சிறப்பு கட்டுரை
Published:Updated:

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

சுக்ரதோஷம் நீக்கும் திருவெள்ளியங்குடி! 

பாடல் பெற்ற திவ்யதேசங்களில் ஒன்று திருவெள்ளியங்குடி. இந்த திருத்தலம் திரிவிக்ரம அவதாரத்துடன் தொடர்புடையது. பெருமாள் வாமனராக அவதரித்து மஹாபலியிடம் தானம் பெறுவதற்கு வந்த திருக்கதை நமக்குத் தெரியும். அவரை அடையாளம் கண்டுகொண்ட சுக்ராச்சாரியர், மஹாபலி தானம் வழங்கிவிடக் கூடாது என்பதற்காக வண்டாக மாறி, கமண்டலத்தின் நீர்த்தாரை விழும் துவாரத்தை அடைத்து விட்டார். இதையறிந்த வாமனர் ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து துவாரத்தை கிளற, சுக்ராச்சாரியர் கண் பார்வை இழந்தார்.

அவர் தன்னுடைய பார்வையை மீண்டும் பெற இந்தத் தலத்துக்கு வந்து தவமிருந்து வழிபட்டு, மீண்டும் கண்ணொளி பெற்றதாக தலபுராணம் கூறுகிறது. இதை நினைவூட்டும் வகையில் இன்றைக்கும் இத்தலத்தில் நேத்திர தீபம் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. வெள்ளிக்கிழமைகளில் இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டால், சகல நன்மைகளும் உண்டாகும் என்பது ஐதீகம். எழுவதற்குத் தயாரான நிலையில் காட்சிதரும் ஸ்ரீகருட பகவானின் தரிசனம், வேறெங்கும் காண்பதற்கரிய திருக்கோலமாகும். இந்தக் கோயிலின் உட்பிராகாரத்தில் வாழையடி வாழையாக வளர்ந்து நிற்கும் செங்கதலி, இத்தலத்தின் சிறப்பம்சம். புத்திர பாக்கியம் கிடைக்கவும், சுக்ர தோஷம், பார்வைக் குறைபாடு நீங்கவும் வழிபட வேண்டிய அற்புதத் தலம் இது!

-  ஜானகி ரங்கநாதன், சென்னை - 4

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

சதுரகிரி அற்புதம்!

சதுரகிரி, சுந்தர மகாலிங்கம் ஸ்வாமி கோயிலில்தான் சிவபெருமான் அம்மையப்பன் ஆனதாக நம்பிக்கை. பார்வதியாள் ஸ்வாமியின் இடப்புறம் அமர்ந்து, சந்தன லிங்கம் செய்து வழிபட்டதுடன் தவமும் இயற்றிய தலம் இது. இங்கே கல்லால மரத்தடியில் அம்பிகை தவமிருந்த நாள் ஆடிஅமாவாசை. சித்த புருஷர்கள் ஆகாய கங்கை, கெளடில்ய தீர்த்தம், சந்திர தீர்த்தம் ஆகிய தீர்த்தங்களில் நீராடி, இறைவனை பூஜிப்பதாக அகத்தியர் நாடி விவரிக்கிறது. அகத்தியர் அமைத்த லிங்கம், சுந்தரமூர்த்தி லிங்கம். இக்குகை 'கும்பலை’ எனப்படுகிறது.

பார்வதிதேவி பூஜித்த சந்தன மகாலிங் கத்தை சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார். மகாசிவராத்திரி அன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடலாம். இந்த கோயிலில் சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தனமகாதேவி, சந்தன மகாலிங்கர் என எல்லாம் சந்தனமயம்! இங்கு 18 சித்தர்களுக்கும் சிலைகள் அமைந்துள்ளன. இங்கே, செண்பகப் பூவைக் காயவைத்து, விபூதியில் கலந்துகொடுப்பது வழக்கம்.

-  சு.நவினா தாமு, பொன்னேரி

வாசுகிக்கு வரம் தந்த சிவன்

தேவ  அசுரர்கள் திருப்பாற்கடலைக் கடையும்போது, அவர்கள் கயிறாகப் பயன்படுத்திய வாசுகி, விஷத்தைக் கக்கியது. அந்த விஷத்தை உண்டு சிவனார் திருநீலகண்டன் ஆனார். வாசுகியின் மீது கோபம் கொண்ட தேவர்கள், அதைச் சுருட்டி வைக்கோல் பழுதைப் போல் விட்டெறிந்தார்கள். அந்த நாகம் பூம்புகார் அருகில் உள்ள மூங்கில் காட்டில் விழுந்தது. எனினும் தப்பிப் பிழைத்த நாகம், தன்னால் சிவபெருமான் விஷம் அருந்த நேர்ந்ததே என்று வருத்தம் அடைந்தது. தவற்றுக்குப் பிராயச்சித்தமாக சிவனாரைக் குறித்து தவம் செய்தது. அதன் தவத்தைக் கண்டு மகிழ்ந்து சிவபெருமான் காட்சி கொடுத்தார்.

