Published:Updated:

‘ஒளியே கடவுள்!’

153-வது திருவிளக்கு பூஜை

பிரீமியம் ஸ்டோரி
‘ஒளியே கடவுள்!’

‘‘ஆதியில், வெளிச்சத்தைக் கொடுப்பதற்காகவும், விலங்குகளிடம் இருந்து தப்பிப்பதற்காகவும் தீப்பந்தங்களும் விளக்குகளும் பயன்படுத்தப்பட்டன. சத்தியபாமாவுடன் பகவான், நரகாசுரனை அழிப்பதற்காகச் சென்ற வேளையில், ஸ்ரீமகாலட்சுமியானவள் தீபத்தில் குடியமர்ந்தாள். அன்று முதல், விளக்கை லட்சுமியின் அம்சமாகவும், விளக்கேற்றுவதை ஐஸ்வரியம் பெருக்கும் விஷயமாகவும் சொல்கின்றன புராணங்கள்’’ என்று பேராசிரியர் பெரிய.முருகன் பேசத் தொடங்கியதும் பெண்கள் உற்சாகமானார்கள்.

சக்திவிகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தும் விளக்கு பூஜை, கம்பம் தாத்தப்பர் கோயிலில் (ஸ்ரீநந்தகோபர் கோயில்) கடந்த 2.12.14 அன்று நடைபெற்றது. சக்திவிகடனின் 153-வது விளக்குபூஜை இது.

‘‘எல்லா மதங்களும் கடவுளை ஒளி வடிவாகவே பார்க்கின்றன. மகான்களும் முனிவர்களும்கூட, ஒளியே கடவுள் என்பதை வலியுறுத்தினார்கள். ஆண்டாளும் ஆழ்வார்களும் தீபத்தை கடவுளுக்கு நிகராகவே சொன்னார்கள். வள்ளுவரும் ஒளியின் மகத்துவத்தைக் குறள் வழியே வலியுறுத்தியுள்ளார். வள்ளலார் ஒரு தீபத்தை ஏற்றி, அதற்கு எதிரில் கண்ணாடியை வைத்து, ‘இதோ, கடவுள் தெரிகிறார். ஜெகஜ் ஜோதியாக, ஒளி ரூபமாகக் காட்சி தருகிறார்’ என்றார். நீங்களும் தினமும் விளக்கேற்றி அதன் தீப ஒளியில் இறைவனை வணங்குங்கள்.

நீங்கள் ஏற்றுவது வெள்ளி விளக்காகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை; ஒரு சின்ன மண் அகல் விளக்கைக் கொண்டும் தீபம் ஏற்றலாம். ஏனென்றால், மகாலட்சுமியானவள் தீபத்தில், அந்தச் சுடரில் அல்லவா குடியிருக்கிறாள்! ஆத்மார்த்தமாக விளக்கேற்றுங்கள். மங்கல கரமான  காரியங்கள் யாவும் இல்லத்தில் நடந்து, உள்ளத்துக்கு உரமேற்றும்’’ என்று பேராசிரியர் பெரிய.முருகன் பேசி முடிக்க, நெகிழ்ச்சியில் உறைந்திருந்தார்கள் வாசகிகள்.

‘ஒளியே கடவுள்!’

‘‘கம்பம்தான் நான் பிறந்த ஊரு. இப்ப சென்னைல இருக்கேன்.  எங்க ஊர்ல விளக்கு பூஜை நடக்கறது தெரிஞ்ச உடனே, புக் பண்ணிட் டேன். என் பையனும் பொண்ணும் சீரும் சிறப்புமா வாழணும். எங்க மதுரை ஜில்லா மட்டு மில்லாம, எல்லா ஊரும், எல்லா மக்களும் நல்லா இருக்கணும்’’ என 65 வயது வாசகி செல்லம், தன் பிரார்த்தனையைக்  கண்ணீர் பொங்கத் தெரிவித்தார்.

எல்லோரும் இன்புற்றிருக்க, தீபத்தில் வாசம் செய்யும் மகாலட்சுமி நிச்சயம் அருள்பாலிப்பாள்!

- வி.ராம்ஜி, 

 படங்கள்: வி.சக்தி அருணகிரி 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு