மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இதோ... எந்தன் தெய்வம்! - 47

மகா புண்ணியம் தரும் தை மாத தரிசனம்..!வி.ராம்ஜிபடங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

ருவரின் அன்பை உயர்வாகச் சொல்கிறபோது, கருணையே வடிவானவர் என்கிறோம். அந்தக் கருணை எப்படிப்பட்டது என்று விவரிக்க, 'தாயைப்போல் கருணையானவர்’ என்கிறோம். அகிலத்துக்கே அன்னையாகத் திகழும் காமாட்சித் தாய், நம் புகழுரைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவள். நம் அளவீடுகளையெல்லாம் கடந்து, அமுதசுரபியென அன்பையும் பரிவையும் பொழிபவள். எல்லையற்ற அருளையும் சக்தியையும் கொண்டவள். அதனால்தான் அவளை 'பராசக்தி’ என்றும், 'மகாசக்தி’ என்றும் போற்றுகிறோம். 

தன் உடலின் சரிபாகத்தை உமையவளுக்குக் கொடுத்தார் சிவனார். ஆனால், அப்பைய தீட்சிதரின் வம்சத்தில் தோன்றிய நீலகண்ட தீட்சிதர், 'அம்பாளின் கீர்த்தியைத்தான் இப்படி மறைமுகமாக வரித்துக்கொண்டார் சிவபெருமான்’ என்று தெரிவிக்கிறார்.

'கண்ணால் காமனை எரித்தார்; காலால் காலனை உதைத்தார். ஆனால், இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், காமனை எரித்த நெற்றிக் கண்ணில் பாதி பார்வதியுடையதாயிற்றே! ஆகவே இந்தப் புகழில் பாதியளவே சிவனாருக்குப் போகவேண்டும். அடுத்து, காலனை உதைத்ததை யோசித்தால், அந்தப் பாதி புகழ்கூட சிவனாருக்கு இல்லை என்பதே உண்மை. ஏனென்றால், சிவனார் இடது காலால் காலனை உதைத்தார். இடது பாகம் முழுவதையும் பார்வதிக்குக் கொடுத்துவிட்டார் அல்லவா? எனவே, காலனை உதைத்தது பார்வதியின் கால்தான்! ஆகவே, ஸ்ரீகாமாட்சியின் கடாட்சம் ஒரேயொரு துளி நம் மீது விழுந்தாலும் போதும்; நாம் காமத்தை வென்றுவிடலாம்; காலத்தையும் ஜெயித்துவிடலாம்’ என்கிறார் நீலகண்ட தீட்சிதர்.

இதோ... எந்தன் தெய்வம்! - 47

''அவளுடைய பெருமை, நம் புத்திக்கும் வாக்குக்கும் எட்டாதது.  அசலமான சிவத்தையே சலனம் செய்விக்கிற சக்தி அது. அவளின் க்ஷணநேர புருவ அசைவை ஆக்ஞையாக, உறுதியாகக் கொண்டு, பிரம்மாவும், விஷ்ணுவும், ருத்திரனும், ஈஸ்வரனும், சதாசிவனும் பஞ்சகிருத்தியங்களைச் செய்கிறார்கள் என்கிறது செளந்தர்ய லஹரி (ஜகத் ஸுதே தாதா).

சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் ஆகியவற்றை இந்த மூவரும் செய்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும். இந்த மூன்று தொழிலுடன், மாயை என்கிற மறைப்பு, மாயையைப் போக்குகிற ஞானம் எனும் அனுக்கிரகம் ஆகியவற்றைச் சேர்த்து, பஞ்சகிருத்யம் எனும் வேலைகள் நடைபெறுகின்றன. மாயை எனும் மறைப்பைச் செய்பவன் ஈஸ்வரன். அனுக்கிரகம் செய்பவன் சதாசிவன். இந்தத் தொழில்கள் எல்லாம் பராசக்தியின் ஏவலின்படியே நிகழ்கின்றன. இந்த ஐந்து தொழில்களை, ஐந்து ஆபீசர்களாக வைத்துக் காரியம் செய்யும் எஜமானி, சாட்ஷாத் காமாட்சி அம்பாள்தான்! எனவே, அவர்கள் தங்கள் இஷ்டப்படி தொழில் செய்யமுடியாது. அவர்களின் சக்தி எல்லாமே, பராசக்தியான இவளிடம் இருந்து பெற்றவைதான்!'' என்கிறார் காஞ்சி மகாபெரியவா.

ஆகவே, வாழ்வில் எல்லாத் தருணங்களிலும் எந்தச் சங்கடமோ கவலையோ ஏற்பட்டாலும், காஞ்சியில் அரசாளும் காமாட்சித் தாயிடம் வந்து, உங்கள் மனக்குமுறல்கள் மொத்தத்தையும் கொட்டித் தீர்த்துவிடுங்கள். உங்களுக்கு எல்லா நற்பலன்களையும் தந்தருள்வாள் தேவி.

'காஞ்சிபுரம் எங்கேயோ இருக்கிறது. நாங்கள் தமிழகத்தின் தெற்கே இருக்கிறோம். உடனே கிளம்பி, அவளை தரிசனம் செய்யமுடியாதே...’ என்று வருந்துபவர்களாகட்டும், உடல் நிலை காரணமாக, நேரில் சென்று தரிசிக்க முடியவில்லையே என ஏங்குபவர்களாகட்டும்... செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, காமாட்சி அன்னையை மனதில் நினைத்தபடி வீட்டுப் பூஜையறையில் விளக்கேற்றுங்கள். அந்த விளக்கின் சுடரையே அம்பிகையாகக் கொண்டு, அவளிடம் உங்கள் குறைகளையெல்லாம் சொல்லுங்கள். ஒரு ரூபாய் நாணயத்தை அந்த விளக்கின் எதிரே வைத்து, 'அம்மா காமாட்சி! நீதான் எங்களைக் காப்பாத்தணும். உன்னை விட்டா எங்களுக்கு வேற யாருமில்லை, தாயே!’ என்று வேண்டிக்கொண்டு, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, வழிபடுங்கள். 'கடனில் சிக்கித் தவிக்கிறோம். அந்தக் கடனையெல்லாம் அடைக்கவேண்டும்’ என்பவர்களும். 'வீடு கட்டிப் பாதியிலேயே நிற்கிறது. என்ன காரணமோ தெரியலை, இழுத்துக்கொண்டே போகிறது’ என ஏங்குபவர்களும், 'காசுபணத்துக்கு ஒரு குறைவுமில்லை. ஆனால் வீடு, வாசல் என்று எதுவும் அமையவே இல்லை’ என்று அலுத்துக் கொள்கிறவர்களும், 'எப்பவும் ஏதேனும் நோய் வந்து படுத்தியெடுக்கிறது’ என்று நொந்து கொள்பவர்களும், வீட்டில் விளக்கேற்றி, காமாட்சிக்கு ஒரு ரூபாய் நாணயத்தை மஞ்சள் துணியில் முடிந்து வைத்து, மனதார வேண்டிக் கொள்ளுங்கள். விரைவில் உங்கள் எண்ணங்களை ஈடேற்றித் தருவாள் அம்பாள்.

''ஒன்பது சுற்றுப் பிராகாரங்களை உடைய வாசஸ்தானத்தில் உள்ளுக்குள்ளே அந்தப்புரத்தில் பரப்பிரம்ம ஸ்வரூபமான பரமேஸ்வரனுடன் நீ சேர்ந்திருக்கிறாய். அந்த அந்தப்புரத்துக்கு அருகில் வரவே எவருக்கும் யோக்கியதை இல்லை. வெளியிலே ஒன்பது சுற்றுக்களையும் தாண்டியிருக்கிற வாசலில், இந்திராதி தேவர்கள் காத்துக்கிடக்கிறார்கள். அந்த வெளிவாசலில் காவல் செய்கிற அணிமா முதலான ஸித்திகளே இந்திராதி தேவர்களுக்கு அஷ்ட மகா ஸித்திகளைக் கொடுத்து விடுகிறார்கள் (புராராதே அந்த; புரமஸி) என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்'' என்கிறார் மகா பெரியவா.

