மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இதோ... எந்தன் தெய்வம்! - 46

வீடு யோகம் தருவாள்...வாஸ்து தோஷம் தீர்ப்பாள்!வி.ராம்ஜி, படங்கள்: மு.கார்முகில்வண்ணன்

ந்தக் காலத்தில் எப்படியோ, தெரியவில்லை... இந்தக் காலத்து இளைஞர்களோ யுவதிகளோ, யாராக இருந்தாலும் படித்தவுடன் வேலைக்குச் செல்ல வேண்டும்; சம்பாதித்து நாலு காசு சேர்க்க வேண்டும்; அப்படிச் சேர்த்து வைத்த காசைக் கொண்டு புறநகர்ப் பகுதியில் மனை வாங்கவேண்டும்; முடிந்தால் வங்கிக் கடனோ உடனோ போட்டு, அங்கே ஒரு சொந்த வீடு கட்டிக்கொள்ள வேண்டும். இதுதான் நடுத்தர வர்க்கத்தின் உச்சபட்ச கனவு, லட்சியம், ஆசை எல்லாமே!

இதோ... எந்தன் தெய்வம்! - 46

அதே நேரம், 'சொந்த வீடுங்கறதெல்லாம் பெரிய விஷயம். எல்லாத்துக்கும் பிராப்தம் இருக்கணும். கடவுள் அனுக்கிரகம் இருந்தாத்தான், கையில இருக்கிற காசு, வீடு வாசலா மாறும்’ என்று அலுத்துக்கொள்கிறவர்கள் இங்கே அதிகம்.

இப்படி அலுப்புடனும் ஏக்கத்துடனும், ஆசையாகவும் லட்சியமாகவும் வீடு பற்றிச் சிந்திக்கிற அன்பர்களுக்கு அருள் வழங்கி, சொந்த வீடு எனும் யோகத்தைத் தந்தருள்கிறாள் காமாட்சி அன்னை.

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றிருக்கிறீர்களா? அங்கே, பிராகாரத்தை வலம் வரும்போது, பஞ்ச கங்கை தீர்த்தக் குளத்தைப் பார்க்கலாம். அந்தக் குளத்துக்கு அருகில் ஒரு வேப்ப மரம் இருக்கிறது. அந்த மரத்தடியில் சித்த புருஷர்கள், உலகுக்கே அன்னையாகத் திகழும் காமாட்சி தேவியை நோக்கி, இன்றைக்கும் தவமிருந்து கொண்டிருப்பதாக ஐதீகம்!

சிவனாருக்கு எப்படி வில்வமரமோ, பெருமாளுக்கு எப்படி துளசியோ, அதுபோல் அம்பிகைக்கு உகந்த வேம்பு ஆலயத்தில் இருந்தாலே அந்தக் கோயிலின் சாந்நித்தியம் கூடிவிடும் என்பார்கள். அப்பேர்ப்பட்ட வேப்ப மரம் நம் வீட்டு வாசலில் இருப்பது, நன்மை பயக்கும்; துஷ்ட சக்திகளை அண்டவிடாமல் காக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

காமாட்சி அம்மன் ஆலயத்தில், சித்த புருஷர்கள் சூட்சுமமாக இருந்து தபஸ் செய்துகொண்டிருக்கும் அந்த வேப்ப மரத்தடியில், மனம் குவித்தபடி இரண்டு நிமிடம் நில்லுங்கள். 'அம்மா, காமாட்சித் தாயே! எங்களுக்குன்னு ஒரு வீட்டை அமைச்சுக் கொடுத்து, எங்களை நிம்மதியா வாழ வைம்மா’ என்று மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்.

பிறகு, அங்கே இருக்கிற கற்களை எடுத்து வந்து, வேப்பமரத்தடி மேடையில் வைத்துவிட்டு, மீண்டும் ஆத்மார்த்தமாக வேண்டிக் கொள்ளுங்கள். வெகு விரைவில், வீடு வாங்கும் யோகம் அமைந்து, சொந்த வீட்டில் குடியேறுவீர்கள் என்பது உறுதி.

'இடம் வாங்கிப் போட்டு ஏழெட்டு வருஷமாச்சு! ஆனா, வீடு கட்ட இன்னும் வேளைதான் வரலை’ என்பார்கள் சிலர். 'இடம் வாங்கி, அஸ்திவாரமும் போட்டாச்சு. ஆனா, ஏனோ தெரியலை... அடுத்தடுத்த வேலைகள் எதுவும் நடக்காம, அப்படியே நின்னுடுச்சு’ என்று வருத்தப்படுவார்கள் வேறு சிலர்.

'இடம் வாங்கிப் போட்டு, அங்கே இங்கே கடன் வாங்கி வீடு கட்டி, இங்கே குடித்தனமும் வந்தாச்சு. ஆனா, சொந்த வீட்டுக்குக் குடிவந்த நாள்லேர்ந்து, ஒருத்தர் மாத்தி ஒருத்தர் யாருக்காவது உடம்பு சரியில்லாம போகுது. எவ்வளவு காசு வந்தாலும், கையில தங்காம ஓடிடுது. சந்தோஷம் காணாம போய், எப்பப் பார்த்தாலும் சண்டையும் பூசலுமாத்தான் இருக்கு வீடு. ஜோஸியரைப் பார்த்ததுக்கு, வாஸ்து சரியில்லை, அதை இடிக்கணும், இதை மாத்தணும்னு என்னென்னவோ சொல்றாரு’ என்று வேதனையுடன் புலம்புகிறவர்களும் இருக்கிறார்கள்.

