வாழ்க்கையில் ஒரு நல்லது நடந்தால் போதும். அதையடுத்து பல நல்லவைகள் வரிசைகட்டி வந்து, நம்மை வாழ்வாங்கு வாழச் செய்யும். இது சக்திவிகடன் நடத்துகிற ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நிரூபணமாகிக்கொண்டே வருகிறது. வாசகர்களின் நலனுக்காகவும் உலக நன்மைக்காகவும் சக்திவிகடன் ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு விதமான பூஜை வழிபாட்டு வைபவங்களை நடத்தி வருவதை வாசகர்களாகிய நீங்கள் அறிவீர்கள்.

அந்த வரிசையில், கடவுளின் தேசம் என்று சொல்லப்படும் கேரளத்தில், சபரி மலை ஸ்ரீஐயப்ப ஸ்வாமிக்கு, கடந்த சித்திரைப் பிறப்பையொட்டி, சிறப்பு விபூதி அபிஷேகம் செய்து, அதை வாசகர்களாகிய உங்கள் அனைவருக்கும் தந்து மகிழ்ந்தது சக்திவிகடன். இதோ... ஸ்ரீஐயப்ப ஸ்வாமிக்கு உகந்த கார்த்திகை மாத வேளையில், உலகம் முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்கள், மாலையணிந்து விரதம் அனுஷ்டிக்கும் இந்த தருணத்தில், சபரிகிரிவாசனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யத் திட்டமிட்டது உங்கள் சக்திவிகடன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
''நல்ல விஷயங்களை, உலக நன்மைக் கான சத்காரியங்களை தொடர்ந்து செய்துக் கிட்டே

இருக்கணும். அப்பதான் நம்ம தேசம் வளமுடன் இருக்கும். வாசகர்களுக்காகவும் உலக மக்களின் நலனுக்காகவும் சபரிமலையில் செய்கிற இந்த பூஜையில் என்னையும் சக்தி விகடனுடன் இணைத்துக் கொள்ளுங் கள்'' என்று உற்சாகம் பொங்கத் தெரிவித்த சென்னை ஸ்ரீகாளிகாம்பாள் கோயிலின் சண்முக சிவாச்சார்யர், அபிஷேக தேவைக் காக... கெமிக்கல் பயன்படுத்தப்படாத, எந்தக் கலப்படமும் இல்லாத சுத்தமான விபூதியை, தம் தந்தை சாம்பமூர்த்தி சிவாச்சார்யர் பெயரில் நடத்திவரும் அறக்கட்டளையின் சார்பில் வழங்கினார்.
இந்த முறை, ஸ்ரீஐயப்ப ஸ்வாமிக்கு விபூதி அபிஷேகம் செய்வதுடன், மாளிகைபுரத்து மாதாவுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்து, அந்தப் பிரசாதத்தையும் சேர்த்து வழங்கலாமே என்று யோசித்தோம்.
''ரொம்ப நல்ல விஷயம். சிருங்கேரி மடத்துக்காக, பெரியவாளின் அனுக்கிரகத்தோடு விபூதி, குங்குமம், மஞ்சள் தயாரிக்கிறோம். இது தெய்வ சங்கல்பம். ஆண்டவன் கட்டளை. மாளிகைபுரத்து அம்மனுக்கு அபிஷேகம் பண்ணி, வாசகர்களுக்குக் கிடைக்கிற மஞ்சள், சிருங்கேரி மடத்துக்காக தயார் செய்யப்பட்ட மஞ்சளா இருக்கட்டும்.'' என்று திருநெல்வேலியைச் சேர்ந்த வைரம் மார்க் மஞ்சள், குங்குமம் நிறுவனத்தின் உரிமையாளர் காசி விஸ்வநாதன் மிக நெகிழ்ச்சியுடன் அபிஷேகத்துக்கான மஞ்சளை வழங்கினார்.
''வழக்கம்போல், இந்த முறையும் சபரி மலையில் பூஜை ஏற்பாடுகளைச் செய்து தரவேண்டும்'' என்று பிரபல ஐயப்பப் பாடகர் வீரமணி ராஜூவிடம் தெரிவிக்க, மனிதர் உற்சாகமாகிவிட்டார். ''ஒரு ஐயப்ப பக்தரா, பாடகரா எத்தனையோ முறை சபரிமலைக்குப் போயிருக்கேன். ஆனா, லட்சக்கணக்கான வாசகர்களுக்காக, உலக நன்மைக்காக இப்படியொரு பூஜையும் அபிஷேகமும் செய்றதுக்காக ஐயப்பனைப் பாக்கப் போறது, என் இந்த ஜென்மத்துக் கொடுப்பினை'' என்று நெகிழ்ந்தவர், அவரின் நண்பர் நாகசுந்தரத்திடம் தொடர்புகொண்டு தந்திரி, மேல்சாந்தி ஆகியோரிடம் சக்திவிகடன் நடத்தும் விசேஷ அபிஷேகம் பூஜை குறித்த விவரங்களைத் தெரிவித்தார். நாகசுந்தரம் என்பவர், சிறந்த ஐயப்ப பக்தர். பலவருடங்களாக, மாதந்தோறும் ஐயப்ப ஸ்வாமிக்கு பட்டு வஸ்திரங்களை அனுப்பி வைப்பவர். அவர் அபிஷேக பூஜைக்கு சிறப்பான முறையில் ஒருங்கிணைப்பு உதவிகளைச் செய்துகொடுத்தார்.

