாகும்.

இதன் மூலம் புராணங்களின் மேன்மையையும் மகிமையையும் உணர முடிகிறது. நாமும் புராணங்களைப் படித்தறிந்து, அவைகாட்டும் நல்வழியில் வாழ்ந்து வளம் பெறுவோம்.

- பூசை அருண வசந்தன், சென்னை-4