மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இதோ... எந்தன் தெய்வம்! - 49

காமாட்சி அன்னையும்... அகிலாண்டேஸ்வரியும்..!வி.ராம்ஜி

அம்பாளைப் பற்றி எத்தனையோ மகான்களும் ஞானிகளும் கவிஞர்களும் வேத விற்பன்னர்களும் போற்றியிருக்கிறார்கள்; உருகி உருகிப் பாடியிருக்கிறார்கள். அவை ஸ்தோத்திரங்களாகவும் பாடல்களாகவும் வந்திருக்கின்றன. அவற்றில் முதன்மையானது, செளந்தர்ய லஹரி. அடுத்து, மூக பஞ்ச சதீ. அதையடுத்து, 'ஆர்யா த்விசதி’. 

இதோ... எந்தன் தெய்வம்! - 49

''ஸ்ரீசங்கர பகவத் பாதர் கயிலாயத்துக்குப் போனபோது, சாட்ஷாத் பரமேஸ்வரனே அம்பிகையைப் பற்றிச் செய்திருந்த 'செளந்தர்ய லஹரி’ சுவடிக்கட்டை நம் ஆச்சார்யாளுக்குக் கொடுத்து அனுக்கிரகித்தார். அதில், மொத்தம் நூறு ஸ்லோகங்கள். ஆச்சார்யாள் கயிலாயத்தில் இருந்து திரும்பி வரும்போது, வாசலில் காவலில் இருந்த நந்தி, மகா பெரிய சொத்து கயிலாயத்தில் இருந்து போகிறதே என நினைத்து, ஆச்சார்யாள் கொண்டு வந்த சுவடியில் இருந்து தம் கைக்குக் கிடைத்ததை அப்படியே உருவிக் கொண்டு விட்டார். முதல் 41 ஸ்லோகங்கள் மட்டுமே ஆச்சார்யாள் கையில் நின்றன. பாக்கி 59 ஸ்லோகங்கள் நந்திகேஸ்வரர் கைக்குப் போய்விட்டன. அப்புறம் ஆச்சார்யாள், தாமே 59 ஸ்லோகங்களையும் கடல் மடை திறந்த மாதிரி பாடிப் பூர்த்தி செய்துவிட்டார். இவ்விதமாகத்தான் நூறு ஸ்லோகங்களுடன் உள்ள 'செளந்தர்ய லஹரி’ உருவாயிற்று'' என அருளியிருக்கிறார் மகா பெரியவா.

இதில், முதல் 41 ஸ்லோகங்கள் மந்திர சாஸ்திர சூட்சுமங்கள், குண்டலினி யோக தத்துவங்கள்,ஸ்ரீவித்யா ரகசியங்கள் முதலானவற்றைச் சொல்கின்றன.

அவை, ஸ்ரீவித்யா உபாஸகர்களுக்கு மிகவும் உபயோகமானவை என்று போற்றப்படுகின்றன. அதையடுத்து,ஆச்சார்யாள் வாக்கில் இருந்து வந்த விஷயங்கள் சேர்ந்திருக் கின்றன. இந்த 59 ஸ்லோகங்களும் மிக ரம்மியமானவை!

இந்த ஸ்லோகங்களில், அம்பாளின் சிரசில் இருந்து திருப் பாதம் வரையில், அங்கம் அங்கமாக

இதோ... எந்தன் தெய்வம்! - 49

வர்ணித்துப் பாடுகிறார் ஆச்சார்யாள். இப்படி, அம்பிகையின் திருமேனி முழுவதையும் அங்குலம் அங்குலமாக விவரித்துப் பாடியதால்தான், அவற்றை மனதில் இருத்தி, இங்கே ஆலயங்களில் அம்பாளின் திருவிக்கிரகத் திருமேனியை இத்தனை தத்ரூபமாக சிற்பிகள் வடித்துக் கொடுத்தார்கள். உமையவளின் திருமேனி இப்படி சாந்நித்தியத்துடன் பூலோகத்தில் ஒவ்வொரு தலத்திலும் வந்து அமர வேண்டும் என சிவனார் நினைத்துச் செய்த திருவிளையாடல் இது என்றே எண்ணத் தோன்றுகிறது.

அம்பாளைப் பற்றி மூன்று கிரந்தங்களில், இரண்டாவதானது 'மூக பஞ்ச சதீ’. காமாட்சி அன்னையின் பொதுவான மகிமை பற்றி 'ஆர்யா’ என்ற விருத்தத்தில் நூறு ஸ்லோகங்கள், அவளின் பாதாரவிந்தங்களின் அழகைப் பற்றி மட்டுமே நூறு ஸ்லோகங்கள், ஸ்துதிக்கு உகந்த அவளின் குணங்களைப் போற்றுகிற வகையிலான நூறு ஸ்லோகங்கள், அம்பாளின் கடாட்சத்தையும் கருணையையும் தீட்சண்யத்தையும் சொல்கிற நூறு ஸ்லோகங்கள், குழந்தையைப்போலான அவளின் புன்சிரிப்பைப் பற்றியும் செளந்தர்யத்தைப் பற்றியும் சொல்கிற நூறு ஸ்லோகங்கள் என மொத்தம் ஐந்நூறு ஸ்லோகங்களை நமக்குத் தந்தருளியிருக்கிறார் மூகர்.

