மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இதோ... எந்தன் தெய்வம்! - 48

‘வெளிச்சமும் வாழ்க்கையும் தந்த பெளர்ணமி தரிசன பரவசம்!’வி.ராம்ஜி

எந்த ஒரு க்ஷேத்திரத்து அம்பாள் சந்நிதியிலும் அனுபவிக்கிற சாந்நித்தியமானது, காஞ்சி காமாட்சியின் சந்நிதிக்கு இழுக்கப்பட்டு, பிறகு அங்கிருந்தே இந்த க்ஷேத்திரத்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகும்! 

'எல்லாம் கடவுள் செயல்’ என்று சொல்கிற வழக்கம் பெரும்பாலான ஆன்மிக அன்பர்களிடம் உண்டு. ஆனால், இதை வெறும் வாய்வார்த்தையாகச் சொல்லாமல், உளப்பூர்வமாகச் சொல்வதற்கு நமக்குள் மிகுந்த பக்தி உணர்வு இருக்கவேண்டும்; இறை எனும் மகா சக்தியின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ளவேண்டும். ஆழ்ந்த பக்தியுடனும் முழுமையான நம்பிக்கையுடனும் இறைவனை நினைத்தபடி, 'எல்லாம் கடவுள் செயல்’ என்று மனப்பூர்வமாகச் சொல்வதைத்தான் சரணாகதி என்கிறது இந்து மதம். அதாவது, தன்னை இறைவனிடம் ஒப்படைத்தல் எனும் மிகப் பெரிய நிலை அது.

நகரேஷு காஞ்சி என்று போற்றப் படும் காஞ்சி மாநகரில் கோலோச்சும் காமாட்சியை தரிசித்தவர்கள், அவளிடம் மொத்தமாக தங்களை ஒப்படைத்துவிடுவார்கள்.

'என் வாழ்க்கைல நடக்கற நல்ல விஷயம் எதுவானாலும் அதுக்குக் காரணம் காமாட்சியம்மாதான்!’ என்று நெஞ்சாரச் சொல்கிற பக்தர்கள் ஏராளம்.

''பூலோகத்தை ஒரு ஸ்திரீயாக பாவித்தால், அவளுக்குப் பூட்டிய ஒட்டியாணம் மாதிரி, உலகத்தின் மையமாக இருக்கிறது காஞ்சிபுரம். காஞ்சீ என்றால், ஒட்டியாணம் என்று பொருள். அதில் நாபிஸ்தானத்தில்தான் காமாட்சியின் வாசஸ்தானமான கர்ப்பக் கிரகம் அமைந்திருக்கிறது. அதற்குப் பேர் பிலாகாஸம். பிலம் என்றால் குகை. கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை நாபிக் கொடியின் மூலமாக ஆகாரம் பெறுகிற மாதிரி, சகல ஜீவராசிகளும் இந்த பிலாகாஸத்தில் இருந்துதான் அம்பாளின் அனுக்கிரத்தால் சகல சக்திகளையும் பெறுகிறார்கள்.

இதோ... எந்தன் தெய்வம்! - 48

ஆகாசம் என்பதே ஆத்ம ஸ்வரூபம். எங்கும் பரவியிருக்கும் வெளியை மஹாகாசம் என்பார்கள். அந்த வெளியானது நமக்குள்ளே ஆத்மாவாக இருக்கிறபோது, நமக்குள் ஞானமயமாக இருக்கிறபோது, பேரம்பலம் சிற்றம்பலமாகிறது. 'சித்’ என்றால் ஞானம்; 'அம்பரம்’ என்றால் ஆகாசம்.

லோகத்தையே ஒரு புருஷ வடிவமாகக் கொண்டால், அந்த விராட் புருஷனின் இருதய

இதோ... எந்தன் தெய்வம்! - 48

ஸ்தானம்தான், சிதம்பரம் க்ஷேத்திரத்தில் ரகசியமாக உள்ள ஆகாசம். இதை 'சிதம்பர ரகசியம்’ என்று சொல்வார்கள். காஞ்சிபுரத்தில் அதுவே பிலாகாஸமாக இருக்கிறது. காமகோஷ்டம் என்று சம்ஸ்கிருதத்திலும், காமகோட்டம் என்று தமிழிலும் சொல்லப்படுகிற காமாட்சி ஆலயத்தின் கர்ப்பக்கிரகத்தில் பிலாகாஸம் இருந்தாலும், அதன் சக்தி காஞ்சி மண்டலம் முழுவதிலுமே பரவியுள்ளது. சிதம்பரத்தில் சித்சபையில் மட்டுமே ஞானாகாசம். இங்கே, காஞ்சி மண்டலம் முழுக்க அது வியாபித்திருக்கிறது. புராணம் இப்படித்தான் சொல்கிறது'' என்று காஞ்சியின் பெருமையை விவரிக்கிறார் மகா பெரியவா.

''காஞ்சி காமாட்சியின் ஆட்சி, காஞ்சிபுரத்தில் மட்டுமா இருக்கிறது? அகிலம் முழுவதும் வியாபித்து அருள்பாலிக்கும் மகா சக்தியல்லவா அவள்! அந்தக் கருணைத் தெய்வம் நினைத்துவிட்டால், தெற்கு வடக்காகும்; கிழக்கு மேற்காகும். கீழே இருப்பவர்கூட செல்வத்தின், புகழின் உச்சியில் நிற்பார்கள். தென்மாவட்டத்தின் ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்த நாங்கள் வளர்ந்திருப்பதும், நல்லவிதமாக வாழ்ந்துகொண்டிருப்பதும் அவள் அருளால்தான்! அவள் கருணையால் கிடைத்த வாழ்க்கையே இது'' என்று நெக்குருகிச் சொல்கிறார் கங்கைஅமரன்.

இதோ... எந்தன் தெய்வம்! - 48

''தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கிராமங்கள். இப்போதைய தேனி மாவட்டத்தில் உள்ள சின்னஞ்சிறு கிராமமான பண்ணைபுரத்தில் இருந்து வந்த எங்களை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சென்று, அற்புதமான வாழ்க்கையை அமைத்துக்கொடுத்த அன்னை காஞ்சி காமாட்சியின் பெருமையைச் சொல்லிக்கிட்டே இருக்கலாம்.

ஒவ்வொரு கிராமத்திலும் அம்மன் கோயில்கள் இருக்கும். செல்லியம்மன், காளியம்மன், பிடாரியம்மன், சீலைக்காரியம்மன், முத்துமாரியம்மன்னு அம்மனோட பேர் வேற வேறயா இருக்கும். இத்தனை தெய்வங்களுக்கும் தலைவி யாருன்னா, காஞ்சி காமாட்சிதான்!

67ம் வருஷம், மனசு முழுக்க நம்பிக்கையோட யும் கடவுள் பக்தியோடயும் சென்னைக்கு வந்து இறங்கினோம். சாப்பாட்டுக்கே கஷ்டம். சாப்பிடாம, தூங்காம இருந்த காலமெல்லாம் உண்டு. ஆனா, கடவுளை நினைக்காத நாளே இல்லை. அப்பதான் எடிட்டர் பி.லெனின், 'அமர், காஞ்சிபுரம் காமாட்சி கோயிலுக்குப் போயிருக்கியா? அற்புதமான கோயில். குறிப்பா, பெளர்ணமி அன்னிக்கி அவளைத் தரிசனம் பண்றது ரொம்பவே விசேஷம்! அந்த நாள்ல, அதிகப்படியான சாந்நித்தியம் அங்கே பரவியிருக்குமாம்’னு சொல்லி, என்னைக் கூட்டிட்டுப் போனார். காஞ்சி காமாட்சியை தரிசனம் பண்ணினதும் மனசுக்கு நிறைவா இருந்துது. அப்புறம் நான், இளையராஜா, பாஸ்கர் அண்ணன்னு எல்லாருமே பெளர்ணமிக்குப் பெளர்ணமி அங்கே போக ஆரம்பிச்சோம். தரிசனம் பார்த்து, கோயில் நடையெல்லாம் சார்த்தின பிறகு, பெரும்புதூருக்கு முன்னாடி ஒரு ஊரு... பேரு மறந்துட்டேன். அங்கே டீ, பிஸ்கட்னு சாப்பிட்டுட்டு, சென்னைக்கு வருவோம். வயித்துல பசி இருக்கும். ஆனா, கையில காசு இருக்காது. ஆனாலும், காஞ்சிபுரத்துக்கு போயிட்டு வர, பஸ் காசு ரெடி பண்ணி, காமாட்சி அம்பாளை தரிசனம் பண்ணிட்டு வெளியே வந்தா... காசாவது, பசியாவது? நாங்கதான் ராஜா, நாங்கதான் மந்திரி! அப்படியொரு பூரிப்பும் பரவசமும் உள்ளே ததம்பி நிக்கும்.

இதோ... எந்தன் தெய்வம்! - 48

75ம் வருஷம் 'அன்னக்கிளி’ பட வாய்ப்பு கிடைச்சுது. அடுத்த வருஷம் படம் ரிலீசானதும், மொத்த தமிழ்நாடும் இளையராஜா பேரை மந்திரம் மாதிரி உச்சரிக்க ஆரம்பிச்சுது. அதுலேர்ந்து காமாட்சி அம்பாளை கெட்டியா பிடிச்சுக்கிட்டோம்.  எங்களோட அடுத்தடுத்த படங்களும் ஹிட்! பட்டிதொட்டினு எல்லா இடங்கள்லயும் எங்க பாடல்கள் காத்துல கலந்து, மிதந்துக்கிட்டே இருந்துச்சு. சாப்பாட்டோடு பக்தியையும் ஊட்டி எங்களை வளர்த்தாங்க எங்க அம்மா. அந்த பக்தி எங்களைக் கைவிடலை. காமாட்சிங்கற மகா சக்தி, எங்களைக் கைதூக்கி உயரத்துல ஏத்திவிட்ட கண்கண்ட தெய்வம்!'' என்று சொல்லும்போதே கங்கை அமரனின் கண்கள் பனிக்கின்றன.

''ஒரு குக்கிராமத்தில் இருந்த எங்களை, மிகப் பெரிய படிப்பெல்லாம் இல்லாத எங்களைக் கைப்பிடித்து சென்னைக்கு வரச் செய்ததே காமாட்சிதான்னு என் உள்ளுணர்வு சொல்லும். முன்னே சொன்ன மாதிரி, அம்மனின் பெயர்கள்தான் வேற வேற! ஆனா, அத்தனை அம்மன் கோயில்களுக்கும் தலைமைப் பீடம்னா அது காஞ்சிபுரம்தான்; தலைவின்னா, காமாட்சி அம்பாள்தான். அவளோட அனுக்கிரகம் இல்லாம, ஒரு அசைவும் நடக்காது இந்த உலகத்துல'' என்கிறார் கங்கை அமரன் அழுத்தம்திருத்தமாக.

காஞ்சி மகான் சொல்வதைக் கேளுங்கள்...

''அநேக ஸ்தலங்களில் உள்ள அம்பாள் சந்நிதிகளுக்குக் 'காமகோட்டம்’ என்ற பெயர்

இருப்பதாக அந்தந்த சந்நிதிகளில் உள்ள கல்வெட்டுகளில் இருந்து தெரிகிறது சோழர் காலத்திலிருந்து பல அரசர்கள் இந்தச் சந்நிதி களுக்குத் திருப்பணி செய்ததை, சிலாசாஸனமாகப் பொறித்து வைத்திருக்கிறார்கள். அவிநாசி, விஜயமங்கலம், திருவொற்றியூர், திருக்காட்டுப் பள்ளி, வல்லம், திருப்பழனம், கோயிலாடி மாதிரி பல க்ஷேத்திரங்களில் உள்ள அம்பாள் சந்நிதிக் கல்வெட்டுகளில் அந்தந்த அம்பாளைப் பற்றிச் சொல்லும்போது, 'திருக்காமக் கொட்டத்து நாச்சியார்’, 'திருக்காமக் கொட்டமுடைய அழகமர் மங்கையார்’, 'திருக்காமக் கொட்டமுடைய அகிலநாயகியார்’ என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறது.

இதோ... எந்தன் தெய்வம்! - 48

அந்தக் காலத்தில் குறிலைக் குறிக்கும் ஒற்றைக் கொம்பு, நெடிலைக் குறிக்கும் இரட்டைக் கொம்பு என்ற வித்தியாசமெல்லாம் கிடையாது. அதனால்தான் காமகோட்டம் என்பது காம கொட்டம் என்று இருக்கிறது. சிதம்பரத்திலும் இப்படியொரு தமிழ்க் கல்வெட்டு இருக்கிறது. அதோடு சம்ஸ்கிருதத்தில், 'காமகோஷ்ட ஸ்திதாயா:’ என்று அங்கே உள்ள சிவகாமேஸ்வரியைச் சொல்லும் சாஸனம் இருக்கிறது.

எல்லா சக்திக் கோட்டங்களிலும் இருந்த ஜீவ களை காஞ்சிபுரத்துக்கு இழுக்கப்பட்டு, மறுபடியும் அங்கிருந்து அந்தந்த க்ஷேத்திரத்துக்கு அனுப்பப்பட்டதாகப் புராணம் சொல்லுகிறது அல்லவா? அதாவது, இப்போது நாம் எந்த ஒரு க்ஷேத்திரத்து அம்பாள் சந்நிதியிலும் அனுபவிக்கிற சாந்நித்தியமானது, ஒருகாலத்தில் காஞ்சி காமாட்சியின் சந்நிதிக்கு இழுக்கப்பட்டு, பிறகு அங்கிருந்தே இந்த க்ஷேத்திரத்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகும்' என்கிறார் மகா பெரியவா.

''இந்த வாழ்க்கையை நல்லவிதமா வாழ்ந்து பார்த்துடணும்னு நினைக்கறவங்க, போன ஜென்மத்துக் கர்மவினைகள் எல்லாம் குறைஞ்சு, அதிலேருந்து விடுதலை கிடைச்சு, முன்னுக்கு வரமாட்டோமானு தவிக்கிறவங்க, இழந்தது திரும்பக் கிடைக்கணுமேனு புலம்பறவங்க, 'இருந்தாத்தானே இழக்கற துக்கு. இன்னும் எதுவுமே கிடைக்காம, பொழைப்பு ஓடிக்கிட்டிருக்கு'ன்னு கலங்கறவங்கன்னு யாரா இருந்தாலும், காஞ்சி காமாட்சியை கெட்டியா பிடிச்சுக்கிட்டாப் போதும். அவ நமக்கெல்லாம் நல்லதொரு வழியைக் காட்டுவா! இது உறுதி!'' என்று முகம் முழுவதும் நம்பிக்கை ஒளி பரவச் சொல்கிறார் கங்கை அமரன்.

காமாட்சி அம்பாள் நமக்கு வழிகாட்டுவதோடு மட்டும் நின்றுவிடாமல், வழித் துணையாகவும் வந்தருள்வாள்!

வேண்டுவோம்

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், மு.கார்முகில்வண்ணன்