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

அவரிடம் தனது பாவத்தை மன்னிக்கும்படி வேண்டிய வாசுகி நாகம், தான் தவமிருந்த அந்த இடத்திலேயே கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள்புரியவேண்டும் என்றும் பிரார்த்தித்தது. அதை ஏற்றுக்கொண்ட சிவனார் நாகநாத சுவாமியாக ஸ்ரீசெளந்திரநாயகியுடன் அங்கே கோயில் கொண்டார். வாசுகியின் வேண்டுகோளின்படி, நாக தோஷங்களையும் நிவர்த்தி செய்து அருள்கிறார். வாசுகி தவம் செய்த மூங்கில் காடு மூங்கில் தோப்பு என்ற பெயரால் இன்றும் அழைக்கப்படுகிறது.

- கே.விஜயா, சென்னை

கத்தரிக்காய் நிவேதனம்!

கேரளாவில் உள்ள கிரிஞ்ஞாலகுடா என்ற ஊரில் பரதனுக்கு கோயில் அமைந்திருக்கிறது. பரதன் அருளும் கோயில் இது மட்டுமே என்கிறார்கள். கத்திரிக்காயை நைவேத்தியம் செய்து  வழிபடுவது இந்தக் கோயிலின் சிறப்பம்சம். தீராத வயிற்றுவலியால் அவதிப்படுபவர்கள் கத்தரிக்காயை நிவேதனம் செய்து பக்திப் பாடல்கள் பாடினால் வயிற்று வலி குணமாகும் என்கிறார்கள்.

- அனீதா ராமச்சந்திரன், பெங்களூரு

சூரியன் நிகழ்த்தும் வழிபாடு!

சென்னை பெங்களூரு நெடுஞ்சாலையில், சென்னையில் இருந்து சுமார் 83 கி.மீ தொலைவில் அமைந்த திருத்தலம் தாமல். வராக அவதாரம் எடுத்த திருமால், சிவபெருமானை வழிபட்ட தலம் ஆதலால், இங்கு கோயில் கொண்டிருக்கும் ஈசனுக்கு அருள்மிகு வராஹீஸ்வரர் என்று திருநாமம். இங்கே, ரதசப்தமி திருநாளில் மாலை நேர சூரியக் கதிர்கள், நேரடியாக வராஹீஸ்வரர் மீது விழுந்து சூரிய பூஜை நடைபெறுவது சிறப்பாகும்.

- இரா.கணேசன், சேலம்

காலன் வழிபட்ட காலகாலேஸ்வரர்!

கோவை மாவட்டம், கோவில்பாளையத்தில் அமைந்துள்ளது ஸ்ரீகாலகாலேஸ்வரர் திருக்கோயில். யமதருமனுக்கு இழந்த பதவியை சிவனார் மீண்டும் அருளிய தலம் இது.

மார்க்கண்டேயனின் ஆயுளை முடிக்கச்சென்ற யமதருமன் தவறுதலாக சிவனாரின் மீதே பாசக்கயிற்றை வீசிவிட்டான். இதனால் கோபம் கொண்ட சிவனார், அவனை காலால் உதைத்து தண்டித்ததுடன், யமபதவியையும் பறித்தார்.

பூலோகம் வந்த யமதருமன் விமோசனம் பெறுவதற்காக பல தலங்களுக்கும் சென்று சிவனாரை வழிபட்டு வந்தான். ஓரிடத்தில் மணலால் லிங்கம் செய்து வழிபட விரும்பி, ஒரு குச்சியால் தரையைத் தோண்டினான். அப்போது அங்கே நுரை பொங்கியது. மணலையும் நுரையையும் சேர்த்து, லிங்கமாக பிரதிஷ்டை செய்து வணங்கினான் யமதருமன். இதன் பலனாக அவனுக்குக் காட்சி தந்த சிவனார், இழந்த பதவியையும் தந்தருளினார். காலனுக்கு (யமன்) காலம் (வாழ்க்கை, பதவி) கொடுத்தவர் என்பதால், இத்தலத்து ஈசன் 'காலகாலேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். மணல் லிங்கம் என்பதால் இவருக்கு அபிஷேகம் கிடையாது. இங்கு வந்து வழிபடுவதால், ஆயுள் பலம் கூடும்; இழந்த பணி வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இங்குள்ள ஸ்தல விருட்சமான வில்வத்தில் காய்க்கும் காய்கள், லிங்க வடிவில் இருப்பது சிறப்பு.

