சிறப்பு கட்டுரை
Published:Updated:

155-வது திருவிளக்கு பூஜை! - அருப்புக்கோட்டையில்...

‘வாழைப்பழ வரம்!’வி.ராம்ஜிபடங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

''தேங்காயும் ஊதுவத்தியும் பேசிக்கொண்டன. 'கீழே விழுந்தால் சிதறிவிடுவாய்’ என்று தேங்காயைப் பார்த்துச் சொன்னது ஊதுவத்தி. கோபம் கொண்ட தேங்காய், 'நீ மட்டும் என்னவாம்... உன்னை எரித்தால் கொஞ்ச நேரத்தில் சாம்பலாகிவிடுவாய்!’ என்று எதிர்வாதம் செய்தது.  

'என் தலையில் நெருப்புக்குச்சியைக் கிழித்து வைத்தால் போதும்... துளிக்கூட மீதம் இல்லாமல்

155-வது திருவிளக்கு பூஜை! - அருப்புக்கோட்டையில்...

, முழுமையாக இறைவனுடன் இரண்டறக் கலந்துவிடுவேன்’ என்று சொன்னது கற்பூரம். கற்பூரத்துக்கு மட்டுமல்ல, நின்று எரிகிற தீபத்துக்கும்கூட ஆத்மார்த்தமான பந்தம் இறைவனிடத்தில் உண்டு. இறைவனே ஜோதி வடிவானவன் அல்லவா? அப்பேர்ப்பட்ட தீபத்தை ஏற்றி, அதில் அம்பிகையை அமரச் செய்து வழிபடுகிற நீங்கள் எல்லோருமே பாக்கியசாலிகள்!'' என்று பேராசிரியர் குன்றக்குடி பெருமாள் பேசியதும், கைதட்டி ஆர்ப்பரித்தார்கள் வாசகிகள்.

சக்திவிகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தும் திருவிளக்கு பூஜை, கடந்த 30.12.14 அன்று அருப்புக்கோட்டை ஸ்ரீஆயிரங்கண் மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்றது. சக்திவிகடனின் 155வது விளக்கு பூஜை இது.

''நைவேத்தியம் பண்ணும்போது, எந்தப் பழத்தை வைக்கிறோமோ இல்லையோ, வாழைப்பழத்தை நிச்சயம் வைத்து நைவேத்தியம் செய்வோம். ஆப்பிள், மாதுளை, சீத்தாப்பழம் என்று எல்லாப் பழங்களுக்குள்ளும் விதை இருக்கிறது. ஆனால், வாழைப்பழத்தில் உள்ள விதை, சும்மா பேருக்குத்தான்! ஏனென்றால், வெட்ட வெட்டத் துளிர்ப்பது வாழை. ஆக, விதை இருந்தும் இல்லாத அந்த வாழைப்பழம், மீண்டும் பிறவாத வரம் வேண்டும் என இறைவனிடம் நாம் வேண்டிக் கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது!'' என்று குன்றக்குடி பெருமாள் பேச... வியப்புடன் கேட்டனர் வாசகியர்.

முன்னதாக, விளக்குபூஜை செய்யும் இடத்தைச் சுத்தம் செய்து, ஒவ்வொரு வாசகிக்கும் தனித்தனியே கோலமிட்டு, அந்த இடத்தை பக்திமயமாக்கி இருந்தார்கள் மூன்று பெண்கள். அவர்களை அழைத்துப் பெயர் கேட்டதும், வியப்பில் சலசலத்தது கூட்டம். ஆம்... விஜயலட்சுமி, விஜயமதி, விஜயநிலா என மூவரின் பெயரிலும் வெற்றியைக் குறிக்கும் 'விஜய’ இடம்பெற்றிருந்தது. சக்திவிகடன் விளக்குபூஜை வெற்றிகரமாக நடந்தேற ஒத்துழைத்த இம்மூவரைக் கொண்டே சிறப்புப் பேச்சாளருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

பாலாஜி பூசாரி, அம்மனுக்குச் சிறப்பு அலங்காரம் செய்து, பூஜையை சிறப்புற நடத்திக் கொடுத்தார். கோயில் நிர்வாகிகள் பலரும் அனைத்து ஏற்பாடுகளையும் செவ்வனே செய்துகொடுத்தார்கள்.

155-வது திருவிளக்கு பூஜை! - அருப்புக்கோட்டையில்...

''எத்தனையோ விளக்குபூஜைல கலந்துட்டிருக்கேன். ஒரு சொற்பொழிவு, அப்புறம் பூஜைன்னு புதுமாதிரியா, எங்களுக்கு உத்வேகம் கொடுக்கற மாதிரி, சக்திவிகடனோட விளக்கு பூஜை இருக்கு. எல்லாரும் நல்லாருக்கணும்னு வேண்டிக்கிட்டேன்'' என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார் வாசகி சரோஜா.

''2014ம் வருஷத்தோட கடைசி விளக்குபூஜைல கலந்துகிட்டதே மனசுக்கு நிறைவா இருக்கு. அதுவும் தவிர, இன்னிக்கு (30ம் தேதி) பகவான் ரமணர் அவதரித்த நாள். அவர் அவதரிச்ச புண்ணிய பூமியான திருச்சுழி இங்கேருந்து பக்கம்தான். அப்பேர்ப்பட்ட நாள்ல, விளக்குபூஜை நடந்திருக்கு. அவரோட பரிபூரண அருளும் எல்லாருக்கும் நிச்சயம் கிடைக்கும்னு நம்பறேன்''என்று உறுதிபடத் தெரிவித்தார் முருகம்மாள்.

ஆயிரங்கண் மாரியம்மனின் அருளும், பகவான் ரமணரின் ஆசீர்வாதமும் நிச்சயம் அனைவருக்கும் கிடைக்கும்!