Published:Updated:

156-வது திருவிளக்கு பூஜை! - சென்னை

‘என் ஸ்டூடன்ட் எல்லாரும் பாஸ் பண்ணணும்!’வி.ராம்ஜி

156-வது திருவிளக்கு பூஜை! - சென்னை

‘என் ஸ்டூடன்ட் எல்லாரும் பாஸ் பண்ணணும்!’வி.ராம்ஜி

Published:Updated:

'இதில் கலந்துகொள்கிற அத்தனைப் பெண்களும் பாக்கியசாலிகள்.  உண்மையான பக்தியுடன், ஆத்மார்த்தமாக விளக்கேற்றுங்கள். கடவுள் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார்'  

''வட சென்னைதான் உண்மையான சென்னைவாழ் மக்கள் வாழ்கிற இடம். ஆன்மிகத்திலும் அற்புதமான பூமி இது. பட்டினத்தார் வாழ்ந்து, திருச்சமாதி அடைந்ததும் இங்குதான். வள்ளல்பெருமான் இங்கே வாழ்ந்திருக்கிறார். தியாகப் பிரம்மம், திருவொற்றியூர் தலத்து இறைவியைப் பற்றி மனமுருகிப் பாடியிருக்கிறார். திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் பெரம்பூரில்தான் பல காலம் தங்கியிருந்தார். பாம்பன் சுவாமிகளுக்கு முருகப்பெருமான் அருளிய திருவிடமும் இதுவே!

மேலும், வேதவியாசர் தவமிருந்த திருத் தலம், இன்றைக்கு வியாசர்பாடி என்று அழைக்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, மகாகவி பாரதியார் 'யாதுமாகி நின்றாய் காளி’ என்று தரிசித்துப் பாடிய காளிகாம்பாள் அரசாட்சி செய்வதும் வடசென்னையில்தான். அப்பேர்ப்பட்ட மகாகவியின் பெயர் கொண்ட பகுதியில், சக்திவிநாயகர் ஆலயத்தில், சக்தி விகடனின் திருவிளக்குபூஜை நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்கிற அத்தனைப் பெண்களும் பாக்கியசாலிகள்!'' என்று கணபதிதாசன் பேச, பூஜையில் கலந்துகொண்ட பெண்கள் மட்டுமின்றி, சுற்றியிருந்த பக்தர்களும் உற்சாகமானார்கள்.

சக்திவிகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தும் திருவிளக்குபூஜை, சென்னை மகாகவி பாரதி நகர் ஸ்ரீசக்திவிநாயகர் கோயிலில், கடந்த 13.1.15 அன்று நடைபெற்றது. சக்திவிகடனின் 156வது விளக்குபூஜை இது.

156-வது திருவிளக்கு பூஜை! - சென்னை

''திருவொற்றியூர் தலத்தில், தினமும் மூன்று வேளையும் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றியவர் கலிய நாயனார். தன் உதிரத்தையே எண்ணெயாக்கி, சிவனாருக்கு விளக்கெரியச் செய்ய முனைந்து, சிவனருள் பெற்றவர் இவர். திருவாரூரில் நமிநந்தி அடிகள், சமணர்களிடம் சென்று, 'என் சிவனுக்கு விளக்கேற்ற வேண்டும். கொஞ்சம் எண்ணெய் கொடுங்கள்’ என்று கேட்க, 'உன் சிவன்தான் எப்போதும் கையில் நெருப்பை வைத்துக்கொண்டிருக்கிறாரே, பிறகு எதற்கு விளக்கு?’ என்று கேலி செய்தார்கள். அழுது கொண்டே சந்நிதிக்கு ஓடினார் நமிநந்தி அடிகள். 'கமலாலயக் குளத்துக்குச் சென்று, அங்கிருந்து நீரை எடுத்து வந்து விளக்கேற்று’ என அருளினார் சிவனார். அதன்படி, கமலாலயக் குளத்து நீரை எடுத்து விளக்கில் ஊற்றி, ஏற்ற... விடிய விடிய எரிந்தது விளக்கு.

ராமலிங்க சுவாமிகளும் தண்ணீர் விட்டு விளக்கேற்றியிருக்கிறார். ஷீர்டி சாயிபாபாவும் தண்ணீரால் விளக்கெரியும் அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறார். உண்மையான பக்தியுடன், ஆத்மார்த்தமாக விளக்கேற்றுங்கள். கடவுள் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார்'' என்று கணபதிதாசன் பேசப் பேச... மொத்தக் கூட்டமும் கைதட்டி ஆர்ப்பரித்தது.

''தென்னக ரயில்வேயில் பணிபுரிகிறேன். விளக்குபூஜையில் கலந்துகொள்ள நீண்டகாலமாக ஆசை. ஆனால், அலுவலகத்தில் பர்மிஷன் போடமுடியுமோ என்னவோ என்று யோசித்து, இன்றைக்கு லீவு போட்டுவிட்டு, பூஜையில் கலந்துகொண்டேன்'' என்றார் வாசகி சுபத்ரா.

''நான் ஆசிரியை. என் ஸ்டூடன்ட் எல்லாரும் நல்லபடியாகப் படித்து, பாஸ் பண்ணவேண்டும்; நல்ல உத்தியோகத்தில் சேர்ந்து, நல்லவர் என்று பெயரெடுத்து வாழவேண்டும் என வேண்டிக் கொண்டேன்'' என்று வாசகி விஜயா, நெகிழ்ச்சியுடன் பேசினார்.

156-வது திருவிளக்கு பூஜை! - சென்னை

''மாதந்தோறும் 2வது வெள்ளிக்கிழமையில், இந்தக் கோயிலில் விளக்குபூஜை நடத்திவருகிறோம்.

156-வது திருவிளக்கு பூஜை! - சென்னை

ஆனாலும், சக்திவிகடனின் விளக்குபூஜை, ஒரு புது எனர்ஜியைக் கொடுத்திருக்கு எனக்கு!'' என்று உற்சாகத்துடன் சொன்னார் சுசீலா.

''காலேஜ் ஸ்டூடன்ட் நான். விளக்குபூஜையில கலந்துக்கறது இதுதான் முதல்தடவை. சிறப்பு விருந்தினர் விளக்குபூஜை பத்தி விளக்கமா சொன்னது மனசுக்கு மலர்ச்சியைக் கொடுத்துச்சு. இனி எங்கே விளக்குபூஜை நடந்தாலும் கலந்துக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். இப்ப இந்த பூஜைல, எல்லாரும் நல்லாருக்கணும்னு வேண்டிக்கிட்டேன்'' என்றார் வாசகி நந்தினி.

'எல்லாரும் நல்லாருக்கணும்’ என்று நாமும் சக்தி விநாயகரைப் பிரார்த்தித்துக் கொண்டோம்.

- படங்கள்: தி.குமரகுருபரன்