இதோ... எந்தன் தெய்வம்! - 47

ஒன்பது கட்டு வாசலில் நிற்கிற அணிமா முதலான ஸித்திகளே இத்தனை சக்தி வாய்ந்தவர்கள் என்றால், உள்ளே இருக்கிற காமாட்சி அன்னையின் பிரமாண்ட சக்தியை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

''இந்த ஒன்பது கட்டு வாசல்தான், அரண்மனைதான், ஸ்ரீசக்கரம் என்கிற அம்பாள் யந்திரம். ரூபமே இல்லாத பராசக்தி, திவ்விய மங்கல ரூபத்துடன் அவயவங்களுடன் காமேஸ்வரியாக வந்த மாதிரி, இதோ... இங்கே யந்திர ரூபத்திலும் வீற்றிருக்கிறாள். பார்த்தால், ஏதோ கோடுகளும் கோணங்களுமாகத் தெரியும். ஆனால், இது அம்பாள் உருவமே! சில சப்தங்களுக்கு தெய்வீக சக்தி இருப்பதால், அவற்றை 'மந்திரம்’ என்கிறோம். இப்படி சில வகைக் கோடுகளையும் கோணங்களையும் கொண்ட சித்திரங்களுக்கு தெய்வீகமான சக்தி உண்டு. அவற்றை 'யந்திரம்’ என்கிறோம். அம்பாளின் பல ரூபங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு மந்திரம் உண்டு. காமேஸ்வரி அல்லது காமாட்சிக்கு வித்யா. யந்திரம்  ஸ்ரீசக்கரம். இந்த ஸ்ரீசக்கரத்தில் ஆவரணங்கள் என்கிற ஒன்பது சுற்றுகள் இருக்கின்றன. அவற்றில் நடு மையத்தில், திரிகோணத்தில் மத்ய ஸ்தானமாக உள்ள பிந்து என்கிற புள்ளி, சாட்ஷாத் பராசக்திதான்!'' என்று காமாட்சியைப் போற்றுகிறார் காஞ்சி மகான்.

உத்தராயன புண்ய காலம் துவங்கும் வேளை இது! சித்த புருஷர்களும் மகான்களும் இன்றைக்கும் தபஸ் நிலையில், காமாட்சி அன்னையை வழிபடுவதாக ஐதீகம். ஞானிகளும் யோகிகளும் மந்திரத்தாலும் ஹோமங்களாலும் ஆழ்ந்த நிலையிலும், திருநாமங்களைச் சொல்லியும் ஜபம் செய்யச் செய்ய, அதில் குளிர்ந்து போயிருப்பாளாம் காமாட்சி. எனவே, பொங்கல் திருநாளையொட்டி, பொங்கலுக்கு முன்னதாகவோ அல்லது அதையடுத்து உள்ள நாளிலோ, குடும்பத்துடன் காஞ்சிபுரம் சென்று அந்த ஸ்ரீசக்கர நாயகியை, ஜகன்மாதாவை, காஞ்சி காமாட்சி தேவியை கண் குளிர தரிசியுங்கள்.

தை மாதத்தில் ஸ்ரீகாமாட்சியைத் தரிசிப்பது மகா புண்ணியம் எனப் போற்றுகின்றன ஞானநூல்கள். கண்ணேறு என்று சொல்லக்கூடிய திருஷ்டி முதல் சகல தோஷங்களும் விலகும். உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் அரண் போல் இருந்து காத்தருள்வாள் காமாட்சி அன்னை.

-   வேண்டுவோம்