விபூதி மற்றும் மஞ்சளை எடுத்துக் கொண்டு, கடந்த டிசம்பர் 2ஆம் தேதி இரவு, சபரிமலைக்குச் சென்றோம். அற்புதமான தரிசனம். 'காலையில் 6.30 மணிக்கெல்லாம் அபிஷேகம் செய்து விடலாம்’ என்று மேல்சாந்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
3ம் தேதி. விடிந்தது. மலையில் எங்கு திரும்பினாலும் பக்தர்கள்... பக்தர்கள்... லட்சக்கணக்கான பக்தர்கள்! காவி நிறமும் கறுப்பு நிறமுமாக மலையின் வண்ணமே மாறிவிட்டிருந்தது. எங்கெங்கும் சரண கோஷம். சபரிமலை தேவஸ்தானத்தின் கீழ்சாந்தி கோவிந்தன் நம்பூதிரி நம்மை அன்புடன் வரவேற்றார். 'ஓ... விகடனோ. அறியும்அறியும்’ என்று விபூதி, மஞ்சளைத் தொட்டு ஆசீர்வதித்தார். அதையடுத்து மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரியைச் சந்தித்தோம். 'விகடனும் பரிச்சயம். வீரமணிராஜூவும் பரிச்சயம்’என்று சொல்லிவிட்டு, 'பள்ளிக்கட்டு பாடணும். இந்த விபூதியைஇட்டுக் கொள்கிற எல்லாருடைய பாவங்களும் போகணும்’ என்று சொல்லி, வீரமணி ராஜூவைப் பாடச் சொல்ல... தன் மகன் அபிஷேக்குடன் கணீர்க் குரலெடுத்துப் பாடினார் வீரமணி ராஜூ. பாடலின்போது விபூதி, மஞ்சளைத் தொட்டு, கண்கள் மூடி பிரார்த்தித்து, 'ஐயப்பா... ஐயப்பா...’ என்று சொல்லி ஆசீர்வதித்தார் மேல்சாந்தி. தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஜெயன் என்பவரை அழைத்து, அபிஷேகத்துக்கான எல்லா உதவிகளையும் செய்துதரச் சொன்னார்.

