Published:Updated:

இதோ... எந்தன் தெய்வம்! - 45

பிரிந்த தம்பதியை ஒன்றுசேர்க்கும் மார்கழி மாத தரிசனம்!வி.ராம்ஜி

இதோ... எந்தன் தெய்வம்! - 45

பிரிந்த தம்பதியை ஒன்றுசேர்க்கும் மார்கழி மாத தரிசனம்!வி.ராம்ஜி

Published:Updated:

‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என்றார் திருமால். அதனால்தானோ என்னவோ, பெருமாள் கோயில்களில் அதிகாலையில் திருப்பள்ளியெழுச்சி என்ன... சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பிரமாதமாகக் காட்சி கொடுப்பது என்ன... என்று மார்கழி மாதம் முழுவதுமே வைஷ்ணவ ஆலயங்களில் பூஜைகளும் வழிபாடுகளும் அமர்க்களப்படும். அப்போது, ஏராளமான பக்தர்கள் பெருமாளை திவ்வியமாகத் தரிசனம் செய்வார்கள்.

காஞ்சி மாநகரில் அருள்பாலிக்கும் காமாட்சி அம்பாள் கோயிலில், பெருமாளும் சேவை சாதிக்கிறார். இங்கே, இவரின் திருநாமம்- ஸ்ரீகள்வர் பெருமாள். தாயாரின் திருநாமம் ஸ்ரீசெளந்தர்ய லட்சுமி. 108 திவ்விய தேசங்களில், காஞ்சிபுரத்தில் 18 திவ்விய தேசங்கள் அமைந்துள்ளன. அவற்றில், திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கள்வர் பெருமாள் ஆலயமும் ஒன்று.

காமாட்சி அம்மன் ஆலயத்தில், காயத்ரி மண்டபத்தில் அழகே உருவெனக் கொண்டு சேவை சாதிக்கிறார் ஸ்ரீகள்வர்பெருமாள். இவரை வணங்கினால், கணவன் மனைவிக்கு இடையிலான விரிசல்கள் குறைந்து, கருத்தொருமித்து வாழலாம் என்பது ஐதீகம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனைவிக்கு ஏதேனும் ஒன்று என்றால், துடித்துப் போய்விடுவதில் கடவுளுக்கும் நமக்கும் வேறுபாடு இல்லை. தன் மார்பிலேயே இடம் கொடுத்து மகாலட்சுமியை வைத்திருக்கும் பெருமாளுக்கு, சாபத்தால் மனைவி அரூபமாகிவிட்டதைக் கண்டு எப்படிப் பொறுத்துக் கொள்ளமுடியும்?

இதோ... எந்தன் தெய்வம்! - 45

சாபத்தில் இருந்து விமோசனம் பெறுவதற்காக, காயத்ரி மண்டபத்துக்கு வந்த மகாலட்சுமி, தவத்தைச் சரிவர செய்கிறாளா, அந்தத் தவத்துக்கு இடையூறுகள் ஏதும் நிகழ்கிறதா, அப்படி ஏதேனும் ஏற்பட்டால் அதிலிருந்து மனைவியையும் அவளின் தவத்தையும் காப்பது எப்படி... என்பதற்காகவே பெருமாளும் காயத்ரி மண்டபத்துக்கு வந்திருந்து, அதையெல்லாம் நோட்டமிட்டுக்கொண்டிருந்ததாகச் சொல்கிறது புராணம்.

எனவே, மார்கழி மாதத்தில் காமாட்சி அம்பாள் கோயிலுக்கு வந்து, கள்வர்பெருமாளை மனதாரத் தொழுதால், கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை கூடும்; பிரிந்த தம்பதியர் ஒன்றுசேருவார்கள் என்பது ஐதீகம்.  

ஆதிசங்கரர் ஸ்தாபித்த காஞ்சி சங்கர மடம், தனுர் மாத ஜபத்தையும் பூஜையையும் சிறப்புறச் செய்யக் கூடிய மடமாகத் திகழ்கிறது. காஞ்சி மகாபெரியவாள், தனுர் மாத ஜபத்தை மேற்கொண்டதையும் சந்திரசேகர பூஜையைச் சிறப்புறச் செய்தததையும் நாம் அறிந்திருப்போம்.