இதோ... எந்தன் தெய்வம்! - 46

இப்படி யாராக இருந்தாலும் சரி... அவர்கள் இங்கு வந்து, காமாட்சி அம்பாளை தரிசனம் செய்துவிட்டு, பிராகாரத்தில் உள்ள வேப்ப மரத்தடியில் கற்களை அடுக்கி வைத்து வேண்டிக் கொண்டால் போதும்.... எல்லா பிரச்னைகளும் காணாமல் போகும். துக்கங்கள் அனைத்தும் விலகும். வாஸ்து குறைபாடுகள் யாவும் நீங்கி, வீட்டில் காமாட்சித் தாயின் பேரருளே எங்கும் வியாபித்திருக்க, சுபிட்சத்துக்கும் சந்தோஷத்துக்கும் குறைவிருக்காது என்பது ஐதீகம்!

ஒரு வீட்டில் கணவனும் மனைவியும் மட்டும் இருந்தால், ஐந்து கல் வைத்து வழிபட வேண்டும். கணவன், மனைவி, குழந்தைகள் என்றிருந்தால், ஏழு கற்களும், தாய் தந்தை, கணவன் மனைவி, குழந்தைகள் என்று கூட்டுக்குடும்பமாக இருந்தால், 9 கற்களும் வைத்து வழிபடவேண்டும் என்கிறார்கள் பக்தர்கள்.

அம்பாளுக்கு உரிய செவ்வாய்க் கிழமை, வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமை என்றில்லாமல், எந்த நாளில் வேண்டுமானாலும் வந்து, கற்களை அடுக்கி வைத்துப் பிரார்த்திக்கலாம். ராகுகாலமோ எமகண்டமோ இந்த வழிபாட்டுக்குப் பார்க்க வேண்டியது இல்லை. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வந்து வழிபடலாம். விரைவில் சொந்த வீடு அமையும் யோகம் கிடைத்து இனிதே வாழலாம்.

மனை, வீடு என்று கொடுத்துவிட்டு, அதோடு சும்மா இருந்துவிடுவாளா அம்பிகை?! 'மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்’ என்று சொல்வதுபோல், வீடு யோகத்தை வழங்கி அருளும் அன்னை, தன்னில் இருந்து வெளிப்பட்ட இன்னொரு சக்தியான துர்கையின் மூலமாக, அந்த வீட்டைக் காத்தருளும் காரியத்தையும் செய்கிறாள்.

அலுவலக மாற்றம் அல்லது இடமாற்றம் என்று ஏதேனும் காரணத்துக்காக ஆறேழு மாதங்கள் வரை வீட்டைப் பூட்டிவிட்டுச் செல்வதாக இருந்தாலும் சரி, பத்துப் பன்னிரண்டு நாட்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதாக இருந்தாலும் சரி... காமாட்சி அம்பாளின் பிராகாரப் பகுதியில், துர்கை சந்நிதிக்கு, கையில் பூட்டு  சாவியுடன் வாருங்கள்.

சந்நிதியில் நின்றுகொண்டு, 'மகா சக்தியே! நீதான் எங்க வீட்டை பத்திரமா பாத்துக்கணும்’ என்று வேண்டிக்கொண்டு, அந்தச் சந்நிதியின் கதவில் பூட்டிவிட்டு, சாவியை அப்படியே பஞ்ச கங்கை தீர்த்தக் குளத்தில் வீசிவிட்டுச் செல்லுங்கள். அப்படிச் செல்லும்போதே, உங்கள் வீட்டுக்குத் துணையாக இருப்பதற்காக, துர்கா எனும் மகாசக்தி உங்களுடனேயே வந்துவிடுவாள் என்பது ஐதீகம்!

அந்தக் காலத்தில் வியாபாரிகள், தொழில் சம்பந்தமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ளும்போதும், அடியவர்கள் குடும்ப சகிதமாக யாத்திரை செல்லும்போதும், காமாட்சி அன்னையிடமும் துர்கையிடமும் வேண்டிக்கொண்டுதான் செல்வார்களாம். அப்படிப் பிரார்த்தித்துச் சென்றால், கள்வர்களால் வீட்டுக்கோ வீட்டில் உள்ள பொருட்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கும். அப்படி ஒருவேளை, திருடர்கள் வீட்டுக்குள் புகுந்து திருட முற்பட்டால், அவர்களுக்குத் தீராத நோய் வரச் செய்வாள் துர்கை என்கிறார்கள் பக்தர்கள்.

காஞ்சியம்பதி என்று போற்றப்படும் காஞ்சிபுரம், மிகத் தொன்மையான பூமி. சைவ காஞ்சி, விஷ்ணு காஞ்சி என்றெல்லாம் பரந்துபட்டு இருக்கிற காஞ்சி  மாநகரம், சக்தியின் இருப்பிடமாக, மகா சக்தியான காமாட்சி அன்னையின் தலமாக, சக்தி பீடமாக இன்றைக்கும் போற்றப்படுகிறது.

ஒரேயொரு முறை அவளின் சந்நிதியில் வந்து வேண்டிக் கொண்டால் போதும்... அதன்பின், அன்னையானவள் என்றைக்கும் நம்முடனேயே இருந்து, நம்மைத் தீய சக்திகளில் இருந்து காத்தருள்வாள் என்பது உறுதி.

பெண்ணை சக்தி என்கிறோம். ஒரு வீட்டையே நிறைக்கச் செய்பவள் பெண். மகா சக்தியான காஞ்சி காமாட்சி அம்பாள், நமக்கு வீடு யோகத்தையும் தந்து, நமக்கும் நம் வீட்டுக்கும் காவல் தெய்வமாகவே இருந்து அருள்பாலிப்பாள். வந்து பாருங்கள். நீங்களும் உணருவீர்கள்!

-வேண்டுவோம்