இதோ... எந்தன் தெய்வம்! - 49

நூறு ஸ்லோகங்கள் கொண்ட தொகுப்பானது, 'சதகம்’ என்று அழைக்கப்படுகிறது. மூகர் தந்தருளியவை ஆர்யா சதகம், பாதாரவிந்த சதகம், ஸ்துதி சதகம், கடாட்ச சதகம், மந்தஸ்மித சதகம் என்று தனித்தனியே சொல்லப்பட்டாலும், இவை அனைத்தும் சேர்ந்து, 'மூக பஞ்ச சதீ’ என்று அழைக்கப்படுகிறது. முதல் சதகமான ஆர்யா சதகத்தின் நிறைவில், 'அம்பாளை ஆராதிக்கிறவருக்கு அமிர்தம் போன்ற வாக்கு ஸித்திக்கும்’ என அருளியிருக்கிறார் மூகர்.

தேவியைப் பற்றி மூன்றாவதாகப் போற்றப் படுவது, 'ஆர்யா த்விசதி’. த்வி என்றால் இரண்டு; சதம் என்றால் நூறு. ஆர்யா எனும் விருத்தத்தில் இருந்து துவங்கும் இதில் அம்பிகையைப் பற்றி இருநூறு ஸ்லோகங்கள் இருக்கின்றன. இதை 'லலிதா ஸ்தவ ரத்னம்’ என்றும் சொல்வார்கள். அம்பிகையின் பரிபூரண அருளைப் பெற்ற துர்வாச மகரிஷி அருளிய நூல் இது. இந்த ஸ்தோத்திரத்தை எவரொருவர் அனுதினமும் பாராயணம் செய்து, அம்பிகையை வழிபடுகிறாரோ, அவர் நினைத்த காரியமெல்லாம் ஈடேறும்; சொன்ன வாக்கெல்லாம் பலிக்கும் என்பது ஐதீகம்!

ஸ்ரீகாமாட்சி ஆராதனைக்கான கிரமங்களை உண்டு பண்ணியவரே துர்வாச மகரிஷிதான்.

இதோ... எந்தன் தெய்வம்! - 49

'பட்டாரிகை’ எனப்படும் பராசக்தியின் மூன்று முக்கிய உபாசகர்களுக்கு மட்டுமே 'பட்டாரிகர்’ என்ற பட்டம் உண்டு. இந்தப் பட்டம் பெற்றவர்களில் ஒருவர் சாட்ஷாத் ஈஸ்வரன்; இன்னொருவர் காளிதாஸன்; மூன்றாமவர் துர்வாசர். அவருக்குக் காஞ்சி காமாட்சி அம்பாள் ஆலயத்தில் தனிச் சந்நிதியே இருக்கிறது'' என்கிறார் காஞ்சி மகான்.

துர்வாச முனிவரின் சந்நிதியில் நின்று, ஒரு ஐந்து நிமிடம் கண்கள் மூடி, அவரை மனதார வேண்டுங்கள். ஓர் அதிர்வை உணர்வீர்கள். அந்த நல்ல அதிர்வோட்டத்துடன் காமாட்சி அம்பாளின் சந்நிதிக்குச் சென்று, அவளைப் பார்த்து ஆத்மார்த்தமாகப் பிரார்த்தனை செய்யுங்கள். அந்த சாந்நித்தியம் மிகுந்த சந்நிதியில், மேலும் நல்ல அதிர்வை உணர்ந்து சிலிர்ப்பீர்கள்.

கேட்கக் கேட்க வியப்பையும் பரவசத்தையும் தரக்கூடிய பெருமை மிகு விஷயங்கள் காஞ்சி மாநகருக்கும், காஞ்சி காமாட்சி அம்பாள் ஆலயத்துக்கும் ஏராளம் உண்டு.

ஓர் ஆலயத்தில் பூஜை செய்பவரை அர்ச்சகர் என்று பொதுவாகச் சொல்வோம். சில ஆலயங்களில், குறிப்பாக சைவ ஆலயங்களில், சைவ ஆகமங் களைக் கற்றறிந்த சிவாச்சார்யர்கள் பூஜிப்பார்கள். சில கோயில்களில், பூஜைக்கான மந்திரங்களையும் நெறிமுறைகளையும் அறிந்தவர்கள் இருப்பார்கள். அவர்களை குருக்கள் என்று சொல்வார்கள்.

தில்லையம்பதி என்று போற்றப்படும் சிதம்பரம் தலத்தில், சிவனாரிடம் நேரடியாக தீட்சை பெற்று வந்த மூவாயிரம் பேரை தீட்சிதர்கள் என்பார்கள். அந்த வம்சத்தவர்கள்தான் இன்றைக்கும் அங்கே பூஜை செய்து வருகிறார்கள்.

