சிறப்பு கட்டுரை
Published:Updated:

‘ஈஷா பயிற்சி... ஈஸியான பயிற்சி!’

வி.ராம்ஜிபடங்கள்: மீ.நிவேதன்

கத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். கடந்த 21.12.14 அன்று சக்திவிகடன்  ஈஷா இணைந்து வழங்கிய இலவச யோகா பயிற்சி முகாமில், நம் வாசகர்கள் முகத்தில் அப்படியொரு நிறைவும் தெளிவும் படர்ந்திருந்ததை உணரமுடிந்தது. 

'வாசகர்களுக்கு யோகா பயிற்சி செய்து தரவேண்டும்’ என்று கேட்டதும், 'அட... இது நல்ல விஷயமா இருக்கே! சக்தி விகடன் வாசகர்களுக்கு ஈஷா பயிற்சியை, ஒவ்வொரு ஊர்லயும் தாராளமா கொடுக்கலாம்’ என்று மகிழ்ச்சியுடன் சம்மதித்தார் சத்குரு.

அதைத் தொடர்ந்து, கடந்த 21.12.14 அன்று சென்னை மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலையில் உள்ள பி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் இலவச யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது.

காலை 10 மணிக்குத்தான் பயிற்சி துவக்கம் என அறிவித்திருந்தாலும் 9.30 மணிக்கெல்லாம் அந்த அரங்கமே நிரம்பிவிட்டது. இருந்தாலும் பதிவு செய்திருந்த ஒரு சில வாசகர்களின் வருகைக்காகக் காத்திருந்த பிறகே பயிற்சி துவங்கியது.

‘ஈஷா பயிற்சி... ஈஸியான பயிற்சி!’

திரையில், சத்குருவின் அறிவுரை ஒளிபரப்பானதும் வாசகர்கள் அப்படியே அமைதியானார்கள். ''எல்லா செயல்களுக்கும் ஒரு நோக்கம் உண்டு. அந்தச் செயலையும் நோக்கத்தையும் உணர்ந்து கொள்வதுதான் முக்கியம். குறிப்பாக, உயிர் நோக்கம் பற்றிய விழிப்பு உணர்வை நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும்'' என்று துவங்கி, சத்குரு சிரிக்கச் சிரிக்கப் பரிமாறிய கருத்துகள் அனைத்துமே உற்சாக டானிக்!

யோக நமஸ்காரம் குறித்து ஈஷா யோகா பயிற்சியாளர் விரிவாகச் சொல்லி முடித்ததும் அந்தப் பயிற்சியை வாசகர்களும் செய்யத் துவங்கினார்கள்.

நின்று கொண்டு முதுகு வளைக்காமல் செய்ய வேண்டிய பயிற்சி இது. இரண்டு கைகளையும் குவித்த நிலையில், மூச்சை கவனித்தபடி உள்ளிழுத்து வெளியே விடவேண்டும். குவித்த கரங்களை தலைக்கு மேலே உயர்த்தும்போது, மூச்சை உள்ளிழுப்பதும், கைகளை நெஞ்சுக்கு நேரே கொண்டுவரும்போது, மூச்சை வெளியே விடுவதுமாகச் செய்யவேண்டும்.

வாசகர்கள் ஆர்வத்துடன் இந்தப் பயிற்சியை செய்து முடித்தார்கள். அடுத்து அர்த்த சித்தாசனப் பயிற்சியையும் ஈஷா க்ரியா பயிற்சியையும் சத்குரு விளக்க, பயிற்சியாளர் அதைச் செய்துகாட்ட, இன்னும் ஆர்வமானார்கள் வாசகர்கள்.

'நான் உடல் அல்ல, நான் மனம் அல்ல...’ என்று கண்கள் மூடி எல்லோரும் சொல்ல... உள்ளும் புறமுமாக ஓர் அதிர்வு பரவியதை உணரமுடிந்தது.

‘ஈஷா பயிற்சி... ஈஸியான பயிற்சி!’

''நான் ஏற்கெனவே ஈஷா யோகா கற்றுக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் சக்திவிகடன் வாசகி என்பதால், இதில் கலந்துகொள்ள ஆசைப்பட்டேன். உண்மையில் இது எனக்கு புதியதொரு அனுபவம்தான்'' என்று சிலிர்ப்புடன் சொன்னார் வாசகி கலாவதி.

''சக்திவிகடனின் தீவிர வாசகி நான். பல யோகா பயிற்சிகளைக் கற்றுக்கொண்ட எனக்கு, ஈஷாவையும் கற்றுக்கொள்ள வாசல் திறந்திருக்கும் சக்திவிகடனுக்கு நன்றி. அர்த்த சித்தாசனப் பயிற்சியை செய்வதற்கு கொஞ்சம் சிரமப்பட்டேன். ஆனாலும் பல் கடித்து செய்யும்போதே, உடலுக்கும் மனதுக்குமாக ஏற்பட்ட புத்துணர்ச்சியை உணரமுடிந்தது என்னால்! ரொம்ப ஈஸியான பயிற்சியா உணர்ந்தேன்.

குறிப்பாக, இந்தப் பயிற்சிகள் பெண்களுக்கு அவசியம் தேவை. ஆனால், எல்லா வேலைகளுக்கும் மிஷின் பயன்படுத்தத் துவங்கிவிட்டதால், இங்கே நம்மால் கைகாலைத் தூக்குவதற்குக் கூட, பிரம்மபிரயத்தனப்பட வேண்டியிருக்கிறது. இந்தப் பயிற்சியை முறைப்படி அருகில் உள்ள மையத்துக்குச் சென்று கற்றுக் கொள்ள முடிவெடுத்துவிட்டேன்'' என்று வாசகி வான்மதி சொன்னதும், மொத்தக் கூட்டமும் கைதட்டி ஆமோதித்தது. அந்தக் கரவொலி, 'நாங்களும் பயிற்சியில் சேரப் போகிறோம்’ என்று அவர்கள் சொல்லாமல் சொல்வதை உணர்த்துவதாக இருந்தது.

சில தருணங்களில், மெளனம் மட்டும் அல்ல... ஆரவாரக் கைதட்டல் கூட சம்மதத்தின் அறிகுறிதான் போலும்!

‘ஈஷா பயிற்சி... ஈஸியான பயிற்சி!’