- வி.இராமலக்ஷ்மி, திருநெல்வேலி

கோயில்களில் மங்கல இசை...

திருக்கோயில்களில் பூஜை நடைபெறும் காலங்களுக்கு ஏற்ப, பண் முறைகள் பின்பற்றப்படுகின்றன. இதுகுறித்து நாகசுர கலைஞர் ஆண்டாங்கோயில் செல்வரத்தினம் விவரித்த தகவல் ஒன்றை பழநி கும்பாபிஷேக மலரில் காண நேர்ந்தது. அந்தத் தகவல் உங்களுக்காகவும்...

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

உஷா காலம் (காலை 5 மணி): பூபாளம், பௌளி, மலையமாருதம், வலஜி, நாதநாமக்ரியா, மாயாமாளவ கெளளை.

கால காலம் (காலை 8 மணி): தன்யாஸி, அசாவேரி, ஆரபி, தேவகாந்தாரி, தேவ மனோகரி.

உச்சிக்காலம் (மதியம் 12 மணி): சுத்தபங்களா, பூர்ண சந்திரிகா, கோபிகா திலகம், முகாரி, கெடை மல்லாரி.

சாயரட்சை (மாலை 5 மணி): பூர்விகல்யாணி, பந்துவராளி, வசந்தா, லலிதா, சரஸ்வதி, கல்யாணி, போக வசந்தம்.

இரண்டாம் காலம் (இரவு 7 மணி): சங்கராபரணம், கரகரப்ரியா, பைரவி, நாராயணி, ஹம்சத்வனி, கௌளை, ரத்னாம்பரி.

அர்த்த ஜாமம் (இரவு 8 மணி): காம்போதி, ஷண்முகப்ரியா, தோடி, நடபைரவி, ஹரிகாம்போதி, கமாஸ், அமிர்தவசந்தம்,ஸ்ரீ ரஞ்சனி.

இ.நாராயணன், சென்னை20

மகா பெரியவா சொன்ன குலதெய்வ வழிபாடு!

குலதெய்வம் குறித்து பலருக்கு சந்தேகம் எழுவது உண்டு. சிலருக்கு தங்கள் குலதெய்வம் எது என்றே தெரியாது. குலதெய்வம் குறித்து மகா பெரியவா தந்திருக்கும் விளக்கம் என்ன தெரியுமா?

''எல்லோருமே தாயார் வயிற்றில்தான் தோன்றுகிறோம். தந்தை காரணகர்த்தா. ஆகவே, எந்த ஓருவருக்கும் பெண் தெய்வம்தான் குலதெய்வமாக இருக்க முடியும். ஆண் தெய்வங்கள் (விஷ்ணு, சிவன், முருகன் போன்றோர்) இஷ்ட தெய்வங்கள் ஆவர். இன்றைய அவசர கதியில் இயங்கும் நமக்கு, எங்கோ தூரத்தில் இருக்கும் குலதெய்வக் கோயிலை விட, அருகில் இருக்கும் தெய்வத்தையே குலதெய்வம் என்று சொல்வது வசதியாகப் போகிறது. நீங்கள் முழுமையாக ஒரு கோயில் கட்டியிருந்தால் அதுதான் உங்கள் குலதெய்வம். அதை, உங்கள் மூதாதையர் கட்டியிருந்தாலும் கூட! குலதெய்வக் கோயிலுக்கு ஆண்டுக்கு ஒருமுறையேனும் அவசியம் செல்ல வேண்டும். மணமானவர்கள் மனைவியின் வீட்டு குலதெய்வக் கோயிலுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை செல்லவேண்டும். எதிர்பாராத சோக நிகழ்வுகள் நடந்துவிட்டால், அந்த ஆண்டு தவிர்க்கலாம்.

பாளை.வேதநாராயணன், சென்னை

வாசகர்களே!

ஆன்மிகம் சம்பந்தமான உங்கள் அனுபவங்கள், சந்தேகங்கள் மற்றும் உங்களுக்குத் தெரிந்த தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் உங்களுக்கே உங்களுக்கான பிரத்யேகப் பகுதி இது.

அனுப்பவேண்டிய முகவரி: 'சக்தி சபா’, சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை600 002.