இதோ... எந்தன் தெய்வம்! - 49

''காஞ்சி காமாட்சி அம்பாள் ஆலயத்துக்கும், திருச்சி திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி கோயிலுக்கும் நெருங்கியதொரு தொடர்பு உண்டு. இந்த இரண்டு ஆலயங்களிலும், வேதங்களும் சாஸ்திரங்களும் கற்றறிந்த வேதாச்சார்யர்களைக் கொண்டு பூஜைகளும் வழிபாடுகளும் நடத்தப் படுகின்றன. வேத விற்பன்னர்களை சாஸ்திரிகள் என்று சொல்வார்கள். இந்த இரண்டு ஆலயங்களிலும் சாஸ்திரிகள்தான் பூஜைகளைச் செய்து வருகிறார்கள்.

துர்வாச முனிவர் அருளிச் செய்த விஷயம் இது. ஆதிசங்கரர் இதை அடியொற்றி இன்னும் விரிவுபடுத்தி, பூஜை புனஸ்காரங்களை இங்கே கொண்டு வந்தார்'' என்கிறார் காஞ்சி காமாட்சி அம்பாள் ஆலயத்தின் நடராஜ சாஸ்திரிகள்.

ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி குடிகொண்டிருக்கும் ஆலயத்திலும், அகிலத்தையே தன் கண்களாலும் கருணையாலும் காபந்து செய்து அருளாட்சி நடத்திவரும் காமாட்சி அம்பாள் வீற்றிருக்கும் ஆலயத்திலும் சாஸ்திரிகளே பூஜைகள் செய்து வருகிறார்கள்.

இன்னொரு ஒற்றுமையும் உண்டு. அதாவது, காஞ்சி காமாட்சி அம்பாள் கோயிலில், சந்நிதியில் அவளுக்கு எதிரில் ஸ்ரீஆதிசங்கரர் சக்கரப் பிரதிஷ்டை செய்தருளினார் அல்லவா... அதேபோல், திருவானைக்கா ஸ்ரீஅகிலாண் டேஸ்வரி கோயிலிலும் அவளுக்கு ஸ்ரீசக்கரப் பிரதிஷ்டை செய்தருளியுள்ளார் ஸ்ரீஆதிசங்கரர்.

அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்குத் தாடங்க நாயகி, தாடங்க ரூபினி என்று திருநாமங்கள் உண்டு. தாடங்கம் என்பது காதில் அணியும் ஓர் அணிகலன். அந்தத் தாடங்கத்தில்தான் ஸ்ரீசக்கரப் பிரதிஷ்டை செய்து அருளியிருக்கிறார் ஆதிசங்கரர்.

''மங்கலச் சின்னமான தாடங்கம், அவள் காதில் இருந்து இறங்கக்கூடாது. அப்படியெனில்,

இதோ... எந்தன் தெய்வம்! - 49

பரமேஸ்வரன் எக்காலத்திலும் ஜீவிக்க வேண்டும். அதனால்தான், அவர் ஆலகால விஷம் அருந்தியும்கூட, அது அவரை பாதிக்கவில்லை. 'இது உன் தாடங்க மகிமையம்மா’ என்று வியந்து போற்றுகிறார் ஆதிசங்கர ஆச்சார்யாள். அப்பேர்ப்பட்ட வலிமைமிக்க தாடங்கத்தில், ஸ்ரீசக்கர, சிவ சக்கரப் பிரதிஷ்டை செய்து, அவளை செளம்ய மூர்த்தியாக்கிய ஆச்சார்யாள், 'தவ ஜனனி தாடங்க மகிமா’ என்று சொல்லி வியக்கிறார்.

சாஸ்திரிகள் பூஜை செய்கிற ஆலயம், ஆதிசங்கரரால் ஸ்ரீசக்கரப் பிரதிஷ்டை செய்யப் பட்ட தலம் என்றெல்லாம் பெருமைகள் கொண்ட திருவானைக்காவுக்கும் காஞ்சியம்பதிக்கும் மற்றுமொரு  பொருத்தமும் உண்டு.

திருச்சி திருவானைக்காவலிலும் காஞ்சி காமாட்சி அம்பாள் ஆலயத்திலும், தங்களை நாடி வருவோர் சகல ஐஸ்வரியங்களுடன் திகழ வேண்டும், எல்லோர்க்கும் தன, தானிய, வீர, தீர, ஞான, யோகங்கள் பெருக வேண்டும் என்பதற்காக, அம்பாளுக்கு கோ பூஜை செய்வது வழக்கம். அதுவும், வருஷம் 365 நாளும் காமாட்சி அம்பாளின் சந்நிதிக்குப் பசுவை அழைத்து வந்து பூஜிப்பது, இன்றைக்கும் நடைமுறையில் உள்ளது.

ஸ்ரீகாமாட்சி அன்னையை யார் வந்து தரிசித்து வணங்கினாலும், அவள் பெருமையை காதாரக் கேட்டாலும், அவர்களின் மனதை செம்மைப்படுத்தி, வாழ்க்கையை சிறக்கச் செய்துவிடுவாள் தேவி.

வேண்டுவோம்

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், மு.கார்முகில்வண்ணன்