அதையடுத்து லட்சக்கணக்கான பக்தர்கள், கடும் விரதமிருந்து தரிசிக்கிற ஹரிஹரபுத்ரனின் சந்நிதிக்குச் சென்றோம். அவருக்கு ஜவ்வாது மணம் கமழும் விபூதியின் அபிஷேகம் சிறப்புற நடந்தது. வரிசையாக நெய்யபிஷேகம் நடக்கும் வேளையில், இந்த விபூதி அபிஷேகத்தைக் கண்டு, வரிசையில் நின்றிருந்த பக்தர்கள், நெக்குருகிப் போனார்கள். 'சுவாமியே சரணம் ஐயப்பா’ என்று கோஷமிட்டார்கள்.
அதன் பிறகு, ராஜீவரு தந்திரியிடம் இருந்து அழைப்பு வரவே, அவரின் அறைக்குச் சென்றோம்.''மக்களும் உலகமும் சுபிட்சமாக இருக்கஐயப்பன் அருள்வான். உலகம் முழுவதும் இருக்கிற விகடன் வாசகர்கள், கொடுத்து வைத்தவர்கள். எவருமே செய்யாத முயற்சி இது. இதன் மூலமாக, ஐயப்ப ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்த விபூதி, எல்லார் வீடுகளுக்கும் செல்லப் போகிறது. மாளிகைப்புரத்து அம்மைக்கு அபிஷேகம் செய்யும் மஞ்சள், எல்லார் வீடுகளிலும் மங்கல காரியங்களை நடத்தித் தர துணையிருக்கும்!'' என்று, ஆசி வழங்கினார்.
தந்திரியின் அறையில் இருந்து வெளிவரும்போது, மாளிகைபுரத்து மேல்சாந்தியிடம் இருந்து அழைப்பு வந்தது. ''பெண்கள் செளக்கியமா, சந்தோஷமா இருந்தாத்தான் அந்த வீடும் நாடும் வளமா இருக்கும். அப்படி பெண்கள் நல்ல கணவரோட, அறிவான குழந்தைகளோட, அன்பான உறவுகளோட இருக்கறதுக்கு, இந்த மஞ்சள் பிரசாதம் துணை இருக்கும். மாளிகைபுரத்து அம்மை எப்பவும் துணை இருப்பா! சக்திவிகடனோட கைங்கர்யம் இன்னும் தொடரணும்'' என்று வாழ்த்தி, ஆசீர்வாதம் செய்தார். அதையடுத்து, புதிய மஞ்சள் பட்டு வஸ்திரம் சார்த்தப்பட்டு, மாளிகை புரத்து மாதாவுக்கு மஞ்சளால் அபிஷேகம்செய்யப்பட்டது. அம்மனின் மேலேஏற்கெனவே அபிஷேகம் செய்யப்பட்ட மஞ்சளையும் எடுத்து அப்படியே அள்ளிச் சேர்த்து நம்மிடம் வழங்கினார்கள்.
சிறப்பு தரிசனம், விசேஷ அபிஷேகம், தந்திரி மற்றும் மேல் சாந்திகளின் ஆசி... என நினைத்தபடியே அனைத்தும் நிறைவாக நடக்க, நெகிழ்ந்து போனோம். சபரிமலை தேவஸ்தானம், நாகசுந்தரம்,ஜெயன் நம்பூதிரி, வீரமணிராஜூ என அனைவ ருக்கும் நன்றியைத் தெரிவித்தோம்.

''இப்படியொரு பூஜையைச் செய்த சக்தி விகடனுக்கு நாங்கதான் நன்றி சொல்லணும். ஐயப்ப சந்நிதிலயும் அம்மன் சந்நிதிலயும் பாட்டு. தந்திரிலேருந்து மேல்சாந்தி வரைக்கும் எல்லாரும் பாடச் சொல்லிக் கேட்டது, இந்த பூஜைக்கு அணில் மாதிரி உதவின எனக்கு, ஐயப்ப ஸ்வாமி வழங்கிய ஆசீர்வாதம்'' என உணர்ச்சிவசப்பட்டு பேசினார் வீரமணி ராஜூ.
இத்தனை மகிமையும் பெருமையும் நிறைந்த ஐயப்ப ஸ்வாமியின் விபூதி யும் மாளிகைபுரத்து அம்மனுக்கு அபி ஷேகித்த மஞ்சளும்.... அருட்பிரசாதமாக... இதோ... உங்கள் கரங்களில்!
'ஸ்வாமியே சரணம் ஐயப்பா’ என்று மூன்று முறை சொல்லி, அவனைச் சரணடைந்து விபூதியை இட்டுக் கொள்ளுங்கள். 'மாளிகைபுரத்து அம்மையே போற்றி’ என்று சொல்லி, மஞ்சள் பிரசாதத்தை, திருமணமான பெண்கள், உங்கள் தாலிச்சரடிலும் நெற்றியிலும் நெற்றி வகிட்டிலும் இட்டுக் கொள்ளுங்கள். உங்கள் உள்ளமும் இல்லமும் ஒளிபெறும். சபரிகிரீசனின் அருளால் சகல சுபிட்சங்களும் கைகூடும். மாளிகைபுரத்தாளின் மகிமையால், சர்வ மங்கலங்களும் ஸித்திக்கும்.
-ஸ்வாமி சரணம்!
படங்கள்: வீ.சக்தி அருணகிரி