குறிப்பாக, திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி என மொத்தம் உள்ள அறுபது பாடல்களையும் அச்சிட்டு, காஞ்சி காமாட்சி அம்பாள் கோயிலுக்கும், தமிழகத்தில் உள்ள ஆலயங்களுக்கும், பள்ளிக்கூடங்களுக்கும் வழங்கி, அந்த 60 பாடல்களையும் மனப்பாடமாகச் சொல்லும் குழந்தைகளுக்கு தங்கக் காசுகளும், 30 பாடல்களை மனனமாகச் சொல்லும் குழந்தைகளுக்கு வெள்ளிக் காசுகளும் வழங்கி, தனுர் மாதத்தில் அம்பிகையை வழிபடுவதற்கான வழிமுறைகளை சொல்லித் தந்தருளியிருக்கிறார் காஞ்சி மகா பெரியவா.

காஞ்சியின் மகாராணி யாகவும், லோகத்துக்கே மாதாவாகவும் கோலோச்சும் காமாட்சி அம்பாளுக்கு, மார்கழி பிறக்கும் நாளில் இருந்து தினமும் நான்கு காலங்களிலும் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.

சிவனாருக்கு உரிய திருவாதிரை நன்னாளில், ஆருத்ரா தரிசனம் எனும் புண்ணிய நாளில், காமாட்சி அம்பாளுக்கு நெய்க்காப்பு செய்யப்படும். குளிர்ந்த மார்கழியில், அம்பாளுக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள்.

அதையடுத்து, காலையில் அம்பாள் நான்கு ராஜவீதிகளிலும் புறப்பாடாகி, வீதியுலா வருவாள். அப்போது, சர்வ அலங்காரத்தில் ஜொலிக்கும் அம்பாளைத் தரிசனம் செய்தாலே, நம் பாவமெல்லாம் பறந்தோடிவிடும். பிறகு, கோயிலின் காவிரி மண்டபத்தில் எழுந்தருள்வாள் அம்பிகை. அப்போது களி நைவேத்தியம் படைத்து வழிபடுவார்கள்.

அடுத்து, பொங்கல் பண்டிகை நெருங்கும் வேளையில், கனு உத்ஸவ விழா நடைபெறும். பிள்ளையார் புறப்பாடாகி வருவார். அதைத் தொடர்ந்து, அன்னை காமாட்சி அம்பாள் வீதியுலா வருவாள். பிறகு, கோயிலின் கனுமண்டபத்தில், ஆறு நாள் மண்டகப்படி அமர்க்களப்படும்.

 மாட்டுப்பொங்கல் அன்று, கனு உத்ஸவம் பூர்த்தியடையும். அன்று மாலை 4.30 மணிக்கு மேல் காமாட்சி அம்பாள் திருவீதியுலா வருவாள். சுக்ரவார மண்டபத்தில் கோ பூஜை நடைபெறும். கீழ ராஜவீதி வரை வீதியுலா வரும் அம்பாள், திரும்பவும் கனு மண்டபத்தில் எழுந்தருள்வாள். அங்கே உத்ஸவக் காமாட்சிக்கு அபிஷேக ஆராதனைகள் அமர்க்களப்படும்.  உத்ஸவ அம்பாளின் அபிஷேக தரிசனம் என்பது அந்த ஒருநாள் மட்டுமே காணக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்கழியில், உடலும் மனமும் குளிர்ந்திருக்கிற அந்த நாட்களில், முனிவர்களும் ஞானிகளும் தவத்துக்கு உகந்த காலம் எனப் போற்றும் தனுர் மாத காலத்தில், அன்னை காமாட்சி அம்பாளை கண் குளிரத் தரிசித்து, மனம் ஒருமித்து வேண்டிக் கொள்ளுங்கள்.

அப்படியே கள்வர்பெருமாளையும் ஸ்ரீசெளந்தர்ய லட்சுமியையும் மனதார வேண்டிக் கொள்ளுங்கள். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். கருத்து வேற்றுமைகள் அகலும்.

பிரிந்தவர்களை ஒன்று சேர்த்து வைக்கும் பேசும்தெய்வத்தை, காமாட்சித் தாயை மார்கழியில் தரிசியுங்கள். மனம் ஒருமித்து வாழ்வீர்கள்.

 - வேண்டுவோம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism