Election bannerElection banner
Published:Updated:

திருமண வரம் அருள்வாள் அன்னை இந்திராணி - 3-ம் நாள் வழிபாடு! #AllAboutNavratri

திருமண வரம் அருள்வாள் அன்னை இந்திராணி - 3-ம் நாள் வழிபாடு! #AllAboutNavratri
திருமண வரம் அருள்வாள் அன்னை இந்திராணி - 3-ம் நாள் வழிபாடு! #AllAboutNavratri

திருமண வரம் அருள்வாள் அன்னை இந்திராணி - 3-ம் நாள் வழிபாடு! #AllAboutNavratri

வராத்திரியின்போது வீட்டுக்கு வரும் பெண்களுக்கு  தாம்பூலத்துடன் அளிக்கப்பட வேண்டிய பொருள்கள் பற்றி நேற்று பார்த்தோம். அப்படி நாம் தாம்பூலத்துடன் கொடுக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்.

வெற்றிலையும் பாக்கும் சக்தியின் அம்சமாகத் திகழ்ந்து  தாம்பூலத்துக்கு ஒரு மரியாதையை அளிக்கிறது. தாம்பூலத்துடன்  மஞ்சள், குங்குமம், மாங்கல்ய சரடு அளிப்பதால் திருமண வரம் கிடைப்பதுடன், சுமங்கலித் தன்மையும் நிலைத்திருக்கும். வளையல்கள் அளிப்பதால் மனச் சஞ்சலம் விலகும். சீப்பு, கண்ணாடி போன்ற பொருள்களை வழங்கினால், கணவரின் ஆரோக்கியம் காக்கப்படுவதுடன் ஆயுள் விருத்தியும் உண்டாகும். 

பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ள உபயோகப்படுத்தும் பொருட்களான கண்மை, மருதாணி, பூ போன்றவற்றை அளித்தால் திருஷ்டி படாது. நோய் நொடிகள் விலகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். பழங்கள் கொடுப்பதன் மூலம் அன்னதானம் செய்த பலனை நாம் பெறலாம். மேலும் தேங்காய் அளிப்பதன் மூலம் முற்பிறவியிலும்  இப்பிறவியிலும் செய்த பாவங்களில் இருந்து விடுபடலாம். புடவை அல்லது ரவிக்கைத்துணியை அளித்தால் வஸ்திர தானம் செய்த பலன் கிட்டும். கடவுளரின் ஸ்தோத்திரம் அடங்கிய புத்தகங்களைக் கொடுத்தால் வித்யாதான பலன் கிடைக்கும்.

நம் வீட்டிற்கு வரும் பெண்களுக்கு மேற்கூறிய பொருட்களில், நம்மால் முடிந்த பொருட்களை தாம்பூலமாக முழு மனநிறைவுடன் அளித்து, தேவியின் அருளைப் பெறுவோம்!

நவராத்திரியின் முதல் மூன்று தினங்களில் மலைமகளான பார்வதியின் அம்சமாக விளங்கும் துர்கையையும், அடுத்து வரும் மூன்று தினங்களில் அலைமகளான லட்சுமி தேவியையும், இறுதி மூன்று தினங்களில் கலைமகளான சரஸ்வதி தேவியையும் வழிபட வேண்டும் என்று பார்த்தோம்.

நவராத்திரியின் முதல் நாளில் துர்கையை சாமுண்டியாகவும், இரண்டாம் நாளில் வராகியாகவும், மூன்றாம் நாளில் இந்திராணியாகவும் எண்ணி வழிபட வேண்டும். நவராத்திரியின் நான்காம் நாளில் மகாலட்சுமியை வைஷ்ணவி தேவியாகவும், ஐந்தாம் நாளில் மகேஸ்வரி தேவியாகவும், ஆறாம் நாளில் கௌமாரி தேவியாகவும் பாவித்து பூஜிக்க வேண்டும்.

அனைத்து கலைகளையும் அள்ளி வழங்கும் சரஸ்வதி தேவியை நவராத்திரியின் ஏழாம் நாளன்று சாம்பவியாகவும், எட்டாம் நாளன்று நரசிம்மதாரிணியாகவும், ஒன்பதாம் நாளன்று சரஸ்வதியாகவும் எண்ணி வழிபடுதல் வேண்டும்.

நவராத்திரியின் மூன்றாம் நாளான இன்று அம்பிகையை நான்கு வயது பெண்ணாகப் பாவித்து வழிபட வேண்டும். இன்று முத்து போல் விளங்கும் ஜவ்வரிசியினால் மலர்க் கோலம் போட வேண்டும். மூன்றாவது நாளுக்கு உரிய தேவி - இந்திராணி. குமாரியின் பெயர் - கல்யாணி. மந்திரம் ஓம் கல்யாண்யை நம: சுவாசினியின் பெயர் - சந்த்ர காண்டா. மந்திரம் ஓம் சந்த்ர கண்டாயை நம:. நைவேத்தியம் - சர்க்கரைப் பொங்கல். வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் - வித்யை, ராஜ்யம், பதவிகள் கிடைக்கும்

இன்று நாம் வழிபடும் அம்பிகையான இந்திராணி கார்மேகம் போன்றவள்; ஒளிவீசும் ரத்தினங்கள் பதித்த கிரீடத்தை தன் தலையில் அணிந்த இவள் அழகிய வெள்ளை யானையின் மீது அமர்ந்திருப்பாள்; இனிய மணம் கமழும் மலர்களை தன் தலையில் சூடியிருக்கும் இவள் சப்தகன்னியரில் ஒருவள் ஆவாள்.. 

(நவராத்திரி, மூன்றாம் நாளின் மகத்துவத்தையும், வழிபாட்டு முறைகளையும், இந்த நாளுக்குரிய அம்மனின் சிறப்பையும் பற்றி  'சொல்லின் செல்வர்'  பி.என்.பரசுராமன் பேசும் வீடியோவைப் பாருங்கள்!)

அன்னை இந்திராணி தேவிக்கு  மாஹேந்திரி, ஐந்திரி தேவி போன்ற திருநாமங்களும் உள்ளன. இவளை வழிபடுவதால் யம பயம் நீங்குகிறது. அதுமட்டுமின்றி தன்னை முழுமனதோடு வணங்கும் பக்தர்களுக்கு சிறந்த வாழ்க்கைத்துணையையும் தந்தருள்கிறாள். திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் இன்று இந்திராணி தேவியை வணங்கினால் பல சிறப்புக் குணங்கள் பெற்றிருக்கும் கணவனைப் பெற்று, இனிமையான இல்லறத்தை மேற்கொள்ளலாம். மேலும் இந்திராணியை வழிபடுவதால் உயர்ந்த பதவிகளையும் அடையலாம்.

நவராத்திரி விரத பூஜை என்பது பெண்களுக்கான பூஜை மட்டுமே அல்ல. ஆண்களும் நவராத்திரி விரதம் இருந்து முறைப்படி அம்பிகையை வழிபட்டால், அனைத்து நலன்களையும் பெறலாம். 

இங்கே ஒரு கதையைப் பார்ப்போம்.

சுரதன் என்ற ஓர் அரசன் விதிப் பயனாக வேற்று தேசத்து மன்னனிடம் தன் ராஜ்யம், சொத்து, சுகம் அனைத்தையும் தோற்றுவிட்டான். இனி நாட்டில் இருந்தால் தனக்கு ஆபத்துதான் என்று நினைத்த மன்னன் காட்டுக்குச் சென்றுவிட்டான். காட்டில் ஒரு ரிஷியை சந்திக்க நேரிட்டது. அவருடைய பெயர் சுரேதஸ். மன்னனின் நிலையைக் கண்டு மனம் இரங்கிய மகரிஷி, 'மன்னா, நீ கவலைப்பட வேண்டாம். நீ என்னுடைய ஆசிரமத்திலேயே தங்கிக் கொள்ளலாம். நீ இங்கே இருக்கும் வரை உனக்கு ஆபத்து எதுவும் வராது'' என்று அடைக்கலம் கொடுத்தார்.

மகரிஷியின் ஆதரவில் மன்னன் காட்டிலேயே இருந்தான். ஆனாலும் எப்போதும் அவனுக்கு தான் இழந்த ராஜ்யத்தின் நினைவாகவே இருந்தது. ஒருநாள் அதே சிந்தனையுடன் அவன் ஒரு மரத்தினடியில் படுத்திருந்தான். 

அப்போது அந்த வழியாக ஒருவன் சோகம் கப்பிய முகத்துடன் வந்துகொண்டிருந்தான்.

( கர்னாடக இசைக்கலைஞர் பவ்யா கிருஷ்ணன் பாடிய நவராத்திரி மூன்றாம் நாளுக்கான பாடலை இங்கு கேட்கலாம்)

மரத்தினடியில் படுத்திருந்த மன்னன், அவனிடம், 'ஐயா, தாங்கள் யார்? ஏன் சோகமாக இருக்கிறீர்கள்?' என்று கேட்டான். அதற்கு அவன், 'என் பெயர் சமாதி. எனக்கு ஏராளமான சொத்துகள் இருக்கின்றன. ஆனால், எனக்கு வயதாகிவிட்ட நிலையில் என் பிள்ளைகள் என்னைப் பார்த்துக்கொள்ளாமல் உதாசீனப்படுத்திவிட்டார்கள். அதனால்தான் நான் அமைதியைத் தேடி காட்டுக்கு வந்துவிட்டேன்'' என்றான்.

அவனை அழைத்துக் கொண்டு மன்னன் ஆசிரமத்துக்குத் திரும்பினான். மன்னன் எப்போதும் தான் இழந்த ராஜ்யத்தையே நினைத்துக் கொண்டிருப்பதை அறிந்த மகரிஷி, அவனிடம் நவராத்திரி விரதத்தின்மகிமையைப் பற்றி விளக்கமாகச் சொல்லி, நவராத்திரி விரதம் அனுஷ்டிக்கும்படிக் கூறினார். அப்படியே இருவரும் அம்பிகையை பூஜித்தனர். பூஜையின் நிறைவில் அம்பிகை அவர்களுக்கு தரிசனம் கொடுத்து, வேண்டும் வரங்களைக் கேட்கும்படிக் கூறினாள். மன்னன் தான் இழந்த ராஜ்யத்தைத் திரும்பக் கேட்டான். அம்பிகையும், 'கவலை வேண்டாம். உன் பகைவர்கள் உன்னிடமே சரண் அடைவர். நீயும் உன் ராஜ்யத்தைத் திரும்பப் பெற்று சுகமாக வாழ்வாய்' என்று வரம் தந்தாள். சமாதியோ தனக்கு ஞானம் வேண்டும் என்று கேட்டுப் பெற்றான். அம்பிகை அப்படியே வரம் தந்தாள். மன்னனுக்கு அவன் இழந்த ராஜ்யம் திரும்பக் கிடைத்தது. சமாதி விரும்பியபடியே அவனுக்கு ஞானம் கிடைத்தது. இத்தனை மகிமைகள் பொருந்திய நவராத்திரி வைபவத்தை நாமும் கொண்டாடி அம்பிகையின் அருளைப் பெறலாமே.

நவராத்திரி நான்காவது நாளில் நாம் எந்த தேவியை வழிபடவேண்டும் என்பதை நாளை பார்ப்போம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு